

Post No. 8434
Date uploaded in London – – –1 August 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
வில்லி பாரதச் சிறப்பு
நின்ற மால் மலரடி மறவேனே!
ச.நாகராஜன்
வில்லி பாரதத்தில் அதிசயிக்கத்தக்க சிறப்புகள் பல உண்டு. முந்தைய கட்டுரைகளில் அணிகளை ஒரே பாடலில் அடுக்கித் தருபவர் வில்லிப்புத்தூரார் என்பதைக் கண்டோம்.
இன்னொரு பெரிய சிறப்பு, வில்லிப்புத்தூரார் வரலாற்றுச் சம்பவங்களை அடுக்கி அடுக்கித் தருவது தான்!
18 புராணங்களையும் இராமாயண இதிஹாஸத்தையும் நன்கு படித்து உணர்ந்தவரே வில்லி பாரதத்தை நன்கு கற்று அனுபவிக்க முடியும்.
ஒரு பாடலில் பல கதைகளைக் கூறுவார் அவர்; அதற்கு நிறைய புராணங்களை எடுத்துப் படிக்க வேண்டியிருக்கும்.
சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் ‘சூத்திர’ மன்னன் அவர்.
அவரது கடவுள் வாழ்த்துக்கள் தனிச் சிறப்புடையவை.
உத்யோக பர்வத்தில் உலூகன் தூதுச் சருக்கத்தில் கடவுள் வாழ்த்தாக அமைந்துள்ள பாடல் இது:

மீனமாகியுங் கமடமதாகியு மேருவையெடுக்குந்தா
ளேனமாகியு நரவரியாகியு மெண்ணருங் குறளாயுங்
கூனல் வாய் மழுத்தரித்த கோலாகியு மரக்கரைக் கொலை செய்த
வானநாயகனாகியு நின்றமால் மலரடி மறவேனே
மீனம் ஆகியும் – மீன் வடிவாகவும்
கமடமது ஆகியும் – ஆமை வடிவமாகியும்
மேருவை எடுக்கும் தாள் ஏனம் ஆகியும் – மஹா மேருமலையைத் தாங்க வல்ல பாதத்தை உடைய பன்றி வடிவமாகவும்
நர அரி ஆகியும் – நரசிங்க வடிவமாகவும்
எண் அரு குறள் ஆகியும் – நினைத்தற்கும் அருமையான வாமன வடிவமாகியும்
கூனல் வாய் மழு தரித்த கோ ஆகியும் – வளைவான நுனியை உடைய கோடாலிப் படையைக் கையில் ஏந்திய பரசுராம வடிவமாகியும்
அரக்கனைக் கொலை செய்த வான நாயகன் ஆகியும் – இராவணன் முதலிய அரக்கர்களைக் கொலை செய்து வதைத்த முக்தி உலகத்தின் தலைவனான இராமன் ஆகியும்
நின்ற -திருவவதாரம் செய்து நின்ற
மால் – திருமாலாகிய கண்ணபிரானது
மலர் அடி – தாமரை மலர் போன்ற திருவடிகளை
மறவேன் – ஒருக்காலும் மறக்க மாட்டேன் (எப்போதும் நினைத்துக் கொண்டே இருப்பேன்)
இந்த ஒரே பாடலில் அனைத்து அவதாரங்களும் பேசப்படுகின்றபடியால் அனைத்து வரலாறுகளையும் நாம் அறிந்து கொள்ள வேண்டிய வாய்ப்பை ஏற்படுத்துகிறார் கவிஞர்.
நின்ற மால் என்ற சொற்களால் நடப்பு அவதாரத்தை நின்று நடத்துகின்ற கண்ணன் என்பதையும் உணர்த்துகிறார்.
மத்ஸ்ய, கூர்ம, வராக, நரசிம்ம, வாமன, பரசுராம, தசரத ராம, பலராம,கிருஷ்ண, கல்கி என தசாவதாரங்களையும் நினவில் கொள்ள வேண்டும்.
“மச்சா கூர், மா கோலா, சிங்கா, வாமா, ராமா, ரா, மா கோபாலா மாவாவாய்” என்ற ஒரே வாக்கியத்தையும் நினவில் கொள்ளலாம்!
மீனம் : முன்னொரு காலத்தில் சோமகன் என்னும் ஒரு அசுரன் பிரமதேவன் துயில்கையில் வேதத்தைக் கவர்ந்து சென்றான். அதை மீன் வடிவம் எடுத்து கடலினுள் புகுந்து அந்த அசுரனைத் தேடிக் கொன்று வேதங்களை மீட்டார் திருமால்.
கூர்மம் : துர்வாச முனிவரது சாபத்தால் தேவ லோகத்துச் செல்வம் எல்லாம் கடலுக்குள் சென்றன. அதை மீட்க திருமாலின் கட்டளையின் படி அசுரர்களும் தேவர்களும் மந்தார மலையைக் கடையச் சென்றனர். அப்போது அந்த மந்தார மலை கடலினுள் சென்று அழுந்தி விடாத படி ஆமை வடிவம் எடுத்து திருமால் அதைத் தாங்கினார்.
வராகம் : ஒரு காலத்தில் இரணியாக்ஷன் பூமியைப் பாயாகச் சுருட்டி கடலில் மூழ்கினான். வராக அவதாரம் எடுத்த திருமால் தன் கொம்பால் பூமியைக் குத்தி எடுத்துக் கொண்டு வந்து பழைய நிலை வரும்படி அருளினார்.
நரசிங்கம் : இரணியாக்ஷனின் சகோதரனான இரணியன் தன் மகன் பிரகலாதனை நாராயணன் பெயர் சொல்லத் தடை செய்தான். அவன் பொருட்டு தூணிலிருந்து பிளந்து வந்து இரணியனைக் கீறி அழித்தார் திருமால்.
வாமனம் : முன்னொரு காலத்தில் மகாபலி என்னும் அசுரன் தேவலோகம் உள்ளிட்ட அனைத்தையும் தன் வசப்படுத்தினான். அரசிழந்த தேவர்கள் திருமாலை வேண்ட வாமனனாக வடிவம் எடுத்து மகாபலி நடத்திய யாகத்திற்குச் சென்று மூன்று அடி இடம் வேண்டினான் குறளன். ஒரு அடியால் ஆகாயம் அனைத்தையும் இன்னொரு அடியால் பூமி அனைத்தையும் அளந்த வாமனன் மூன்றாம் அடிக்கு இடம் கேட்க மகாபலி தன் சிரத்தைத் தந்தான்.அவனை பாதாளத்தில் அழுத்தினார் வாமனர்.
பரசுராமன் : முன்னொரு காலத்தில் ஜமதக்கினி முனிவரது மனைவியான ரேணுகையிடம் ராமனாக அவதரித்து பரசு என்னும் கோடாலியை ஆயுதமாக எடுத்து கார்த்தவீர்யார்ஜுனனையும் அவனது குமாரர்களையும் அழித்தார் பரசுராமர்.
ராமர்: இராவணன் சீதையைக் கவர்ந்து செல்ல ராமர் அவனை அழித்து சீதையை மீட்டார்.
கிருஷ்ணர் : பூமியின் பாரம் பாதகர்களால் கூட பூமாதேவி தாங்க முடியாமல் தவித்த போது, நல்லோரைக் காத்து தீயோரை அழிக்க கிருஷ்ணராக அவதரித்து துரியோதனாதியர் அழிய வகை செய்தார் கிருஷ்ணர்.
கல்கி : கலி யுக முடிவில் தர்மம் நிலை தடுமாறும் போது அதைக் காக்க எடுக்கப்போகும் அவதாரம் கல்கி!
இப்படி பத்து அவதாரங்களையும் நினைக்கும் படி செய்வது வில்லிப்புத்தூராரின் ஒரே பாடல் – உலூகன் தூதுச் சருக்கக் கடவுள் வாழ்த்துப் பாடல்!

இருபத்தோரு பாடல்கள் கொண்டது உலூகன் தூதுச் சருக்கம். அதற்கு மணி மகுடம் போல அமைந்துள்ளது இந்தப் பாடல்.
வில்லி பாரதத்தின் ஒவ்வொரு பாடலையும் நாம் கூர்ந்து கவனிக்க வேண்டும்; அதில் ஏராளமான அர்த்தங்கள் தெரியும்!
tags — நின்ற மால், பத்து அவதாரம், ஒரே பாடல்.
