
WRITTEN BY S NAGARAJAN
Post No. 8475
Date uploaded in London – – –9 August 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
திரு அருட்பிரகாச வள்ளலாரின் வாழ்வில் நாம் காணும் அற்புதங்கள் பற்றிய மூன்று பகுதி குறுந்தொடரில் இது முதலாவது கட்டுரை!
திரு அருட்பிரகாச வள்ளலார் வாழ்வில் நாம் காணும் அற்புதங்கள்! – 1
ச.நாகராஜன்
திரு அருட்பிரகாச வள்ளலார் பெருமானின் திவ்ய சரித்திரம் ஒவ்வொரு தமிழனும் படிக்க வேண்டிய ஒன்றாகும்.
தமிழர்களின் நல்வினைப் பயனாக அவரது சரித்திரத்தை “திரு அருட்பிரகாச வள்ளலார் தலை மாணாக்கர் தொழுவூர் வேலாயுத முதலியார் எழுதிய உண்மைகள்” என்று அவரே தலைப்பிட்டு 77 பக்கங்களில் தருகிறார்.

‘பரதகண்டத்தின் பண்பு’ என்று முதலாம் பகுதி ஆரம்பிக்கிறது, ’திருமருதூர் என்று மறைந்தார்’ என்று 117ஆம் பகுதி முடிகிறது.
இந்தப் பகுதிகளில் வள்ளலார் வாழ்வில் நிகழ்ந்த அற்புதங்கள் பல சிறப்பாகக் கூறப்பட்டுள்ளன. ஏழாவது பகுதியில் தெய்வத் தந்தையார் திரு அவதாரம் என்ற தலைப்பில் அவர் தரும் ஜனனக் குறிப்பு இது. அவரது ஜாதகத்தையும் தந்துள்ளார் அவர்.
“வள்ளலார் பெருமான் கலி 25-48 சுபானு வருடம், தட்சணாயனம், வருஷ ருது புரட்டாசி மாதம், 21ந் தேதி, பூர்வ பக்ஷம், துதியை திதி, ஞாயிற்றுக்கிழமை, இளஞாயிறே போன்று உதயாதி 29 நாழிகை, மீன லக்கினம், சித்திரை நட்சத்திரம் 4ஆங் கால் துலா ராசி (5-10-1823) கூடிய சுப தினத்தன்று நம் தெய்வத் தந்தையார் திரு மருதூர்ப் பதியிலே திரு அவதாரம் செய்தார்.”
இனி அவர் சரித்திரத்தில் நிகழ்ந்த சில நிகழ்வுகளின் தலைப்புத் தகவலை மட்டும் இங்கு காணலாம்.
- அருட்குழந்தை அம்பலக் காட்சியை சிதம்பரத்தில் கண்டது. குழந்தையைப் பார்த்த பெரும் மகானான அப்பய்ய தீக்ஷிதர், “இக்குழந்தை அம்ப்லவாணரின் அருட் குழந்தையே” என்று வாழ்த்தினார்.
- பெருமான் ஓதாது அனைத்தையும் உணர்ந்தார்.
- திருவிளக்கை ஏற்றி அறையில் இருந்த கண்ணாடிக்கு கற்பூரம் காட்டிய போது திருத்தணிகைக் கந்தப் பெருமானார் தெய்வத் திருவுருவம் தெரிந்தது.
- வள்ளலாரின் தமையனார் சபாபதி பிள்ளை திருஞானசம்பந்தர் சரித்திரத்தை ஒரு நிகழ்ச்சியில் சொல்ல இருந்த போது திடீரென்று சுகவீனமுற்றார். வள்ளலார் பெருமான அந்த நிகழ்ச்சியில் சிறப்புரை ஆற்றி அனவரையும் மகிழ்வித்தார்; வியக்க வைத்தார்!
- மாணவர் தொழுவூர் வேலாயுத முதலியார் தானே கடினமான நடையில் சிலேடைப் பாடல்களைப் பாடி பெருமானாரிடம் அவரை சோதிக்கக் கருதி, “சங்க காலத்துப் புலவர்கள் பாடியது இது” என்று சில ஓலைச் சுவடிகளைக் கொடுத்தார். அவற்றை ஒரு கணம் நோக்கிய பெருமான், “அப்பா, இவை பொருள் இலக்கணம் தேறாக் கற்றுக் குட்டி பாடியவை” என்றார். முதலியார் அன்றிலிருந்து அவரது அத்யந்த சீடரானார்.
- ஒற்றியூரில் ஒரு நாள் இருந்த போது, அன்றிரவு சத்திரத்தில் ஒரு குருக்கள் வந்து அவருக்கு அன்னமளித்துச் சென்றார். மறுநாள் விசாரித்த போது அந்தக் குருகள் வெளியூர் சென்று இரண்டு நாட்கள் ஆயிற்று என்ற விவரம் வெளி வந்தது. தியாகப் பெருமானே குருக்களாக வந்தது ஊர்ஜிதமாயிற்று.
- ஒரு வயது முதிர்ந்த மூதாட்டி பெருமானாரிடம் வந்து”ஓர் அற்புதம் காட்டி அருள வேண்டும்” என்று இறைஞ்சினார். அவர் வயதைக் கருதி ஒரு பிடி மணலை எடுத்து அவர் கையில் கொடுத்த பெருமானார் அதை மூடிக் கொள்ளச் சொன்னார். பிறகு அந்த அம்மையார் கையைத் திறந்த போது மணல்களெல்லாம் சிவலிங்கங்களாகத் தோன்றின.
- வியாசர்பாடியில் ஒரு நாள் சொற்பொழிவாற்ற நண்பர்கள் சூழ பெருமானார் சென்றார்.வழியில் பெரிய பாம்பு ஒன்று வர அனைவரும் ஓடி விட்டனர். பாம்போ அடிகளின் திருவடியில் சற்று நேரம் சுற்றிக் கொண்டிருந்ததது. பின்னர் பெருமான், ‘உன் வழி ஏகு’ என்று கூற பாம்பு விலகிச் சென்றது!
- ஒரு முறை திருவொற்றியூரில் தரிசனத்திற்காக எல்லோரும் செல்லும் கீழண்டை மாட வீதி வழியாகச் செல்லாமல் பெருமானார் தேரடி வீதி வழியாகச் சென்றார். அங்கு இருந்த ஒரு நிர்வாண சந்யாசி போவோர் ஒவ்வொருவரையும் பார்த்து, ‘கழுதை போகிறது, மாடு போகிறது’ என்று சொல்வது வழக்கம். ஆனால் அவர் பெருமானாரைப் பார்த்து, “இதோ உத்தம மனிதன் போகிறான்” என்றார். அவரிடம் சென்று பெருமானார் சிறிது நேரம் சில உரைகளைக் கூற அன்றே அந்த சந்யாசி அந்த இடத்தை விட்டு அகன்றார்.
- சங்கராச்சாரியாருக்கு ஒரு முறை ஒரு நூலில் சந்தேகங்கள் வர அவற்றிற்குத் தெளிவுரை கூற வள்ளலார் பெருமான் தகுந்தவர் என்று ஒரு பிராமணர் கூறினார். பெருமானாரோ தன் மாணாக்கரான தொழுவூர் வேலாயுத முதலியாரை சந்தேகம் தீர்க்கச் சொன்னார். அவரும் சந்தேகங்களைத் தீர்த்தார்.
- வித்வான் கண்ணாடி சுப்பராய முதலியார் என்பவர் பல ஆண்டுகளாக வாத நோயால் வருந்தினார். அதை வள்ளலார் போக்கவே அவர் மகிழ்ந்து அவரைப் போற்றிப் பாடல் ஒன்றைப் பாடினார்.
- ஒரு நாள் இரவு நேரம் வீட்டிற்குத் தாமதமாக வந்ததால் திண்ணையில் படுத்தார் வள்ளலார். அவரைத் தட்டி எழுப்பிய தமக்கையார் அமுது படைத்தார். மறுநாள் தமக்கையார் தான் கதவை உட்தாளிட்டு இருந்ததாகவும் வெளியே வரவே இல்லை என்றும் வியப்புடன் கூறினார். அமுது படைத்தது வடிவுடைய நாயகியே என அனைவரும் தெளிந்தனர்; வியந்தனர்!
- பல வருடங்களாக் குஷ்ட நோயினால் வருந்திய ஒருவர் வள்ளலாரை வணங்கி நோய் நீங்கப் பெரும் கருணை புரிய வேண்டும் என்று பிரார்த்தித்தார். வள்ளலார் திருநீறு கொடுத்தார்; நொடிப்பொழுதில் அந்த நோய் நீங்கிற்று.
- கருங்குழி என்னும் ஊரில் ஒரு நாள் வேங்கட ரெட்டியார் வீட்டில் அவரது வேண்டுதலின் பேரில் வள்ளலார் தங்கி இருந்தார். அன்று இரவு ரெட்டியார் வெளியூர் செல்ல வேண்டி இருந்ததால் விளக்கை ஏற்றி விட்டு அருகிலிருந்த மண்பாண்டத்தில் பழகுவதற்காக நீரை நிரப்பி விட்டுச் சென்றார். பாக்களை இயற்றிக் கொண்டிருந்த வள்ளலார் விளக்கு அருகில் எண்ணெய் இருக்கிறதென்று எண்ணி அதை எடுத்து ஊற்றியவாறே இருந்தார். விளக்கு நீரால் எரிந்து கொண்டே இருந்தது. விடியற்காலையில் வீடு வந்த ரெட்டியார் நடந்ததை உணர்ந்து பரவசமெய்தினார். அன்று முதல் அனைவரும் பெருமானாரை தெய்வமாகக் கருதலாயினர். சுவாமிகள் தண்ணீரால் விளக்கை எரித்த அந்த அறையை இன்றும் தைப்பூசத்தன்று அன்பர்கள் தரிசித்து வருகின்றனர்.
**** அற்புதங்கள் தொடரும்
tags – வள்ளலார் , அற்புதங்கள்-1
