காசிக்குப் போயும் கருமம் தொலையவில்லை (Post No. 8537)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8537

Date uploaded in London – 19 August 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

பெரும்பாலான தமிழ் மக்கள் இரண்டு பழமொழிகளை சர்வ சாதாரணமாகப் பயன்படுத்துவர்; என்ன செய்தாலும் கஷ்டம் நீங்கவில்லை என்பதைக் குறிக்க ,

‘காசிக்குப் போயும் கருமம் தொலையவில்லை’ ;

 ‘ராமேஸ்வரம்  போயும்  சனீஸ்வரன் விடவில்லை’ –

என்று முனகுவர். இவை  ஆழமான பொருள் உடைய பழமொழிகள்.

முதலில் ஒரு திருத்தம் ; சனீ’ஸ்வரன்’ என்று அவருக்கு ஈ’ஸ்வரன்’ பட்டம் கிடையாது ; சனை: +சரன் = மெதுவாக செல்பவன் என்று சம்ஸ்கிருதத்தில் சொல்லுவார்கள். சூரியனை பூமி சுற்றுவதற்கு 365 + கால் நாட்கள் ஆகும். ஆனால் சனிக் கிரகம் சூரியனைச் சுற்றி வருவதற்கு 30 ஆண்டுகள் ஆகும்.  ஜோதிட சாஸ்திரம் கணக்கில் எடுத்துக் கொள்ளும் கிரகங்களில் மிகவும் ‘மந்த கதி’ உடையது சனிக் கிரகம் . ஆதி காலத்திலேயே இந்துக்களுக்கு வானியல் (astronomy) அத்துபடி ; ஆகையால் இப்படிப் பெயரிட்டனர்.

விதிகளில் மூன்று வகையான விதிகள் உண்டு. அவற்றில் ஒன்றை எல்லோரும் அனுபவித்தே தீர வேண்டும்; அதை ‘பிராரப்த கர்மா’ என்பர். ஆனால் கடவுளைக் கும்பிடுவோருக்கு அதை அனுபவித்தாலும் அதன் கஷ்ட நஷ்டம் பெரிதாகத் தோன்றாது. பெரிய சன்யாசிகளுக்கு பெரிய நோய்கள் வந்ததை நாம் அறிவோம். வெளியிலிருந்து பார்க்கும் நமக்கு அவர்கள் கஷ்டப்படுவது போலத் தோன்றும்; அவர்களோ பிரம்மானந்தத்தில் திளைத்துக் கொண்டு இருப்பர்.

Long Q in Kasi/ Benares /varanasi

இப்போது பழமொழிகளுக்கு விளக்கம் காண்போம் –

கங்கை நதி புனிதமானதுதான்; அப்படியானால் அதில் வாழும் மீன்கள் எல்லாம் புனிதம் செய்தவையா ? அவை எல்லாம் சுவர்க்கத்துக்குப் போய் விடுமா? இல்லை என்கிறார் ராமகிருஷ்ண  பரம ஹம்சர்.

சிலர் என்னதான் செய்தாலும் அவர்களின் கர்ம வினைகள் விடுவதில்லை. யார் அந்த சிலர் ?

ஐந்து வகையான பாவங்களைச் செய்தவர்கள் தீர்த்த யாத்திரை செய்தும் பயனில்லை. எத்தனை புனிதக் கடல்களில், ஆறுகளில் குளித்தாலும் அவர்கள் பாவம் தொலைவதில்லையாம்.

****

“Here’s the smell of blood still.  All perfumes of Arabia will not sweeten this little hand.” 

  • Lady Macbeth in Shakespeare’s Macbeth
  •  

சேக்ஸ்பியர் எழுதிய புகழ்பெற்ற ‘மாக்பெத்’ (Macbeth) நாடகத்தில் ஒரு மேற்கோள் வருகிறது ; திருமதி மாக்பெத் , டங்கன் (Duncan) என்னும் மன்னனையும் பலரையும் கொன்ற பின்னர் அவள்  கையில் ரத்தக் கரை படிந்துள்ளது ; அவள்  உறக்கமின்றி  கையில் ஒரு மெழுகுவர்த்தியுடன் அலையும் பொது சொல்லும் வாசகம் –

“இன்னும் என் கைகளில் ரத்த நாற்றம் வீசுகிறது. அரேபியா நாட்டிலிருந்து வரும் அத்தனை வாசனைத் திரவத்தை ஊற்றினாலும் இது நல்ல மணமாக மாறாது” – என்று சொல்லி வருத்தப்படுகிறாள்.

இது போல கீழ்கண்ட ஐந்து வகையான பாவங்களைச் செய்தோர் கங்கை, காவிரியில் மூழ்கும்போது வருத்தப்பட்டு பாவ மன்னிப்பு கேட்டாலும், போகாதாம். யார் அந்த ஐவர்?

“1.வாழ்நாளில் பாவங்களை மட்டுமே செய்தவர்கள், 2.கடவுள் நம்பிக்கையற்றோர் , 3.சந்தேகப் பேர்வழிகள், 4.கடவுளை எதிர்த்துப் பேசும் நாஸ்தீக வாதிகள் , 5.எதையும் தவறான கண்ணோட்டத்தில் காண்போர்-  ஆகிய இந்த ஐந்து வகையினரும் எந்தத் தீர்த்தத்தில் போய் நீராடினாலும் பலனில்லை!” — வாயு புராணம் 77-127

இது வாயு புராணம் சொல்லும் விஷயம் .

புரியவில்லையா?

சில எடுத்துக்காட்டுகளைப் பார்ப்போம்.

முழுக்க முழுக்க பாவங்களை மட்டும் செய்துவிட்டு, கங்கையில் போய் குளித்தால் பாவம் போய்விடும் என்று நினைப்பது மூடத்தனம் ; பாடங்களையே படிக்காமல் பரீட்சை எழுதப் போகும் நாளன்று பிள்ளையார் கோவிலைச் சுற்றப் போனால், அவனுடைய நண்பர்களே, ‘சாகப்போகும் நேரத்தில் மட்டும் சங்கர சங்கரா என்று சொல்கிறாயே’ என்று கிண்டல் செய்வார்கள்.

அது சரி, மேலேயுள்ள ஐந்தில் நம்பிக்கையற்றோர், நாஸ்தீக வாதிகள் என்று இரண்டு வகை உள்ளதே ; இரண்டும் வேறு வேறா ? ஆமாம் வேறுதான்; கடவுள் இல்லை என்று பிரசாரம் செய்பவன் (Atheist) நாஸ்தீகன் ; அதிலும்கூட புத்தரைப் போல கடவுள் பற்றி ஒன்றுமே சொல்லாமல் ‘கமுக்க’மாக இருக்கும் பேர்வழிகளை ஆக்நேய வாதிகள் (Agnostic) என்பர். தன் மீதே எந்த நம்பிக்கையும் இல்லாதவர்கள் மற்றொரு வகை. ‘நான் உருப்படவே மாட்டேன்’ என்று நினைப்போர். அர்ஜுனன் இப்படி நினைத்தபோது, ‘சம்சய  ஆத்மா விநஸ்யதி’ – என்று பகவான் கிருஷ்ணர் கீதையில் எச்சரிக்கிறார். அதாவது ‘சந்தேகப் பேர்வழிகள் அழிந்தே போவார்கள்’.

கடைசி வகைக்கு வருவோம். எதையும் தவறாககே காண்போர். இது துரியோதனன் வகை. தர்மனையும் துர்யோதனனையும்  அனுப்பி, தம்பிகளா! ஊரை ஒரு சுற்று சுற்றிப் பார்த்துவிட்டு நல்லவர், கெட்டவர் லிஸ்ட் (List) டைக் கொடுங்கள் என்று கிருஷ்ணர் கேட்டார். “இந்த ஊரில் ஒரு பயல் கூட நல்லவன் இல்லை. I am sorry; no list is available ‘ஐ ஆம் ஸாரி ; நோ லிஸ்ட் ஐஸ் அவைலபிள்’  என்று சொல்லிவிட்டான் துரியோதனன்” (ஒரு ஆளும் நல்லவன் இல்லை. எல்லோரும் கெட்டவர் ; ஆகையால் பட்டியலுக்கு அவசியமில்லை ).

தர்மன் என்னும் யுதிஷ்டிரன் சொன்னான்; “கண்ணா, நான் எப்படி லிஸ்ட் (How can I give you a List?) கொடுக்க முடியும்? எல்லோரும் நல்லவர்கள். எதற்கப்பா List  லிஸ்ட்? யாரிடம் நல்ல குணம் இல்லை? உபநிஷத்துகள் சொல்லுவது போல ‘எல்லோரும் அம்ருதஸ்ய புத்ராஹா’  (அமிர்தம் உண்ட தெய்வீக மனிதர்கள்) என்று சொல்லிவிட்டான். நம் நண்பர்களினிடையேயும் அரசியலிலும் பார்க்கிறோம். எதைச் சொன்னாலும் ‘அதை எதிர்ப்பதே எம் தொழில்’ என்போர். இது போல தெய்வீக காரியங்களிலும் துசுக்கு சொல்லுவோர் உண்டு. அதை ஐந்தாவது வகை எனலாம்..

தீர்த்த யாத்திரை செய்யாமலேயே பலன் பெறும் ஒரு வகை பற்றியும் ஒரு செய்தி உள்ளது. காசி காண்டம் என்னும் சங்கிரசம்ஹிதை பகுதியில் ஒரு செய்யுள் சொல்கிறது —

நிக்ருஹீதேந்திரியக்ராமோ  யத்ரைவ  வஸதே  நரஹ

தஸ்ய தத்ர குருக்ஷேத்ரம் நைமிஷம் புஷ்கரம்  ததா

இதன் பொருள்–

“ஐம்புலன்களையும் அடக்கியவனுக்கு அவன் வீடுதான்  குருக்ஷேத்ரம், நைமிசாரண்யம் , புஷ்கரம் போன்ற புனித தீர்த்தங்கள் ஆகும்”.

சம்ஸ்கிருதத்தில் இன்னொரு வாசகமும் உண்டு:–

“ஸ ஸ்நாதோ யோ தமஸ்நாதஹ  ஸ்ரத்தா சுத்த மனோமலஹ” –  என்று.

இதன் பொருள் —

“யார் நன்றாகக் குளித்தவன் என்றால், புலனடக்கம் என்னும் தீர்த்தத்தில் குளித்து, மன அழுக்கை , நம்பிக்கையால் கழுவுபவனே நன்றாகக் குளித்தவன் ஆவான்”.

அதாவது புலன் அடக்கம் நதி; கடவுள் நம்பிக்கை நல்ல ‘சோப்பு’ (Soap).

மன அழுக்கு நம் உடலில் இருக்கும் அழுக்கு . அதைத் தேய்த்துக் கழுவுக ..

*******

பாரதியார் இன்னும் அழகாகச் சொல்லி விட்டார் –

“துணி வெளுக்க மண்ணுண்டு – எங்கள் முத்து

மாரியம்மா , எங்கள் முத்து மாரி .

தோல் வெளுக்கச்  சாம்பருண்டு -எங்கள் முத்து

மாரியம்மா , எங்கள் முத்து மாரி

மணி வெளுக்கச் சாணையுண்டு -எங்கள் முத்து

மாரியம்மா , எங்கள் முத்து மாரி

மனம் வெளுக்க வழியில்லை -எங்கள் முத்து

மாரியம்மா , எங்கள் முத்து மாரி “

என்று பாடிவிட்டு இதனால்தான் உன்னை அடைக்கலம் புகுந்தோம் என்று பாடி முடிக்கிறார் பாரதியார்.

******

அப்பரும் ‘கங்கை ஆடிலென்’…. என்ற தேவார பதிகத்தில் சொல்வார்–

கங்கை யாடிலென் காவிரி யாடிலென்

கொங்கு தண்குமரித்துறை யாடிலென்

ஓங்கு மாகடல் ஓத நீராடிலென்

எங்கும் ஈசனெனா தவர்க்கில்லையே

–ஐந்தாம் திருமு றை

அதாவது சிவனை மனதில் ஆழமாகப் பதித்து பக்தி செலுத்தாமல்,

மேம்போக்காகப் பலன் கிடைத்தால் கிடைக்கட்டும் என்று அரைகுறை மனதுடன் செல்வோருக்கு தீர்த்த யாத்திரை  பலன் தராது.

*******

பட்டினத்தாரும் வியந்து பாடுகிறார்

ஆரூரர் இங்கிருக்க

அவ்வூர்த் திருநாளென்

றூர்கள்தோறும்

உழலுவீர்; — நேரே

உளக்குறிப்பை நாடாத

ஊமர்காள்! நீவீர்

விளக்கிருக்கத் தீத்தேடுவீர்!.

Tags – கங்கை யாடிலென், காசிக்குப் போயும், ராமேஸ்வரம், சனீஸ்வரன், தீர்த்த யாத்திரை 

Xxx  SUBHAM XXX

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: