
Post No. 8539
Date uploaded in London – – –20 August 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
கொங்கு மண்டல சதகம் பாடல் 90
விசுவகன்மியருக்கான ஒரு சாசனம்!
ச.நாகராஜன்
முற்காலத்தில் கம்மியர்கள் குடியிருக்கும் வீட்டுக்கு காரை போட்டுக் கொள்ளக் கூடாது, நன்மை தீமை காலங்களில் இரட்டைச் சங்கு ஊதக் கூடாது, வெளியில் போகும் போது காலுக்குச் செருப்பு போட்டுக் கொள்ள கூடாது என்ற கடுமையான விதிகள் இருந்தன.
ஆனால் இந்த அநியாயத்தைப் பொறுக்காத கோனேர் மெய்கொண்டான் என்ற சோழன் இவற்றை நீக்கினான்.
நீக்கியதோடு மட்டுமல்லாமல் சாசனமாகப் பொறித்தான்.
கரூர் பசுபதி ஈஸ்வரர் கோவிலில் இந்த சாசனம் இருக்கிறது.
ஸ்வஸ்தி ஸ்ரீ திரிபுவன சக்ரவர்த்திகள் ஸ்ரீ கோனேரின் மெய்கொண்டான் வெங்கால நாட்டுக் கண்மாளற்கு கரு-வது ஆடி மாதம் முதல் தங்களுக்கு நன்மை தீமைகளுக்கு இரட்டைச் சங்கும் ஊதி பேரிகை உள்ளிட்டவை கொட்டுவித்துக் கொள்ளவும் தங்கள் வீடுகளுக்குச் சாந்து இட்டுக் கொள்ளவும் சொன்னோம். இப்படி இவ்வோலை பிடிபாடாகக் கொண்டு சந்திராதித்தவரை செல்வதாகத் தங்களுக்கு வேண்டின இடங்களிலே கல்லிலுஞ் செம்பிலும் வெட்டிக் கொள்க. இவை விழுப்பாதராயன் எழுத்து.
இது தான் சாஸனம்.
S.I.I. V. III. P.I.P. 47 கோயமுத்தூருக்கு அடுத்த பேரூரிலும் இந்த சாஸனம் இருக்கிறது.
இந்தச் சமபவத்தைப் பெருமையாக கொங்கு மண்டல சதகம் தனது 90வது பாடலில் கூறுகிறது.
பாடல் இதோ:
இருப்புற்ற வீட்டுக்குச் சாந்திட்டுக் கொள்ள விரண்டுசங்கு
விருப் புற்ற வாழ்விலுஞ் சாவிலுமூத வெளிநடைகாற்
செருப்பிட்டுச் செல்லப் பெறுவீர்க ளென்னவச் செம்பியனால்
வரைப் பத்தி ரம் பெற்ற கம்மாளருங் கொங்கு மண்டலமே
பொருள் : குடியிருக்கும் வீட்டுக்குக் காரை போட்டுக் கொள்ளவும், நன்மை மற்றும் தீமை காலங்களில் இரட்டைச் சங்கு ஊதவும், வெளியில் போகும் போது காலுக்குச் செருப்பு அணிந்து செல்லவும் இராஜ கட்டளை பெற்ற கம்மாளர் வாழ்வதும் கொங்கு மண்டலமே.
TAGS — கம்மியர், சாசனம், கரூர் பசுபதி ஈஸ்வரர் கோவில்
***