

WRITTEN BY LONDON SWAMINATHAN
Post No. 8549
Date uploaded in London – 21 August 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
தீர்த்த யாத்திரை செய்வதால் பயன் உண்டா ?
புண்ய தீர்த்ததங்களுக்கு மகத்தான சக்தி உண்டு என்று பாகவதம் , மஹாபாரதம், வாயு புராணம் முதலிய நூல்கள் பகர்கின்றன. கும்ப மேளா எனப்படும் உலகிலேயே மிகப்பெரிய திருவிழாவின் போது கோடிக் கணக்கானோர் கங்கையில் புண்ய ஸ்நானம் செய்வதை பார்க்கிறோம். இதே போல 12 ஆண்டுக்கு ஒரு முறை கும்பகோணம் மஹாமகக் குளத்தில் லட்சக் கணக்கானோர் நீராடுவதைக் காண்கிறோம். சிலப்பதிகாரத்தில் மாடல மறையோன் என்ற பிராமணன் தீர்த்த யாத்திரை சென்று வந்ததை அறிகிறோம். பலராமன் மஹாபாரத போருக்கு ‘குட் பை’ (GOOD BYE) சொல்லிவிட்டு 12 ஆண்டு நாடு முழுதும் புனித ஸ்தலங்களுக்கு சென்று வந்ததைக் காண்கிறோம். பாண்டவர்கள் 13 ஆண்டு வனவாசத்தின்போது இந்தியாவுக்குப் போகாத புனித ஸ்தலம் இல்லை. ஏன் இப்படி இவர்கள் எல்லோரும் அலைந்து திரிந்தனர்?
விஜயநகர சாம்ராஜ்யத்தின் மாமன்னன் கிருஷ்ணதேவராயர் கும்பகோணத்துக்கு வந்து மஹாமகக் குளத்தில் நீராடியதைச் செப்பும் கல்வெட்டு பற்றி ஏற்கனவே எழுதி விட்டேன் .

இதோ பாகவத புராணம் சொல்லும் பரம ரஹஸ்யம் :-
சாது சந்யாசிகளும் புண்ய ஆத்மாக்களும் இவ்விடங்களுக்கு வந்து குளித்ததால் அவை புனிதம் பெற்றன. அவர்கள் வருவதால் இந்த இடங்கள் சுத்தமாகின்றன. பரீக்ஷித் மஹாராஜன் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்தபோது அவனைப் பார்க்கும் சந்தடி சாக்கில் பல சாது சன்யாசிகள் கங்கை நதிக்கரைக்கு வந்தனர்; இதனால் அவை புனிதம் பெற்றன.
விடை தெரியாத ஒரு கேள்வி உண்டு !
கோழியிலிருந்து முட்டை வந்ததா ? முட்டையிலிருந்து கோழி வந்ததா ?
ஆணிலிருந்து பெண் வந்தாளா? பெண்ணிலிருந்து ஆண் வந்தானா? யார் முதலில் தோன்றினர்?
விதையிலிருந்து மரம் வந்ததா ? மரத்திலிருந்து விதை வந்ததா?


யாரும் தெளிவான, திருப்திகரமான பதில் சொல்ல முடியாது! இதே போல ஓரிடத்தில் புண்யத்தை ஞான திருஷ்டியால் அறிந்து மஹான்கள் அங்கு சென்றனரா ? அல்லது அவர்கள் அங்கு சென்று ஸ்னானம் செய்ததால் அந்த இடத்துக்கு மஹத்தான சக்தி கிடைத்ததா?
எப்படியும் எடுத்துக்கொள்ளலாம். நெரூர் சதாசிவ பிரம்மேந்திரர் சமாதிக்கு கரடு முரடான , வளைவான பாதைகளைக் கடந்து சென்றபோது எனக்கே மனதில் ஆச்சர்யம் ஏற்பட்டது. ஏன் இவர் இங்கு வந்து சமாதியானார் ? என்று. இது போல பலர் சித்தர் சமாதிகள் அல்லது புண்ணிய தீர்த்தங்கள் காடு மலைகளுக்கு இடையில் உள்ளன.
பாகவத புராணம் சொல்கிறது –
தத்ரோப ஜக்முர் புவனம் புனானா
மஹானுபாவா முனயஹ சசிஷ் யாஹா
ப்ராயேன தீர்த்தாபி காமா பதேசை ஹி
ஸ்வயம் ஹாய தீர்த்தானி புனைந்து சந்தஹ
–பாகவத புராணம் 1-19-8
பொருள்
புண்ய ஆத்மாக்கள் இடம்விட்டு இடம் சென்று பல இடங்களைப் புனிதப்படுத்தினர். தீர்த்தங்களுக்கு செல்வதை சாக்காக வைத்து சிஷ்ய கோடிகளுடன் வந்து அந்த இடங்களைத் தூய்மையாக்கினார்கள் . தீர்த்தங்களே அவைகளால் தூய்மையாகின்றன.
பாகவத புராணம் பின்னும் ஒரு இடத்தில் மேலும் தெளிவாகவே சொல்கிறது :-
‘கதா’தாரியான விஷ்ணுவை மனதில் நிலை நாட்டிய பெரியோர்கள் புனித நீர்நிலைகளுக்குச் சமமானவர்கள் . அவர்களுடைய தூய உள்ளம்தான் புண்ய தீர்த்தங்கள். இதனால் அவைகளும் புனிதம் பெறுகின்றன ; மஹிமை அடைகின்றன –
பவத்விதா பாகவதாஸ் தீர்த்தபூதாகா ஸ்வயம் விபோ
தீர்த்தகுர்வந்தி தீர்த்தானி ஸ்வான்தஹ ஸ்தேன கதாப்ருதா.
–பாகவதம் 1-13-10

ஸ்கந்த புராணம் ‘புருஷ யாத்திரை’க்கே முக்கியத்துவம் என்கிறது. அதாவது எந்த புனிதத்தலங்களுடன் மஹான்கள் பெயர்கள் இருக்கிறதோ அங்கே செல்லுங்கள். வெறுமனே புனித நீர்நிலை, தலம் என்றால் அதில் சிறப்பு இல்லை என்கிறது.
முக்யா புருஷயாத்ரா ஹி தீர்த்தயாத்ரானுஷங்கதஹ
–ஸ்காந்தம் 1-12-13-10
மஹாபாரதத்தில் அனுசாசன பர்வத்தில் அழகான வாசகம் உளது —
மனித உடலில் எப்படி சில உறுப்புகள், ஏனைய அங்கங்களைவிட தூய்மையானவையோ , அப்படி இந்தப் பூவுலகில் சில இடங்கள் ஏனையவற்றைவிடப் புனிதமானவை .
–அனுசாசன பர்வம் , அத்யாயம் 108, ஸ்லோகம் 16-18
“All animals are equal, but some animals are more equal than others”
ஜார்ஜ் ஆர்வெல் என்பவர் 1954ல் எழுதிய புகழ்பெற்ற நாவல் அனிமல் ஃபார்ம் (ANIMAL FARM BY GEORGE ORWELL) என்பதாகும் அதில் பன்றிகள் சொல்லும்:- ‘ எல்லா மிருகங்களும் சமம் என்பது உண்மையே ; ஆனால் சில பிராணிகள் ஏனையவற்றைவிட அதிகம் சமம் ஆனவை’ .
இது கிண்டல் செய்யும் வாசகம்; ‘சமம்’ என்பதன் பொருள் அங்கே அர்த்தம் இழந்துவிட்டது. அரசியல்வாதிகள் ‘எல்லோரும் சமம்’ என்று சொல்லிவிட்டு சிலருக்கு அதிகம் சலுகை காட்டுவதை நக்கல்/ பகடி செய்யும் வசனம் இது.
ஆனால் மத விஷயத்தில் இது உண்மை.
“எல்லாப் புனிதத் தலங்களும் புனிதமானவையே; சில பெரியோருடன் சம்பந்தப்பட்ட புனிதத் தலங்களும் தீர்த்தங்களும் ஏனையவற்றை விடப் புனித மானவை”.
ALL SACRED PLACES ARE EQUALLY SACRED; BUT SOME ARE MORE SACRED THAN OTHERS ! (BECAUSE THEY ARE ASSOCIATED WITH GREAT PEOPLE)
ஆண்டுதோறும் வங்காளத்தில் கபில தீர்த்தத்துக்கு யாத்திரை செல்வோரின் எண்ணிக்கையையும் சபரிமலைக்கு கார்த்திகை முதல் தை மாதம் வரை யாத்திரை செல்வோரின் எண்ணிக்கையையும் , பண்டரிபுரத்துக்கு ஆடிப் பாடிக் கொண்டே வரும் லட்சோப லட்சம்பேரையும், கார்த்திகை பவுர்ணமியன்று திருவண்ணாமலை கிரிவலம் செல்வோரின் எண்ணிக்கையையும் எண்ணிப்பாருங்கள். அவர்கள் எல்லோரும் கொடுத்து வைத்தவர்கள்.

இறுதியாக மஹாபாரத வனபர்வம் சொல்லும் விஷயத்தைக் காண்போம்-
“யாக யக்ஞங்கள், பூஜை புனஸ்காரங்களுக்கு அதிக ஏற்பாடுகள் தேவை; செலவு பிடிக்கும். ஆனால் தீர்த்த யாத்திரைக்கு எதுவும் தேவை இல்லை; சேலம், மனைவி, புரோகிதர், பூஜை சாமான்கள் இல்லாமலே பலன் பெறலாம். ஏழைகளும் இதைச் செய்யமுடியும் என்பதால் சிறந்த யாகங்களை விட இதற்கு மதிப்பு அதிகம்.”
–வன பர்வம், மஹாபாரதம்,அத்யாயம் 82, ஸ்லோகம் 13-17
உங்கள் ஊரில் பக்கத்தில் உள்ள புனித தீர்த்தங்களுக்கும் சித்தர் சமாதிக்களுக்கும் செல்லுங்கள் . அதுவே போதும். காஸ்மீரிலுள்ள வைஷ்ணவ தேவி குகைக் கோயிலுக்கும் அமர்நாத் அதிசய ஜஸ் / பனிக்கட்டி லிங்க தரிசனத்துக்கும் சென்றுதான் பலன் அடைய வேண்டும் என்பதில்லை.
புண்ய பூமி பாரதத்தில் தெருவெங்கும் கோவில்கள்; சித்தர் சமாதிகள் , புண்ய தீர்த்தங்கள்!!!
வாழ்க பாரதம் – வளர்க தல யாத்திரை


