

Post No. 8551
Date uploaded in London – – –22 August 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
22-8-2020 – விநாயகர் சதுர்த்தி. முன்னவனை வணங்குவோம். அவனைப் பற்றிய ஒரு துதி மாலைத் தொகுப்பு இது.
ச.நாகராஜன்
ஒரு நூலைத் தொடங்கும் முன்னர் விநாயகரைத் துதிக்காமல் எந்தக் கவிஞரும், புலவரும் நூலைத் தொடங்குவதில்லை.
ஒரு காரியத்தைச் செய்வதற்கு முன்னர் அதில் எந்த வித இடையூறும் நேராமலிருக்க விநாயகரை பூஜை செய்வது பண்டைய காலம் தொட்டு இருந்து வரும் ஒரு பழக்கம்.
விநாயகரைப் பற்றிய நூற்றுக்கணக்கான துதிகள், ஸ்தோத்திரங்கள், அஷ்டோத்திரம், சஹஸ்ர நாமம் ஆகியவை உண்டு.
இப்போது நாம் இங்கு காணப் போவது தமிழில் விநாயகரைப் போற்றித் துதித்த அரும் தமிழ்க் கவிதைகள்.
இவற்றைப் படித்தாலேயே விநாயகரின் பெருமை புரிய வரும். அவரைத் துதித்தால் அவர் அருள் நம்மைத் தேடி வரும்.
1
வாக்கு உண்டு, நல்ல மனம் உண்டு, செல்வம் சேரும்!
வாக்குண்டாம் நல்ல மனம் உண்டாம் மாமலராள்
நோக்கு உண்டாம் மேனி நுடங்காது – பூக்கொண்டு
துப்பு ஆர் திருமேனித் தும்பிக்கையான் பாதம்
தப்பாமல் சார்வார் தமக்கு
-ஔவையார் அருளிய பாடல் – வாக்குண்டாம் நூல்

2
சங்கத் தமிழ் மூன்றும் பெறலாம்!
பாலும் தெளி தேனும் பாகும் பருப்பும் இவை
நாலும் கலந்து உனக்கு நான் தருவேன் – கோலம் செய்
துங்கக் கரிமுகத்துத் தூ மணியே – நீ எனக்குச்
சங்கத் தமிழ் மூன்றும் தா
-ஔவையார் அருளிய பாடல் – நல்வழி நூல்
3
பிரணவப் பொருளானவன்!
பிரணவப் பொருளாம் பெருந்தகை ஐங்கரன்
சரண அற்புத மலர் தலைக்கு அணிவோமே
- அதிவீர ராம பாண்டியர் கடவுள் வாழ்த்து – வெற்றிவேற்கை நூல்
4
கலைகளாய் வருவான் கரிமுகன்!
உலக நீதி புராணத்தை உரைக்கவே
கலைகளாய் வரும் கரிமுகன் காப்பு
- உலக நாத பண்டிதர் – கடவுள் வாழ்த்து – உலக நீதி நூல்
5
நன்னெறி காட்டுபவன்!
மின் எறி சடாமுடி விநாயகன் அடி தொழ
நன்னெறி வெண்பா நாற்பதும் வருமே
- சிவப்பிரகாச சுவாமிகள் – கடவுள் வாழ்த்து – நன்னெறி நூல்
6
கலிப் பகைஞன்!
காரண காரியங்களின் கூட்டு அறுப்போர் யோகக்
கருத்து என்னும் தனித் தறியில் கட்ட, கட்டுண்டு
ஆரணம் ஆம் நால் கூடத்து அணைந்து நிற்கும்
ஐங் கரத்து ஒரு களிற்றுக்கு அன்பு செய்வாம் –
‘தனித்தனியே திசை யானை தறிகள் ஆக,
ஈயத் தம்பம் பல நாட்டி, ஒரு கூடத்தே
அனைத்து உலகும் கவித்ததெனக் கவித்துநிற்கும்
அருட் கவிகைக் ‘கலிப் பகைஞன் வாழ்க’ என்றே
- கவிச் சக்கவர்த்தி ஜெயங்கொண்டார் – கடவுள் வாழ்த்து – கலிங்கத்துப் பரணி நூல்.

7
ஐந்து கை வலான் காவலானே!
பூ மலி இதழி மாலை புனைந்த குற்றாலத்து ஈசர்
கோ மலர்ப் பாதம் போற்றி, குறவஞ்சித் தமிழைப் பாட,
மா மதத்து அருவி பாயும் மலை என வளர்ந்த மேனிக்,
கா மலி தருப்போல் ஐந்து கை வலான் காவலானே.
- திரிகூட ராசப்பக் கவிராயர் – கடவுள் வாழ்த்து – குற்றாலக் குறவஞ்சி நூல்
8
கருமால் அறுக்கும் கணபதி சரணம்!
திருமா லறியாச் சேவடி யாலென்
கருமா லறுக்கும் கணபதி சரணம்
9
முக்தி நலம் சொன்னவன், தூய் மெய்ச் சுகத்தவன்!
முன்னவனே யானை முகத்தவனே முத்தி நலம்
சொன்னவனே தூய் மெய்ச் சுகத்தவனே மன்னவனே
சிற்பரனே ஐங்கரனே செஞ்சடையஞ் சேகரனே
தற்பரனே நின் தாள் சரண்
- வள்ளலார் – கணபதி தோத்திரம் – இதில் முதல் துதி இது.
10
கலை நிறை கணபதி சரணம் சரணம்!
கலை நிறை கணபதி சரணம் சரணம்
கஜமுக கணபதி சரணம் சரணம்
தலைவ நின் இணையடி சரணம் சரணம்
சரவண பவ குக சரணம் சரணம்
சிலைமலை யுடையவர் சரணம் சரணம்
சிவசிவ சிவசிவ சரணம் சரணம்
உலைவரு மொருபரை சரணம் சரணம்
உமைசிவை யம்பிகை சரணம் சரணம்
- வள்ளலார் – கணபதி தோத்திரம் – இதில் பத்தாவது துதி இது.
tags — விநாயகர் தமிழ் மாலை

***
R Nanjappa
/ August 22, 2020பகவான் ரமணர் ‘அக்ஷரமணமாலை”யின் தொடக்கத்தில் எழுதிய கணபதி ஸ்துதி இது:
” அருணாசல வரற்கேற்ற அக்ஷரமணமாலை சாற்றக்
கருணாகர கணபதியே கரமருளிக் காப்பாயே”.
“கணபதி ராயன் அவனிரு காலைப் பிடித்திடுவோம்” என்றார் பாரதியார்!