மஹரிஷி அங்கிரஸ்! (Post No.8600)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No. 8600

Date uploaded in London – – –31 August 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

by  ச.நாகராஜன்

மிகச் சிறந்த தவ வலிமை உடைய அதிசயிக்க வைக்கும் மஹரிஷி -அங்கிரஸ்.

பிரம்மாவின் ஆறு புத்திரர்களில் அங்கிரஸ் ஒருவர். பிரம்மாவின் தவ மஹிமையினால் மரீசி, அங்கிரஸ், அத்திரி, புலஸ்தியர், புலஹர், க்ரது என அவருக்கு ஆறு புத்திரர்கள் பிறந்தனர்.

அங்கிரஸ் பிரம்மாவின் முகத்திலிருந்து உருவானவர். இது ஆதி பிறப்பு.

இன்னொரு வரலாறு உண்டு.

ஸ்வாயம்பு மன்வந்தரத்தில் சிவபிரானின் சாபத்தால் எல்லா ரிஷிகளும் தங்கள் சரீரத்தை இழந்தனர்; மேலுலகம் சேர்ந்தனர். பிறகு வைவஸ்வத மன்வந்தரத்தில் பிரம்மாவின் வீர்யம் கீழே விழக் கண்டு அதை தேவர்களுடைய பத்தினிகளும், தாய்மார்களும் எடுத்து அக்கினியில் ஆகுதி செய்தனர்.

அந்தத் தணலிலிருந்து அங்கிரஸும் உருவானார். அதனால் இவருக்கு ஆங்கிரஸ் என்ற பெயரும் உண்டு.

அங்கிரஸுக்கு, தேவ குருவாகிய பிரஹஸ்பதி, உதத்யர், சம்வர்த்தர் என்று மூன்று புத்திரர்கள் உண்டு.

அங்கிரஸ் அபூர்வமான தவத்தை மேற்கொண்டார். அந்தத் தவத்தின் பலனாக அக்னிக்கு மேலாக தனது தேஜஸினால் ஜொலிக்க ஆரம்பித்தார். உலகம் முழுவதையும் பிரகாசமடையச் செய்தார்.

அதே காலத்தில் அக்னி பகவானும் தவம் செய்து கொண்டிருந்தார். அங்கிரஸின் தேஜஸுக்கு முன்னால் அக்னி தேவனின் ஒளி மங்கியது. அக்னி தேவன் என்ன செய்வது என்று திகைத்தார்.

பிரம்மதேவன் இந்த உலகத்திற்கு இன்னொரு தேவனை சிருஷ்டித்திருக்கிறார் போலும் என்று அவர் எண்ணினார்; பயந்தார்.

நேராக அங்கிரஸ் மஹரிஷியைச் சென்றடைந்தார்.

ஆனால், அங்கிரஸ் அக்னி தேவனுக்குத் தைரியம் கூறினார்.

“நீரே ஆதியில் இருளைப் போக்குவதற்காக பிரம்மாவினால் சிருஷ்டிக்கப்பட்டவர். ஆதலால் எப்போதும் போல அக்னியாக இருந்து உலகில் வியாபித்து அதைப் பிரகாசம் செய்து கொண்டிரும்” என்றார் அவர்.

உடனே அக்னி பகவான், “உலகத்தில் எனது கீர்த்தி மழுங்கி விட்டது! நீரே அக்னிதேவனாக ஆகி விட்டீர். உலகத்தில் அனைத்து ஜனங்களும் உம்மையே அக்னியாக மதிக்கின்றார்கள். ஆகவே அக்னி தேவன் என்ற முதன்மை இடத்தை நான் விட்டு விட்டேன். அந்த ஸ்தானத்தை நீரே வகிப்பீராக. நான் உமக்கு அடுத்த ஸ்தானத்தை வகிக்கின்றேன்” என்றார்.

அதற்கு அங்கிரஸ், “ நீர் முன் போல அக்னி பகவானாக இருந்து உலகத்தில் இருளைப் போக்கியும், மற்ற தேவதைகளுக்கு ஹவிர் பாகங்களைப் பகிர்ந்து கொடுத்தும், ஜனங்களை மோக்ஷ வழியில் சேர்க்கும் படியான பரிசுத்தமான மேன்மையான் தொழிலை அனுஷ்டித்தும் வாரும். என்னை உமது முதல் குழந்தையாகச் செய்து கொள்ளும்” என்று பெருந்தன்மையுடன் கூறினார்.

இந்த வார்த்தையைக் கேட்ட அக்னி பகவான் அவர் கூறிய படியே செய்தார்.

அங்கிரஸ் பற்றிய மேலும் பல செய்திகள் உண்டு.

ஒரு காலத்தில் அங்கிரஸ் மஹரிஷி தம்முடைய அளப்பரிய தவ சக்தியினால் உலகத்திலுள்ள நீரையெல்லாம் குடித்து விட்டார். அதற்குப் பின்னரும் அவர் தாகம் தணியவில்லை. ஆகவே ஒரு பெரிய அலையை உண்டாக்கி, அதன் மூலமாக உலகெங்கும் நீர் நிரம்பி இருக்கும் படி செய்தார்.

ஒரு சமயம் அங்கிரஸ் வாயு பகவான் மீது கோபம் கொண்டு சினந்ததில் அவர் பயந்து உலகத்தை விட்டு ஓடிப் போய் பிராமணர்களுடைய அக்னிஹோத்திரத்தில் வெகுகாலம் மறைந்து வாசம் செய்தார்.

இப்படி அங்கிரஸ் மஹரிஷி அக்னி, வருணன், வாயு ஆகிய தேவர்களைத் தனது சக்தியினால் நடுங்கும் படி செய்யும் அளவு தவ மஹிமை கொண்டவராக விளங்கினார்.

மஹாபாரத யுத்தத்தில் அங்கிரஸ் பற்றிய ஒரு செய்தி உண்டு. யுத்தம் மிகக் கடுமையாகவே துரோணர் நாலா புறங்களிலும் தன் திவ்ய அஸ்திரங்களை ஏவ ஆரம்பித்தார். ஆயிரக்கணக்கானோர் மாண்டனர். உடனே அங்கிரஸ் துரோணர் முன் தோன்றி, “எண்ணற்ற வீரர்களை பிரம்மாஸ்திரத்தை ஏவி நீர் கொன்று விட்டீர். உமது முடிவு நெருங்கி விட்டது. ஆகவே உமது ஆயுதத்தைக் கீழே வையும். சண்டையை நிறுத்துவீர்” என்றார். ஆனால் அதை துரோணர் கேட்கவில்லை. அவரது  முடிவு நெருங்கியது.

ஒரு சமயம் அங்கிரஸ் சூரியனையே காப்பாற்றியுள்ளார். (மஹாபாரதம் வனபர்வம், 92ஆம் அத்தியாயம்)

ஒரு சமயம் அக்னி தேவன், அங்கிரஸ் மஹரிஷிக்கு உரிய முறையில் மரியாதை செலுத்தவில்லை . இதனால் வெகுண்ட அங்கிரஸ் அக்னியை சபிக்கவே, அன்றிலிருந்து தான் தீயிலிருந்து புகை எழும்ப ஆரம்பித்தது. (மஹாபாரதம், அனுசாஸன பர்வம்,  153ஆம் அத்தியாயம்)

அங்கிரஸ் மஹரிஷி தீர்த்த ஸ்தலங்களைப் பற்றியும் அங்கு செல்வதால் ஏற்படும் பயன்களை விவரித்துள்ளார். (மஹாபாரதம், அனுசாஸன பர்வம்,  25ஆம் அத்தியாயம்) உபவாச மேன்மையையும் அவர் விளக்கியுள்ளார்.(மஹாபாரதம், அனுசாஸன பர்வம்,  106ஆம் அத்தியாயம்)

இப்படி அங்கிரஸ் மஹரிஷி பற்றி மஹாபாரதம், ஆதி பர்வத்திலும், வன பர்வத்திலும், அநுசாஸன பர்வத்திலும் பல வரலாறுகளைக் காணலாம். மத்ஸ்ய புராணத்திலும் அங்கிரஸ் பற்றிய செய்திகள் உண்டு.

***

tags- மஹரிஷி ,அங்கிரஸ்,

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: