பாரத ஸ்தலங்கள் – 11 (Post No.8611)

PICTURES ARE FROM LALGUDI VEDA

WRITTEN BY S NAGARAJAN                     

Post No. 8611

Date uploaded in London – – 2 SEPTEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

குறிப்பு : இது வரை நாம் பார்த்த தலங்கள் (இந்தக் கட்டுரையில் உள்ள தலங்கள் உட்பட) 2222 தலங்கள் ஆகும். சில தலங்கள் சிறப்பியல்புகளின் காரணமாக வெவ்வேறு தலைப்புகளிலும் இடம் பெற்றிருக்கக் கூடும். அவற்றையும் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

பாரத ஸ்தலங்கள் – 11

திருநாவுக்கரசர் அருளிய அடைவுத் திருத்தாண்டகத்தில் உள்ள 142 ஸ்தலங்கள் !

ச.நாகராஜன்

34. அடைவுத் திருத்தாண்டகத் தலங்கள் 142

திருநாவுக்கரசர் (அப்பர் பெருமான்) வெவ்வேறு தலப் பெயர்களின் முடிவைக் கண்டு அந்த முடிவுகளின் படி தலங்களைப் பாகுபடுத்தி அடைவுத் திருத்தாண்டகப் பதிகம் ஒன்றைப் பாடி அருளியுள்ளார்.

ஆறு, ஈச்சுரம், ஊர், களம், கா, காடு, குடி, குளம், கோயில், துறை, பள்ளி, மலை, வாயில், வீரட்டம் ஆகிய பதினான்கு  முடிவுகளின் படி அவர் தொகுத்த தலங்கள் வருமாறு

 ஆறு – 6 தலங்கள்

ஈச்சுரம் – 15 தலங்கள்

ஊர் – 19 தலங்கள்

களம் – 3 தலங்கள்

கா – 4 தலங்கள்

காடு – 8 தலங்கள்

குடி – 19 தலங்கள்

குளம் – 4 தலங்கள்

கோயில் – 8 தலங்கள்

துறை – 12 தலங்கள்

பள்ளி – 10 தலங்கள்

மலை – 17 தலங்கள்

வாயில் – 9 தலங்கள்

வீரட்டம் – 8 தலங்கள்

பொருப்பள்ளி வரைவில்லாப் புரமூன் றெய்து
    புலந்தழியச் சலந்தரனைப் பிளந்தான் பொற்சக்
கரப்பள்ளி திருக்காட்டுப் பள்ளி கள்ளார்
    கமழ்கொல்லி யறைப்பள்ளி கலவஞ் சாரற்
சிரப்பள்ளி சிவப்பள்ளி செம்பொன் பள்ளி
    செழுநனி பள்ளிதவப் பள்ளி சீரார்
பரப்பள்ளி யென்றென்று பகர்வோ ரெல்லாம்
    பரலோகத் தினிதாகப் பாலிப் பாரே

பள்ளி – 10 தலங்கள்

பொருப்பள்ளி,  சக்கரப்பள்ளி, திருக்காட்டுப்பள்ளி,  கொல்லியறைப்பள்ளி, சிராப்பள்ளி, சிவப்பள்ளி, செம்பொன் பள்ளி,  நனிபள்ளி, தவப்பள்ளி, பரப்பள்ளி என்று இத்தலப்பெயர்களைப் பலகாலும் சொல்லுவார் எல்லாரும் மேலான தேவருலகை அடைந்து அதனை இனிமைமிகக் காப்பாராவார்.

காவிரியின் கரைக்கண்டி வீரட் டானங்
    கடவூர்வீ ரட்டானங் காமருசீ ரதிகை
மேவியவீ ரட்டானம் வழுவைவீ ரட்டம்
    வியன்பறியல் வீரட்டம் விடையூர்திக் கிடமாம்
கோவல்நகர் வீரட்டங் குறுக்கைவீ ரட்டங்
    கோத்திட்டைக் குடிவீரட் டானமிவை கூறி
நாவில்நவின் றுரைப்பார்க்கு நணுகச் சென்றால்
    நமன்தமருஞ் சிவன்தமரென் றகல்வர் நன்கே

வீரட்டம் – 8 தலங்கள்

 கண்டியூர் வீரட்டானம், கடவூர் வீரட்டானம், அதிகை வீரட்டானம், வழுவூர் வீரட்டானம், பறியலூர் வீரட்டானம், கோவலூர் வீரட்டானம், குறுக்கை வீரட்டானம், விற்குடி வீரட்டானம் என்னும் வீரட்டானங்கள் எட்டினையும் முறைப்பட முன்னர் ஒருமுறை மொழிந்து பின்னர் அம்முறையே நாவில் பழகிப் பலகாலும் போற்றுவார்க்கு அருகில் இயமதூதர்கள் ஒருகால் செல்ல நேரிடின் இவர் சிவபெருமானுக்கு அடியர் என்று உடனே உணர்ந்து அவரைவிட்டு வெகு தொலைவு அகல நீங்குவர்.

நற்கொடிமேல் விடையுயர்த்த நம்பன் செம்பங்
    குடிநல்லக் குடிநளிநாட் டியத்தான் குடி
கற்குடிதென் களக்குடிசெங் காட்டங் குடி
    கருந்திட்டைக் குடிகடையக் குடிகா ணுங்கால்
விற்குடிவேள் விக்குடி நல்வேட்டக் குடி
    வேதிகுடி மாணிகுடி விடைவாய்க் குடி
புற்குடிமா குடிதேவன் குடிநீலக்குடி
    புதுக்குடியும் போற்றஇடர் போகு மன்றே

குடி – 19 தலங்கள்

செம்பங்குடி, நல்லக்குடி,  நாட்டியத்தான்குடி, கற்குடி,  களக்குடி, செங்காட்டங்குடி, கருந்திட்டைக்குடி, கடையக்குடி, விற்குடி, வேள்விக் குடி, வேட்டக்குடி, வேதிகுடி, மாணிகுடி, விடைவாய்க் குடி, புற்குடி, மாகுடி,, தேவன்குடி, நீலக்குடி, புதுக்குடி, என்பனவற்றையும் புகழ்ந்து கூறத் துன்பம் நீங்கும்.

பிறையூருஞ் சடைமுடியெம் பெருமா னாரூர்
    பெரும்பற்றப் புலியூரும் பேரா வூரும்
நறையூரும் நல்லூரும் நல்லாற் றூரும்
    நாலூருஞ் சேற்றூரும் நாரை யூரும்
உறையூரும் ஓத்தூரும் ஊற்றத் தூரும்
    அளப்பூரோ மாம்புலியூ ரொற்றி யூரும்
துறையூருந் துவையூருந் தோழூர் தானுந்
    துடையூருந் தொழஇடர்கள் தொடரா வன்றே

ஊர் – 19 தலங்கள்

 ஆரூர், பெரும் பற்றப்புலியூர், பேராவூர், நறையூர், நல்லூர், நல்லாற்றூர், நாலூர், சேற்றூர், நாரையூர், உறையூர், ஓத்தூர், ஊற்றத்தூர், அளப்பூர், ஓமாம்புலியூர், ஒற்றியூர், துறையூர், துவையூர், தோழூர், துடையூர், என்னுமிவற்றைத் தொழத் துன்பங்கள் தொடர மாட்டா.

பெருக்காறு சடைக்கணிந்த பெருமான் சேரும்
    பெருங்கோயில் எழுபதினோ டெட்டும் மற்றுங்
கரக்கோயில் கடிபொழில்சூழ் ஞாழற் கோயில்
    கருப்பறியற் பொருப்பனைய கொகுடிக் கோயில்
இருக்கோதி மறையவர்கள் வழிபட் டேத்தும்
    இளங்கோயில் மணிக்கோயில் ஆலக் கோயில்
திருக்கோயில் சிவனுறையுங் கோயில் சூழ்ந்து
    தாழ்ந்திறைஞ்சத் தீவினைகள் தீரும் அன்றே

கோயில் – 8 தலங்கள்

 சிவபெருமான் திகழும் பெருங்கோயில்கள் எழுபத்தெட்டுடன், கடம்பூர் கரக்கோயில், ஞாழற்கோயில், கருப்பறியலூரில் கொகுடிக்கோயில், இளங்கோயில், மணிக்கோயில், ஆலக்கோயில் (கச்சூர்), திருக் கோயில் என்னும் சிவபெருமானுறையும் கோயில்களை வலம் வந்து வீழ்ந்து வணங்கத் தீவினைகள் யாவும் தீரும்.

மலையார்தம் மகளொடுமா தேவன் சேரும்
    மறைக்காடு வண்பொழில்சூழ் தலைச்சங் காடு
தலையாலங் காடுதடங் கடல்சூ ழந்தண்
    சாய்க்காடு தள்ளுபுனற் கொள்ளிக் காடு
பலர்பாடும் பழையனூ ராலங் காடு
    பனங்காடு பாவையர்கள் பாவம் நீங்க
விலையாடும் வளைதிளைக்கக் குடையும் பொய்கை
    வெண்காடும் அடையவினை வேறா மன்றே
.
காடு – 8 தலங்கள்

மறைக்காடு, தலைச்சங்காடு, தலையாலங்காடு, சாய்க்காடு,   கொள்ளிக்காடு,  பழையனூர் ஆலங்காடு, பனங்காடு,  வெண்காடு ஆகியவற்றை அடைந்து வணங்க வினைகள் விட்டு நீங்கும்.

கடுவாயர் தமைநீக்கி யென்னை யாட்கொள்
    கண்ணுதலோன்நண்ணுமிடம்அண்ணல்வாயில்
நெடுவாயில் நிறைவயல்சூழ் நெய்தல் வாயில்
    நிகழ்முல்லை வாயிலொடு ஞாழல் வாயில்
மடுவார்தென் மதுரைநக ரால வாயில்
    மறிகடல்சூழ் புனவாயில் மாட நீடு
குடவாயில் குணவாயி லான வெல்லாம்
    புகுவாரைக் கொடுவினைகள் கூடா வன்றே
.

வாயில் – 9 தலங்கள்

அண்ணல்வாயில், நெடு வாயில், நெய்தல்வாயில்,  முல்லைவாயில், ஞாழல்வாயில், ஆலவாயில், புனவாயில், குடவாயில், குண வாயில், ஆகிய இவற்றுள் எல்லாம் புகுந்து வணங்குவாரைப் பாவச் செயல்கள் ஒரு நாளும் பற்றமாட்டா.

நாடகமா டிடநந்தி கேச்சுரமா காளேச்
    சுரநாகேச் சுரநாக ளேச்சுரநன் கான
கோடீச்சுரங் கொண்டீச் சுரந்திண் டீச்சுரங்
    குக்குடேச் சுரமக்கீச் சுரங்கூ றுங்கால்
ஆடகேச் சுரமகத்தீச் சுரமய னீச்சுர
    மத்தீச்சுரஞ் சித்தீச்சுர மந்தண் கானல்
ஈடுதிரை யிராமேச்சுர மென்றென் றேத்தி
    யிறைவனுறை சுரம்பலவு மியம்பு வோமே

ஈச்சுரம் – 15 தலங்கள்

நந்திகேச்சுரம், மாகாளேச்சுரம், நாகேச்சுரம், நாகளேச்சுரம், கோடீச்சரம், கொண்டீச்சரம், திண்டீச்சரம், குக்குடேச்சுரம், அக்கீச்சரம், ஆடகேச்சுரம், அகத்தீச்சுரம், அயனீச்சுரம், அத்தீச்சுரம், சித்தீச்சுரம், இராமேச்சுரம் என்றெல்லாம் இறைவன் தங்குகின்ற ஈச்சுரம் பலவற்றையும் கூறி அவனைப் புகழ்வோமாக.

கந்தமா தனங்கயிலை மலைகே தாரங்
    காளத்தி கழுக்குன்றங் கண்ணா ரண்ணா
மந்தமாம் பொழிற்சாரல் வடபற்பதம்
    மகேந்திரமா மலைநீலம் ஏம கூடம்
விந்தமா மலைவேதஞ் சையம் மிக்க
    வியன்பொதியின் மலைமேரு உதயம் அத்தம்
இந்துசே கரனுறையும் மலைகள் மற்றும்

   
ஏத்துவோம் இடர்கெடநின் றேத்து வோமே

மலை – 17 தலங்கள்

கந்தமாதனம், கயிலைமலை, கேதாரம், காளத்தி, கழுக்குன்றம், அண்ணாமலை, வடபற்பதம், மகேந்திரமாமலை, நீலமலை, ஏமகூடமலை, விந்தமாமலை, வேதமலை, சையமலை, பொதியின் மலை. மேருமலை, உதயமலை, அத்தமலை ஆகிய இவையும் பிறவுமாகிய சந்திரனை முடியிலணிந்த சிவபெருமானுடைய மலைகளைப் புகழ்வோம். எம் இடர்கெடத் திசைநோக்கி நின்று அவற்றைப் புகழ்ந்து போற்றுவோம்.

நள்ளாறும் பழையாறுங் கோட்டாற் றோடு
    நலந்திகழும் நாலாறுந் திருவை யாறுந்
தெள்ளாறும் வளைகுளமுந் தளிக்குளமு நல்
    லிடைக்குளமுந் திருக்குளத்தோ டஞ்சைக் களம்
விள்ளாத நெடுங்களம்வேட் களம்நெல் லிக்கா
    கோலக்கா ஆனைக்கா வியன்கோடிகா
கள்ளார்ந்த கொன்றையான் நின்ற ஆறுங்
    குளம்களங்கா என அனைத்துங் கூறுவோமே

ஆறு – 6 தலங்கள், குளம் – 4 தலங்கள், களம் – 3 தலங்கள்,

கா – 4 தலங்கள்

நள்ளாறு, பழையாறு, கோட்டாறு,  நாலாறு, திருஐயாறு, தெள்ளாறு, வளைகுளம், தளிக்குளம், நல்ல இடைக்குளம், திருக்குளம், அஞ்சைக்களம், நெடுங்களம், வேட்களம், நெல்லிக்கா, கோலக்கா, ஆனைக்கா, கோடிகா என்றெல்லாம்  சிவபெருமான் விளங்கும் ஆறு, குளம், களம், கா ஆகிய எல்லாவற்றையும் கூறுவோம்.

கயிலாய மலையெடுத்தான் கரங்க ளோடு
    சிரங்களுரம் நெரியக்கால் விரலாற் செற்றோன்
பயில்வாய பராய்த்துறைதென் பாலைத் துறை
    பண்டெழுவர் தவத்துறைவெண் டுறைபைம் பொழிற்
குயிலாலந் துறைசோற்றுத் துறைபூந் துறை
    பெருந்துறையுங் குரங்காடு துறையி னோடு
மயிலாடு துறைகடம்பந் துறைஆவடு
    துறைமற்றுந் துறையனைத்தும் வணங்கு வோமே

துறை – 12 தலங்கள்

சிவபெருமான் உறையும் பராய்த்துறை, தென்பாலைத்துறை,  தவத்துறை, வெண்டுறை, ஆலந்துறை, சோற்றுத்துறை, பூந்துறை, பெருந்துறை, குரங்காடுதுறை, மயிலாடு துறை, கடம்பந்துறை, ஆவடுதுறை ஆகியவற்றையும் துறை என்னும் பெயர் தாங்கும் மற்றைத் திருத்தலங்களையும் வணங்குவோம்.

இப்படி 142 தலங்களைப் பட்டியலிட்டுப் பாடிப் பரவுகிறார் அப்பர் பெருமான்.

இந்தத் தலங்களின் பெயரைச் சொன்னாலேயே – அதாவது இந்தப் பதிகத்தைக் கூறினாலேயே-

இவர்கள் சிவனுடையவர்கள் என்று நமனும் அவன் ஆட்களும் விலகி அகன்று விடுவார்கள் என அருளுகிறார் அப்பர் பிரான்!  (இவை கூறி நாவில் நவின் றுரைப்பார்க்கு நணுகச் சென்றால் நமன்தமருஞ் சிவன்தமரென் றகல்வர் நன்கே) தீவினைகள் அகலும்,இடர்கள் தொலையும், பரலோகத்து இனிய வாழ்வு கிடைக்கும் என்பன போன்ற நற்பலன்களையும் அப்பர் இதில் கூறி அருளுவதைக் கண்டு பரவசமடையலாம்.

TAGS- பாரத ஸ்தலங்கள் – 11,

***

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: