
WRITTEN BY S NAGARAJAN
Post No. 8634
Date uploaded in London – – –6 SEPTEMBER 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
அவதூதர் கொண்டிருக்கும் 24 குருக்கள் – 2
ச.நாகராஜன்

- பிங்கலை : பிங்கலை என்று ஒருவேசி இருந்தாள். அவள் ஒரு நாள் தனக்கு நிறையப் பணம் தருவார் என்று நினைத்திருந்த ஒருவருக்காகக் காத்திருந்தாள்.அவர் வரவே இல்லை. இரவு முழுவதும் காத்திருந்த பிங்கலை, ‘அடடா! என்ன ஒரு முட்டாள்தனம் இது. பேராசையை ஊட்டும் புலனின்பத்திற்காக அல்லவா என் வாழ்க்கையைச் செலவழித்து விட்டேன். என்றும் அழியாத ஒன்றைப் பற்றி இனி நினைப்பேன்” என்று எண்ணி அனைத்தையும் துறந்து ஞான மார்க்கத்தில் பிரவேசித்தாள். அவளே எனது பதிமூன்றாவது குரு.
- அம்பு செய்பவன் : ஒரு நாள் அம்பு செய்யும் ஒருவனை நான் பார்த்துக் கொண்டிருந்தேன். அவன் கூரிய அம்பைச் செய்வதிலேயே குறியாக இருந்தான். அருகிலே சென்று கொண்டிருந்த ஒரு படை அலங்கார அணிவகுப்பைக் கூட அவன் பார்க்கவில்லை. அவனது இந்த செய்கை கூர்மையாக ஒரே கவனத்துடன் தன் லட்சியத்தில் இருக்க வேண்டும் என்பதை நான் கற்றுக் கொண்டேன். ஆன்மீக வாழ்க்கையில் முன்னேற இந்த இரகசியத்தைக் கற்றுக் கொடுத்த அவனே எனது பதிநான்காவது குரு.
- விளையாட்டுச் சிறுவன் : சிறுமிகளும் சிறுவர்களும் கௌரவம் அகௌரவம் பாராட்டாதவர்கள். யாருடனும் அவர்களுக்குக் கோபதாபம் இருப்பதில்லை. எது தன்னுடையது, எது மற்றவர்களுடையது என்று அவர்களுக்குத் தெரியாது. அவர்களது சந்தோஷம் அவர்கள் உள்ளில் இருந்தே பூரிக்கிறது. வெளியிலிருந்து அல்ல. பூரண ஞானி ஒருவனும் இதே நிலையில் தான் இருக்க வேண்டும் என்பதை அவனிடமிருந்து நான் கற்றுக் கொண்டேன். எனது பதினைந்தாவது குரு அந்த விளையாட்டுப் பையனே.
- சந்திரன் : படைப்பில் தனித்துவம் பெற்றது சந்திரன். நமது பார்வைக்கு அது தேயும், வளரும். ஆனால் உண்மையில் அது அப்படியே தான் இருக்கும். ஒரு மனிதன் குழந்தைப் பருவம், வாலிபப் பருவம், முதுமைப் பருவம் என பல நிலைகளைக் கடக்கிறான். ஆனால் அவன் ஆன்மாவோ ஒரே நிலையில் தான் இருக்கிறது. சந்திரன் சூரிய ஒளியையே பிரதிபலிக்கிறது. அதற்கென தனி ஒளி இல்லை. அது போலவே ஆன்மாவின் ஒளியே மனிதனின் மனதில் பிரதிபலிக்கிறது. இதை உணர்த்தும் சந்திரனே எனது பதினாறாவது குரு.
- தேனீ : மலருக்கு மலர் தாவும் தேனீ அவற்றை துன்பப்படுத்தாது, தேனை உறிஞ்சி எடுத்துக் கொள்கிறது. அதே போல ஆன்ம ஞானம் நாடும் ஒருவனும் சாஸ்திரங்களில் தன் மனதைச் செலுத்தி, தேவையானவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். இதைக் கூறும் தேனீ எனது பதினேழாவது குரு.
- மான் : இசையில் பெரும் விருப்பமுள்ள மான்கள் அதை வேட்டையாடுவோருக்கு அதனால் இலக்காகிறது. புலனின்பமும் பற்றும் நம்மை பலஹீனப்படுத்துகிறது. இதைச் சொல்லும் மானே எனது பதினெட்டாவது குரு.
- இரையாகும் பறவை : இரை தேடும் பறவை ஒன்று ஒரு செத்த எலியைத் தூக்கிக் கொண்டு பறந்தது. அதைப் பார்த்த கழுகு மற்றும் பருந்துகள் அதைத் துரத்தலாயின. அங்கும் இங்கும் அலைந்த அது கடைசியில் தன் இரையைக் கீழே போட்டது. தனது இரையைக் கீழே போட்டவுடன் அதற்கு மற்ற பறவைகளிடமிருந்து சுதந்திரம் கிடைத்தது. அதிலிருந்து உலக இன்பங்களைச் சுமந்து கொண்டு அதை நாடும் ஒருவன் மற்றவர்களுடன் சண்டையிட வேண்டும், அவர்களால் துரத்தப்படுவான் என்பதை உணர்ந்து கொண்டேன். உலக இன்பங்களை நாடக் கூடாது என்பதை கற்றுக் கொடுத்த அந்தப் பறவையே எனது பத்தொன்பாவது குரு.
- கன்னிப் பெண் : குடும்பம் ஒன்று தங்களது பிள்ளைக்கு ஒரு கன்னிப் பெண்ணை மணமுடிக்க அந்தப் பெண்ணின் இல்லத்திற்குச் சென்றது. அந்தச் சமயம் பெண்ணின் தாயார் வெளியே சென்றிருந்தாள். ஆகவே அந்தக் கன்னிப் பெண்ணே வந்தவர்களை வரவேற்று உபசரிக்க வேண்டிய நிலையில் இருந்தாள். வந்திருப்பவர்களுக்காக அவள் மாவை அரைக்க ஆரம்பித்தாள். அதனால் அவள் வளையல் ஓசை பெரிதாகக் கேட்டது. வந்த விருந்தினர்கள் இதைத் தவறாக நினைக்கக் கூடாது என்று நினைத்த அவள் ஒவ்வொரு கையிலும் இரு வளையல்களை மட்டும் வைத்துக் கொண்டு மற்றவற்றைக் கழட்டி விட்டாள். அப்போதும் கூட வளையல் ஓசை கேட்டது. ஆகவே அவள் ஒரே ஒரு வளையலை மட்டும் அணிந்து கொண்டாள். இதிலிருந்து நான் புரிந்து கொண்டது ஒரே இடத்தில் பல ஆன்மீக சாதகர்கள் இருந்தால் தேவையற்ற வீண்பேச்சு தான் வரும் என்பதைத் தான்! ஆகவே ஒருவன் தனிமையை நாடி சாதனை புரிய வேண்டும். இதைக் கற்றுக் கொடுத்த அந்தக் கன்னிப் பெண்ணே என் இருபதாவது குரு.
- பாம்பு : பாம்பு எப்போதும் தனக்கென ஒரு உறைவிடத்தைக் கட்டிக் கொள்வதில்லை. கரையான்கள் தனக்கென ஒரு புற்றை அமைக்கும் போது பாம்பு அதில் வசிக்கத் தொடங்குகிறது. அதே போல உலகியலில் ஈடுபடும் மனிதர்கள் தமக்கென வீடுகளைக் கட்டிக் கொள்கின்றனர். ஆனால் ஒரு சாதுவோ அவர்கள் கட்டித் தரும் மடாலயங்களிலோ அல்லது கோவில்களிலோ அல்லது மரத்தடியிலோ தான் தங்க வேண்டும். பாம்பு தன் பழைய சட்டையை உரித்துப் போட்டு விடுகிறது. அது போலவே ஒரு சாதுவும் தன் உடலை முழு விழிப்புடன் உதிர்த்து விட வேண்டும். மரணத்தைக் கண்டு அவன் அஞ்சக் கூடாது. இதைச் சொல்லும் பாம்பே எனது இருபத்தொன்றாவது குரு.
- சிலந்தி : சிலந்தி திரவத்தினால் தனக்கென ஒரு கூட்டை அமைத்துக் கொள்கிறது. பிறகு அதைத் தனக்குள் சுருக்கிக் கொள்கிறது, அதே போல மஹா சக்தி பிரளய காலத்தில் அனைத்தையும் தன்னுள் இழுத்துக் கொள்கிறது. அதே போலவே மனித ஆன்மாவும் அனைத்தையும் தன்னுள் கொண்டிருக்கிறது. மனிதப் பிறப்பில் அவற்றை மனித அங்கங்களாக மனமாக வெளிப்படுத்துகிறது. வாழ்க்கைக்குத் தேவையான அனைத்தையும் அது இதன் மூலம் பெற்றுக் கொள்கிறது. இறுதியில் அது புலன்களிலிருந்தும் மனத்திலிருந்தும் விடுபடுகிறது. இதைச் சொல்லும் சிலந்தியே என் இருபத்தியிரண்டாவது குரு.
- புழு : புழு தனது குட்டியை கூட்டில் வைத்து பத்திரமாக அது இருப்பதற்காக அங்கு கூட்டைச் சுற்றி ரீங்காரம் இடுகிறது. குட்டி அந்த ஓசையைத் தவிர வேறு எதையும் நினைப்பதில்லை. நாளடைவில் அதுவும் தாய் போலவே வடிவெடுக்கிறது. அது போலவே சாதகன் ஒருவன் தன் குருவையன்றி வேறு யாரையும் நினைக்காமல் இருக்க வேண்டும். அப்படிப்பட்ட ஒரு முனைப்பட்ட தியானத்தினால் அவன் குரு போலவே உயரிய நிலையை அடைகிறான். இதைக் கற்றுத் தரும் புழுவே என் இருபத்திமூன்றாவது குரு.
- தண்ணீர் : ஒவ்வொரு ஜீவராசியின் தாகத்தையும் தண்ணீர் தணிக்கிறது. ஆனால் அது ஒரு போதும் கர்வம் கொள்வதே இல்லை. அது தாழ்வான இடத்தை நோக்கியே பாய்கிறது. அது போலவே ஒரு ஞானியும் அனைவருக்கும் சந்தோஷத்தையும் ஆரோக்கியத்தையும் அருள வேண்டும். கடவுளின் படைப்பில் நீர் போல எளிமையுடன் அனைவருக்கும் பயன்படுத்தும் விதத்தில் ஒரு ஞானி இருக்க வேண்டும். நீரே எனது இருபத்திநான்காவது குரு.
இப்படியாக படைப்பில் அருமையான பாடங்களைக் கற்றுத் தரும் இந்த இருபத்துநான்கு குருக்களை நான் ஏற்றுக் கொண்டு எனது சாதனையைத் தொடர்கிறேன்.
இப்படி யதுவிடம் சொல்லி முடித்தார் அவதூதர்.
பாகவதம் தரும் இந்த அருமையான உபதேசத்தில் வரும் அவதூதரை தத்தாத்ரேயர் என்று கொண்டு தத்தாத்ரேய உபதேசம் எனவும் இது கூறப்படுகிறது,

tags –தத்தாத்ரேயர் ,பாகவதம்,24 குருக்கள்-2
***