
WRITTEN BY S NAGARAJAN
Post No. 8661
Date uploaded in London – – –11 SEPTEMBER 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
செப்டம்பர் 11 – மஹாகவிக்கு அஞ்சலி!
மஹாகவி பாரதியாருடன் ஒரு சந்திப்பு: வழிகாட்டும் பாடல்கள்!
ச.நாகராஜன்
மஹாகவி பாரதியாரை நினைவு தினமான இன்று (செப்டம்பர் 11), சந்திக்கிறோம். அவரது வழி காட்டும் பாடல்களைப் பெற ஆவலுடன் நிற்கிறோம். இதோ மஹாகவி வந்து விட்டார்.
வணக்கம் கூறுகிறோம். ‘பலே பாண்டியா’ வந்து விட்டாயா, கேள்’ என்கிறார்.
இதோ தொடர்கிறது நமது உரையாடல்!
கேள்வி : தேச பக்தி பெருக ஒரு வழி?
பாரதியார் பதில் : “வந்தே மாதரம் என்போம்
எங்கள் மாநிலத் தாயை வணங்குதும் என்போம்”
கேள்வி: நமது நாட்டின் பெருமை பற்றி..?
பதில்: ஞானத்திலே பர மோனத்திலே – உயர்
மானத்திலே அன்ன தானத்திலே
கானத்திலே அமுதாக நிறைந்த
கவிதையிலே உயர் நாடு
கே: பிரிவினை சக்திகள் தேசத்தைத் துண்டாட நினைக்கின்றனவே..?
ப : நெஞ்சில் உரமுமின்றி
நேர்மைத் திறமுமின்றி
வஞ்சனை செய்வாரடி
வாய்ச்சொல்லில் வீரரடி
கே: இவர்களை நினைத்தாலே பயமாக இருக்கிறது..?
ப : தீயோர்க்கு அஞ்சேல்
கே: பிரிவினைவாதிகளின் எதிர்காலம் என்ன”
“பேயவள் காண் எங்கள் அன்னை
பெரும் பித்துடையாள் எங்கள் அன்னை!”
பூமியினும் பொறை மிக்குடையாள் உருப்
புண்ணியமாம் எங்கள் தாய் – எனில்
தோமிழைப்பார் முன் நின்றிடுங்கால் கொடும்
துர்க்கையுமாம் எங்கள் தாய்
நல்லறம் நாடிய மன்னரை வாழ்த்தி
நலம் புரிவாள் எங்கள் தாய் – அவர்
அல்லவராயின் அவரை விழுங்கிப் பின்
ஆனந்தக் கூத்திடுவாள்.

கே: அனைவரின் குணமும் உயர்ந்திட வழி?
ப: கணபதி ராயன் – அவன் இரு
காலைப் பிடித்திடுவோம்
குணம் உயர்ந்திடவே – விடுதலை
கூடி மகிழ்ந்திடவே ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்
கே: நாட்டு மக்களுக்கு உங்கள் செய்தி..?
ப : விடுதலை நாடி
எய்திடும் செல்வ எழுச்சியிற் களிப்போம்
மெய்திகழ் ஒற்றுமை மேவுவோம்; உளத்தே
கட்டின்றி வாழ்வோம்; புறத்தளைக் கட்டினை
எட்டுணை மதியாதேறுவோம்; பழம்போர்க்
கொலைத் தொழில் கருவிகள் கொள்ளாதென்றும்
நிலைத்தன ஆகிய நீதிக் கருவியும்
அறிவும் கொண்டே அரும் போர் புரிவோம்
கே: தமிழ் என்றும் வாழ வழி?
ப: பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
தமிழ் மொழியிற் பெயர்த்தல் வேண்டும்
இறவாத புகழுடைய புது நூல்கள்
தமிழ் மொழியில் இயற்றல் வேண்டும்
மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள்
சொல்வதிலோர் மகிமை இல்லை
திறமான புலமை எனில் வெளிநாட்டோர்
அதை வணக்கம் செய்தல் வேண்டும்
கே: இதற்கு வழி என்ன?
ப: யவனர் போல் முயற்சி கொள்
கே: தலைமை இடத்தைப் பிடிக்க வழி?
ப: அமிழ்தம் அமிழ்தம் என்று கூவுவோம் – நித்தம்
அனலைப் பணிந்து மலர் தூவுவோம்
தமிழில் பழமறையைப் பாடுவோம் – என்றும்
தலைமை, பெருமை, புகழ் கூடுவோம்
கே: தலைமை, பெருமை, புகழ் பெற சூத்திரங்கள் வடிவில் மூன்றே மூன்று வரிகள்..?
ப: நொந்தது சாகும்
வீரியம் பெருக்கு
தேசத்தைக் காத்தல் செய்!
கே: மேன்மை பெற வழி?
ப: கூடித் தொழில் புரிதல் வேண்டும் – நெஞ்சக்
குடைச்சல் எல்லாம் மெல்லச் சரிப்படுத்தி
நீடித்த நன்மையினைக் கருதி – நல்ல
நீதி தவறாதபடி பாகம் இயற்றிப்
பேடிப் பதர்களைப் பின் விலக்கிப்- பொது
பெரும்பயன் கருதித் தம் சிறு பயனை
வேடிக்கை போல் உதறித் தள்ளிப் – பொது
வெற்றியினை நாடுவர் மேன்மை பெறுவார்
கே: எங்களுக்கு என்ன செய்தி?
ப : நல்ல காலம் வருகுது, நல்ல காலம் வருகுது!
சாதிகள் சேருது; சண்டைகள் தொலையுது!
வீரம் வருகுது, மேன்மை கிடைக்குது!
தர்மம் பெருகுது! தர்மம் பெருகுது!
நல்ல செய்தி பெற்ற மன மகிழ்ச்சியுடன் பாரதியாரை வணங்குகிறோம்.
புன்முறுவலுடன் ஆசி தருகிறார். விடை பெறுகிறோம். தேசமும் தெய்வமும் இரு கண்கள் எனப் புரிந்து கொண்டோம். முன்னேறவும் முதலிடத்தைப் பிடிக்கவும் முயற்சி தேவை என்பதையும் உணர்ந்து கொண்டோம்.
சேர்ந்து செயல்படுவோம்; பாரதம் உலகின் தலைமை பீடத்தை அடைய ஓயாது உழைப்போம்! வாழ்க பாரதி திருநாமம்.
tags– பாரதி, சந்திப்பு
***