
Post No. 8700
Date uploaded in London – – –18 SEPTEMBER 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
காயத்ரி மந்திர மஹிமை – 24 அக்ஷரங்களின் மஹிமை!
ச.நாகராஜன்
முக்கிய குறிப்பு!
facebook.com/gnanamayam நிகழ்ச்சியில் 14-9-2020 அன்று ஆற்றிய உரையில் நேரத்தைக் கருதி சில கருத்துக்கள் விடப்பட்டிருந்தன. அவற்றை இங்கு காணலாம்.

குற்றாலத்தில் ஒரு சம்பவம்!
காயத்ரி மந்திரம் தன்னைச் சரணடைந்து ஓதுபவர்களைக் காப்பாற்றும் என்பதை விளக்க இன்னும் ஒரு சம்பவம்.
இது சமீப காலத்தில் நிகழ்ந்த ஒன்று. இதை 2-8-1998 தேதியிட்ட தமிழ் மற்றும் ஆங்கில நாளிதழ்கள் பெரிதாக வெளியிட்டன.
குற்றாலத்திற்குச் சுற்றுலா சென்ற 24 வயது இளைஞர் கல்யாண்குமார், மலை மேலுள்ள தேனருவிக்கு நண்பர்களுடன் சென்றார். குறுகிய பாதை ஒன்றைக் கடக்க அவர்கள் முயன்ற போது திடீரென்று அவரைக் காணோம். நண்பர்கள் அலறினர். கீழே விழுந்து வெள்ளமெனை விழும் அருவிப் பெருக்கில் அவர் அடித்துச் செல்லப்பட்டார் என்று அனைவரும் முடிவு செய்தனர். தேடுதல் வேட்டை ஒன்று தொடங்கியது. மூன்று நாட்கள் கழிந்தன. பயன் ஒன்றும் இல்லை. உடலும் கிடைக்கவில்லை. நெல்லை மாவட்ட வனத்துறை அதிகாரி மனோஜ் குமார் சர்க்காரியா முனைப்புடன் தேடுதலில் இறங்கினார். முத்துக் குளிப்பவர்களை அழைத்துத் தேடச் சொன்னார். அதில் ஒருவர் இருண்ட குகை ஒன்றில் இருட்டில் ஒரு உருவத்தைக் காண்கிறேன் என்றார். உடனே அந்தப் பக்கம் தண்ணீர் செல்வதை பாறைகளை வைத்து அணை கட்டித் தடுத்து நிறுத்தினார் அவர்.
குகையின் நடுவில் ஒரு ஓட்டை போடப்பட்டது. யார் அங்கே இருப்பது என்ற கேள்விக்கு அந்த இளைஞர் பதில் தரவே ஓட்டை பெரிதாகப் போடப்பட்டு பிஸ்கட், குடி நீர் வழங்கப்பட்டது. பின்னர் பல மீட்பு வீரர்கள் பெரிய துவாரம் ஒன்றைப் போட்டு உள்ளிறங்கி அவரை மீட்டனர்.
“எப்படி மூன்று நாட்கள் கழித்தாய்?” என்று கேட்ட போது இடைவிடாது காயத்ரி மந்திரத்தை ஜெபித்துக் கொண்டிருந்தேன். காயத்ரி தேவி என்னைக் காப்பாற்றி விட்டாள்” என்றார் அவர்.

அக்ஷரங்களின் பயன்!
ஒவ்வொரு அக்ஷரமும் ஒவ்வொரு பயனைத் தரும்.
தத் என்பது பிரம்ம ஞானத்தையும்
‘ஸ’ என்பது சக்தியை நல்வழியில் பயன்படுத்தலையும்,
‘வி’ என்பது நல்ல வழியில் செல்வத்தைப் பயன்படுத்தலையும்,
‘து’ என்பது தைரியத்தையும்,
‘வ’ என்பது பெண்மையின் சிறப்பையும்,
’ரே’ என்பது வீட்டிற்கு வரப் போகும் இல்லத்தரசியையும் அவள் குடும்பத்திற்கு கொண்டு வரும் நலனையும்,
‘ண்யம்’ என்பது இயற்கையை வழிபடுதலையும்,
‘பர்’ என்பது நிலையான மனத்தின் கட்டுப்பாட்டையும்,
‘கோ’என்பது ஒத்துழைப்பு மற்றும் பொறுமையையும்,
தே என்பது எல்லாப் புலன்களும் கட்டுப்பாட்டிற்குள் இருப்பதையும்,
‘வ’ என்பது தூய்மையான வாழ்க்கையையும்,
‘ஸ்ய’ என்பது மனிதன் இறைவனுடன் ஒன்றுபடுவதையும்,
‘தீ’ என்பது எல்லாத் துறைகளிலும் எல்லாவித வெற்றி பெறுதலையும்,
‘ம’ என்பது இறைவனது நீதி மற்றும் ஒழுக்கக் கட்டுப்பாட்டையும்
‘ஹி’ என்பது நுண்ணறிவையும்,
‘தி’ என்பது வாழ்க்கை மற்றும் மரணத்தையும்,
‘யோ’ என்பது தர்ம நெறிப்படியான வாழ்க்கையைப் பின்பற்றுவதையும்,
‘யோ’ என்பது வாழ்க்கை சேமிப்பையும்
‘நஹ’ என்பது எச்சரிக்கை மற்றும் பாதுகாப்பையும்,
’ப்ர’ என்பது நடக்கப்போவதை அறிவது மற்றும் நல்ல காரியங்களுக்கு உதவி செய்வதையும்,
‘சோ’ என்பது அறநெறி நூல்களைப் படிப்பதையும் மகான்களின் தொடர்பு ஏற்படுதலையும்
‘த’ என்பது ஆன்மாவை அறிதல் மற்றும் ஆத்மானந்தத்தையும்
‘யா’ என்பது சத் மக்கட்பேற்றையும்
‘த்’ என்பது வாழ்க்கையில் உள்ள ஒழுக்கக்கட்டுப்பாட்டையும் ஒத்துழைப்பையும் குறிக்கிறது.

காயத்ரி மந்திர தேவதைகள்!
ஆக்னேயம், பிரஜாபத்தியம், ஸௌம்யம், ஸமானம், சாவித்திரம், ஆதித்யம், பார்ஹஸ்பத்யம், மைத்ராவருணம், பகதெய்வதம், ஆர்யமைஸ்வரம், கணேசம், துவாஷ்ட் ரம், பௌஷ்ணம், ஐந்திராக்னம், வாயவ்யம், வாமதேவ்யம், மைத்ராவருணி, வைஸ்வதேவம், மாத்ருகம், வைஷ்ணவம், வததெய்வம்ஸும், ருத்ரதெய்வதம், கௌபேரம், ஆஸ்வினம் ஆகியவை காயத்ரி மந்திரத்திற்குள்ள 24 தேவதைகள்.
மஹா பாபங்களைப் போக்கடிப்பதாகவும், பரம சிரேஷ்டமாகவும் உள்ள இந்த இருபத்துநான்கும் தெய்வங்களாகச் சொல்லப்படுகின்றன.
இவைகளைக் கேட்ட மாத்திரத்தில் சாங்கமாகக் காயத்ரியை ஜபம் செய்தால் எந்தப் பயனுண்டாகுமோ அந்தப் பயன் உண்டாகும்.
மேலே கூறிய 24 காயத்ரி மந்திர தேவதைகள் தேவி பாகவதத்தில் பன்னிரெண்டாம் ஸ்கந்தத்தில் முதல் அத்தியாயத்தில் தரப்படும் அபூர்வமான விவரங்களாகும்.
**
tags– காயத்ரி, 24 அக்ஷர மஹிமை,


