
Post No. 8715
Date uploaded in London – – –21 SEPTEMBER 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
பிரார்த்தனையின் மூலம் கிடைத்த இனிய குரல்! (PostNo.8715)
ச.நாகராஜன்
புத்த பிக்ஷு போ ஃபா சியாவோ (Mong Po Fa-chiao) சிறந்த பக்தர். சுங் ஷான் (Chung-Shan) என்ற இடத்தைச் சேர்ந்தவர் அவர். இன்று இது ஹோபெய் (Hopei) என்ற இடத்தில் உள்ள டிங் என்ற ஊராகும்.
புத்த மதத்தைச் சேர்ந்த சூத்திரங்களைச் சொல்ல அவருக்குப் பெரிதும் ஆசை. ஆனால் அவரிடம் குரல் வளம் இல்லை. அவரது குரல் கர்ண கடூரமாக இருந்தது. இதனால் அவர் வேதனைப் பட்டார்.
அவர் தன் சக பிக்ஷுக்களிடம், “குவாங் ஷியின் (Kuang-Shih-yin) எனது ஆசையை இந்த ஜென்மத்திலேயே பூர்த்தி செய்வார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. நான் ஒரு முனைப்பட்ட மனதுடன் பிரார்த்தித்தால் அவர் அருள் புரிவார். என் பிரார்த்தனை உண்மையானதாக இருந்தால் நான் நல்ல குரலைப் பெற்று சூத்திரங்களைச் சொல்வேன். ஆனால் எனது பிரார்த்தனை உள்ளார்ந்த ஒன்றாக இருக்கவில்லை என்றால் போதிசத்வர் எனக்கு அருள் புரிய மாட்டார். சென்ற ஜென்மங்களின் பாவம், கெட்ட கர்மா என்று நினைக்க வேண்டியது தான்! நல்ல குரல் இல்லாமல், சூத்திரங்களைச் சொல்லாமல் இருப்பதை விட சாவதே மேல்” என்றார்.
சொல்லி விட்டு அவர் சும்மா இருக்கவில்லை. பிரார்த்திக்க ஆரம்பித்தார். சாப்பிடவும் மறுத்து விட்டார். ஒருமுனைப்பட்ட மனதுடன் அவர் பிரார்த்தனை தொடர்ந்தது.
மூன்று நாட்கள் கழிந்தன. அவர் உடல் மெலிந்தது. சக்தியில்லாமல் அவர் இருப்பதைக் கண்ட அவரது சீடர்கள் அவரிடம் சென்று, “இப்படி பிரார்த்தனை புரிவதை விட்டு விடுங்கள். இந்த ஜென்மத்தில் இப்படி குரலை மாற்றி நல்ல குரல் வளம் பெறுவது என்பது முடியாத காரியம். உண்ணாமல் இருந்தால் இருக்கும் ஆரோக்கியமும் கெட்டு விடும். சற்றேனும் உணவைச் சாப்பிடுங்கள்” என்றனர்.

ஆனால் போ ஃபா சியாவோ மறுத்து விட்டார். “என்னைத் தொந்தரவு செய்யாதீர்கள்” என்று அவர் சொல்லி விட்டார்.
தன் உறுதியிலிருந்து அவர் தவறவில்லை. இன்னும் ஆறு நாட்கள் கழிந்தன. அவரால் நகரவே முடியவில்லை. சுவாசம் மட்டும் அவரிடமிருந்து வந்து கொண்டிருந்தது.
சீடர்கள் பயந்து போனார்கள். பெரிதும் வருத்தமடைந்த அவர்கள் அவரிடம் கெஞ்சிப் பார்த்தார்கள் – அப்படி பிரார்த்தனை புரிவதை விட்டு விடுமாறு.
அவர் இறக்கப்போவது நிச்சயம் என்று அவர்களுக்குத் தோன்றி விட்டது.
ஏழாவது நாள் காலை நேரம். திடீரென்று போ கண் விழித்தார். மிகவும் சந்தோஷமாக அவர் காணப்பட்டார்.
தன் சீடர்களை அழைத்த அவர், தன் பிரார்த்தனைக்கு நல்ல பலன் கிடைத்து விட்டது என்று மகிழ்ச்சியுடன் கூறினார்.
கொஞ்சம் நீர் கொண்டு வரச் சொன்னார். குளித்தார்.
பின்னர் மூன்று கதைகளை இனிய குரலில் கூற ஆரம்பித்தார்.
அவரது குரல் மிக ஓங்கி ஒலித்தது. கிராமத்திலிருந்த மக்கள் இந்த உரத்த இனிய குரலைக் கேட்டு ஓடி வந்தனர்.
அவர்களுக்கு ஒரே அதிசயம். யாருடைய குரல் இது என்று கண்டுபிடிக்க மடாலயம் நோக்கி ஓடி வந்த அவர்கள் தங்கள் கண்களை நம்ப முடியாமல் திகைத்தனர். சகிக்க முடியாத பிக்ஷு போவின் குரலா இப்படி இனிமையாக மாறி உள்ளது? திகைப்புடன் பிரமித்தனர் அனைவரும்.

இதற்குப் பின்னர் சுமார் ஐந்து லட்சம் வார்த்தைகளை அவர் பேசினார்.
இனிய மணி ஒலிக்கும் நாதம் போல அவர் குரல் அனைவரையும் காந்தம் போல ஈர்த்தது. எவ்வளவு நேரம் பேசினாலும் அவருக்கு களைப்பே ஏற்படவில்லை.
உண்மையான பிரார்த்தனை மூலம் என்ன பெற முடியும் என்பதை நேரடியாக விளக்கிக் காட்டிய அவரை மக்கள் பெரிதும் பக்தியுடன் நேசிக்க ஆரம்பித்தனர்.
அவர் மூன்றாம் சக்ரவர்த்தியான ஷி ஹு (Shih hu 334 – 349) ஆண்ட காலம் முழுவதும் இருந்தார். அவருக்கு அப்போது 90 வயதுக்கு மேல் ஆகி இருந்தது!
பிரார்த்தனையின் பலனை விளக்கும் போவின் இந்தச் சம்பவம் அனைவரையும் உத்வேகப்படுத்தும் ஒன்றாக அமைந்து விட்டது.
tags- பிரார்த்தனை, இனிய குரல்

***
R Nanjappa
/ September 21, 2020இத்தகைய ஒரு சம்பவம் நம் நாட்டிலும் சமீப காலத்தில் நடந்தது!
பெரிய வித்வான் செம்பை வைத்யநாத பாகவதருக்கு ஒரு சமயம் 1952ல் திடீரென்று குரல் வளம் மறைந்துவிட்டது, பாடுவதை விடுங்கள்,, இஷ்ட தெய்வமான க்ருஷ்ணா என்று சொல்லக்கூட முடியவில்லை! [ இவர் 1896ல் கோகுலாஷ்டமியன்று பிறந்தவர்!] இந்த நிலை ஒரு வருஷகாலம் நீடித்தது. அவர் குருவாயூர் க்ருஷ்ணருக்குப் பிரார்த்தித்தார். முன்பின் தெரியாத ஒரு ஆசாமி எங்கிருந்தோ வந்து18 நாட்கள் ஏதோ மருந்து கொடுத்தான், இழந்த குரலை மீண்டும் பெற்றார். அதன் பிறகு தன் வருமானம் முழுதையும் குருவாயூர் கோவிலுக்கே காணிக்கையாக்கினார். தமிழ் நாட்டில் குருவாயூர் பிரபலமடைய செம்பை பாகவதரும் ( அனன்தராம தீக்ஷிதருடன்) முக்கிய காரணமாவார். குருவாயூர் தேவஸ்தானத்தினர் இவர் பெயரில் ஒரு சன்மானம் வழங்கி வருகின்றனர்.
santhanam nagarajan (@santhnaga47)
/ September 21, 2020thanks for your additional information! IT HAPPENS EVEN TODAY!!