வேதங்கள் எத்தனை? இன்று அவை உள்ளனவா? (Post No.8724)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No. 8724

Date uploaded in London – – 23 SEPTEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

ஒவ்வொரு திங்கள்கிழமை தோறும் லண்டனிலிருந்து ஞானமயம் நிகழ்ச்சி லண்டன் நேரம் பிற்பகல் இரண்டு மணிக்கும் இந்திய நேரம் மாலை 6.30 மணிக்கும் ஒளிபரப்பாகிறது. கேள்வி- பதில் நிகழ்ச்சியும் இதில் ஒரு பகுதி.21-9-2020 அன்று ஒளிபரப்பான கேள்வி பதில் நிகழ்ச்சியில் வேதங்கள் பற்றிய கேள்விக்கு அளித்த பதிலை இங்கு காணலாம்.

கேள்வியை அனுப்ப விரும்பும் அன்பர்கள் facebook.com/gnanamayam -க்கு அனுப்பலாம்.

வேதங்கள் எத்தனை? இன்று அவை உள்ளனவா?

ச.நாகராஜன்

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே! சந்தானம் நாகராஜன் வணக்கம். இன்று நமக்கு முன் உள்ள கேள்வி : வேதங்கள் எத்தனை? இன்று அவை உள்ளனவா?

வேத வியாஸரை வேதங்களை விளக்குமாறு கேட்ட போது அவர் கூறிய பதில் அனந்தா வை வேதா: இதன் பொருள் – வேதங்கள் கணக்கற்றவை; முடிவில்லாதவை; ஆகவே அனைத்தையும் விளக்குவது என்பது முடியாத காரியம்.

வேதங்களுக்கு ஆதி இல்லை; அந்தமும் இல்லை.

ஆனால் மனித குல நன்மைக்காக வேதங்களை நான்காகப் பகுத்துத் தந்தார் வியாஸ மஹரிஷி. ரிக், யஜுர், சாம, அதர்வண வேதம் என வேதம் நான்காகப் பகுக்கப்பட்டுள்ளது.

இவை இன்றும் இருக்கின்றன. ஓதப்பட்டு வருகின்றன.

குரு மூலமாக சிஷ்யர்களுக்கு தரப்பட்டு வாய்மொழி மூலமாகவே இன்று வரை காப்பாற்றப்பட்டு வரும் ஒரே தெய்வீக நூல் உலகில் வேதம் ஒன்றே. வேதத்திற்கு அடிப்படையான மூலச் சொல் வித். வித் என்றால் அறிவது என்று பொருள்.

வேதங்கள் சம்ஹிதை, ப்ராஹ்மணம், ஆரண்யகம், உபநிடதம் என்ற பகுப்பைக் கொண்டவை.

‘பன்னரும் உபநிடத நூலெங்கள் நூலே

    பார்மிசை வேறெது நூலிது போலே’ என்று மஹாகவி பாரதியார் வேதங்களின் அந்தமான உபநிடதப் பெருமை பற்றிக் கூறுகிறார்.

அத்தோடு ‘நாவினில் வேதம் உடையவள்’ என பாரத தேவியைப் அவர் போற்றுகிறார்.

ரிக் வேதத்தை வியாஸரிடமிருந்து அவர் சீடரான பைலர் பெற்றார்.

யஜூர் வேதத்தை அளப்பரிய புத்திகூர்மை உடைய வைசம்பாயனர் பெற்றார்; அதை 24 கிளைகளாகப் பிரித்தார்.

வியாஸரின் சீடரான ஜைமினி சாம வேதத்தைப் பெற்று அதற்குப் பல கிளைகளை உருவாக்கினார்.

வேதங்களில் சாம வேதமாக நான் இருக்கிறேன் என்று கீதையில்

ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா கூறுகிறார். அந்த அளவு பெருமை பெற்றது சாம வேதம்.

அதர்வண வேதத்தைச் சுமந்து மஹரிஷி பெற்றார்; அதை தகுந்த சீடர்களுக்குத் தந்தார்.

****

வேதங்களுக்கு ஆறு அங்கங்கள் உண்டு.

சிக்ஷா (Phonetics) அதாவது உச்சரிப்பு முறை இலக்கணம் – இது வேதத்தின் மூக்காக விளங்குகிறது,  அடுத்தது வியாகரணம் (Grammer) அதாவது மொழி இலக்கணம் – இது வேதத்தின் வாயாக விளங்குகிறது, அடுத்தது சந்தஸ்(metrics) அதாவது யாப்பிலக்கணம் – இது வேதத்தின் காலாக விளங்குகிறது, அடுத்தது நிருக்தம் (etymology) அரும்பதவுரை – இது வேதத்தின் காதாக விளங்குகிறது, அடுத்தது ஜோஸ்யம் (astronomy) அதாவது வானவியல், கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களைப் பற்றியது – இது வேதத்தின் கண்ணாக விளங்குகிறது, அடுத்தது கல்பம் (ritual) அதாவது வேள்விகளுக்கான செய்முறை நூல் – இது வேதத்தின் கையாக விளங்குகிறது.

இந்த ஆறு தான் வேதங்களின் அங்கங்களாகும்.

****

மந்திரங்கள் எழுபது கோடி என்று சொல்லப்படுகின்றன.

மந்திரங்களை ரிஷிகள் தங்களது தவ ஆற்றலால் கண்டனர். ஆகவே தான் அவர்கள் ‘மந்த்ர த்ருஷ்டா’ என்று கூறப்படுகின்றனர். ‘மந்த்ர த்ருஷ்டா: ந து கர்தாரா: – அவர்கள் மந்திரங்களைக் கண்டவர்கள்; இயற்றியவர்கள் அல்ல என தெளிவாகக் கூறப்படுகிறது.

வேதங்களிலிலிருந்தே அனைத்துக் கலைகளும் பிறந்தன. வேதங்களில் இல்லாத விஷயமே இல்லை.

உதாரணத்திற்குச் சிலவற்றைப் பார்க்கலாம்.

வேத மந்திரங்களில், குறிப்பாக அதர்வண வேதத்தில் உள்ள 16 முக்கிய சூத்திரங்களையும் 13 துணை சூத்திரங்களையும் கண்டறிந்த  பூரி ஜகத்க்ரு சுவாமி பாரதி கிருஷ்ணதீர்த்தர்  16 பாகங்கள் அடங்கிய வேத கணிதம் என்ற நூலை எழுதியுள்ளார்.

இதன் மூலம் நான்கு பக்கம் எழுதிச் செய்ய வேண்டிய கடினமான கணிதத்தை சில வரிகளிலேயே துல்லியமாக முடித்து விடலாம். இன்று உலகின் பல பிரதான பல்கலைக் கழகங்களில் வேத கணிதம் கற்பிக்கப்படுகிறது.

உதாரணத்திற்காக இன்னொரு விஷயம்.

சூரியனின் வேகம் ஒரு விநாடிக்கு ஒரு லட்சத்தி எண்பத்தாறாயிரத்து இருநூற்று எண்பத்தேழு மைல்கள் என்பதை விஞ்ஞானம் இன்று விளக்குகிறது.

அமெரிக்க பேராசிரியரும் வேத நிபுணருமான சுபாஷ் கக் அவர்கள் எப்படி இது மிகத் துல்லியமாக வேத சூத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது என்பதை எடுத்துக் காட்டி சமீபத்தில் உலகினரை வியக்க வைத்தார்.

“ததா ச ஸ்மர்யதே யஞ்னானாம் ஸஹஸ்ரே த்வே த்வே ச யோஜனே ஏகேன நிமிஷார்தேன க்ரமமான்’ என்ற ரிக் வேத மந்திரத்தின் பொருள், “சூரியன் அரை நிமிஷ நேரத்தில் 2208 யோஜனை தூரம் செல்கிறான்” என்பதாகும். அதாவது   0.1056 விநாடியில் சூரிய ஒளியானது 9.09 மைல்கள் பயணப்படுகிறது. இதைக் கணக்கிட்டுப் பார்த்தால் ஒரு விநாடியில் சூரிய ஒளியானது 1,89,547 மைல் வேகத்தில் செல்கிறது என்பதாகும்.

இன்னொரு அதிசயம், வேதத்தின் ஒரு அங்கமான ஜோதிடம், வானத்தில் நிகழும் சூரிய சந்திர கிரகணங்கள் உள்ளிட்டவற்றைத் துல்லியமாக உரைப்பது தான்.

விஞ்ஞானிகள் பயன்படுத்தும் நவீன சாதனங்கள் எவற்றையும் வேத ஜோதிடர்கள் பயன்படுத்துவதில்லை. இதைக் கணிக்க ஐந்து விரல்களை மட்டுமே அவர்கள் பயன்படுத்துவது அதிசயிக்கத் தக்க வைக்கும் ஒரு விஷயம்! ஒலைகள் இல்லை, எழுத்தாணி இல்லை, பேப்பர் இல்லை பேனா இல்லை. அனைத்தும் மனத்திலே தான். அதை ஐந்து விரல்கள் மூலம் கணக்குப் போட்டுச் சொல்வது என்பது அதிசயம் தானே! பஞ்சாங்கம் குறிக்கும் யோகம், கரணம், திதி, வாரம், நட்சத்திரம் ஆகிய பஞ்ச அங்கங்களை இவர்கள் கணிக்கும் வேகமும் துல்லியமும் சொல்லுக்கு அப்பாற்பட்டவை.

இன்னும் ஏராளமான கலைகளின் தாயகம் வேதங்கள் என்பதை ஸ்ரீ சுப்பராய சாஸ்திரி என்பவர் நிரூபித்து உலகினரை பிரமிக்க வைத்திருக்கிறார்.

மஹரிஷி அரவிந்தர், மஹரிஷி தயானந்தர் போன்றோர் வேதத்தில் ஆழப் பொதிந்து கிடக்கும் ரகசியங்கள் பலவற்றைக் கூறியுள்ளனர். ஒவ்வொரு வேதச் சொல்லுக்கும் பத்து அர்த்தங்கள் உண்டு என்பது இதன் பன்முகத் தன்மையைப் பறை சாற்றுகிறது.

மஹரிஷி மகேஷ் யோகி வேதம் பற்றிய ஆராய்ச்சியில் தீவிரமாக ஈடுபட்டவர். மந்திரங்கள் உடலிலும் சுற்றுப்புறத்திலும் ஏற்படும் நல்ல மாற்றங்களை விஞ்ஞான ரீதியாக அவரது வழிகாட்டுதலில் செயல்பட்ட உலகின் தலையாய நியூரோ விஞ்ஞானியான டாக்டர் டோனி நாடெர் (Tony Nader) மற்றும் டாக்டர் பேரி சார்லஸ் (Barry Charles) கண்டுபிடித்து உலகிற்கு அறிவித்துள்ளனர். மனித உடலில் உள்ள நாற்பது அங்க அமைப்பும் அவற்றின் பணிகளும் வேதம் குறிக்கும் நாற்பது அம்சங்களைப் பிரதிபலிக்கின்றன என்று அவர்கள் தங்கள் கண்டுபிடிப்பைக் கூறிய போது உலகமே வேத மஹிமையை உணர்ந்து பிரமித்தது.

எண்ணற்ற வேத சாகைகளை – கிளைகளை வாய்மொழியாகச் சீடர்களுக்குக் கற்பித்து அதன் பாரம்பரியம் கெடாமல் பாரதமெங்கும் உள்ள வேத பண்டிதர்கள் இன்றும் காத்து வருகின்றனர். ரிக் வேதத்தில் 10170 மந்திரங்கள் இன்று பிரசித்தமாக உள்ளன. கிருஷ்ண யஜுர் வேதத்தில் 101 சாகைகள் உள்ளன; 4773 மந்திரங்கள் இன்று பிரசித்தமாக உள்ளன.

சாம வேதத்திலோ 1549 செய்யுள்கள் உள்ளன. ஆயுர்வேதம், போர்க்கலை உள்ளிட்ட ஏராளமானவற்றைச் சொல்லும் அதர்வண வேதத்தில் எண்ணற்ற மந்திரங்கள் இன்றும் காணப்படுகின்றன. பயன்படுத்தப்படுகின்றன.

இந்த வேதமானது அபௌருஷேயம் – மனிதனால் இயற்றப்பட்டது அல்ல – என்று  ஸ்ரீ சத்ய சாயிபாபா கூறுவதோடு அதன் அபூர்வ மஹிமைகள் பற்றி தனது உரைகளில் குறிப்பிடுகிறார்.

வேதங்களின் சிந்தனை உலக நலன் ஓங்குக என்பது தான்!

சர்வே ஜனா சுகினோ பவந்து – அனைத்து மக்களும் சுகமாக வாழட்டும்!

லோகாஸ் ஸமஸ்தா சுகினோ பவந்து – அனைத்து உலகும் சுகம் பெறட்டும்!

இதுவே வேத பிரார்த்தனை!

 இப்படிப்பட்ட தெய்வீக வேதங்களைப் போற்றுவோம்; அதை ஓதி பாரம்பரியம் கெடாமல் வழி வழியாகத் தருவோரையும் ஆதரித்து நலம் பெறுவோமாக!

நன்றி, வணக்கம்!

 tags– வேதங்கள் ,எத்தனை,

–subham—

**

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: