
Post No. 8733
Date uploaded in London – – –25 SEPTEMBER 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
போதிசத்வர் கதைகள்! – நாணயத்திற்குக் கிடைத்த பரிசு!
ச.நாகராஜன்
போதிசத்வர் பல ஜென்மங்களை எடுத்திருப்பதாகவும் ஒவ்வொரு ஜென்மத்திலும் அவர் ஆற்றிய அற்புதங்கள் ஏராளம் என்று புத்த மத நூல்கள் கூறுகின்றன. இரு கதைகளை இங்கு மாதிரிக்காக பார்ப்போம்.
நாணயத்திற்குக் கிடைத்த பரிசு!
ஒரு சமயம் போதிசத்வர் ஒரு புனிதமான மரத்தில் ஆவியாகக் குடியிருந்தார். ஒருநாள் ஒரு ஏழை அந்த மரத்திற்கு அருகில் வந்தான். ஏழை என்பதால் அந்த புனித மரத்திற்கு எதையும் அவனால் நைவேத்யமாக அர்ப்பணிக்க முடியவில்லை. ஒரு சின்ன ரொட்டித் துண்டு தான் அவன் கையில் இருந்தது. மற்றவர்கள் எல்லோரும் நல்ல விலையுயர்ந்த பொருள்களை அர்ப்பணித்த போது அவனால் ரொட்டித் துண்டை மரத்தின் முன்னால் வைக்க முடியவில்லை. அந்த புனிதமான மரம் இந்த ரொட்டித் துண்டை ஏற்காது என்று அவன் நினைத்தான். அவன் திரும்பிச் செல்ல யத்தனித்தான்.
திடீரென்று போதிசத்வர் அவர் முன் தோன்றினார். “ நண்பனே! எனக்கு ரொம்ப பசியாய் இருக்கிறது. உன் கையிலிருக்கும் ரொட்டித் துண்டை தர முடியுமா?
என்று கேட்டார்.
இதைக் கேட்டு ஆச்சரியமடைந்த அந்த ஏழை தன் கையிலிருந்த ரொட்டித் துண்டை அவரிடம் கொடுத்தான்.
அதைச் சாப்பிட்ட பின்னர் போதிசத்வர் அவனிடம் கூறினார் : “நண்பனே! அதோ இருக்கும் அந்த மரத்தின் அடியில் தோண்டு. தங்கக் காசுகள் கிடைக்கும்!”
அந்த ஏழை மரத்தின் அடியில் தோண்ட நிறைய தங்கக் காசுகள் இருப்பதைப் பார்த்தான். ஆனால் அவற்றை அவன் எடுத்துக் கொள்ளவில்லை. மன்னனிடம் சொன்னான்.
மன்னன் அவனது நேர்மையை எண்ணி அவனை மெச்சினான். உடனடியாக அவனுக்குப் பல தங்கக் காசுகளைத் தந்ததோடு தன் பொக்கிஷத்தைக் காக்க நேர்மையான அந்த ஏழையே சிறந்தவன் என்று நினைத்து அவனைத் தனது பொக்கிஷ அதிகாரியாக நியமித்தான்.
நேர்மைக்கு எப்போதுமே பரிசும் மரியாதையும் உண்டு.
*
மதம் பிடித்த யானை!
இன்னொரு சிறிய கதை.
ஒரு சமயம் போதிசத்வர் ஒரு ஜென்மத்தில் துறவியாக இருந்தார். அப்போது அவருக்கு ஏராளமான சீடர்கள் இருந்தனர். அதே கால கட்டத்தில் இன்னொரு துறவியும் வாழ்ந்து வந்தார். போதிசத்வருக்கு இருக்கும் சீடர்களையும் அவருக்கு இருந்த புகழையும் பார்த்து அவர் பொறாமைப் பட்டார்.
அவரை எப்படியாவது தீர்த்துக் கட்ட வேண்டும் என்று அந்த பொறாமை பிடித்த துறவி நினைத்தார். சில மாவுத்தர்களை அணுகி எப்படியாவது யானையை போதிசத்வர் மீது ஏவி விடுமாறு சொன்னார். அவர்களில் ஒரு மாவுத்தன் யானைக்கு மதம் பிடிக்கும் அளவு சாராயத்தை ஊற்றிக் குடிக்க வைத்தான். வெறி பிடித்து மதம் கொண்ட யானையை போதிசத்வர் இருக்கும் இடம் நோக்கி விரட்டினான். அது அலறியவாறே போதிசத்வர் இருக்கும் இடம் நோக்கிச் சாலையில் ஓடியது.
மதம் பிடித்த யானை ஓடிவருவதைக் கண்ட மக்கள் தலை தெறிக்க ஓடினர். ஒரு பெண்மணி யானை வரும் வேகத்தைக் கண்டு பயந்து தன் கையிலிருந்த குழந்தையைப் பதற்றத்தில் போதிசத்வரின் காலடியில் கீழே நழுவ விட்டாள்.
வேகமாக ஓடி வந்த யானை அவர்களை நசுக்கி விடும் நிலையில் போதிசத்வர் அந்த யானையின் நெற்றியில் தன் கையைப் பதித்தார்.
அவ்வளவு தான், அந்த யானை சாந்தமடைந்தது. அதைத் தட்டிக் கொடுத்தார் போதிசத்வர்.
யானை அவர் முன்னால் மண்டியிட்டுப் பிளறியது.
அனைவரும் இந்த ஆச்சரியகரமான சம்பவத்தைப் பார்த்து பிரமித்தனர்;
*

இது போன்ற நூற்றுக் கணக்கான சம்பவங்களை போதிசத்வர் கதைகள் தெரிவிக்கின்றன!
tags- tags – போதிசத்வர் கதைகள்