
Post No. 8741
Date uploaded in London – –26 SEPTEMBER 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
பாணினி ஜீனியஸ் GENIUS

நீங்கள் ஒரு பள்ளிக்கூடத்தில் வகுப்பு ஆசிரியர் எனறு கற்பனை செய்துகொள்ளுங்கள் . வகுப்பில் 40 மாணவ மாணவியர். ஒவ்வொருவருக்கும் 1 முதல் 40 வரை நம்பர் கொடுத்துவிட்டீர்கள் . சாப்பாட்டு நேரம் வந்தது. ஆனால் சாப்பிடும் அறையில் 20 பேருக்குத்தான் மேஜை நாற்காலி இருக்கிறது. உடனே 1 முதல் 20 வரை சாப்பிடப் போங்கள் என்பீர்கள். 20 மாணவ மாணவ மாணவியரின் பெயரைச் சொல்லமாட்டீர்கள் . பின்னர் 21 முதல் 40 வரை சாப்பிடப் போங்கள் என்பீர்கள். பள்ளிக்கூடத்தில் விளையாட்டு விழா வந்தால் எல்லா வகுப்புகளையும் 4 அல்லது 5 வர்ணங்களின் அணிகளாகப் பெயர் சூட்டுவீர்கள் . நாளை சிவப்பு அணியும் மஞ்சள் அணியும் கூடைப்பந்தும், நீல அணியும் வெள்ளை அணியும் கால் பந்தும் விளையாடும் என்று போர்டில் எழுதி வைப்பீர்கள். உலக கால்பந்து போட்டிகளில் அந்தந்த நாட்டு கொடிகளின் வர்ணத்துக்கு ஏற்ப பனியன், சட்டை அணிவதை பார்க்கிறோம். இது போல ஒரு சுருக்க வழியை பாணினிதான் முதலில் உலகிற்குச் சொல்லிக்கொடுத்தார் . மஹா அறிவாளி . மஹா ஜீனியஸ் . ‘சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல்’ என்பதில் வள்ளுவரை எல்லாம் முழுங்கி ஏப்பம் விட்டுவிட்டார்.
அதுவும் 2700 ஆண்டுகளுக்கு முன்னர்!
இப்போதுள்ள எந்த மொழியிலும் இலக்கணம் என்பதே இல்லாத காலத்தில்!
இதனால்தான் இந்தப் பாணினியை இன்று உலகமே போற்றுகிறது .
பாரதியார் சொன்னார் :–
“நம்பருந்திறலோடொரு (INCREDIBLE, UNBELIVABLE) பாணினி
ஞால மீதில் இலக்கணம் கண்டதும்” – என்று
ஒரு மனிதனுக்கு இவ்வளவு அறிவு இருக்க முடியுமா என்று வியக்கிறது. ஆயிரம் ஐன்ஸ்டைன்களை முழுங்கி ஏப்பம் விட்டுவிட்டார் அவர் E = mc2.ஈ = எம் ஸி கொயர்ட் என்றார். இவரோ ‘இகோணசி’ என்றார். இதை பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை விளக்குவத்தைச் சொல்லுவதற்கு முன்னர் பாணினி இந்த உத்திக்கு இந்த டெக்கினிக்கிற்கு என்ன பெயர் கொடுத்தார் என்று காண்போம்.

பிரத்தியாஹாரங்கள்
பாணினி பிரத்தியாஹாரம் அமைக்கும் விதத்தை ஒரு சூத்திரத்தில் விளக்கியுள்ளார் 1-1-71
ஒரு சூத்திரத்தில் தேவையான எழுத்துக்களை எல்லாம் ஒவ்வொன்றாக எடுத்து விவரித்துக் கூறாமல் அதற்குள் அடங்கும் எழுத்துக்கள் எல்லாவற்றையும் சுருக்கமாக பிரத்தியாஹாரங்கள் மூலம் சுட்டலாம் .இதற்காக சிவ சூத்திரங்களில் உள்ள எழுத்துக்களைப் பாணினி பெரும்பாலும் பயன்படுத்தியுள்ளார்.
எடுத்துக்காட்டாக ‘அச்’ என்ற பிரத்தியாஹாரத்தைப் பயன்படுத்தினால் எல்லா உயிர் எழுத்துக்கள் என்று அர்த்தம்.
இதைப் போல ‘ஹல் ‘ என்ற பிரத்தியாஹாரம் எல்லா மெய் எழுத்துக்களையும் குறிக்கும்.
தமிழில் இதைப் பயன் படுத்தினால் உயிர் எழுத்துக்களுக்கு பிரத்தியாஹாரம் – ‘அஒள’
மெய் எழுத்துக்களுக்குப் பிரத்தியாஹாரம் – க்ன் அல்லது ‘கன’
இதனால் மீண்டும் மீண்டும் மெய் எழுத்து, உயிர் எழுத்து என்று சொல்ல வேண்டியதில்லை.
பாணினி இத்தோடு நிறுத்தவில்லை. இது போல 41 பிரத்யாஹார (PERMUTATIONS AND COMBINATIONS) சூத்திரங்களைப் பயன்படுத்துகிறார்.
பள்ளிக்கூடத்தில் விஞ்ஞான ஆசிரியர் வானவில்லின் 7 நிறங்களை அதே வரிசையில் நினைவிற்கொள்ள ‘விப்ஜியார்’ VIBGYOR என்று சொல்லித் தருவது போல இது.
VIOLET, INDIGO, BLUE, GREEN, YELLOW, ORANGE, RED வயலெட், இந்திகோ , ப்ளூ , க்ரீன் யெல்லோ , ஆரஞ்சு , ரெட் என்பது போல.
சுருங்க உரைப்பதில் , ஒரு அசை (SYLLABLE) லாபமானாலும் கூட அதைப் புத்திரப்பேறாக எண்ணி மகிழ்வர் என்று பதஞ்சலி முனிவர் கூறுகிறார்

இகோயணசி
பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை எழுதுகிறார் :–
பாணினி , குறியீடுகளையும் தாமாகப் படைத்துக்கொண்ட சொற்களையும் ஆண்டிருக்கிறார் . இவை ALGEBRA பீஜ கணிதக் குறியீடுகள் — அல்ஜீப்ரா — போல, பணிநிய இலக்கணத்திற்கு உதவின; இவற்றைப் பயன்படுத்தித் தெளிவாகவும் சுருக்கமாகவும் மொழி பற்றிய பீஜ கணித — அல்ஜீப்ரா- நூலை இவர் எழுதினார் என்றுதான் நாம் சொல்ல வேண்டும் .
உதாரணமாக , நிலை மொழி ஈற்றில் இ, உ, ஐ, ஸ என்ற இவ்வெழுத்துக்கள் குறிலாகவேனும், நெடிலாகவேனும் நின்று வருமொழி முதலில் உயிர் வருமாயின் நிலை மொழியீறு ய் , வ் ,ர் , ல் என முறையே திரியும் . இவ்விதியை ‘இகோ யணசி’ என்ற சூத்திரத்தால் பாணினி குறித்துள்ளார்.
இங்கே ‘இக்’ என்பது இ உ ய ஸ என்பதையும் ‘யண்’ என்பது ய் , வ் , ர் , ல் என்பவற்றையும் ‘அச்’ என்பது உயிர் எழுத்துக்களையும் குறிக்கும் இவர் இலக்கணத்தை உணர்ந்து கொள்வதில் ஞாபக சக்தி பெரிதும் வேண்டப்படும்
ஒரு விதியின் பொருளை உணர வேண்டுமாயின், அவ்விதிக்கு முன்னருள்ள அனைத்து விதிகளையும் ஞாபகத்தில் வைத்தலோடு தாது பாடத்தையும் கண பாடத்தையும் மனனம் பண்ணியிருக்கவேண்டும்.
to be continued…………………………
tags –இலக்கண அகராதி – 8, பிரத்தியாஹாரம்,இகோயணசி