தலையாய ஹிந்து மகனை, முன்னணித் தலைவரை இழந்தோமே! (Post.8759)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No. 8759

Date uploaded in London – – 1 OCTOBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

தலையாய ஹிந்து மகனை, முன்னணித் தலைவரை இழந்தோமே!

ச.நாகராஜன்

இன்று 30-9-20 மாலை கிடைத்த செய்தி மனதையும் உடலையும் வெகுவாக பாதித்து நோகவைத்து செயலற்ற நிலைக்குக் கொண்டு சென்று விட்டது.

மானனீய கோபால்ஜி நம்மிடையே இல்லை என்ற செய்தியை ஜீரணிக்கவே முடியவில்லை.

சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆண்டுகளின் நினைவுகள் அலை அலையாய் நினைவில் வந்து மோதுகின்றன.

ஒன்றா, இரண்டா ஒரு நூற்றுக்கும் மேற்பட்ட அற்புத நிகழ்வுகள்.

வருடம் 1968.

சந்திரசேகர் என்ற நண்பர், ‘இராம கோபாலன் எனது வீட்டில் இருக்கிறார், வருகிறீர்களா’ என்று கேட்டார்.

கரும்பு தின்னக் கூலியா, ஆர் எஸ் எஸ் இயக்க பிரசாரக் என்றால் பார்ப்பதற்கு கேட்கவா வேண்டும், உடனே புறப்பட்டோம்.

அவரைச் சந்தித்த முதல் சந்திப்பே காந்தத்தால் இரும்புத் துளிகள் இழுப்பது போல இருந்தது. இழுக்கப்பட்டோம்!

முதல் சில நிமிடங்களில் அவர் பேசியதையே நாங்கள் உடனடியாக வீட்டில் வந்து ‘கமெண்ட்’ அடித்த போது விவேகானந்தரைப் பார்த்தது போல இருக்கிறது என்று பேசினோம்.

பின்னர் ‘சங்க வேலையாக’ அவருடன் நெடுங்காலம் தொடர்பு ஏற்பட்டது.

எங்கள் வீட்டில் அவருக்கு எப்போதும் ஒரு இடம் உண்டு என்ற நிலை ஏற்பட்டது.

இறுதியாக நான் அவரைத் தொடர்பு கொண்டது சில நாட்களுக்கு முன்னர்.

மதுரையில் உள்ள பெருமாள் தெப்பக்குளத்தைச் சுற்றி ஆக்ரமிக்கப்பட்டிருந்த கடைகள் இடிக்கப்பட்டன என்ற செய்தியை உடனே அவருக்குத் தெரிவிக்க போன் செய்தேன். அவர் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த நிலையில் அவரது உதவியாளரிடம் என் மகிழ்ச்சியைத் தெரிவித்தேன்.ஏனெனில் இதற்காக உற்சாகமும் உத்வேகமும் அவரிடமிருந்தும் ஹிந்து ஆலயப் பாதுகாப்பு கமிட்டியின் செயலாளர் திரு எம்.ராமசாமியிடமிருந்தும் பெற்றிருந்தேன்.

மதுரையில் ஆத்திக சமாஜங்களை ஒன்றிணைத்து ஊர்வலம் நடத்தினோம்.

ஆலயப் பாதுகாப்பு மாநாட்டின் மதுரை செயலாளராக இருந்து எட்வர்ட் ஹாலில் பெரிய மாநாடு நடத்தினோம். அதில் முக்கிய தீர்மானமாக இந்த ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்று தீர்மானத்தை ஒரு மனதாக நிறைவேற்றி இருந்தோம்.

இதற்கு முன்னர் சில மாதங்களுக்கு  முன்னதாக அவரே என்னை அழைத்தார் போனில்.

மாலைமலரில் வெளியான எனது கட்டுரை ஒன்றை அவர் பாராட்டினார்.

ஏன் பேசவில்லை என்று அவர் என்னைக் கேட்ட போது அவருக்குள்ள இடைவிடாத பணியில் தொந்தரவு கொடுக்க விரும்பவில்லை என்றேன். ‘இல்லை பேசு’ என்று அவரது தனி செல் நம்பரைத் தந்தார்.

பாராட்டத் தயங்காத பெரிய உள்ளம் கொண்டவர் அவர். அவரது உடலில் உள்ள ஒவ்வொரு திசுவும் ஹிந்து சிந்தனை கொண்டதே.

மகா தைரியசாலி.

கன்யாகுமரியில் விவேகானந்தர் பாறையை சில விஷமிகள் தகர்க்க  முயன்ற போது கடல் நீச்சுக்காரர்களுடன் படகில் சென்று விஷமிகளை எதிர் கொண்டு அவர்களை எச்சரித்தது யாரும் அறிந்திராத ஒன்று. விளம்பரத்தை விரும்பாதவர் அவர்.

காலையில் 4  மணிக்கு எழுந்து காயத்ரி மந்திரம் ஜபித்து பின் பல யோகாசனங்களைச் செய்வது அவர் பழக்கம். நாள் தவறாமல் இதைச் செய்யும் அவர் உடனடியாக சஙகப் பணிக்கு ஆயத்தமாவார். இரவு நெடு நேரம் வரை பணி தொடரும்.

இடைவிடாத பயணத்தை மேற்கொண்ட அவர் தமிழ்நாட்டில் செல்லாத ஊரே இல்லை. தமிழ்நாட்டில் ஒவ்வொருவரையும் பெயர் சொல்லி அழைக்கும் அளவு நெருங்கிய தொடர்பை அனைத்து சங்க ஸ்வயம்சேவகர்களுடனும் அவர் கொண்டிருந்தார்.

பெரிய எழுத்தாளர். நல்ல மொழிபெயர்ப்பாளர். பல்மொழி வல்லுநர்.

எழுமின் விழிமின் என்ற புத்தகத்தை அவர் தான் அற்புதமாக மொழிபெயர்த்தவர் என்பதை வெகு சிலரே அறிவர். விவேகானந்தரின் அற்புதமான உத்வேகமூட்டும் உரைகளைக் கொண்டது இந்த நூல். இது ARISE! AWAKE என்று ஆங்கிலத்தில் ஏக்நாத்ஜி ரானடே அவர்களால் தொகுக்கப்பட்டது.

 தொட்டதெல்லாம் தங்கமாகும் என்ற மொழிக்கேற்ப அவர் தொட்ட ஒவ்வொருவரும் ஹிந்து சிந்தனை கொண்ட பெரும் தொண்டராக மாறினர்.

பலர் கவர்னராக ஆகி உள்ளனர். பலர் தேசியத் தலைவர்களாக பாரத நாட்டுத் தொண்டில் இன்று ஈடுபட்டிருக்கின்றனர்.

தமிழ்நாட்டின் அவலமான அரசியல் நிலையைப் போக்க் அவர் ஹிந்து முன்னணியைத் தொடங்கினார்.

ஹிந்து முன்னணி ஆற்றிய, ஆற்றி வரும் அற்புதப் பணிகள் மகத்தானவை.

இன்று தலையாய ஒரு ஹிந்து மகனை, முன்னணித் தலவரை இழந்து வாடுகிறோமே!

அவரது இழப்பு ஈடு செய்ய முடியாத இழப்பு. அவரது ஆன்மா சாந்தி அடைவதாக. அவரது நினைவே நமக்கு உத்வேகம் ஊட்டி நமது பணியைத் தொடரச் செய்யுமாக!

***

tags- ஹிந்து முன்னணி, இராம கோபாலன், கோபால்ஜி

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: