மஹாத்மா போற்றிய கீதையும், காயத்ரியும், உபநிஷத்தும்!(Post No.8763)

WRITTEN BY S NAGARAJAN                                    

Post No. 8763

Date uploaded in London – – 2 OCTOBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

காந்தி ஜயந்தி : சிறப்புக் கட்டுரை!

மஹாத்மா போற்றிய பகவத் கீதையும், காயத்ரியும், ஈசோபநிஷத்தும்!

ச.நாகராஜன்

1

காந்திஜியும் பகவத் கீதையும்!

மஹாத்மா காந்திஜி ஒரு திறந்த புத்தகம். ண்மையே கடவுள் என்றார் அவர்.

அந்த உண்மையின் வழி வாழ நினைத்தார்; வாழ்ந்தும் காட்டினார்.

சத்திய சோதனையில் அவர் ஜெயித்தார். சாதாரண ஆத்மா மஹாத்மா ஆனார்.

ஹிந்து மதத்தை விட்டு அவரை விலக வைக்க நினைத்த பாதிரிகளின் சூழ்ச்சியோ அல்லது அவரை மடக்கி மாட்டி விட அவரிடம் கேட்கப்பட்ட ஏராளமான கேள்விகளோ அவரை ஒரு சிறிதும் பாதிக்கவில்லை. மாறாக சூதுடன் வந்து வாது செய்தவர்களே தோற்றுப் போனார்கள். ஹிந்து மதத்தில் ஆழ்ந்த பற்றுள்ளவராக அவர் இருந்ததற்கு கீதை, காயத்ரி, இறைவன் நாமத்தைக் கூறும் பஜனைப் பாடல்கள், ஈசோபநிஷதம் உள்ளிட்டவையே!

இது பற்றி அவரே தெளிவாக உரைத்திருக்கிறார்.

உதாரணத்திற்கு அவரே கூறிய மூன்று விஷயங்கள் இதோ:-

கீதை ஒன்று தான் ஆட்சேபிக்க முடியாத ஆதார நூல் என்று நீங்கள் சொல்வதை நான் ஒப்புக்கொள்ள மாட்டேன் என்று ஒரு சம்ஸ்கிருத பண்டிதர் காந்திஜிக்கு ஒரு கடிதம் எழுதினார்.

அதில் கீதையை தான் போற்றுவதற்கான காரணத்தை காந்திஜி இப்படி எழுதினார்:

“வாசித்துப் பரிசீலனை செய்ய வேண்டும் என்ற அக்கரையுடன் ஒவ்வொரு ஹிந்துவும் வாசிக்கக் கூடிய தெளிவான புத்தகம் கீதை தான். மற்ற எல்லாத் தரும சாஸ்திர நூல்களும் எரிந்து சாம்பலாகி விட்டால் கூட,  ஹிந்து மதம் என்றால் என்ன, அதன்படி ஒருவர் எப்படி வாழமுடியும் என்பதைக் கூறுவதற்கு 700 ஸ்லோகங்கள் அடங்கிய அழிக்க முடியாத இந்த நூல் ஒன்றே (கீதையே) போதுமானது. என்னை ஒரு சனாதனி என்றே நான் கூறிக் கொள்கிறேன். ஏனெனில், சென்ற நாற்பது ஆண்டுகளாக நான் முற்றிலும் கீதையின் உபதேசங்களுக்கு இணங்கவே வாழ்க்கையை நடத்த முயற்சித்து வருகிறேன். அதனுடைய முக்கியமான கொள்கைக்கு முரணாக இருக்கும் எதையும் ஹிந்து மதத்திற்கு உகந்ததன்று என்று நான் தள்ளி விடுகிறேன். அது எந்தச் சமயத்தையும், எந்த போதகரையும் நிராகரிக்கவில்லை”

  • ஹரிஜன்  25-2-1923

2

காந்திஜியும் காயத்ரி மந்திரமும்!

சினேக பாவமுள்ள ஒரு ஆட்சேபவாதி ‘தாழ்மையுடன்’ சில கேள்விகளை காந்திஜி முன் வைத்தார். அதில் கடைசியாக அவர் கேட்டிருந்தார் இப்படி:”  நீங்கள் உங்களுடைய இரண்டாவது பிறவியில் ஒரு நாள் கூட உங்களுடைய தினசரிப் பிரார்த்தனைகளில் காயத்ரி ஜபத்தையும் சேர்த்துக் கொள்ளாமல் இருந்ததில்லையா?”

இந்தக் கேள்வியில் இரண்டாவது பிறவி என்று அவர் குறிப்பிட்டிருந்தது பூணூல் போடுவதற்கு முன் உள்ள பிறவி முதல் பிறவியாகும்; பூணூல் போட்ட பிறகு ஏற்படுவது இரண்டாவது பிறவியாகும் என்ற அடிப்படைக் கருத்தைக் கொண்டதாகும்.

அவர் கேட்ட கேள்விகளுக்கு காந்திஜி நீண்ட பதிலைத் தந்தார். அதில் ஒரு பகுதி இது:-

“(கடைசியாக) நன்மை பயக்கும் சில சம்பிரதாயங்களில் எனக்கு நம்பிக்கை உண்டு. காயத்ரி ஜபம் செய்வதற்கு ஒரு சம்பிரதாயம் உண்டு. அதாவது, குறிப்பிட்டபடி ஸ்நானம் செய்து சுத்தமாக இருந்து கொண்டு, சில் குறிப்பிட்ட காலங்களில் மாத்திரமே காயத்ரி ஜபம் செய்ய வேண்டும். அந்தச் சம்பிரதாயங்களில் எனக்கு நம்பிக்கை இருப்பதாலும், எப்போதும் அவற்றை அனுஷ்டிக்க என்னால் இயலாததாலும், அவ்விஷயமாக நான் பிற்காலத்தில் தோன்றிய மகான்களைப் பின்பற்றி வந்திருக்கிறேன். அதாவது, பாகவதத்தில் உள்ள துவாதச மந்திரங்கள் அல்லது எளிமையான துளஸிதாசரின் உபதேச விதி, கீதையிலிருந்தோ, வேறு நூல்களிலிருந்தோ சில ஸ்லோகங்கள், பிராகிருத பாஷையில் (காந்திஜி இங்கு குறிப்பிடுவது சம்ஸ்கிருத பாஷையில் உள்ள பேச்சு வழக்கு மொழியை)  சில பஜனைகள் இவற்றுடன் நான் திருப்தியடைந்து வந்துள்ளேன். இவை தான் தினசரி என் ஆன்ம உணவாக, எனது காயத்ரியாக இருந்து வந்திருக்கின்றன. அவை எனக்கு தினசரித் தேவையான மனச்சாந்தியையும் ஆறுதலையும் கொடுக்கின்றன.”

எங் இந்தியா 27-8-1925

3

காந்திஜியும் ஈசோபநிஷத்தும்!

ஹிந்து மத சாரம் என்ன என்பதை அவர் தெளிவாக உணர்ந்து கொண்ட விதத்தையும் அவர் விளக்கியுள்ளார். ஹிந்து மதம் அழியவே அழியாது அதில் உள்ள ஒரே ஒரு மந்திரம் மட்டும் ஹிந்துக்களின் மனதில் பதிந்தால் என்று அவர் மிக்க கம்பீரமாக எழுதினார்.

அதில் ஒரு பகுதி இதோ:-

“ஆனால், நான் இப்போது கூறப் போகும் ஒரு மந்திரத்தில் ஹிந்து மதத்தின் சாரம் முழுவதும் அடங்கியிருக்கிறது என நிர்ணயித்துள்ளேன். ஈசோபநிஷத்தை உங்களில் பலர் அறிந்திருக்கலாம். மொழி பெயர்ப்புடனும்  வியாக்கியானத்துடனும் அதைப் பல ஆண்டுகளுக்கு முன் நான் வாசித்தேன். எரவாடா சிறையில் அதை மனப்பாடமும் செய்து கொண்டேன். ஆனால், அப்போது என்னை அது கவரவில்லை. சமீப காலமாகத் தான் அது என்னை முற்றிலும் கவர்ந்து விட்டது. மற்ற எல்லா உபநிஷத்துக்களும், மற்ற எல்லா வேத நூல்களும் திடீரென்று எரிந்து சாம்பலாகி விடுவதாக வைத்துக் கொள்ளுவோம். அப்போது ஈசோபநிஷத்தின் முதல் ஸ்லோக்ம் மாத்திரம் ஹிந்துக்களின் மனதில் பதிந்திருந்தால், ஹிந்து மதம் எக்காலத்திலும் அழிவின்றித் திகழும்.

அந்த ஸ்லோகம் இது தான்:

 ஈசாவாஸ்யமிதம் ஸர்வம்

   யத் கிஞ்ச ஜகத்யாம் ஜகத்

தேன த்யக்தேன புஞ்ஜீதா

    மா க்ருத கஸ்யஸ்வித் தனம்

இதன் மொழிபெயர்ப்பு வருமாறு:-

“இந்த உலகத்தில் உள்ள எல்லாவற்றிலும் சிருஷ்டிகர்த்தாவான இறைவன் வியாபித்துள்ளார். எனவே, எல்லாவற்றையும் தியாகம் செய்து அவருக்கு அர்ப்பணம் செய்யுங்கள். பிறகு உங்களுக்குக் கிடைக்கும் ஒரு பங்கை மாத்திரம் உபயோகப்படுத்திக் கொண்டு அனுபவியுங்கள். யாருடைய உடைமைகளுக்கும் ஒரு காலத்திலும் பேராசைப்படாதீர்கள்.

 ஒரே கடவுள்; ஒரே சிருஷ்டிகர்த்தா, ஒரே தலைவர் எல்லாவற்றிலும் வசிக்கிறார்; அகில உலகிலும் வியாபித்திருக்கிறார். ஒரு மனிதர் இதைக் காட்டிலும் அதிகமாகத் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன இருக்க  முடியும்?”

                                                         – ஹரிஜன் 30-1-1937

4

மேலே கண்ட மூன்று பகுதிகளில் முதலாவது பகுதியில் காந்திஜி எப்படி கீதையைப் போற்றினார் என்பது தெரிய வருகிறது. பிரச்சினைகளுக்கு தீர்வாக அவர் நாடியது கீதையைத் தான்!

இரண்டாவது பகுதி அவர் எப்படி காயத்ரி மந்திரத்தில் சம்பிரதாயத்தைக் கடைப்பிடிக்க விரும்பினார் என்பது தெரியவருகிறது. அவற்றைக் கடைப்பிடிக்க முடியாத நிலையில் எளிய பஜனையையும் ஸ்லோகங்களையும் அவர் விரும்பி மேற்கொண்டதையும் அறிய முடிகிறது.

மூன்றாவது பகுதியில் ஈசோபநிஷத் மீது அவர் கொண்ட பெரும் மதிப்பும் நம்பிக்கையும் தெரியவருகிறது.

அதன் “ஈசாவாஸ்யம்” என்று ஆரம்பிக்கும் ஒரு ஸ்லோகம் இருந்தாலும் போதும், ஹிந்து மதம் என்றும் அழியாது என்ற அவரது அசைக்க முடியாத நம்பிக்கையையும் நம்மால் அறிய முடிகிறது.

காந்திஜி, மஹாத்மா காந்திஜிதான்!

மஹாத்மா காந்திஜி சிறந்த ஹிந்து காந்திஜி தான்!! என்பது இதிலிருந்து புலனாகிறது அல்லவா!

வாழ்க பாரதம்! வாழ்க காந்திஜி நாமம்!! ஓங்கி உயர்ந்து வளர்க ஹிந்து மதம்!!!

tags — காந்தி, ஈசோபநிஷத்

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: