
WRITTEN BY BRHANNAYAKI SATHYANARAYANAN
Post No. 8776
Date uploaded in London – –5 OCTOBER 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
5-10-2020அன்று ஞான மயம் ஒளி /ஒலி பரப்பில் லண்டன் திருமதி ஹரிணி ரகு , பெங்களூர் திருமதி சத்திய நாராயணன் ஆகிய இருவரும் பாட கர் எஸ் .பி.பாலசுப்ரமண்யத்துக்கு அஞ்சலி செலுத்தினர். ஹரிணி உரை எழுத்து வடிவில் ல்லை. ஆனால் FACEBOOK.COM/GNANAMAYAM ல் கேட்கலாம். பிரஹந்நாயகி உரை இதோ எழுத்து வடிவில் :–

உவமையிலா ஓசை இன்பம் தந்தவர்! (Post No.8776)
5-10-2020 அன்று ஞானமயம் நிகழ்ச்சியில் ஒளிபரப்பான அஞ்சலி உரை
உவமையிலா ஓசை இன்பம் தந்தவர்!
பிரஹன்நாயகி சத்யநாராயணன்
ஞானமயம் சார்பில் உங்கள் அனைவருக்கும் வணக்கம் கூறுவது பிரஹன்நாயகி சத்யநாராயணன்.

காட்டு நெடு வானம் கடல் எல்லாம் விந்தை எனில்
பாட்டினைப் போல் ஆச்சரியம் பாரின் மிசை இல்லையடா!
ஆசை தரும் கோடி அதிசயங்கள் கண்டதிலே
ஓசை தரும் இன்பம் உவமை இலா இன்பம் அன்றோ!
ஆம் மஹாகவி பாரதியார் கூறியது நூற்றுக்கு நூறு உண்மை தான்.
நாதங்கள் சேரும் நயத்தினுக்கு எதுவும் ஈடாகுமா?
லட்சோபலட்சம் மக்கள் பல்லாண்டுகளாகக் கேட்டு மெய்மறந்து இருந்த இசை அதிசயத்தைத் தந்தவர் எஸ்.பி.பி.
எஸ்.பி.பி என்ற இந்த மூன்றெழுத்து, இசை உலகில் விளைவித்த அற்புதங்கள், ஏராளம், ஏராளம்.
பதினாறு மொழிகளுக்கும் மேலான மொழிகளில், ஆயிரம் ஆயிரம் பாடல்களை தன் அமுத கானக் குரலால் அள்ளி வழங்கியவர் இன்று நம்மிடையே இல்லை என்பதை நினைக்கும் போது உள்ளமெலாம் கனக்கிறது.
அவர் பாடிய பாடல்களில் இழைந்தோடிய ராகங்கள் ஏராளம்; அவை தந்த உணர்ச்சிகளோ நவ ரஸ உணர்ச்சிகள்.
இருப்பினும் ஆன்மீகத்தில் மனதை மேம்படுத்தி அனைவரையும் உயர ஏற்றிய அவரது பக்திப் பாடல்களை யாராலும் மறக்கவே முடியாது.
மனதை இதமாக வருடும் இனிய குரல், எஸ்.பி.பி.யின் குரல்!
அது ஆன்மாவின் குரலாக அவரது பக்திப் பாடல்களில் கோடானு கோடி இல்லங்களில் ஒலித்துக் கொண்டே இருந்தது; ஒலித்துக் கொண்டே இருக்கிறது. என்றும் ஒலித்துக் கொண்டே இருக்கும்.
ப்ரம்ம முராரி சுரார்ச்சித லிங்கம் நிர்மல பாஷித சோபித லிங்கம்
ஜன்மஜ துக்க விநாசக லிங்கம் தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம் என்று லிங்காஷ்டகத்தை இனிய குரலில் பக்தியைக் குழைத்து, சொல்லுக்குச் சொல் இடம் விட்டு, பொருள் புரியும் படி, இசையாக அவர் வழங்கிய விதம் உவமை இலா ஒன்றாகும்.
கோடி கன்யா தானத்தை விட ஒரு வில்வத்தை சிவனுக்கு அர்ப்பணிப்பது மேலாகும் என்ற அவரது வில்வாஷ்டக பாடலைக் கேட்போருக்கு மெய் சிலிர்க்கும். என்ன ஒரு அபூர்வமான Presntation!
சங்கரா நாத சரீராபரா என்று மத்யமாவதி ராகத்தில் அவர் வழங்கிய பாடல் அவருக்கு தேசிய விருதை மட்டும் வாங்கித் தரவில்லை, பக்தர்களின் ஆழ்மனது அன்பையும் வாங்கித் தந்தது. சங்கராபரணம் பாடல்களைப் பாட முதலில் தயங்கியவர், பின்னர் மிகுந்த உழைப்புடன் கடின பயிற்சி எடுத்துப் பாடினார். வெற்றியும் பெற்றார்.
‘சிவன் எனும் ஒசை அல்லது அறையோ, உலகில் திரு நின்ற செம்மை உளதே’ என்று அப்பர் பெருமான் சிறப்பித்துக் கூறும் அந்த சிவ நாமம் அவரை உயரத்தில் ஏற்றியது!
வரணும் அம்மா வரணும் அம்மா, மூகாம்பிகை தாயே சரணம் அம்மா’ என்ற அவரது தேவியின் பாடல்கள் தாயின் அருளை யாருக்குத் தான் பெற்றுத் தரவில்லை.
நாராயணா என்று பக்தி இழையோடும் அவரது பாடல்கள், ‘நலம் தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம்’ என்ற ஆழ்வாரின் ரகசியத்தை அல்லவா நமக்குக் கற்றுத் தந்தது!
ஸ்ரீ கணேச பக்தி புஷ்பாஞ்சலியை நாற்பது லட்சம் பேர் இதுவரை கேட்டிருக்கிறார்கள் என்பதில் ஆச்சரியம் என்ன இருக்கிறது?
காவடி பற்றிய அவரது பாட்டு முருக பக்தர்களைக் கவர்ந்ததில் தான் வியப்பேது?

உள்ளம் உருக்கும் குரலில் அவர் பாடிய ஐயப்ப பக்திப் பாடல் ஒன்றை லட்சோப லட்சம் மக்கள் கேட்டதில், இன்றும் கேட்டு வருவதில் என்ன அதிசயம் இருக்கிறது?
ஐயப்பனைப் பற்றிய அந்தப் பாடலைக் கேட்காதவர், பாடாதவர் யார் உள்ளார்?
ஹரிவராசனம் விஸ்வமோகனம்
ஹரிததீஸ்வரம் ஆராத்யபாதுகம்
அரி விமர்தனம் நித்ய நர்த்தனம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே
சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா
சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா என்ற பாடலுக்கு இணை உண்டா என்ன? இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.
பூவுலகில் இருந்து இசை சேவை செய்து ஓயாமல் உழைத்தது போதும், இவரை நம்மருகில் வைத்துக் கொண்டு இனிய இசையை எந்நாளும் கேட்போம் என்று அனைத்து தெய்வங்களும் எண்ணி அவரைத் தம் அருகில் அழைத்துக் கொண்டனவோ!
உவமை இல்லா ஓசை தரும் இன்பத்தை என்றும் நீ வழங்குவாய், எஸ்.பி.பி உன் புகழ் ஓங்குக என்று கூறி, என் சிரம் தாழ்த்தி அஞ்சலி செலுத்தி, உங்கள் அனைவருக்கும் நன்றி கூறி விடை பெறுகிறேன். நன்றி , வணக்கம்!
TAGS – எஸ்.பி.பி , S P B, ஞானமயம், அஞ்சலி ,