மந்திரங்களைத் தவறாக உச்சரித்தால் பாதிப்பு வருமா? (Post.8784)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No. 8784

Date uploaded in London – – 7 OCTOBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

5-10-2020 அன்று ஞானமயம் கேள்வி-பதில் நிகழ்ச்சியில் ((Facebook.com/Gnanamayamஒளிபரப்பப்பட்ட கேள்வி – பதில்

மந்திரங்களைத் தவறாக உச்சரித்தால் பாதிப்பு வருமா?

ச.நாகராஜன்

QUESTION ASKED BY SENTHAMANGALAM GANESAN; THANKS

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே, சந்தானம் நாகராஜன் வணக்கம்.

மந்திரங்களைத் தவறாக உச்சரித்தால் பாதிப்பு வருமா? என்ற கேள்வி வந்துள்ளது.

பதில் : தவறாக உச்சரிக்காமல் உரிய முறைப்படி ஓதினால் நிச்சயம் அதற்குரிய பலன் முழுமையாகக் கிடைக்கும் என்பது தான்.

விளக்கத்தைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

மந்திரம் என்றால் என்ன?

மனனாத் த்ராயதே இதி மந்த்ர: மனத்தினால் மீண்டும் மீண்டும் சொல்லி அதாவது ஜபித்து உய்வைப் பெறுகின்ற ஒன்றே மந்திரம் ஆகும்.

சில மந்திரங்கள் பிரார்த்தனை மந்திரங்கள். சில பலன்களை எதிர்பார்த்து ஓதப்படும் மந்திரங்கள்.

இவற்றை குரு மூலமாகக் கற்று ஓதுவதே சிறப்பாகும்.

ஒவ்வொரு  மந்திரத்திற்கும் ஆறு பகுதிகள் உண்டு.

  1. மஹரிஷி – குறிப்பிட்ட ஒரு மந்திரத்தைக் கண்டவர்.
  2. ஸ்வரம் – அந்த மந்திரத்திற்கான குறிப்பிட்ட உச்சரிப்பு அல்லது இசை அமைப்பு
  3. தேவதா – அந்த மந்திரத்தின் அதி தேவதை
  4. பீஜம் – மந்திரத்தின் வித்து போன்ற ஜீவ ஒலி.
  5. சக்தி – மந்திரத்திற்கான திவ்ய சக்தி
  • கீலகம் – கீலகம் என்றால் தூண் என்று பொருள்படும். அதை ஓதுபவர் இடைவிடாது முயன்று மந்திரத்தை அப்யசிப்பதை இது குறிக்கிறது.

இவை அனைத்தையும் அறிந்தவரே குரு. குறிப்பிட்ட மந்திரத்தை அப்யசித்து சித்தி பெற்று, உரிய சீடர்களுக்கு அவர் வழங்குவார்.

உச்சரிப்பு என்பது மிக முக்கியம். வேதங்களை ஓதுவதற்கென்று குறிப்பிட்ட மரபு, வரைமுறை உள்ளது.

உதாத்தம், அனுதாத்தம், ஸ்வரிதம், தீர்க்க ஸ்வரிதம் ஆகிய இந்த நான்கும் உச்சரிப்பில் கையாளப்படுகின்றன.

உதாத்தம் என்றால் சாதாரண ஸ்வரத்தில் உச்சரிப்பதாகும்

அனுதாத்தம் என்றால் சாதாரண ஸ்வரத்திலிருந்து ஒரு  மாத்திரை இறக்கி உச்சரிக்க வேண்டும்.

ஸ்வரிதம் என்றால் சாதாரண ஸ்வரத்திலிருந்து ஒரு மாத்திரை ஏற்றி உச்சரிக்க வேண்டும்.

தீர்க்க ஸ்வரிதம் என்றால் சாதாரண ஸ்வரத்திலிருந்து இரண்டு மாத்திரைகள் ஏற்றி உச்சரிக்க வேண்டும்.

மந்திரத்தில் ஒலி அதாவது உச்சரிப்பு மிக முக்கியமானது என்பதை உணர்த்த யஜூர் வேதத்தில் வரும் ஒரு சம்பவத்தை எடுத்துக்காட்டாகக் கூறலாம்.

ஒரு சமயம் இந்திரனைக் கொல்ல எண்ணிய விருத்ராஸுரன் என்னும் அசுரன் தவம் செய்து இறைவனின் தரிசனத்தைப் பெற்றான்.

‘இந்த்ர சத்ரு வர்தஸ்வ’ என்று இந்திரனைக் கொல்ல வேண்டி அவன் கோரியது, ஸ்வர பேதத்தால் – அதாவது ஒலியை மாறுபட்டு உச்சரித்ததால் – இந்திரன் கொல்லும்படியான சத்ரு என்று ஆகியது; அவன் இந்திரனால் கொல்லப்பட்டான்.

இன்னும் ஒரு சம்பவம்.

தேவர்களை இல்லாமல் செய்வதற்காக பிரம்மனை நோக்கி கும்பகர்ணன் ஒரு பெரும் யாகம் செய்தான். பிரம்மா தரிசனம் தந்தார். அவரிடம் அவன் கேட்க நினைத்தது நிர்தேவத்வம் – அதாவது தேவர்கள் இல்லாத நிலை. ஆனால் அவன் கேட்டதோ நித்ராவத்வம். எப்போதும் தூங்குவது என்பதை! பிரம்மா அவன் கேட்டதைத் தந்தார்.பின்னர் அவன் வேண்டுதலின் பேரில் எப்போதும் தூங்காமல் ஆறு மாத தூக்கம், ஆறு மாத விழிப்பு என்ற நிலையைப் பெற்றான்.

ஆகவே சொல்லுக்கு சொல் தனித் தனியே பொருள் உண்டு.

ஓம் என்ற பிரணவ மந்திரத்தை 170 விதமாக உச்சரிக்க முடியும் என்று மந்திர சாஸ்திரங்கள் கூறுகின்றன. அன்னிபெஸண்ட் அம்மையாரோ இந்த பிரணவ மந்திரத்தை 250 விதமாக உச்சரிக்க முடியும் என்று கூறுகிறார். ஒவ்வொரு உச்சரிப்பிற்கும் பலன் வெவ்வேறாக இருக்கும். அதாவது அடையக் கூடிய சித்திகள் வேறு வேறாக இருக்கும்.

மந்திரத்தில் பிரதானமாக இருப்பது ஒலி. ஒலிக்குச் சக்தி உண்டு என்பதை க்ளாட்னி என்ற விஞ்ஞானி நிரூபித்திருக்கிறார்.

ஒரு தகட்டின் மீது நுண்ணிய  மணலைப் பரப்பி அதன் ஓரத்தில் வில் ஒன்றை இணைத்து வில்லை அதிரச் செய்வதன் மூலம் மணல் துகள்கள் அசைந்து அதிர்விற்கு ஏற்பப் பல்வேறு வடிவங்கள் உருவாவதை அவர் நிரூபித்துக் காட்டினார். இந்த வடிவங்களுக்கு க்ளாட்னி சித்திரங்கள் என்று பெயர். Chladni Patterns என்று  youtubeஇல் பதிவிட்டால் இவற்றை நீங்கள் பார்க்க முடியும்.

சரி அப்படியானால் மந்திரங்களை உச்சரிக்கவே முடியாதோ என்று யாரும் பயப்படத் தேவை இல்லை. இறைவன் திருமுன்னர் மனமும் நம் உணர்ச்சியுமே முக்கியம். எளிய உச்சரிப்பை யார் வேண்டுமானாலும் சுலபமாகச் சொல்ல முடியும். ராம, நமசிவாய, நாராயணா, ஹரே கிருஷ்ணா போன்றவற்றை யார் வேண்டுமானாலும் உச்சரிக்க முடியும்.

 மந்திரத்தை ஒருமுனைப்பட்ட மனதுடனும் ஈடுபாட்டுடனும், பக்தியுடனும் சொல்ல வேண்டும் என்று பெரியோர் சொல்கின்றனர்.

மந்திர ஹீனம் கிரியா ஹீனம் என்று ஆரம்பிக்கும் ஸ்லோகம் ஒன்றை பூஜை முடிவில் சொல்வது மரபு.

 அதாவது மந்திரத்தைத் தவறாக உச்சரித்தல், அல்லது பூஜை கிரியைகளில் சிலவற்றை விட்டு விட்டிருப்பது ஆகியவற்றை மன்னித்து எனது பிரார்த்தனையை ஏற்று அருள்க என ஒவ்வொரு பூஜையும் முடிவிலும் நாம் சொல்வது பாரம்பரிய மரபாகும்.

ஆகவே குரு மூலமாக மந்திரத்தை உச்சரிப்புடன் கற்று மனதை ஈடுபடுத்தி ஓதுவதால் நல்ல பலன் ஏற்படும் என்பது உறுதி. அதே சமயம், இறைவனது நாமங்களை யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் சொல்லலாம். அவையும் நலம் தரும் மந்திரங்களே என்று கூறி வாய்ப்பளித்த ஞானமயம் குழுவினருக்கும் கேட்டுக் கொண்டிருக்கும் உங்களுக்கும் நன்றி கூறி விடை பெறுகிறேன்.

நன்றி,வணக்கம்!

tags – மந்திரம், சக்தி, உச்சரிப்பு

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: