
Post No. 8801
Date uploaded in London – – –12 OCTOBER 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
ஒவ்வொரு திங்கள்கிழமை தோறும் லண்டனிலிருந்து ஞானமயம் நிகழ்ச்சி லண்டன் நேரம் பிற்பகல் இரண்டு மணிக்கும் இந்திய நேரம் மாலை 6.30 மணிக்கும் ஒளிபரப்பாகிறது. கேள்வி- பதில் நிகழ்ச்சியும் இதில் ஒரு பகுதி.
28-9-2020 அன்று ஒளிபரப்பான கேள்வி பதில் நிகழ்ச்சியில் கண் திருஷ்டி – கண்ணூறு என்றும் அருணகிரி நாதர் மற்றும் வள்ளலார் பாடல்களில் கூறப்பட்ட திருஷ்டி குறித்தும் அதைத் தவிர்க்க என்ன செய்வது? என்பது குறித்தும் அடுத்த திங்களில் விளக்கம் தாருங்களேன். என்று வந்த மடலுக்கு
அளித்த பதிலை இங்கு காணலாம்.
கேள்வியை அனுப்ப விரும்பும் அன்பர்கள் facebook.com/gnanamayam -க்கு அனுப்பலாம்.
கண் திருஷ்டியைத் தவிர்க்க என்ன செய்வது? – 1
ச.நாகராஜன்

அருணகிரிநாதர், வள்ளலார் போன்ற மகான்கள் கண் திருஷ்டி பற்றிப் பாடி இருக்கிறார்களே! கண் திருஷ்டி என்பது உண்மையா அல்லது மூட நம்பிக்கையா? திருஷ்டி சுற்றிப் போடுவதை அறிவியல் ஆமோதிக்கிறதா?
QUESTION ASKED BY HEALTHCARE RAJA
கேள்வி நம்மைச் சிந்திக்க வைக்கும் அருமையான கேள்வி! பதிலை விரிவாகப் பார்ப்போம்.
உலகில் கண் திருஷ்டிக்குப் பயப்படாதவர்கள் இல்லை.
நாடகம் முடிந்தாலும் சரி, பெரிய விழா முடிந்தாலும் சரி திருஷ்டி கழிப்பது வழக்கமாகி விட்டது.உடனடியாக திருஷ்டி கழித்துப் போட்டு விட்டுத் தான் மறு வேலை பார்ப்பார்கள்.
திருஷ்டியைப் பற்றி தமிழர் தம் பழக்கங்களைத் தெரிந்து கொள்வோம்.
கண்ணுக்கு அழகூட்டுவதற்காக மட்டும் தமிழ் மங்கையர் மையைத் தீட்டிக் கொள்ளவில்லை. தன்னைத் தீய பார்வையிலிருந்து காத்துக் கொள்வதற்காகவும் மையைத் தீட்டிக் கொள்கின்றனர். குழந்தைகளுக்கு மை தீட்டும் தாய்மார் மறந்து விடாமல் அதே மையினாலேயே குழந்தையின் கன்னத்தில் ஒரு திருஷ்டிப் பொட்டை வைக்க மறக்கமாட்டார்கள்.
சில பொல்லாத கண்களிலிருந்து தம் குழந்தைகளைப் பாதுகாப்பதற்காகத் தான் இந்த திருஷ்டிப் பொட்டு.
மணமக்கள் வீட்டிற்குள் நுழைவதற்கு முன்னர் அவர்களை வாசலிலேயே நிறுத்தி வைத்து வீட்டில் அவர்களுக்கு மிகவும் வேண்டியவர்கள், வயதானவர்கள் கற்பூரத்தை ஏற்றி அவர்களைச் சுற்றி திருஷ்டி கழிப்பது பழக்கம்.
தொன்று தொட்டு இருந்து வரும் இந்த தமிழர்களின் பழக்கம் பல இலக்கியங்களில் சுட்டிக் காட்டப்படுகிறது.
அருட்பிரகாச வள்ளலாரின் திருஅருட்பாவில் ஆறாம் திருமுறையில் நான்காயிரத்து இருநூற்றி இருபத்தைந்தாம் பாடல் இந்த கற்பூரம் ஏற்றி திருஷ்டி கழிக்கும் பழக்கத்தைச் சுட்டிக் காட்டுகிறது.
“கற்பூரம் கொணர்ந்துவம்மின் என் கணவர் வந்தால்
கண்ணெச்சில் கழிக்க என்றேன்”
என்ற வரிகள் கற்பூரத்தைப் பயன்படுத்துவதைச் சுட்டிக் காட்டுவதைப் பார்க்கிறோம்.
‘என் கணவராகிய சிவபிரான் என்னிடம் வந்தருளுவாராயின் அவருக்குக் கண்ணேறு (கண் திருஷ்டி) கழிக்கும் பொருட்டுக் கற்பூரம் கொண்டு வந்து வைப்பீராக என என் செவிலியரிடம் சொன்னேன்’ என்பதே இதன் பொருள்.

பழம் பெரும் இலக்கியமான மதுரைக் காஞ்சியில் ‘கழுநீர் கொண்ட எழுநாள் அந்தி’ என்ற வரியைக் காண்கிறோம். அதாவது ஊரிலே திருவிழாக் காலத்தில் ஏழாம் நாள் விழா அன்று மாலையில் நிகழ்ச்சி நிறைவு பெறும். அப்போது ஆரத்தி எடுத்து அந்த நீரைக் கீழே கொட்டுவார்கள். இது தான் கழுநீர். அப்போது பெண்கள் குலவை இடுவர். ஆண்கள் ஆரவார ஒலி எழுப்புவர். அப்படிப்பட்ட கோலாகல ஒலி கொண்டது மதுரை என்பது இந்த வரியின் பொருள். கண் திருஷ்டி போகத் தமிழர் வாழ்க்கையில் கொண்ட சடங்கு இது; சங்க காலம் முதலே இப்படி திருஷ்டி கழிப்பது இருந்து வந்திருக்கிறது.
அருணகிரிநாதரோ சென்னையில் ஆவடிக்கு அருகே உள்ள தலமான வடதிருமுல்லை வாயிலில் மின்னிடை கலாபம் என்று தொடங்கும் பாடலில் அன்பொடு பதஞான
கண்ணியிலு ளாக சுந்தர
பொன்னியல் பதாரமுங் கொடு
கண்ணுறு வராமல் இன்பமொடு எனை ஆள்வாய் என்று வேண்டுகிறார்.
அதாவது அன்புடன் ஞான பதமான வலையினுள் அகப்படும்படி அழகிய பொலிவு நிறைந்த தாமரைத் திருவடிகளைக் கொடுத்து, கண் திருஷ்டி வராத படி இனிமையுடன் என்னை ஆண்டருள்வாயாக என்று வேண்டுகிறார்!
உமாபதி சிவாச்சாரியார் நெஞ்டு விடு தூதில் ‘கண்ணூறு தேனமுதம் காட்டினான்’ என்கிறார். இப்படி கண் திருஷ்டி பற்றி ஏராளமான பாக்கள் தமிழில் உள்ளன.
சில பேருடைய பார்வை பட்டாலேயே போதும் திருஷ்டிக்கு உள்ளானவர் பல விதத்திலும் பாதிக்கப்படுவர், ஏன், சில சமயம் உயிருக்கே ஆபத்து ஏற்படுவதுண்டு!
பார்த்த பார்வையில் புதுச் சட்டை கிழியும்; பால் புளித்துப் போகும், பார்த்த பார்வையில் பல நாட்களுக்குச் சாப்பிடவே பிடிக்காது. வாந்தி எடுக்கும் – இப்படி கெட்ட திருஷ்டியின் “கெட்ட மஹிமையை”ச் சொல்லிக் கொண்டே போகலாம்.
தி ஈவில் ஐ – எ கேஸ் புக் என்று ஆலன் டுண்டஸ் (The Evil Eye : A casebook – Alan Dundes) இது பற்றிப் பெரிய ஆராய்ச்சி நூலையே எழுதியுள்ளார்.
திருஷ்டி பற்றிக் கவலைப்படாத நாகரிகமே இல்லை; நாடே இல்லை; மக்களே இல்லை!
ஒவ்வொரு நாட்டிலும் இதற்குத் தனிப் பெயர் உண்டு.
சுவாரசியமான அந்தப் பெயர் பட்டியலை அப்படியே சொல்கிறேன்.
ஜெர்மனியில் இதற்குப் பெயர் போஸ் ப்ளிக் (Bose Blick)
ஹாலந்தில் இதற்குப் பெயர் பூஸ் ப்ளிக (boose Blick)
போலந்தில் இதற்குப் பெயர் டே ஒகோ (Zte Oko)
இத்தாலியில் இதற்குப் பெயர் மால் ஓச்சியோ (Mal Occhio)
சார்டினாவில் இதற்குப் பெயர் ஒகு மாலு (Ogu Malu)
கோர்ஸிகாவில் இதற்குப் பெயர் இன்னோச்சியாடுரா (Innochiatura)
ஸ்பெயினில் இதற்குப் பெயர் மால் டி ஓஜோ (Mal De Ojo)
பிரான்ஸில் இதற்குப் பெயர் மௌவாயிஸ் செய்ல் (Mauvais Ceil)
நார்வேயில் இதற்குப் பெயர் ஸ்கோயர் டுஞ்ஜ் (Skjoertunge)
டென்மார்க்கில் இதற்குப் பெயர் ஆண்ட் ஓஜே (Ondt Oje)
இங்கிலாந்தில் இதற்குப் பெயர் ஈவில் ஐ (Evil Eye)
அயர்லாந்திலும் ஸ்காட்லாந்திலும் இதற்குப் பெயர் இல் ஐ (Ill Eye)
சிரியாவில் இன்று வரை இதற்குப் பெயர் அயினா பிஷா (Aina Bisha)
பெர்சியாவில் இதற்குப் பெயர் ஆகாஷா (aghasha)
ஆர்மீனியாவில் இதற்குப் பெயர் படேரெக் (Paterrak)
இந்தியாவில் இதற்குப் பெயர் கோர சக்ஷு (Goram cakshu); அதாவது கண் திருஷ்டி!

இப்படி உலகில் எந்த நாட்டை எடுத்துக் கொண்டாலும் கெட்ட திருஷ்டிக்குத் தனிப் பெயர் உண்டு. கண் திருஷ்டியின் தீய பலன் பற்றி அவ்வளவு நம்பிக்கை.
பைபிளில் ப்ராவெர்ப் 23:6-இல் கெட்ட திருஷ்டி உடையவனிடம் ரொட்டியை வாங்கிச் சாப்பிடாதே; அவனது திருஷ்டி பட்ட உணவையும் விரும்பாதே என்று சொல்லப்பட்டிருக்கிறது.
குரானிலும் ஷேக்ஸ்பியர் நாடகங்களிலும் கண் திருஷ்டி சொல்லப்படுகிறது.
ஹிந்துக்கள் குடும்ப உறுப்பினர்கள் சாப்பிடுவதை வெளியார் யாரும் பார்ப்பதை விரும்புவதில்லை!
அபாயகரமான தொழில்களான சுரங்கப் பணி, கடலில் மீன் பிடிக்கச் செல்லுதல் போன்றவற்றில் ஈடுபடுவோர் திருஷ்டி பற்றி நன்கு கவனிப்பர்.குறிப்பாகப் பெண்மணிகள் தங்கள் வீட்டு ஆண்கள் வெளியே செல்லும் போதோ அல்லது ஒரு காரியத்தை நன்கு முடித்து விட்டு வந்தாலோ திருஷ்டி பற்றிக் கவனிப்பர். திருஷ்டி சுற்றிப் போடுவர்.
இந்தியாவில் அனைத்து மாநில மக்களும் கண் திருஷ்டியைக் கழிக்க நவரத்தினங்களை அணிவதைப் பழக்கமாகக் கொண்டுள்ளனர்.
திருஷ்டியிலிருந்து எப்படித் தப்புவது? முதல் வழி அப்படிப்பட்ட ஆள்களைப் பார்க்கவே பார்க்காதே என்பது தான். அடுத்த வழி சில தாயத்துகளை அணிவது தான்.
அரைஞாண் கயிற்றில் ஆரம்பித்து மணிக்கட்டு, புஜத்தின் மேல் பகுதியில் கயிறு கட்டுதல், கழுத்தில் ஒரு கயிற்றில் தாயத்தை அணிவது என்று பல ரகங்களில் திருஷ்டியிலிருந்து தன்னைப் பாதுகாக்க ஒவ்வொருவரும் முயல்கின்றனர்.
நமது ஊரில் மிளகாயைப் மரக்கால் படியில் வைத்து திருஷ்டி சுற்றிப் போடுவர். கடல் உப்பை (கல் உப்பு; உப்புப் பொடி அல்ல) வைத்து திருஷ்டி கழிப்பது அன்றாடப் பழக்கம். பூசணிக்காய் பற்றிச் சொல்லவே வேண்டாம். அமாவாசை அன்று சாலை எங்கும் உடைத்த பூசணிக்காய் மயமாக இருக்கும்.

உலகில் தன்னை திருஷ்டியிலிருந்து பாதுகாத்துக் கொள்ளாத பிரபலங்களே இல்லை. பேஷன் மாடலான கிம் கர்டாஷியான் (Kim Kardashian) கெட்ட திருஷ்டியைப் போக்கும் ப்ரேஸ்லெட், தலையணி போன்றவற்றை அணிந்து போஸ் கொடுப்பது வழக்கம். ஜிஜி ஹடிட் GIGI HADIT – 2017இல் ‘ஐ லவ்’– ஷீ (Eye love shoe)-ஐ திருஷ்டியிலிருந்து காத்துக் கொள்வதற்காக அறிமுகப்படுத்தினார். அதன் விலை 35000 ரூபாய் தான்!
பிரபலங்கள் இதற்காகவே அறிமுகப் படுத்தும் கண் அணிகள், நெக்லேஸ், கீ-செய்ன் ஆகியவை சந்தையில் விற்பனையில் சக்கைப்போடு போடுகின்றன. *
tags- கண் திருஷ்டி, part 1
தொடரும்