
Post No. 8802
Date uploaded in London – –12 OCTOBER 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
அவதானம் என்றால் செயற்கரிய செயல் புரிவது என்று பொருள். தமிழ் நாட்டிலும் ஆந்திர தேசத்திலும் அஷ்டாவதானி, தசாவதானி, சதாவதானி என்ற அடைமொழிகளுடன் பலர் வாழ்ந்ததையும் அவர்கள் ஒரே நேரத்தில் 8 அல்லது, 10 அல்லது, பத்துக்கு மேற்பட்ட செயல்களை செய்ய வல்லவர்கள் என்றும் நாம் அறிவோம்.
புத்த மத நூல்களில் ஒன்று திவ்யாவதானம் . இது கி.பி நாலாம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இதில் புஷ்ய மித்ர சுங்கன் மற்றும் ரோமானிய தினாரா நாணயம் பற்றி வருவதால் காலத்தை ஓரளவு கணிக்க முடிகிறது
இதிலுள்ள சார்த்தூல கர்ணாவதானம் என்னும் பகுதி சீன மொழியில் கி.பி 265ல் மொழிபெயர்க்கப்பட்டது . அதில் வரும் ஒரு சுவையான கதை–
புத்தரின் பிரதம சீடன் ஆனந்தன் . அவன் மிக மிக வலியுறுத்தியதன் பேரில்தான் பெண்களை புத்த மத பிக்குணிகளாக புத்தர் அனுமதித்தார். அதுவும் என் மதம் நான் நினைத்த காலத்தை வீட சீக்கிரமே மறைந்துவிடும் என்று சொல்லி வருத்தத்துடன் அனுமதித்தார். நிற்க.
கௌதம புத்தர் சிராவஸ்தி நகரில் தங்கி இருந்தார். ஒருநாள் புத்தரின் முக்கிய சிஷ்யனான ஆனந்தன், பிக்ஷையின் பொருட்டு நகர தெருக்களுக்குச் சென்றுவிட்டு திரும்பி வந்து கொண்டிருந்தான் . அப்போது ஒரு சண்டாள ஜாதி பெண்மணி கிணற்றில் தண்ணீர் இறைத்து, வந்து கொண்டிருந்தாள். அவள் பெயர் பிரகிருதி. அவளிடம் கொஞ்சம தண்ணீர் தருமாறு ஆனந்தன் கேட்க, அவள் தன ஜாதியைக் காட்டி தண்ணீர் தருவதற்கு மறுத்தாள்.
ஆனந்தன் சொன்னான்- நான் உன் குலம், கோத்திரம் பற்றிக் கேட்கவில்லை சகோதரியே; தண்ணீர் தானே கேட்டேன் என்றான். அவளும் தண்ணீர் கொடுத்தாள் . ஆனந்தனுக்குத் தண்ணீர் தாகம் போயிற்று. சண்டாளப் பெண்மணிக்கோ காதல் தாகம் பிறந்தது. உடனே தாயாரிடம் திரும்பி வந்து ஆனந்தனை, தான் மணம் புரியமுடியாவிட்டால் தற்கொலை செய்துகொள்வேன் என்றாள் .
அவளுடைய தாய் ஒரு பெரிய மந்திரவாதி. அவள் ஒரு வசிய மந்திரத்தை எழுதி உருவேற்றி ஆனந்தனை , பிரகிருதியின் படுக்கையில் வந்து அமரும்படி செய்தாள். ஆனந்தன் கண்களிலிருந்து திடீரென கண்ணீர் வழிந்தோடியது. அவன் புத்தரை தியானம் செய்யவே புத்தர் தோன்றி சூனியக்காரியின் வசிய மந்திரத்தை முறியடிக்கிறார். ஆனந்தன் பத்திரமாக புத்த மடத்துக்குத் திரும்பி வந்தபோதும் பிரகிருதியின் காதல் தீரவில்லை. அவள் ஆனந்தன் செல்லுமிடமெல்லாம் அவனைச் சுற்றிச் சுற்றி வந்தாள் . ஆனந்தன் புத்தர் உதவியை நாடினான்.
புத்தர் , பிரகிருதியின் காதல் தாகத்தைத் தனிப்பதாக அழைத்து ,தர்ம உபதேசம் செய்தார். ‘அடிக்க அடிக்க அம்மியும் நகருமன்றோ’; அவளும் மனம் மாறினாள் ; பிக்குணி / சன்யாசினி ஆனாள் .

இப்படி சண்டாளப் பெண்ணை சன்யாசினியாக மாற்றி மடத்தில் உட்கார வைத்தவுடன், அந்தணர் முதலிய ஜாதியினர் மன்னன் பிரசேனஜித்திடம் முறையிட்டனர். அவரும் மக்களின் மகஜரை- மனுவை — புத்தரிடம் கொண்டு சென்றார். பெரும் கூட்டமும் மன்னருடன் சென்றது. உடனே புத்தர் கதைத்தார்:—
“முன்னொரு காலத்தில் திரிசங்கு என்ற சண்டாள அரசன் இருந்தான். அவனுக்கு சார்த்தூல கர்ணன் என்ற மகன் இருந்தான். அவன் கல்வி கேள்விகளில் சிறந்தவன். அந்த ஊர் அந்தணரான புஸ்கராச்சாரி என்பவரின் மகளைத் திருமணம் செய்ய விரும்பினான். அந்தணரோ மறுத்தார். இருவருக்கும் இடையே வாக்குவாதம் நடந்தது. ஜாதி, குலம், கோத்திர வேறுபாடுகளை திரிசங்கு கண்டித்து , பிறக்கும்போது ஏது ஜாதி என்று வினவுகிறான். அவனுடைய அபார அறிவினை மெச்சி , கல்யாணத்துக்கு அனுமதி தருகிறார் அந்தணர்.
இதைச் சொன்ன புத்தர் அந்த அந்தணரின் மகளே இந்த ஜென்மத்தில் பிரகிருதி என்னும் சண்டாளியாகவும், புஸ்கரசாரி ஆனந்தராகவும் , சண்டாள அரசன் திரிசங்கு புத்தராகவும் வந்து பிறந்ததாகச் சொல்லி முடிக்கிரறார் .
எல்லோரும் கலைந்து சென்றனர்
புத்தர் காலத்தில் ஜாதி, குலம் , கோத்திரம் பெரும் பிர ச்சினையாக விவாதிக்கப்பட்டது . அவருக்கு 2600 ஆண்டுகளுக்குப் பின்னரும் டெலிவிஷனும் பத்திரிக்கைகளும் எதிர்க்கட்சிகளும் ‘தலித்’ பிரச்ச்சினையைப் பெரிதாக்குவது இந்தியா மாறவில்லை என்பதைக் காட்டுகிறது.
tags-காதலி, பிக்குணி, புத்தர்
–SUBHAM–