கண் திருஷ்டியைத் தவிர்க்க என்ன செய்வது? – 2(Post No.8804)

WRITTEN BY S NAGARAJAN                                    

Post No. 8804

Date uploaded in London – – –13 OCTOBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

கண் திருஷ்டியைத் தவிர்க்க என்ன செய்வது? – 2

 ச.நாகராஜன்

கிரேக்க நாகரிக இலக்கியத்தில் பொறாமையுடன் பார்க்கப்படும் பார்வை பொல்லாத பார்வை என்று குறிப்பிடப்படுகிறது. ‘பூரி நஜர்’ (தீய பார்வை) என்றும் இது பொதுவாக எங்கும் இது சொல்லப்படுகிறது.

திருஷ்டியை அறிவியல் ரீதியில் விளக்கம் கொடுக்க முன்வந்த முதல் அறிஞர் கிரேக்க நாட்டு அறிஞரான ப்ளூடார்க் (Plutarch) தான்! மனிதனின் கண்களிலிருந்து வெளிவரும் ஆற்றல் சில சமயங்களில் மிருகங்களை அல்லது குழந்தைகளைக் கூடக் கொல்லும் ஆற்றல் படைத்தது என்று அவரது சிம்போஸியாக்ஸில் (Symposiacs) அவர் விளக்குகிறார். அவர் மேலும் இது பற்றி விளக்குகையில், “சிலருக்கு இன்னும் அதீதமான ஆற்றல் கண் பார்வையில் இருக்கிறது. அவர்கள் பார்வையினாலேயே சாபம் இட வல்லவர்கள்’ என்கிறார்!

இதே போல கி.பி.மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஹெலியோடோரஸ் (Heliodorus), “ அருமையான ஒன்றை பொறாமை கொண்ட கண்ணுடன் ஒருவன் பார்த்தானானால் சுற்றி இருக்கும் சூழ்நிலையையே அவன் மாற்றுகிறான்; உயிரைப் போக்கும் அளவு மோசமான சூழ்நிலையை உருவாக்குகிறான், அத்துடன் தனது விஷத்தைக் கண் மூலம் தனக்கு அருகில் இருக்கும் அனைத்தின் மீதும் பாய்ச்சுகிறான்” என்கிறார்.

ப்யூர்டோ ரிகோசில் பிறந்த குழந்தைகளுக்கு அஜாபச்சே (Azabache) என்ற அதிர்ஷ்டத்திற்கான தாயத்து தரப்படுகிறது.

துருக்கியில் வாழ்ந்த பழங்குடியினர் தங்களது சுவர்க்க தேவதையான் தெங்ரி நீல நிறத்துடன் இருப்பதால இளநீல வண்ணத்தை கொண்ட தாயத்துகளையும் கோபால்ட், தாமிரம் ஆகியவற்றையும் பயன்படுத்தினர். இன்றும் துருக்கியில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு கண் திருஷ்டி டோக்கன் வழங்கப்படுவது வழக்கம்!

இத்தாலியில் திருஷ்டிக்குப் பெயரான மால் ஓச்சியோ (Mal Occhio) என்பதையே தலைப்பாகக் கொண்டு  அகடா டே சாண்டிஸ் என்பவர் ஒரு டாகுமெண்டரி திரைப்படத்தை எடுத்தார். அதில் திருஷ்டியினால் தலைவலி, வயிற்றுவலி போன்றவை வந்து அவஸ்தைப் படுவோர் அதைப் போக்க செய்ய வேண்டிய சடங்கை விளக்குகிறார். பல அறிஞர்களைச் சந்தித்து கண் திருஷ்டி பற்றிய அவர்களது கருத்தையும் கேட்டு திரைப்படத்தில் அதை அவர் தந்துள்ளார். முடிவான கருத்து என்னவென்றால் இதை மூட நம்பிக்கை என்று ஒதுக்கி விட முடியாது என்பது தான்!

கி.பி. முதல் ஆறு நூற்றாண்டுகளில் வாழ்ந்த அராபியர்கள் கல், மரம் உள்ளிட்டவற்றால் செய்த தாயத்துகளை பாதுகாப்பிற்காக அணிந்தனர்.

பழைய கால ஹீ ப்ரு, எகிப்திய நாகரிகத்தைச் சேர்ந்த மக்களும் அந்தக் காலத்தில் தாயத்துகளை அணிந்தனர். ஆனால் இன்றைய நவ நாகரீக காலத்திலோ அவர்கள் ஒரு சிறிய பேப்பரில் பிரார்த்தனை மந்திரம் ஒன்றை எழுதி வைத்துக் கொள்கின்றனர். இது குர் ஆன் வசனமாக இருக்கும். இதை ஒரு வயதான ஆன்மீகப் பெரியார், தான் தேர்ந்தெடுத்த பொருள் ஒன்றில், கறுப்பு மையால் எழுதித் தருவார்.

இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் தேச மை பேப்பரில் நன்கு ஆழமாகப் பதிவதால் அந்த மைக்கு மவுசு அதிகம்.

இப்படிப் பட்ட தாயத்துக்களை இடது கையிலோ அல்லது கழுத்திலோ அணிவது பாரம்பரிய பழக்கம்.

வரலாற்றை அலசிப் பார்த்தால் பல பிரபலங்கள் தீய திருஷ்டிப் பார்வையைக் கொண்டவர்களாக இருப்பது தெரியவரும்.

இந்தப் பட்டியலில் ஆங்கிலக் கவிஞர் பைரன், போப் ஒன்பதாம் பயஸ், போப் பதிமூன்றாம் லியோ, இரண்டாம் கெய்ஸர் வில்லியம், மூன்றாம் நெப்போலியன் உள்ளிட்ட பலர் இடம் பெறுகின்றனர்.

போப் ஒன்பதாம் பயஸ் கையில் குழந்தையை வைத்துக் கொண்டிருந்த ஒரு நர்ஸை ஜன்னல் வழியே பார்த்தார். சில விநாடிகளிலேயே அந்தக் குழந்தை இறந்து விட்டது. இது அனைவருக்கும் பரவியது. இதன் பின்னர் அவர் செய்யும் ஒவ்வொரு ஆசீர்வாதமும் கெட்ட விளைவுடனேயே முடிந்தது. அவர் 1878ஆம் ஆண்டு மறைந்தார். 

இதே போல போல் போப் பதிமூன்றாம் லியோ பார்வையும் மற்றவர்களுக்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்துமாம். அவர் போப்பாக இருந்த காலத்தில் ஏராளமான கார்டினல்கள் இறந்து விட்டதால் அவரைக் கண்டாலேயே அனைவருக்கும் பயமாம் – தனக்கும் சாவு வந்து சேருமோ என்று தான் பயம்! முத்தாய்ப்பாக அறிவியல் என்ன சொல்கிறது என்பதைப் பார்ப்போம். அது கண் திருஷ்டியின் மீது நம்பிக்கை கொண்டவர்களுக்கு ஆனந்தம் தரும் செய்தியாக அமைகிறது.

 உலகம் கண்ட மிகப் பெரும் விஞ்ஞானிகளுள் ஒருவரான ராபர்ட் ஓப்பன்ஹீமர் அணுகுண்டைக் கண்டு பிடித்தவர். அதனால் அணுகுண்டின் தந்தை என்று அவர் போற்றப்படுகிறார். அணுகுண்டு வெடிப்பதை நேரில் பார்த்து மலைத்தவர் அவர்.

ஹிந்து மதத் தத்துவத்தின் பால் ஆழ்ந்த மதிப்புக் கொண்ட அவர் அணுகுண்டு வெடிப்பைப் பற்றி கீதையின் 11வது அத்தியாயத்தில் வரும் 12வது சுலோகத்தை எடுத்துக்காட்டாகக் கூறினார்.

 “திவி சூர்ய சஹஸ்ரஸ்ய” என்பதைக் கூறிய அவர், ஆயிரம் சூரியன் ஒரே சமயத்தில் உதித்தால் எப்படி இருக்குமோ அதே போல அணுகுண்டி வெடிப்பு இருந்தது என்றார்.

 ஓப்பன்ஹீமர் ஹிந்து பழக்க வழக்கங்களை நன்கு ஆராய்ந்து அவற்றின் பால் பற்றுக் கொண்டவர்.

அவரது வாழ்க்கை வரலாற்றை ஆப்ரஹாம் பயஸ் என்பவர் ஜே.ராபர்ட் ஓப்பன்ஹீமர் என்ற புத்தகத்தில் விவரிக்கிறார்.

 அதில் வரும் ஒரு செய்தி கண் திருஷ்டியைப் பற்றியது.

ராபர்ட் ஓப்பன்ஹீமர் ஹிந்துக்களின் திருஷ்டி கழிக்கும் பழக்கத்தைப் பற்றி ஆராய்ந்தார்.

அதன் முடிவில் பிரமிக்க வைக்கும் ஒரு உண்மையைக் கண்டுபிடித்தார்.

“ஹிந்துக்கள் உப்பை (கடல் உப்பு அல்லது கல் உப்பு, உப்புப் பொடி அல்ல) ஒரு சிறு பாத்திரத்தில் (பழைய கால ஆழாக்கு அல்லது படி) போட்டு இடது புறமும் வலது புறமும் தலையைச் சுற்றி திருஷ்டியைக் கழிக்கின்றனர்.

அப்போது லட்சக்கணக்கான நெகடிவ் ஐயான்கள் (Negaive Ions) அவர்கள் உடம்பை விட்டு வெளியேற்றப்படுகின்றன.” என்கிறார் அவர்.

லட்சக் கணக்கான நெகடிவ் ஐயான்கள் என்ற சொற்றொடர் குறிப்பிடத் தகுந்தது.

ஆக இப்படி உலகின் ஆகப் பெரும் விஞ்ஞானியே ஹிந்துக்களின் திருஷ்டி கழிப்பை அறிவியல் ரீதியாக ஆமோதித்துப் புகழ்கிறார்.

  எப்படி இப்படி திருஷ்டியைக் கழிக்கும் ஒரு அரிய பழக்கத்தை ஹிந்துக்களின் முனிவர்கள் கண்டுபிடித்தனர்? இது வியப்புக்குரிய ஒரு விஷயம்!

ஆகவே கண் திருஷ்டி என்பது உண்மை தான்; அதைத் தவிர்க்க ஹிந்துக்கள் பாரம்பரியமாக மேற்கொள்ளும் கல் உப்பைச் சுற்றிப் போடுதல், கர்பூர ஆரத்தி எடுத்தல் உள்ளிட்ட பாரம்பரியப் பழக்கங்கள் பொருள் பொதிந்தவையே என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.

திருஷ்டியைப் பற்றி இவ்வளவு விவரங்களை அறிந்து  கொண்ட நீங்கள் இந்த ஞானமயம் நிகழ்ச்சி முடிந்த பின்னர் என்ன செய்யப் போகிறீர்கள் என்று எனக்கும் தெரியும் உங்களுக்கும் தெரியும்! இப்படி திருஷ்டியைப் பற்றி எல்லோரிடமும்  அறிவியல் ரீதியாக விளக்கினால், திருஷ்டி பற்றிய உங்கள் அறிவைக் கண்டு உங்கள் மீது திருஷ்டி பட்டு விட்டால்?! கல் உப்பை ஆழாக்கில் போட்டு வீட்டில் மூத்த பெண்மணியை வைத்து உங்கள் வீட்டு வழக்கப்படி திருஷ்டி சுற்றிப் போட்டுக் கொள்ள வேண்டியது தான்!

என்ன இருந்தாலும் கண் திருஷ்டி பொல்லாதது தானே! நன்றி, வணக்கம்!

                 *           முற்றும்

tags – கண் திருஷ்டி-2

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: