
WRITTEN BY BRHANNAYAKI SATHYANARAYANAN
Post No. 8809-C
Date uploaded in London – –14 OCTOBER 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
12-10-2020 திங்கள் கிழமையன்று லண்டன் நேரப்படி மதியம் 2 மணிக்கும் இந்திய நேரப்படை மாலை 6.30 மணிக்கும் பங்களூர் செய்தி மடல் ஒளிபரப்பானது. ஒவ்வொரு திங்களன்றும் நடைபெறும் இந்த நிகழ்ச்சிக்கு அனைவரையும் அழைக்கிறோம்.
12-10-2020 அன்று ஒலிபரப்பான செய்தி மடல் இதோ:
வணக்கம்.
ஞானமயம் வழங்கும் பங்களூர் செய்தி மடல்.
வழங்குவது பிரஹன்நாயகி சத்ய நாராயணன்.

தலைப்புச் செய்திகள்
பங்களூரில் உள்ள இஸ்கான் ஆலயம் அக்டோபர் 5ஆம் தேதி முதல் திறக்கப்பட்டுள்ளது.
கர்நாடகத்தில் அனைத்து ஆலயங்களும் படிப்படியாக திறக்கப்பட்டு வருகின்றன
புகழ்பெற்ற புண்ய ஸ்தலமான உடுப்பி பற்றி ஒரு சிறு அறிமுகம்
இனி, விரிவான செய்திகள் :-
சுமார் ஆறு மாத காலமாக மூடப்பட்டிருந்த இஸ்கான் ஆலயம் அக்டோபர் 5ஆம் தேதியிலிருந்து திறக்கப்பட்டுள்ளது.
கோவிட் 19 நோயினால் மூடப்பட்டிருந்த ஆலயமானது அரசின் வழிபாட்டுத் தலங்களுக்கான சமீபத்திய வழிகாட்டுதல் நெறிகளின் படி மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. வார நாட்களில் காலை 9.30 முதல் 12.30 மணி வரையிலும் மீண்டும் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி முடிய ஆலய தரிசனம் செய்யலாம்.சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் காலை 9.30 முதல் இரவு 8 மணி வரை கோவில் நடை திறந்திருக்கும்.
பக்தர்கள் கட்டாயமாக முக கவசம் அணிந்து வர வேண்டும் என்றும் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல் வேண்டும் என்றும் ஆலயச் செய்திக் குறிப்பு ஒன்று கூறுகிறது. அத்துடன் பத்து வயதிற்கு கீழ்ப்பட்டவர்களும் 65 வயதுக்கு மேற்பட்டவர்களும் கர்ப்பிணிகளும் தங்கள் பாதுகாப்பைக் கருதி ஆலயத்திற்கு வர வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.
வருகை புரிவோர் அனைவரும் தெர்மல் ஸ்கீரினிங் நடைமுறைக்கு உட்படுத்தப்படுவர் என்றும் ஆலயம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு அறிவிக்கிறது.
அடுத்து அரசின் சமீபத்திய வழிபாட்டுத் தலங்கள் குறித்த நெறிகாட்டுதலின் படி படிப்படியாக கர்நாடக மாநிலத்தில் அனைத்து ஆலயங்களும் திறக்கப்பட்டு வருகின்றன. இதையொட்டி வருகின்ற நவராத்திரி மற்றும் தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் பாரம்பரிய பழக்கத்தை விடாது கொண்டாடப்படும்.
என்ற போதிலும் கொரானா நோயின் தீவிரத் தாக்கம் குறித்து பக்தர்கள் எச்சரிக்கையுடன் இருத்தல் அவசியம். தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை அரசு அறிவித்தபடி மேற்கொள்ளுதல் வேண்டும்.
அடுத்து திவ்ய ஸ்தலமான உடுப்பி பற்றி ஒரு சிறு அறிமுகம்
உடுப்பி மாவட்டத்தில் அமைந்துள்ள கிருஷ்ணர் கோவில் த்வைதக் கொள்கையை நிறுவிய மத்வாசார்யரால் ஸ்தாபிக்கப்பட்ட ஒன்றாகும்.
விஸ்வகர்மாவால் செய்யப்பட்டு துவாரகையில் ருக்மிணி தேவியால் வழிபடப்பட்ட தெய்வச் சிலை துவாரகை கடலில் மூழ்கிய போது மூழ்கியது. பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் மத்வாசாரியர் அந்தச் சிலையைக் கண்டெடுத்து அதை உடுப்பியில் ஸ்தாபித்தார்.
அத்துடன் எட்டு மடங்களையும் அவர் நிறுவினார். கிருஷ்ண பகவானின் வழிபாட்டை ஒவ்வொரு மடமும் இரு மாதங்கள் மேற்கொள்ளும்.
ஒரு ஜன்னல் வழியே கிருஷ்ணரின் அற்புதமான தெய்வீகத் திருவுருவத்தைக் கண்டு வணங்கும் பக்தர்கள் ஆனந்தப் பரவசம் அடைகின்றனர். மேற்கு பார்த்திருக்கும் இந்த கிருஷ்ணரை தரிசிப்பது விசேஷமாகும்.
இந்த ஆலயத்தில் தினமும் அன்னதானம் நடைபெற்று வருவது குறிப்பிடத் தகுந்தது. கோவிலின் பூஜைக்கு தேவைப்படும் 4 டன் சந்தனத்தை அரசு வருடந்தோறும் வழங்கி வருகிறது. கோவிலின் அருகில் மத்வ புஷ்கரிணி என்னும் தீர்த்தம் உள்ளது.
உடுப்பி தலம் மிகப் பண்டைய கால புராண வரலாற்றைக் கொண்டதாகும்.
முன்னொரு காலத்தில் தட்சனின் சாபத்தால் சந்திரன் தன் ஒளியை இழந்தான்; அழகையும் இழந்தான். இதனால் வருந்திய சந்திரன் சிவபிரானை நோக்கிக் கடும் தவம் இருந்தான். சந்திரனின் தவத்தை மெச்சிய சிவபிரான் அவனுக்கு அருள் பாலித்தார்; சந்திரன் தன் ஒளியையும் அழகையும்ம் மீண்டும் பெற்றான். அப்போது சந்திரன் ஒரு குளத்தை நிர்மாணித்தான். அந்தத் திருக்குளமானது சந்திர புஷ்கரணி என்ற பெயரைப் பெற்றது.
உடுப்பி என்ற பெயர் உடு மற்றும் பா என்ற இரு சொற்களின் சேர்க்கையாகும்.
உடு என்றால் நட்சத்திரங்கள் எனப் பொருள் பா என்றால் அதிபதி என்று பொருள். நட்சத்திரங்களுக்கு அதிபதியான சந்திரன் தவம் புரிந்ததால் இது உடு பா என்ற பெயரைப் பெற்றது; காலப் போக்கில் பெயர் மருவி இப்போது உடுப்பி என அழைக்கப்படுகிறது.
உடுப்பி கிருஷ்ணர் கோவிலுக்கு அருகிலேயே சந்திர மௌலீஸ்வரர் கோவில் மற்றும் அனந்தேஸ்வரர் கோவில் அமைந்துள்ளன.
காலம் காலமாக மக்கள் பக்தியுடன் வணங்கி வரும் ஸ்ரீ கிருஷ்ணர் அனைவருக்கும் சர்வ மங்களத்தை தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம்.
இதுவரை நீங்கள் கேட்டது பங்களூர் செய்தி மடல்.
வழங்கியது ப்ரஹன் நாயகி சத்யநாராயணன். நன்றி.

TAGS – ஞானமயம், பங்களூர் செய்தி மடல், 12-10-20