வறுமையை விரட்ட உலக வறுமை ஒழிப்பு நாள்: அக்டோபர் 17! (8821)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No. 8821

Date uploaded in London – – 17 OCTOBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

கோகுலம் கதிர் அக்டோபர் 2020 இதழில் வெளி வந்துள்ள கட்டுரை!

வறுமையை உலகிலிருந்து விரட்ட உலக வறுமை ஒழிப்பு நாள்: அக்டோபர் 17!

ச.நாகராஜன்

நோய்களில் எல்லாம் கொடிய நோய்!

நோய்களில் எல்லாம் கொடிய நோய் எது? வறுமை.

வறுமைக் கோடு என்று சொல்லப்படுகிறதே அது என்ன? ஒரு நாளைக்கு ஒவ்வொரு மனிதனுக்கும் சுமார் 2450 கலோரி சக்தி தேவைப்படுகிறது.

இதைத் தரும் தானியங்கள், பருப்பு வகைகள், இதர உணவு வகைகளை வாங்குவதற்கான பண மதிப்பீடு செய்யப்படுகிறது. இந்தக் குறைந்த பட்ச பணமும் இல்லாத – வருவாய் இல்லாத மக்கள் வறுமைக்கோட்டிற்கும் கீழாக வாழும் மக்கள் எனச் சொல்லப்படுகின்றனர்.

உலகில் இன்று வாழும் சுமார் 780 கோடி மக்களில் இப்படி வறுமைக் கோட்டுக்கும் கீழே வாழ்வோர் 70 கோடி பேர்கள். ஆயிரம் குழந்தைகளுக்கு 39 குழந்தைகள் 5 வயதுக்கு முன்னாலேயே இறந்து விடுகின்றனர்.

உலகில் உள்ள நாடுகளில் மூன்றாவது வறுமை மிக்க நாடாக இந்தியா விளங்குகிறது. நைஜீரியா முதல் இடத்தையும் காங்கோ இரண்டாவது இடத்தையும் வகிக்கின்றன.

உள்நாட்டுப் போர்கள் அடிக்கடி நடப்பதால் பல ஆப்பிரிக்க நாட்டு மக்கள் அன்றாட வாழ்விற்கே அல்லல் படுகின்றனர்.

அமெரிக்கா, ஸ்விட்சர்லாந்து, சிங்கப்பூர், நார்வே, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகள் செல்வச் செழிப்புடன் வளம் மிக்க நாடுகளாக விளங்குகின்றன.

காங்கோ நாட்டில் ஒரே குடிசையில் வயதான முதியவர், அவர் மனைவி, அவர் பையன், மருமகள், பேரக் குழந்தைகள் இருவர் ஆக ஆறு பேர்கள் வாழ்கின்றனர்; குடிசையில் மின் விளக்கே கிடையாது. தரையோ மண் தரை.

காங்கோவில் காணப்படும் இதே நிலை ஊட்டி அருகில் உள்ள கிராமத்திலும் காணப்படுகிறது.

வேலையில்லாமல் தவிக்கும் இவர்கள் உணவுக்கென ஏங்குகின்றனர். வேலை செய்யத் தயாராக இருக்கும் இவர்கள் என்ன பாவம் செய்தார்கள்?

வள்ளுவரின் திகைப்பு

வறுமையைப் போல கொடுமையானது எது? வள்ளுவர் ஒரு கணம் யோசித்தார். அதை எதனுடன் ஒப்பிடுவது? வறுமையைக் கொடியது எது என்றால்… எது என்றால்… அவரது திகைப்பு அதிகமானது.

வறுமையின் இன்னாதது யாதெனின் இன்மையின்

இன்மையே இன்னாதது  (குறள் 1041)

வறுமையைப் போலக் கொடியது எது என்றால்.. எது என்றால்… வறுமையைப் போலக் கொடியது வறுமையே தான்!

ஆகவே தான் வள்ளுவர் (சிறிது கோபத்தோடு கூட)

இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து

கெடுக உலகியற்றியான் (குறள் 1062) என்றார்.

உலகில் சிலர் இரந்து உயிர் வாழ வேண்டியிருப்பின் அவர்களைப் படைத்தவன் அவர்களைப் போலவே அங்கும் இங்கும் அலையட்டும்!

இந்த நிலையைப் போக்க ஏராளமானோர் தொன்று தொட்டுச் சிந்தித்து வந்துள்ளனர். 32 அறங்களையும் ஏற்படுத்தினர். ‘யாவர்க்குமாம் உண்ணும் போது ஒரு கைப்பிடி’ (நீ சாப்பிடும் போது வறுமையில் வாடும் ஒருவனுக்கு ஒரு பிடியாவது கொடு) என்று அறவுரை பகன்றார் திருமூலர்.

அக்டோபர் 17

இந்த நிலை மாற உலகெங்கும் விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் விதமாக பிரான்ஸில் பாரிஸ் நகரில் 1987ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 17ஆம் தேதி ஒரு லட்சம் மக்கள் ஒன்று கூடி வறுமையை அழித்து ஒழிக்க உறுதி பூண்டனர்.

அகில உலக வறுமை ஒழிப்பு தினம் அன்று தோன்றியது. 1992ஆம் ஆண்டு ஐ.நா. இதை அதிகாரபூர்வமாக் அங்கீகரித்தது.

இதற்குக் காரணமாக அமைந்தவர் ஜொஸப்  ரெஸின்கி (1917-1988) என்னும் பாதிரியார்.

அக்டோபர் 17 ஆம் தேதி – உலகெங்குமுள்ள மக்களுக்கு வறுமை பற்றிய விழிப்புணர்ச்சியைத் தூண்டி அவர்களை இதை ஒழிப்பதற்கான மாபெரும் இயக்கத்தில் பங்கு பெறச் செய்யும் நாள்.

பல்வேறு உலக நாடுகளின் அரசாங்கங்கள், தன்னார்வலர்கள், இயக்கங்கள் ஒன்று கூடி வறுமையினாலும் ஊட்டச் சத்து இல்லாமையாலும் ஏற்படும் குழந்தைகளின் இறப்பு விகிதத்தைத் தடுக்க பல்வேறு வழிகளை உன்னிப்பாக ஆராய்ந்து அவற்றைச் செயல்படுத்தும் நாளாக இது அமைகிறது. பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதோடு ஒரு கணம் மௌனமும் அனுஷ்டிக்கப்படும் நாள் இது.

உலகிலே பிறந்த ஒவ்வொரு குழந்தைக்கும் வாழ்வதற்கு உரிமை உண்டு; அந்த உரிமையைப் பறிக்கும் வறுமையை அழித்தொழிக்க ஒவ்வொரு குடிமகனும் தீவிரமாக உறுதி பூண வேண்டிய நாள் இது.

நல்ல பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தி, சுரண்டலை ஒழித்து, அனைவருக்கும் தேவைப்படும் குறைந்த பட்ச உணவை அளிக்க மக்கள் முன் வந்தால் வறுமை ஒழிக்கப்படும் என்பது உறுதி!

தங்களிடம் மிகுதியாக உள்ளதில் ஒரு சிறு பங்கையேனும் வறுமையில் வாடுவோருக்குக் கொடுத்தால் அதை விட புண்ணியச் செயல் வேறு உண்டா என்ன?

tags – வறுமை, ஒழிப்பு,

–subham—

Leave a comment

1 Comment

  1. R Nanjappa

     /  October 17, 2020

    வறுமை இல்லாத காலமும் இல்லை-இடமும் இல்லை!
    ஆனானப்பட்ட அமெரிக்காவில் வறுமைக்கோட்டிற்குக் கீழே இருப்பவர்கள் 11.8 % என்று 2018ல் கணக்கெடுக்கப்பட்டது.
    வறுமை ஏன் வருகிறது? இது சென்ற சில நூற்றாண்டுகளாக நிகழ்ந்துவரும் பொருளாதார மாற்றங்களின் விளைவாகும்.
    வறுமையை ஒழிப்பதற்கு என்ன செய்கிறார்கள்? மூல காரணத்தைப் பார்க்காமல், ஏதோ ஜிகினா வேலை செய்கிறார்கள். IMF, World Bank, UN போன்ற ஸ்தாபனங்கள் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் கூடிப் பேசி பிதற்றுகிறாகள். வறுமையின் இயல்பு பற்றிய அடிப்படை விளக்கத்தை மாற்றுகிறார்கள்..
    However, it has been said that poverty will be with us, in whatever way it is defined!
    இன்றைய நிலையில் வறுமைக்குக் காரணம் பொருளாதாரம் பெருதொழில் மயமாதலும், பாரம்பரிய சமுதாய-பொருளாதார முறைகள் அழிந்துவருதலும் ஆகும். பெருதொழில் வளர்ச்சி கிராமப்புறத்தை அடியோடு அழித்துவருகிறது. கிராமத்தவர் நகரம் நோக்கி பெயர்கின்றனர். அங்கு கிடைக்கும் வேலை செய்து, கல்லைத்தான் மண்ணைத்தான் காய்ச்சிக் குடிக்கிறார்கள். இந்த வேலைகள் நிரந்தரமல்ல, வருமானமும் சீரானதல்ல.
    இதற்கு ஒரே முடிவு, தொழில் நுட்பம் என்ற பெயரில் தொழில்கள் கட்டுக்கடங்காமல் வளர்வது நிற்கவேண்டும். இதை முதலில் சொன்னவர் காந்தியடிகள். Production by the masses, not mass production. இதற்கு முதலில் வாழ்க்கை முறையை எளிமைப் படுத்தி, அனாவசியத்தேவைகளை குறைத்துக்கொண்டு, பணப்புழக்கத்தை கட்டுப்படுத்தவேண்டும். காந்தியடிகளுக்குபின், போருளாதார இயலின் அடிப்படையிலேயே இதை விளக்கியவர் இ.எஃப்.ஷுமேக்கர் ( Small Is Beautiful and other books). அவருக்கு முன்பு அமெரிக்காவின் பொருளாதார நடைமுறை சரியில்லை, அனாவசியமாக பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு வியாபார தந்திரங்களினால் மக்களை வாங்கும்படித் தூண்டுகிறார்கள்- இது நல்லதல்ல என்று அமெரிக்க பொருளாதார நிபுணர் ஜான் கென்னத் கால்பிரைத் எழுதினார் ([The Affluent Society] இவர் 62-64ல் (கென்னடி காலத்தில்) இந்தியாவில் அமெரிக்க தூதுவராக இருந்தவர், ஆனால் உலக நிறுவனங்கள் இவற்றையெல்லாம் கண்டுகொள்ளவில்லை. அடாத அமெரிக்க முறையே இன்று உலகம் முழுதும் பரவிவருகிறது- Globalization is nothing but Americanization of lifestyle and consequent consumption pattern.
    வேலை வாய்ப்பு என்று வாய்கிழியப் பேசுகிறார்களே தவிர, என்ன செய்யவேண்டும் என்பது எவருக்கும் தெரியவில்லை. பொருளாதாரம் அதன் போக்கிலேயே செல்கிறது.
    இதன் விளைவாக உலகெங்கிலும் செல்வம் சில இடத்தில் மட்டும் குவிகிறது. பலர் வாடுகின்றனர். உலக அளவில் , ஜனத்தொகையில், உயர் மட்டத்தில் உள்ள 10சதவிகிதத்தினர், உலகச் செல்வத்தில் 85 சதவிகிதத்தை உடையவர்களாக இருக்கிறார்கள். கீழ் 50 சதவிகிதத்தினர், 1சதவீத செல்வத்திற்கு உரியவராக இருக்கின்றனர். இந்த நிலையில் வறுமை ஒழிப்பு தினமோ, அதற்கான கூட்டங்களோ என்ன சாதித்துவிட முடியும்?
    தும்பை விட்டு வாலைப் பிடிக்கிறார்கள்.
    நல்ல உடல் நிலையும் மன நிலையும் உள்ள ஒவ்வொருவருக்கும் தொழில்/வேலை அல்லது வருமான வசதி இருக்கும் வகையில் பொருளாதாரம் அமையவேண்டும். இது எந்த அரசின் குறிக்கோளாகவும் இல்லை.
    The definition of so called ‘full employment” by so called economists does not mean employment for every able-bodied person!
    உள்ளதைப் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று எல்லா மதங்களும் வற்புறுத்துகின்றன. ஆனால் இன்று நாடுகள் மதச்சார்பற்றவையாகி விட்டன!
    இவர்கள் வறுமை ஒழிப்பு தினம் கொண்டாடினால் என்ன? கூட்டம் போட்டுப் பேசினால் என்ன? என்ன செய்வது என்று தெரியவில்லை, தெரிந்து சொல்பவர்களை மதிப்பதில்லை.
    கூட்டத்தில் கூடி நின்று கூவிப் பிதற்றலன்றி நாட்டத்தில் கொள்ளார்! அதுவே தற்கால பொருளாதாரம்!
    இதற்கு ஒரே தீர்வு காந்தியடிகள் காட்டிய பொருளாதார வழியே!

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: