
Post No. 8824
Date uploaded in London – – –18 OCTOBER 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
கரந்துறை திருப்புகழ் பாடலில் முதலாவது பாடல் பற்றிய கட்டுரை எண் 8277 (வெளியான தேதி 3-7-2020). இரண்டாவது பாடல் பற்றிய கட்டுரை எண் 8817 (வெளியான தேதி 16-10-2020)
ஒரு திருப்புகழில் இரு திருப்புகழ் பாடல்கள்! – 3
ச.நாகராஜன்
ஒரு திருப்புகழுக்குள் அமைந்துள்ள இன்னொரு (கரந்துறை) திருப்புகழ் பாடல்களில் இரண்டைப் பார்த்தோம். மூன்றாவது திருப்புகழ் பாடல் இது:

தத்தித் தத்திச் சட்டப் பட்டுச்
சத்தப் படுமைக் கடலாலே
சர்ப்பத் தத்திற் பட்டுக் கெட்டுத்
தட்டுப் படுமப் பிறையாலே
சித்தத் துக்குப் பித்துற் றுச்சச்
சித்ரக் கொடியுற் றழியாதே;
செப்பக் கொற்றச் சிற்பப் பத்திச்
செச்சைத் தொடையைத் தரவேணும்
கொத்துத் திக்குப் பத்துட் புக்குக்
குத்திக் கிரியைப் பொரும்வேலா
கொச்சைப் பொச்சைப் பொற்பிற் பச்சைக்
கொச்சைக் குறவிக் கினியோனே;
சுத்தப் பத்தத் தர்க்குச் சித்தத்
துக்கத் தையொழித் திடும் வீரா
சொர்க்கத் துக்கொப் புற்றக் கச்சிக்
சொர்க்கப் பதியிற் பெருமாளே!
பாடலின் பொருளைப் பார்ப்போம் :
த்டைப்பட்டு தடைப்பட்டுக் குழறிப் பேசித் தவறுதலான வழியிலே சென்று கெட்டுப் போகின்ற இந்த பொய்க்கூட்டமாய் நிறைந்த சட்டையாகிய இந்த குடிசை என்னும் வியப்பூட்டும் சுமையை விரும்புகின்ற
சிக்கு (தடை) நீங்கப் பெற்று, உட்கு ( உள்-கு உள்ளத்திலே கருணை எண்ணம் வாய்க்கப் பெற்று, பரிசுத்தமானதும் சித்தியை(நற்கதியை, முக்தியைத் தர வல்லதுமான தமிழை (தமிழ்ப் பாடல்களை) திட்டத்துக்குப் பூரணமாக, லக்ஷணமாக, செவ்வையாகச் சொல்லும் (பாடும்) பாக்கியத்தைப் பெறுவேனோ!
அங்கிட்டு இங்கிட்டு (அங்கும் இங்குமாகப் பல இடங்களிலும்)போர் செய்ய சபதத்துடன் துணிந்து (கிட்டியிட்டு) சமீபத்தில் நெருங்கி எதிர்த்து அஸ்திரங்களைப் (படைகளை- ஆயுதங்களை) எற்றி (செலுத்தி) விரைவிற் சண்டை செய்த சூரன் –
உடம்பு கெட்டுப் போய், ஆயுதங்களைக் கை விட்டு (இல்லாதொழிந்து) அல்லது, தனது சேனைகளை விட்டுத் தன்னந் தனியனாய், பயம் அடைந்து, கடலினுள்ளே புகுந்து வேதனைப் பட்டு, (மா) மர உருவத்தை அடைந்து நிற்க
(தக்குத் திக்குத் தறுகண்) – தறுகண் அஞ்சாமையுடன் இருந்த வீரம் எல்லாம் தக்குத் திக்கென தடுமாற, தொக்குத் தொக்குற்றது கண் – (தொக்கு – ஸ்பரிச உணர்ச்சி அறியும் இந்திரியம்) (முதலிய) துவையலாகி (அழிந்து பட) அந்த இடத்தும் (அந்த நிலையிலும் கூட) கைக்கொட்டு இட்டு இட்டு – கையை மிகவும் கொட்டியவாறே ஆர்ப்பரித்து உடலுடன் சில பொழுது (நேரம்) ஆடி (போர்செய்து)
வேற்படை குத்தினதால், (துடியில் சத்திக்க) துடித்துக் கதறி ஒலி செய்ய (அல்லது துடி – உடுக்கைப் பறையின் முழக்கம் போலக் கூவிக் கதற) கைச் சமர் செய் – ஒழுங்கான போரைச் செய்த பெருமாளே! சத்திப் பெருமாளே – வேல் கொண்ட பெருமாளே கச்சிக் குமரப் பெருமாளே (தமிழைப் புகலப் பெறுவேனோ)
அலைகள் தாவிச் சென்று தாவிச்சென்றி ஓர் ஒழுங்கு முறையிலே தொழிற்பட்டு ஒலி செய்கின்ற கருங்கடலாலும்-
(சர்ப்பத்தின் தத்தில் பட்டு) கிரகணத்தின் போது ராகு கேது எனப்படும் பாம்பால் பிடிபடுதல் என்னும் ஆபத்திற்கு உட்பட்டு, கெடுதல் உற்று, தடைபடுகின்ற சந்திரனாலும்-
சித்தத்துக்கு (மனதிலே) பித்து உற்று (காம வெறி கொண்டு) (உச்சம்) அதன் அதிகமான நிலையை இந்த அழகிய கொடி போன்ற பெண் அடைந்து அழிவு படாமல்
உனது (செப்பமானதும்) செவ்வையானதும் (கொற்றம்) வீரத்துக்கு அறிகுறியானதும், (சிற்பம்) தொழில்திறம் காட்டுவதும் (பத்தி) வரிசையாய் அமைந்ததுமான வெட்சிமாலையைத் தந்தருள வேண்டும்.
நிறைந்துள்ள (திக்குப் பத்துள்) வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு, வடகிழக்கு, தென்கிழக்கு, வடமேற்கு, தென்மேற்கு , மேல, கீழ் எனப்படும்) பத்துத் திசைகளிலும் வேலால் குத்திக் கிரௌஞ்சகிரியுடன் (அல்லது) ஏழு கிரியுடன் சண்டை செய்த வேலவனே!
திருந்தாப் பேச்சு பேசுபவளும் (பொச்சை) காடு மலைகளில் இருப்பவளு அழகிலே பச்சை நிறம் கொண்டவளும், இழிகுலமாம் குறக் குலத்தவளுமான வள்ளிக்கு இனியவனே!

பரிசுத்தமான (பத்தத்தர்) பக்த அத்தர்-பத்தியில் உயர்ந்தோர்களுடைய மனத்தில் உள்ள துக்கங்களை ஒழித்திடுகின்ற வீரனே!
சொர்க்கத்துக்கு (தேவருலகுக்கு) ஒப்பான கச்சி எனப்படும் அழகிய திருப்பதியில் வீற்றிருக்கும் பெருமாளே!
(செச்சைத் தொடையைத் தரவேணும்)
மேற்கண்ட பதவுரை தணிகைமணி ஸ்ரீ வ.சு.செங்கல்வராய பிள்ளை அவர்கள் அளித்த ஒன்றாகும். இவர் தமிழுக்கு ஆற்றியுள்ள அரும் பணியைப் போற்றி புகழ வார்த்தைகளே இல்லை.
இந்த பாடலில் இறுதி வரி ஒவ்வொன்றையும் எடுத்துத் தொடுத்துப் பார்த்தால் அது ஒரு தனித் திருப்புகழாக இப்படி அமைகிறது :
சத்தப் படுமைக் கடலாலே
தட்டுப் படுமப் பிறையாலே
சித்ரக் கொடியுற் றழியாதே
செச்சைத் தொடையைத் தரவேணும்
குத்திக் கிரியைப் பொரும்வேலா
கொச்சைக் குறவிக் கினியோனே
துக்கத் தையொழித் திடும்வீரா
சொர்க்கப் பதியிற் பெருமாளே
இதன் பொருள்: ஒலி செய்கின்ற கரிய கடலாலும்
எதிர்ப்படும் சந்திரனாலும்,
அழகிய கொடி போன்ற இப்பெண் அழிவுறாமல்
(உனது) வெட்சி மாலையைத் தரவேணும்;
குத்தி மலையைப் பொருத வேலனே!
இழிகுலக் குறத்திக்கு இனியவனே!
துக்கத்தை ஒழிக்கும் வீரா!
சுவர்க்கப் பதியில் (அமராவதியிற்) பெருமாளே!
இதுவரை மூன்று கட்டுரைகளில் மூன்று கரந்துறைப் பாடல்களைப் பார்த்தோம்.
திருப்புகழில் ஏராளமான சித்ர கவிகள் உள்ளன. பக்தியுடன் திருப்புகழ் ஓதுவதோடு சித்ர கவிகளை அறிந்து ரசித்தல் தமிழர்களாகிய நமக்குப் பெரும் பாக்கியமே!
tags– இரு திருப்புகழ் பாடல்
–subham—