
WRITTEN BY BRHANNAYAKI SATHYANARAYANAN
Post No. 8829-D
Date uploaded in London – –20 OCTOBER 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
வணக்கம்.
ஞானமயம் வழங்கும் பங்களூர் செய்தி மடல்.
வழங்குவது பிரஹன்நாயகி சத்ய நாராயணன்.
தலைப்புச் செய்திகள்
பங்களூரில் ஹலசூரில் அமைந்துள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தில் சரஸ்வதி பூஜை சிறப்பு நிகழ்ச்சிகள் பற்றிய விவரங்கள்
பன்னிரெண்டரை அடி உயரமுள்ள விவேகானந்தர் சிலை பங்களூரு ரெயில் நிலையத்தில் அமைக்கப்பட இருக்கிறது.
புகழ்பெற்ற புண்ய ஸ்தலமான குக்கி சுப்ரமண்ய தலம் பற்றிய ஒரு சிறு அறிமுகம்
இனி, விரிவான செய்திகள் :-
பங்களூரில் ஹலசூரில் அமைந்துள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தில் சரஸ்வதி பூஜையை ஒட்டி அக்டோபர் 22 மற்றும் 23ஆம் தேதிகளில் காலை 5 மணிக்கு வேத பாராயணமும் காலை ஏழரை மணிக்கு பூஜை மற்றும் தேவி மாஹாத்மிய பாராயணமும் மாலை 6 மணிக்கு ஸ்ரீ ராமகிருஷ்ண ஆரத்தியும் நடைபெறும். அக்டோபர் 24ஆம் தேதியன்று காலை 5 மணி முதல் மாலை 6 மணி வரை தொடர் நிகழ்ச்சிகள் உண்டு. அக்டோபர் 25ஆம் தேதி ஆயுத பூஜையை ஒட்டியும், அக்டோபர் 26ஆம் தேதி விஜயதசமி அன்றும் இதே போல சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறும்.
அடுத்து பங்களூரில் ஹலசூரில் அமைந்துள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண மடம்,
விவேகானந்தர் சிலை நிறுவுதல் பற்றிய ஒரு சிறப்புச் செய்தியை அறிவிக்கிறது. பன்னிரெண்டரை அடி உயரமுள்ள வெங்கலத்தினால் ஆன ஸ்வாமி விவேகானந்தரின் சிலை ஒன்று KSR பங்களூர் சிடி ரெயில்வே ஸ்டேஷன் மூன்றாவது வாயிலில் நிறுவப்பட இருக்கிறது. பக்தர்கள் இந்த நல்ல பணிக்குத் தாராளமாக நிதி உதவ வேண்டுமென்று வேண்டுகோள் விடப்பட்டுள்ளது. நிதி செலுத்த வேண்டிய வங்கி மற்றும் விவரங்களை மடத்திலிருந்து பெறலாம். மடத்தின் மின்னஞ்சல் முகவரி halasuru@rkmm.org
அடுத்து புகழ்பெற்ற புண்ய ஸ்தலமான குக்கி சுப்ரமண்ய தலம் பற்றி ஒரு சிறு அறிமுகத்தை வழங்குகிறோம்.
குக்கி சுப்ரமணியசுவாமி கோயில் கர்நாடக மாநிலத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள அடர்ந்த காட்டில் குமாரமலையில் குக்கி சுப்ரமண்யா என்ற அழகிய கிராமத்தில் அமைந்துள்ள ஒரு புனித கோவிலாகும்.

பங்களூரிலிருந்து சுமார் 320 கிலோமீட்டர் தொலைவிலும் மங்களூரிலிருந்து சுமார் 103 கிலோமீட்டர் தூரத்திலும் அமைந்துள்ள இந்த ஸ்தலம் இயற்கை வனப்புடன் கூடிய அடர்ந்த காட்டில் அமைந்துள்ளது. இருபுறமும் நெடிதுயர்ந்த மரங்கள் உள்ள சாலையின் வழியே சென்று இதை அடையலாம்.
குமார பர்வதம் மேற்குத் தொடர்ச்சி மலையில் 4000 அடி உயரமுள்ள மலையாகும். மலையின் உச்சியை அடைய சாலை வழியே 18 கிலோமீட்டர் தூரம் செல்ல வேண்டும். இந்த மலையே ஆதி சேஷன் வடிவத்தில் அமைந்திருப்பது வியப்பூட்டும் ஒரு அதிசயமாகும்! இங்கு சேஷ பர்வதம், சித்த பர்வதம், குமார பர்வதம் ஆகிய மூன்று மலைகள் உள்ளன. குமார பர்வதத்தில் குமாரஸ்வாமியின் இரு பாதச் சுவடுகள் கல்லிலே அமைந்துள்ளன. பக்தர்கள் இதை பயபக்தியுடன் வணங்கி வழிபடுகின்றனர்.
இந்தப் பாதச் சுவடுகளிலிருந்து இரு வேறு திசைகளில் நீர் பெருகுவதைக் காணலாம். ‘உபய குமார தாரா’ என்று அழைக்கப்படும் இரு நதிகள் சுமார் 8 மைல் தூரம் தனித்தனியே பாய்ந்து பின்னர் ஒன்று சேர்வது ஒரு அற்புதமான காட்சியாகும்.
குக்கி சுப்ரமணிய ஸ்வாமி ஆலயத்தில், கோயிலின் முன் மண்டபத்திற்கும் கர்ப்ப கிரஹத்திற்கும் நடுவே வெள்ளித்தூண் ஒன்று உள்ளது. இதை வலம் வந்து வெள்ளித் தூணில் அமைந்துள்ள கருடனை வழிபடுதல் மரபு, இதனால் சர்ப்பங்கள் கக்கும் விஷம் ஒன்றும் செய்யாது என்பது தொன்றுதொட்டு இருந்து வரும் நம்பிக்கை. இங்குள்ள முருகன் ஸ்வயம்பு மூர்த்தி. மூர்த்தியின் தலை மீது ஐந்து தலை நாகர் உள்ளது.
நாகங்களின் தலைவியான வாசுகிக்கு முருகன் அருள் பாலித்த தலம் இது.
ஆகவே சர்ப்பஹத்தி தோஷம், கால சர்ப்ப தோஷம் உள்ளிட்ட நாக தோஷம் உள்ளவர்கள் அதைப் போக்க இங்கு வந்து வழிபடுதல் தொன்று தொட்டு இருந்து வரும் பழக்கமாக உள்ளது.
மிகச் சிறப்பான புராண வரலாறைக் கொண்டது இந்த ஸ்தலம்.
குக்ஷி என்றால் குகை என்று பொருள். அது மருவி இப்போது குக்கி ஆகியிருக்கிறது.
ஸ்கந்த புராணம் இதை குமரனின் நேத்ராக்னி ஸ்தலமாகச் சொல்கிறது. தாருகாசுரன், சூரபத்மன் உள்ளிட்ட பல அசுரர்களை வதம் செய்த பின்னர் விநாயகருடன் சுப்ரமணியர் இங்கு வந்து தங்கினார். அப்போது இந்திரன் உள்ளிட்ட அனைத்து தேவர்களும் அவர்களை வரவேற்றனர். தனது மகளான தேவசேனையை இந்திரன் மகிழ்ச்சியுடன் சுப்ரமணியருக்கு மணம் செய்து கொடுக்க விரும்பவே, அதை ஏற்று சுப்ரமணியர் தேவசேனையை இந்த குமாரமலையில் மணந்தார். பிரம்மா, சிவன், விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகளும் தேவர்களும் இங்கு வருகை புரிந்து ஆனந்தமடைந்தனர். இங்கு குக்கி லிங்கம், பைரவர், உமா மஹேஸ்வரர், நரசிம்மர் உள்ளிட்ட தெய்வ விக்ரஹங்களும் வழிபாட்டுக்கென அமைந்துள்ளன..
காலம் காலமாக மக்கள் பக்தியுடன் வணங்கி வரும் குக்கி ஸ்ரீ சுப்ரமண்ய ஸ்வாமி அனைவருக்கும் சர்வ மங்களத்தை தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம்.
இதுவரை நீங்கள் கேட்டது பங்களூர் செய்தி மடல்.
வழங்கியது ப்ரஹன் நாயகி சத்யநாராயணன். நன்றி.

tags-bengaluru191020
R Nanjappa
/ October 20, 2020இந்த குக்கே சுப்ரமண்யாதான் அசல் சுவாமிமலை என்பது சிலர் கொள்கை! குன்றுதோராடும் குமரனுக்கு கும்பகோணத்தை அடுத்த சுவாமிமலையில் இருப்பது ஒரு செயற்கைக் குன்றுதானே! குக்கே சுப்ரமண்யாவில் இருக்கும் மலை நதி எல்லாம் குமார சம்பந்த முடையது!
அருணகிரி நாதர் வாக்கில் காவிரிவடகரை ஸ்தலமே -இன்றைய சுவாமி மலையே- சுவாமிமலை என திருப்புகழில் பாடியிருக்கிறார். இருந்தாலும் இந்தச் சந்தேகம் இருக்கிறது. நச்சினார்க்கினியரின் திருமுருகாற்றுப்படை உரையில் ‘திருவேரகம் மலை நாட்டில் உள்ள தலம்’ என்று எழுதியிருக்கிறார்!
கும்பகோணத்திலேயே இருக்கும் சில குடும்பத்தினருக்கு குலதெய்வம் குக்கே சுப்ரமண்யாதான் என்பது ஒரு முக்கியச் செய்தி.
இதைப்பற்றி கி.வா.ஜ அவர்கள் தன் புத்தகத்தில் எழுதியிருக்கிறார்.[ புத்தகம்: வழிகாட்டி, முதல் பதிப்பு:1947]