
WRITTEN BY S NAGARAJAN
Post No. 8856
Date uploaded in London – – –26 OCTOBER 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
வீர ஜெயத் திருப்புகழும் மந்திரத் திருப்புகழும்!
ச.நாகராஜன்
திருப்புகழ் 1324 பாடல்கள் நம்மிடையே இன்று உள்ளது. இது வரை வெளி வராத சில அரிய பாடல்கள் ஆறைச் சேர்த்து இதை சிலர் 1330 என்று குறள் எண்ணிக்கைக்கு நிகராகக் கொண்டு வருவதும் உண்டு. ‘யாம் ஓதிய கல்வியும் எம் அறிவும் தாமே பெற வேலவர் தந்ததனால்’ என அருணகிரிநாதரே கூறுவதால் அவர் வாக்கு முருகன் வாக்கே என ஆகிறது. ஆகவே இவை மந்திரப் பாடல்களாக அமைந்துள்ளன என்று சொல்வது சத்திய வாக்காகும்.
பல பாடல்களை தங்கள் அனுபவத்தால் கண்டறிந்த பெரியோர்கள், அவற்றின் பயனைத் தெளிவுறச் சொல்லி வைத்துள்ளனர்.
அவற்றில் வீர ஜெயத் திருப்புகழாக, ‘சினத்தவர் முடிக்கும்’ என்ற பாடலும், மந்திரப் பாடலாக ‘இருமலு ரோக’ என்ற பாடலும் அமைந்துள்ளன.
வீர ஜெயத் திருப்புகழ் பகைவரை வென்று எந்தக் காரியத்திலும் வெற்றியைத் தரும் ஒரு அரிய திருப்புகழாகும்.
எந்த வியாதி வந்தாலும் அதைத் தீர்க்க பாட வேண்டிய பாடலாக அமைகிறது
‘இருமலு ரோக’ எனத் தொடங்கும் பாடல்.
அவற்றைக் கீழே பார்க்கலாம்.
சினத்தவர் முடிக்கும் பகைத்தவர் குடிக்குஞ்
செகுத்தவர் ருயிர்க்குஞ் …… சினமாகச்
சிரிப்பவர் தமக்கும் பழிப்பவர் தமக்கும்
திருப்புகழ் நெருப்பென் …… றறிவோம்யாம்
நினைத்தது மளிக்கும் மனத்தையு முருக்கும்
நிசிக்கரு வறுக்கும் …… பிறவாமல்
நெருப்பையு மெரிக்கும் பொருப்பையு மிடிக்கும்
நிறைப்புக ழுரைக்குஞ் …… செயல்தாராய்
தனத்தன தனத்தந் திமித்திமி திமித்திந்
தகுத்தகு தகுத்தந் …… தனபேரி
தடுட்டுடு டுடுட்டுண் டெனத்துடி முழக்குந்
தளத்துட னடக்குங் …… கொடுசூரர்
சினத்தையு முடற்சங் கரித்தம லைமுற்றுஞ்
சிரித்தெரி கொளுத்துங் …… கதிர்வேலா
தினைக்கிரி குறப்பெண் தனத்தினில் சுகித்தெண்
திருத்தணி யிருக்கும் …… பெருமாளே.
பொருள் : முருகனை வழிபடுவோர்களைக் கோபிப்பவர்கள் தலைக்கும், அவர்களைப் பகைத்து இருக்கும் குடும்பத்திற்கும், அவர்களைச் செகுக்கத் துணிபவர் உயிருக்கும், முருகன் அடியாரைக் கண்டு சினத்துடன் சிரிப்பவர்க்க்கும், பழிப்பவர்க்கும் திருப்புகழே நெருப்பாய் அமைந்து அவர்களை அடியோடு அழித்து விடும். இதை நன்கு அறிவோம் நாம்.
முருகனை வழிபடும் அடியவர் என்ன நினைத்து வேண்டுகிறார்களோ அதை அளிக்க வல்லது, மனத்தை உருக்குவது, மீண்டும் மீண்டும் பிறப்பு என்ற நிலையை இல்லாமல் செய்து இருள் நிறைந்த கருப்பையில் வராமல் செய்வது, நெருப்பையே எரிக்க வல்லது, மலைகளையே இடிக்க வல்லது, அனைத்துப் பொருள்களையும் தம்முள் உள்ளடக்கியது ஆகிய திருப்புகழை பாடுகின்ற நல்ல செயலை அருள்வாயாக. தனத்தன தனத்தந் திமித்திமி திமித்திந்த் தகுத்தகு தகுத்தந்தன என்ற ஒலியுடன் பேரிகைகள் முழங்க, தடுட்டுடு டுடுட்டுண் டென ஒலியுடன் உடுக்கை முழங்க, சேனைகளுடன் போருக்கு அணி வகுத்து வந்த கொடு சூரர் சினத்தையும் அவர்கள் தம் உடலைச் சங்கரித்த (அழித்த) பிண மலைகள் யாவையும் புன்னகை ஒன்றினாலேயே அதில் தோன்றிய அனல் பொறியால் சாம்பலாக்கிய கதிர் வேலா, தினைப்பயிரை விளைவிக்கும் மலைக் குற வள்ளியை மார்புற அனைத்து இன்புற்று எண்ணுகின்ற திருத்தணியில் அமர்ந்து அருள் புரியும்
வேலவனே!
அநுஷ்டான திருப்புகழ் பாடல்கள் என்று சில திருப்புகழ் பாடல்கள் தொகுக்கப்பட்டுள்ளன.
அவற்றில் நோய் வரின் அதைப் போக்க ‘இருமலு ரோக’ பாடல் பாடி துதிக்கப்படுகிறது.
நோய் வராமல் தடுக்கவும் அன்றாடம் அன்பர்களால் இது ஓதப்பட்டு வருகிறது.
பாடல் இதோ:
இருமல் உரோகம் முயலகன் வாதம்
எரிகுண நாசி …… விடமேநீர்
இழிவு விடாத தலைவலி சோகை
எழுகள மாலை …… இவையோடே
பெருவயி றீளை எரிகுலை சூலை
பெருவலி வேறும் …… உளநோய்கள்
பிறவிகள் தோறும் எனைநலி யாத
படி உன தாள்கள் …… அருள்வாயே
வருமொரு கோடி அசுரர் பதாதி
மடியஅ நேக …… இசைபாடி
வருமொரு கால வயிரவர் ஆட
வடிசுடர் வேலை …… விடுவோனே
தருநிழல் மீதில் உறைமுகில் ஊர்தி
தருதிரு மாதின் …… மணவாளா
ஜலமிடை பூவின் நடுவினில் வீறு
தணிமலை மேவு …… பெருமாளே.
இந்த மந்திரத் திருப்புகழைச் சொல்லி திருநீறு அணிந்து கொண்டால் நோய்கள் வராது; வந்த நோய்களும் போகும்.
இப்படி ஏராளமான பலன் தரும் திருப்புகழ் பாடல்கள் அன்றாட வாழ்க்கையின் வெற்றிக்கு உறுதுணை செய்வதை அன்பர்கள் காலம் காலமாக அனுபவித்து உணர்ந்து பயன் அடைந்துள்ளனர்.
நாமும் பயன் பெறலாமே!
***