
. WRITTEN BY BRHANNAYAKI SATHYANARAYANAN
Post No. 8863-b
Date uploaded in London – –27 OCTOBER 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
26-10-2020 அன்று இந்திய நேரப்படி மாலை 6.30 ஒளிபரப்பப்பட்ட ஞானமயம் நிகழ்ச்சியில் இடம் பெற்ற பங்களூர் செய்தி மடல்!
***
ஞானமயம் வழங்கும் பங்களூர் செய்தி மடல். வழங்குவது பிரஹன்நாயகி சத்ய நாராயணன்.
அனைவருக்கும் விஜயதசமி நல்வாழ்த்துக்கள்!
ஒரு வரிச் செய்திகளைத் தொடர்ந்து புகழ்பெற்ற புண்ய ஸ்தலமான மூகாம்பிகை கொலுவீற்றிருக்கும் கொல்லூர் தலம் பற்றிய ஒரு சிறு அறிமுகத்தையும் இப்போது வழங்குகிறோம்.
இனி, ஒரு வரிச் செய்திகள் :-
நவராத்தி விழா கோலாகலமாக கர்நாடகம் எங்கும் கொண்டாடப்பட்டுள்ளது.
பிரசித்தி பெற்ற மைசூர் தசரா விழாவும் பாரம்பரிய வழக்கப்படிக் கொண்டாடப்பட்டுள்ளது.
இனி இதோ, மூகாம்பிகை அருள் பாலித்து வரும் கொல்லூர் தலம் பற்றிய ஒரு சிறிய அறிமுகம்.
கொல்லூர் மூகாம்பிகை ஆலயம் கர்நாடகத்தில் உடுப்பி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சக்தி வாய்ந்த தேவி தலமாகும். இது உடுப்பியிலிருந்து சுமார் 80 கிலோமீட்டர் தொலைவிலும் மங்களூரிலிருந்து சுமார் 135 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.
மேற்குத் தொடர்ச்சி மலையில் குடசாத்ரி மலையில் ஒரு சிகரத்தில் இது உள்ளது. மிகப் பண்டைய காலத்தில், த்வாபர யுகத்தில் கோலன் என்ற மஹரிஷி தவம் புரிந்த தலமாகும் இது.
இங்குள்ள மூகாம்பிகை தேவிக்கு மூன்று கண்களும் நான்கு கரங்களும் உள்ளன. இரு கரங்களில் சக்கரமும் சங்கும் ஏந்தி இருக்கும் அன்னை, மற்ற இரு கரங்களில் ஒரு கை அபயகரமாகவும் இன்னொரு கை தன் பாதத்தைச் சுட்டிக்காட்டும் படியாகவும் பத்மாசனத்தில் அமர்ந்தபடி இருக்கிறாள். மூகாம்பிகையின் இந்த ஆலயம் தெள்ளிய நீர் ஓடும் சௌபர்ணிகா நதி தீரத்தில் அமைந்துள்ளது. குடசாத்ரி மலையிலிருந்து உருவாகி விழும் 64 நீர்வீழ்ச்சிகள் ஒன்று சேர்ந்து இந்த சௌபர்ணிகா நதியாக மாறிப் பாய்கிறது.
ஸ்வயம்பு லிங்கத்தில் அருள் பாலிக்கும் தேவி, உத்பவ லிங்கமாக சக்தியும் சிவமும் இணைந்தவளாக இருக்கிறாள். கர்பகிரஹ விமானம் தங்கத்தால் வேயப்பட்டுள்ளது.
கர்பகிரஹத்தில் அம்பாளின் முன்னர் தரையோடு தரையாக ஸ்வயம்பு லிங்கம் உள்ளது. பிரம்மா, விஷ்ணு, சிவா ஆகிய முப்பெரும் தெய்வங்கள் வலது புறத்தில் இருக்க ஒரு தங்கச் சங்கிலி இடது புறத்தைத் தனியே பிரிக்கும் காட்சி அரிய காட்சியாகும். கர்ப கிரஹத்தின் எதிரில் பணிவுடன் அமர்ந்த நிலையில் சிம்ம வாகனம் இருக்க இரு புறமும் தியான மண்டபம் உள்ளன.
இந்த தேவியின் சிலையை பிரதிஷ்டை செய்தவர் ஆதி சங்கரர் என்றும் ஸ்ரீசக்ரத்தின் மீது இதை அவர் நிறுவியுள்ளார் என்றும் வரலாறு கூறுகிறது. வெளி பிரகாரத்தில் சரஸ்வதி மண்டபம் உள்ளது. சௌந்தர்ய லஹரியை ஆதிசங்கரர் இயற்றியுள்ள இடம் இதுவே என்றும் கூறப்படுகிறது.
ஆதிசங்கரர் அமைத்துள்ள வழிபாட்டு முறையின் படியே கோவில் பூஜைகள் நடைபெறுகின்றன என்பதோடு சங்கர பீடம் ஒன்றை கர்பகிரஹத்தின் மேற்குப் புறத்தில் காணலாம்.
கர்பகிரஹத்தின் முன்னே கொடிக் கம்பம் உள்ளது. அருகில் உள்ள ஒரே கல்லினால் ஆன விளக்குத்தூணில் ஆயிரம் விளக்குகளை ஏற்றலாம்.
பழைய புராண வரலாற்றைக் கொண்டுள்ளது இந்தத் தலம். கம்ஹாசுரன் என்னும் ஒரு அசுரனை தேவி வதைத்த தலம் இது. அரிய தவம் ஒன்றைச் செய்து பூமியை நடுங்கச் செய்ய உள்ளம் கொண்ட அந்த அசுரனை பார்வதி தேவி பூமியைப் பாதிக்கும்படியான வரத்தை அவன் கேட்பதைத் தடுத்து நிறுத்த அவனை ஊமையாக்கினாள். ஆகவே அவன் மூகாசுரன் என்ற பெயரைப் பெற்றான். மூகம் என்றால் ஊமை என்று பொருள்.
என்றாலும் கூட அவன் அசுரர்களின் குருவான சுக்ராசாரியரின் ஆசியினால் பேசும் சக்தியைப் பெற்று முனிவர்களைக் கொல்ல ஆரம்பித்தான். இந்தக் கொடுஞ்செயல் பொறுக்க முடியாதபடி எல்லை தாண்டிச் சென்ற போது பார்வதி தேவி மூகாசுரனை வதம் செய்தாள். ஆகவே மூகாம்பிகை என்ற பெயரையும் பெற்றாள். ஆகவே இந்தத் தலம் கொல்லூர் மூகாம்பிகை தலம் ஆனது.
வாக் தேவதையை வழிபடும் தலமான இதில் அன்னையை வணங்கினால் நுண்ணறிவும் ஆன்மீக அறிவும் பெருகும் என்பது ஐதீகம். இங்குள்ள அம்மனின் சிலை பஞ்ச லோகத்தினால் ஆனது.
விஜயநகர மன்னர்களால் பெரிதும் வழிபடப்பட்ட இந்த தெய்வத்திற்கு ஏராளமான அரிய நகைகளை அவர்கள் காணிக்கையாகச் செலுத்தியுள்ளனர். இங்கு திருப்பதி, திருவனந்தபுரம் கோவில்களில் உள்ளது போன்ற பெருமளவு தங்கம் மற்றும் வைர நகைகள் உள்ளதாக வரலாற்று அறிஞர்கள் கூறுகின்றனர். ஆயிரக் கணக்கில் கூட்டம் கூட்டமாக வந்து அன்னையை வழிபடும் பக்தர்கள், எந்தக் காரியத்திலும் வெற்றியை அடைவது இன்று வரை நிதர்சனமாகக் காணப்படுகிறது. நோய்களிலிருந்து விடுபட வடை நைவேத்யத்தையும் வெற்றி பெற குங்கும அர்ச்சனையையும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.
காலம் காலமாக மக்கள் பக்தியுடன் வணங்கி வரும் கொல்லூர் மூகாம்பிகை தேவி அனைவருக்கும் சர்வ மங்களத்தை தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம். இதுவரை நீங்கள் கேட்டது பங்களூர் செய்தி மடல்.

வழங்கியது ப்ரஹன் நாயகி சத்யநாராயணன். நன்றி.
tags- மூகாம்பிகை தேவி
***