
WRITTEN BY S NAGARAJAN
Post No. 8859
Date uploaded in London – – –27 OCTOBER 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
லண்டனிலிருந்து 26-10-2020 அன்று இந்திய நேரம் மாலை 6.30 மணிக்கு ஞானமயம் நிகழ்ச்சி ஒளிபரப்பட்டது. அதில் கேள்வி – பதில் நிகழ்ச்சியில் இடம் பெற்ற கேள்வியும் பதிலும் கீழே தரப்பட்டுள்ளது. Facebook.com/gnanamayam
பாஸ்கரராயரின் ‘சௌபாக்ய பாஸ்கரம்’! -1
QUESTION ASKED BY MR SARAVANAN

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே சந்தானம் நாகராஜன் வணக்கம்.
இன்று நம் முன் இருக்கும் கேள்வி : பாஸ்கரராயரின் நூல்களின் சிறப்பு பற்றியும், அவை எங்கு கிடைக்கும் என்பது பற்றியும் தான்.
அம்பிகையின் அனுக்ரஹத்தைப் பெற்ற பெரிய மஹான் பாஸ்கர ராயர். மஹராஷ்டிரத்தில் பாகா என்ற ஊரில் இவர் அவதரித்தார். சிவதத்த சுக்லர் என்ற மகானிடமிருந்து ஸ்ரீ வித்யா உபதேசத்தை பெற்று அம்பிகையை நேரில் தரிசிக்கும் அளவு தவம் செய்தார்; அம்பிகை அவருக்கு தரிசனம் தந்து அருளினாள்.
அவர் வாழ்க்கையில் ஏராளமான மெய் சிலிர்க்கும் சம்பவங்கள் உண்டு. இரு சம்பவங்களை மட்டும் இங்கு பார்ப்போம்.
ஒரு சமயம் அவர் மத்யார்ஜுனம் என்னும் திருவிடைமருதூரில் மஹாதானத் தெருவில் வசித்து வந்தார். அங்கு உள்ள தனது இல்லத்தில் தெருத்திண்ணையின் மீது மாலை வேளைகளில் சாய்ந்து கொண்டு தனது பாதங்களை தூணிற்கு முட்டு வைத்து உட்கார்ந்து கொண்டிருப்பது அவர் பழக்கம்.
ஒரு சமயம் அந்த ஊருக்கு அருகிலிருந்த வேப்பத்தூரிலிருந்து வந்த ஒரு சந்யாசி தினமும் பாஸ்கரராயரின் வீட்டு வழியே ஸ்ரீ மஹாலிங்க ஸ்வாமியை தரிசிக்க கோவிலுக்குப் போவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். பாஸ்கரராயர் யதிகளுக்குச் செய்ய வேண்டிய மரியாதைப்படி அவர் வரும் போது எழுந்து நிற்பதில்லை. இதை தினமும் கவனித்து வந்த அந்த துறவிக்கு பாஸ்கரராயர் மீது கோபமும் துவேஷமும் ஏற்பட்டது.
ஒரு நாள் பிரதோஷ தினத்தன்று மாலை நேரத்தில் அந்த துறவியும் பாஸ்கரராயரும் நேருக்கு நேர் சந்திக்கும்படி நேரிட்டது. அப்போது துறவியார் பாஸ்கரராயரை இழித்துப் பேச ஆரம்பித்தார்.
பாஸ்கரராயர் அவரை அணுகி மிகவும் சாந்தமான குரலில், மற்ற இல்லறத்தாரைப் போலத் தாமும் அவரை நமஸ்கரித்திருந்தால் அவரது தலை சுக்கு நூறாக வெடித்துச் சிதறி இருக்கும் என்றும் அவரைக் காப்பாற்றவே தான் அப்படி நமஸ்கரிக்கவில்லை என்றும் எடுத்துச் சொன்னார்.
அங்கிருந்தோர் அவர் சொல்வதை நம்பாமல் இருப்பதை அவர் தெரிந்து கொண்டார்.
அந்தத் துறவியின் தண்டம், கமண்டலம், காஷாய வஸ்திரம் ஆகியவற்றை ஓரிடத்தில் வைக்கச் சொன்னார். பின்னர் அவற்றிற்கு அவர் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்தார். உடனே அந்த தண்ட, கமண்டலம், காஷாய வஸ்திரம் அனைத்தும் சுக்கு நூறாய் வெடித்துச் சிதறின.

அனைவரும் பாஸ்கரராயரின் மஹிமையை உணர்ந்து அவருக்கு நமஸ்காரம் செய்து மன்னிக்குமாறு வேண்டினர். துறவி அவரது மஹிமையை முற்றிலுமாக உணர்ந்தார்.
ஆனால் அன்று முதல் துறவி அந்தத் தெரு வழியே வரும் சமயம் பாஸ்கரராயர் அங்கு இருப்பதில்லை!
இன்னொரு சம்பவம் காசியில் அவர் இருந்த போது நடந்த ஒன்று. அவரது வித்வத் மஹிமையையும் தேவி அவர் மீது காட்டும் கருணையையும் அருளையும் புரிந்து கொள்ளாத சிலர் அவர் மீது மிகுந்த துவேஷம் கொண்டிருந்தனர்.
இதற்கு ஒரு முடிவு கட்ட எண்ணிய பாஸ்கரராயர் தான் ஒரு பெரிய யாகம் செய்யப்போவதாகக் கூறி அதற்கு அனைவரும் வரவேண்டும் என்று அழைப்பு விடுத்தார். அங்கு சென்று அவரை அவமானப்படுத்த வேண்டும் என்று எண்ணிய த்வேஷிகள் குறித்த நாளில் யாகசாலையில் குழுமினர். ஆனால் யாகம் நடத்தப்பட்ட நேர்த்தியையும் அவரது தேஜஸையும் தபோபலத்தையும் கண்டு அவர்கள் வியந்து போயினர். என்றாலும் கூட இடக்கு மடக்காக கண்டபடி கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தனர்.
பாஸ்கரராயரோ மந்திர சாஸ்திர விற்பன்னராக இருந்ததால் கேட்ட கேள்விக்கெல்லாம் உடனுக்குடன் தக்க பதிலை அனைவரும் வியக்கும் படி கூறிக் கொண்டே வந்தார். இதையெல்லாம் உடனிருந்து கவனித்துக் கொண்டிருந்த குங்குமானந்த ஸ்வாமி என்ற தேவி உபாஸகர் அனைவரையும் நோக்கி, “இங்கு இருக்கும் இவர் சாமான்யர் இல்லை. இவர் தோள்களில் அம்பாள் ஆரூடையாக அமர்ந்து கொண்டு உங்கள் கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்லிக் கொண்டிருக்கிறாள்” என்றார்.
அங்கிருந்தவர்களில் நாராயண பட்டர் என்பவர் அப்படி அம்பாள் இருப்பது உண்மை எனில் தான் அம்பாளைத் தன் கண்களால் தரிசிக்க ஆவல் கொண்டிருப்பதாகத் தெரிவித்தார். குங்குமானந்த ஸ்வாமி அவர் தரிசன பாக்கியத்திற்கு யோக்யதை கொண்டவர் என்பதையும் அவர் நோக்கம் தூய்மையானது தான் என்பதையும் நிச்சயித்துக் கொண்டார். பாஸ்கரராயரால் அம்பாளுக்கு அபிஷேகம் செய்யப்பட்ட ஜலத்தால் அவரது கண்களைத் துடைக்கச் சொல்லி விட்டு அவருக்கு சரியான திருஷ்டியை ஏற்படச் செய்தார். நாராயண பட்டர் பாஸ்கரராயர் தோளில் கிளியாய் அமர்ந்திருந்த அம்பாளைக் கண் குளிரக் கண்டு ஆனந்த பரவசம் அடைந்து கண்ணீர் விட்டார்.
பின்னர் அங்கிருந்த அனைவரும் பாஸ்கரராயரிடம் எதைப் பற்றிக் கேட்டுத் தெரிந்து கொள்வது என்று தமக்குள் விவாதித்தனர்.
எந்தப் புராணத்திலும் இல்லாத ஒரு விஷயத்தைப் பற்றிக் கேட்க ஒருமனதாக அவர்கள் முடிவு செய்தனர்.
*** தொடரும்

S NAGARAJAN OF BENGALURU ANSWERING QUESTIONS ON HINDUISM
TAGS பாஸ்கரராய-1