
Post No. 8864
Date uploaded in London – – –28 OCTOBER 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
10-10-2020 மாலைமலர் இதழில் வெளிவந்த கட்டுரை!
அன்றாட வாழ்க்கை : சம்பாதிக்க வழிகள் இதோ!
ச.நாகராஜன்
கொரானா கொடுமை!
காலம் கடுமையான காலமாக மாறி விட்டிருக்கிறது. அன்றாட வாழ்க்கையைச் சமாளிக்க முடியாதபடி கொரானாவின் பாதிப்பு லட்சக்கணக்கானோருக்கு ஏற்பட்டிருக்கிறது – உலகெங்கும்!
தள்ளு வண்டிகளில் கறிகாய் விற்போர், பூ முடித்து விற்போர், நடைபாதை வியாபாரிகள், டாக்ஸி, ஆட்டோ ஓட்டுபவர்கள், ஆம்னி பஸ் இயக்கங்களில் ஈடுபட்டுள்ளோர், சினிமா, மால், வணிகத் தளங்களில் வேலை பார்ப்போர் இப்படி எல்லோரும் பாதிப்புக்கு உள்ளாகி விட்டனர் – எதைச் சொல்ல, யாரை விட!
வீட்டில் பாதுகாப்பாக இருக்க வேண்டும்; கிருமி நாசினியைப் பயன்படுத்த வேண்டும்; சமூக விலகலுக்கான தூரத்தைச் சரியாகக் கடைப்பிடிக்க வேண்டும். சரி, வாழ்க்கை ஓட வேண்டுமே! என்ன வழி?
திறமையுள்ளோருக்கும், முயற்சி உடையோருக்கும், ஊக்கம் உடையோருக்கும் ஏராளமான வழிகள் உள்ளன.
சிந்தனைக்குச் சிறு வழிகாட்டியாக சில வழிகள் இதோ:
முதலில் ஒரு சம்பவம்:

ஒரு டம்ளர் பால்!
ஒரு ஏழைச் சிறுவன். பள்ளிக்கூடக் கட்டணம் கட்ட வழி இல்லை. யோசித்தான். தானாக ஒரு வழியை அவன் கண்டுபிடித்தான். பலருக்கும் பல பொருள்கள் தேவைப்பட்டன. வெளியிலே செல்ல முடியாத வயதானோர், தனியே குழந்தைகளை விட முடியாத இளம் தாய்மார்கள், சற்று வசதியானவர்கள் இப்படிப்பட்டவர்களை அணுகினான்.
வீடு வீடாக அவர்களுக்குத் தேவைப்பட்ட பொருள்களை வாங்கித் தந்தான்.சில அத்யாவசிய பொருள்களைத் தானே விற்று சிறிது காசு சம்பாதிக்க ஆரம்பித்தான். இதில் கிடைக்கும் பணத்தை வைத்து பள்ளிக்கூட கட்டணத்தைக் கட்டஆரம்பித்தான். தனது புத்தகங்களையும் வாங்கிப் படித்தான்.
ஒரு நாள் அவன் கையில் ஒரே ஒரு பைசா (டைம் Dime) தான் இருந்தது. ஒரே பசி.
தான் செல்லவிருக்கும் அடுத்த வீட்டில் அந்த ஒரு டைமைக் கொடுத்து ஏதேனும் வாங்கி உண்ணலாம் என்று அவன் முடிவு செய்தான்.
ஆனால் அடுத்த வீட்டின் கதவைத் தட்டிய போது வெளியே வந்த அழகிய இளம் பெண்ணைப் பார்த்து அவன் தயங்கினான். தான் கேட்க நினைத்ததைக் கேட்க அவனால் முடியவில்லை. ஆனால் பசியோ பசி!
ஒரு டம்ளர் தண்ணீர் தருமாறு கேட்டான் அவன்.
அந்த இளம் பெண் அவன் முகம் வாடியிருப்பதைப் பார்த்து அவன் அளவற்ற பசியால் துடிக்கிறான் என்பதை உணர்ந்து கொண்டாள். ஆகவே தண்ணீருக்குப் பதிலாக ஒரு பெரிய டம்ளரில் பாலைக் கொண்டு வந்து கொடுத்தாள்.
மெதுவாக அதைக் குடித்த அந்தச் சிறுவன், “நான் இந்தப் பாலுக்காக எவ்வளவு கொடுக்க வேண்டும்?” என்று அந்தப் பெண்ணிடம் கேட்டான்.
“எனக்கு ஒன்றும் தர வேண்டாம். அன்பிற்கு விலை பேசக் கூடாது என்று என் அம்மா எனக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறாள்” என்றாள் அவள்.
“அப்படியானால் என் இதயத்தின் ஆழத்திலிருந்து உங்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றான் அந்தச் சிறுவன்.
அந்தச் சிறுவனின் பெயர் ஹோவர்ட் கெல்லி (Howard Kelly).

அந்த வீட்டை விட்டு வெளியேறும் போது ஒரு புத்துணர்ச்சியைப் பெற்றான் அவன். கடவுள் மேல் அவனுக்கு இருந்த நம்பிக்கை கூடியது; நல்ல உணர்ச்சிகள் கூடியது!
ஒரு தக்க தருணத்தில் இப்படி ஒரு அன்பைக் காட்டிய பெண்மணி அவனுக்கு வாழ்க்கையில் ஒரு புதிய பாடத்தைக் கற்றுக் கொடுத்தாள்.
வருடங்கள் ஓடின.
அவன் ஒரு பெரிய டாக்டராக ஆனான்; பெயரும் புகழும் பெற்றான்.
ஒரு நாள் எந்த இளம் பெண் அவனுக்குப் பாலை வழங்கினாளோ அவளுக்கு கடுமையான நோய் ஒன்று வந்தது.
அவள் வசித்து வந்த ஊரில் உள்ள டாக்டர்கள் திகைத்தனர்; அதைக் குணப்படுத்த அவர்களால் முடியவில்லை.
அவர்கள் நகருக்குச் சென்று ஹோவர்ட் கெல்லியைப் பார்க்குமாறு ஆலோசனை கூறினர்.
அந்தப் பெண்ணும் ஸ்பெஷலிஸ்டான ஹோவர்ட் கெல்லியைப் பார்க்கச் சென்றாள்.
அந்தப் பெண் எந்த ஊரிலிருந்து வந்திருக்கிறாள் என்பதைக் கேட்டவுடன் கெல்லியின் கண்கள் பளபளத்தன. நேராக நோயாளி இருந்த இடத்திற்கு விரைந்து சென்றார்.
ஆம், அதே பெண் தான்! அவர் நன்றாக அடையாளம் கண்டு கொண்டார்.
உடனடியாக சிகிச்சையைத் தொடங்கினார். எப்பாடு பட்டேனும் அவளைக் காப்பாற்றுவது என்று உறுதி பூண்டார்.
பெரும்பாடு பட்டு கடைசி கடைசியாக அவர் வென்றார். அந்தப் பெண் பூரண குணமடைந்தாள்.
கெல்லி அக்கவுண்ட்ஸ் பிரிவின் அதிகாரிக்கு அந்தப் பெண்மணிக்கு ஆன செலவுக்கான பில்லைத் தனக்கு அனுப்பச் சொன்னார். அக்கவுண்ட்ஸ் பிரிவும் அவரது அங்கீகாரத்திற்காக அந்த பில்லை அவரிடம் அனுப்பியது.
அந்தப் பில்லைப் பார்த்தார் அவர்! பெருந்தொகை தான்!!
அந்த பில்லின் கீழே கோடியில் சில வார்த்தைகளை அவர் எழுதி விட்டு, அந்த பில்லை அந்தப் பெண்ணிடம் அனுப்பச் சொன்னார்.
அந்தப் பெண்மணி நடுநடுங்கிக் கொண்டிருந்தாள், பில்லை நினைத்து – இந்த ஜென்மத்தில் அந்த பில் தொகையைத் தன்னால் கட்ட முடியுமா என்பதே அவள் பயம்!
அந்த பில்லை வாங்கிப் பார்த்தாள்! அடேயப்பா!
ஆனால் பில்லின் அடியில் ஓரத்தில் எழுதப்பட்ட வார்த்தைகள் அவள் கவனத்தை ஈர்க்கவே அவள் அதைப் படித்தாள் :
“Paid in full with one glass of milk”
Signed Howard Kelly
ஒரு டம்ளர் பாலால் பில் முழுவதும் கட்டப்பட்டது.
ஹோவர்ட் கெல்லி.
அந்தப் பெண்மணியின் கண்களில் நீர் துளித்தது.
அவள் ஹோவர்ட் கெல்லி யார் என்பதை இப்போது தெரிந்து கொண்டாள்.
அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ்?!
சாதாரணமாக வாழ்க்கையை ஆரம்பித்த கெல்லி தன் முயற்சியினால் பெரும் டாக்டரானார். மனிதப் பண்புகளோடு வாழ்ந்தார்.
ஏதோ ஒரு சம்பவம் என்று இதை ஒதுக்கி விட முடியாது.
நம் கண் முன்னே நடந்த, நடக்கும் நூற்றுக் கணக்கான சம்பவங்களை உன்னிப்பாகக் கவனித்தால் பார்க்க முடியும்.
டீ விற்றவர் நாடாளும் தகுதி பெறுகிறார்; வீட்டில் மின் வசதி இல்லாத காரணத்தால் தெரு விளக்கின் அடியில் படித்தவர் உயர் நீதி மன்ற நீதிபதியாகிறார்; பஸ் கண்டக்டராக இருந்தவர் கோடிக்கணக்கானோர் தலை உச்சி மீது வைத்துக் கொண்டாடும் பார் புகழும் நடிகராகிறார்; இசைக் குழுவில் உதவியாளராக இருந்தவர் இசை சாம்ராஜ்யத்திற்கே ராஜாவாகிறார்; பேப்பர் வாங்கக் காசில்லாத காரணத்தால் கணிதப் பிரச்சினையை சிலேட்டில் எழுதி அதன் விடையை அதற்கு அடியில் எழுதி இன்று வரை வழிமுறைகள் காணப்படாததால் அதை எப்படி அவர் கண்டுபிடித்தார் என்று கணித மேதைகள் எல்லாம் திணறும்படியான கணித மேதையாகிறார் – இப்படி ஆயிரக் கணக்கில் சம்பவங்களை நினைத்துப் பார்த்து வெற்றிக்கான அடிப்படை காரணங்களை உணரலாம்.
திறமை, சலியாத உழைப்பு, மனம் தளராத முயற்சி, டிமாண்ட் அண்ட் சப்ளை – தேவை அதற்குரியதைத் தருதல் – என்ற உத்தியைப் பயன்படுத்தல் போன்ற அருங்குணங்களே இந்த வெற்றிக்கு காரணம். அத்தோடு தன்னைப் போலவே திறமையுடன் இருப்போரைத் தட்டிக் கொடுத்து தூக்கி உயர ஏற்றுவதும் இவர்களது புகழ் இன்னும் மேலோங்கக் காரணமாகி விடுகிறது.
இன்றைய கால கட்டத்தில் ஏதேனும் வழிகள் உண்டா? உண்டு. மாதிரிக்காக சில வழிகளை இங்கே காணலாம்.
மொழி பெயர்ப்பு : தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நிபுணரா நீங்கள்? கணினியும், இணைய தள இணைப்பும் உங்களிடம் இருக்கிறதா? இல்லையென்றாலும் அவற்றைக் கொண்டிருப்பவர்கள் உங்களுக்கு உதவி செய்பவர்களாக இருக்கிறார்களா?
ஆயிரக்கணக்கான மொழிபெயர்ப்பு வேலைகள் தயாராக இருக்கின்றன. வீட்டிலிருந்தே தனக்கு உகந்த நேரத்தில் வேலை செய்து பணத்தைப் பெறலாம். ஒரு ஆங்கில வார்த்தைக்கு மேலை நாட்டு கம்பெனிகள் ரூபாய் மூன்றிலிருந்து இரண்டு ரூபாயும், சிங்கப்பூர், சீனா உள்ளிட்ட நாடுகள் ஒரு வார்த்தைக்கு ஒன்றரை ரூபாயும், இந்தியக் கம்பெனிகள் (பிரதானமாக டெல்லி கம்பெனிகள்) ரூபாய் ஒன்றே கால் முதல் ஒரு ரூபாய் வரையும் தருகின்றன.
He went there – அவன் அங்கே போனான் என்று மொழி பெயர்த்தால் ரூபாய் ஒன்பது கிடைக்கும்; குறைந்த பட்சம் மூன்று ரூபாய் கிடைக்கும்.
http://www.proz.com இல் இலவசமாக ரிஜிஸ்டர் செய்து கொள்ளலாம். உங்களை நாடி அறிவிப்புகள் பல்வேறு நிறுவனங்களிலிருந்து வந்து கொண்டே இருக்கும். திறமைக்குத் தக, உழைப்புக்குத் தக வருமானம் உறுதி. (பதினைந்து நாட்களில் பணம் வங்கிக் கணக்கிற்கு வந்து விடும்)
வாய்ஸ் ஓவர் (Voice Over) : நல்ல குரல் வளம் கொண்டவரா? உச்சரிப்புத் தெளிவாக இருக்கிறதா? ஆண்கள், மற்றும் பெண்கள் குரலுக்கு ஏக டிமாண்ட்! உரையை நிறுவனங்கள் உங்களுக்கு அனுப்ப கம்ப்யூட்டரில் குரலைப் பதிவு செய்து அனுப்பி விடலாம்.
சப்-டைட்லிங், டப்பிங் : இன்றைய உலக சந்தையில் ஆயிரக்கணக்கான படங்கள் தமிழாக்கம் செய்யப்பட வேண்டிய தேவையில் இருப்பதால் இதில் தகுதி உள்ளோர் இதைச் செய்யலாம்; நல்ல வருமானத்தை அடையலாம்.
ஆன் லைன் டியூஷன்: இது ஒரு அருமையான வழி. படித்த இல்லத்தரசிகள் வீட்டிலிருந்தே கணிதம், விஞ்ஞானம் ஆகியவற்றை பல்வேறு ‘ஆப்ஸ்’ மூலமாக குழந்தைகளுக்குச் சொல்லித் தருகிறார்கள். நல்ல வருமானத்தை வீட்டிலிருந்தவாறே பெறுகின்றனர்.
ஆன்லைன் கலைகள் : யோகா, நடனம், இசை ஆகியவற்றிற்கும் இன்றைய கால கட்டத்தில் நாளுக்கு நாள் தேவை அதிகமாகிக் கொண்டே போகிறது. அனைவருமே வீட்டில் இருந்தவாறே கற்பதைப் பெரிதும் விரும்புகின்றனர்.
கற்பிக்கும் கூடங்களுக்குச் செல்லும் செலவு, நேரம் ஆகியவை மிச்சம். தேவைப்பட்ட போது மட்டும் மாஸ்டர் நேரடியாக வந்து கவனிப்பார்.
கைவினைஞர்களுக்கான காலம் : வீட்டிலிருந்தே ஏராளமான இல்லத்தரசிகள் வடிவமைப்பாளர்களாக – டிஸைனராக – ஆகி வருகின்றனர். நகைகளுக்கான வடிவமைப்பு, வாழ்த்து அட்டைகள், டி ஷர்ட்டுகளுக்கான பிரிண்டுகள் உள்ளிட்ட ஏராளமானவற்றைத் தரும் இவர்களது அனுபவ பழமொழி :- ‘கைத்தொழில் ஒன்றைக் கற்றுக் கொள்; கவலை உனக்கிலை ஒத்துக் கொள்!’ என்பதாகும். வடிவமைப்பதற்கு முன்னர் இன்றைய சந்தையில் எது அதிகமாகத் தேவைப்படுகிறது (டிமாண்ட் எதற்கு) என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.
சர்வேக்கள், ஆவணச் சுருக்கங்கள் ; பல பெரிய நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளுக்கான சர்வே எடுக்க தக்க உதவியாளர்களைத் தேடுகின்றன; பெரிய ஆவணங்களைப் படிக்க நேரமில்லாததால் அதனுடைய சுருக்கத்தை முக்கியமானவற்றை விடாமல் சுருக்கித் தருபவர்களை நாடுகின்றன. போட்டொஷாப், இன் டிஸைன் தெரிந்தவர்களுக்குத் தனி யோகம் தான்! இவர்களுக்கான இன்றைய டிமாண்ட் மிக அதிகம்!
தேவையற்றதை அகற்றல், விற்றல் : வீட்டில் நிர்பந்தமான ஓய்வை எடுக்க வேண்டிய கொரானா காலத்தில் நமக்குத் தேவையற்ற பொருள்களைப் பிரித்து அதை விற்றுக் காசு பெறலாம். விற்பதற்கான சென்னை உள்ளிட்ட நகரங்களில் இதற்கென இருக்கும் கம்பெனிகளில் உங்கள் விளம்பரத்தை இலவசமாகக் கொடுத்தால் தேவைப்பட்டோர் வீடு தேடி வந்து தங்களுக்குத் தேவையானவற்றை பணத்தைக் கொடுத்து வாங்கிச் செல்கின்றனர்.
மாறுதல் ஒன்றே மாறாதது!
இயற்கையில் மாறுதலுக்கு உட்படாதது மாறுதல் ஒன்றே.
ஆகவே காலத்திற்குத் தக நாமும் நமது வழிமுறைகளும் மாறிக் கொண்டே இருக்க வேண்டும்; இது இயல்பு.
உலகின் ஆகப் பெரிய கம்பெனியான அமேஸானின் நிறுவனரான ஜெஃப் பெஜோஸ் சென்ற நவம்பரில், “அமேஸான் முழுகாத அளவிற்குப் பெரிய கம்பெனி ஒன்றும் இல்லை; இன்னும் 30 வருடங்கள் மட்டுமே தலைமை இடத்தை நாம் தக்க வைக்க முடியும்” என்ற பரபரப்பு வெடிகுண்டைத் தூக்கிப் போட்டார்.
அமேஸானுக்கே இந்த நிலை என்றால் மற்றவர்கள் கதி என்ன?
காலத்திற்கேற்ற மாறுபட்ட சூழ்நிலையில் நம்மிடம் இருக்கின்ற ஆதாரவளங்களையும் திறமையையும் வைத்துக் கொண்டு நமது உத்திகளை மாற்றிக் கொண்டே முன்னேற வேண்டும் என்பது தான் இன்றைய வழிமுறை.
வீடு தேடி வருகிறது கறிகாய்களும், மளிகை சாமான்களும்! வீட்டிலேயே திரைப்படக் காட்சிகளைக் கண்டு களிக்கும் காலம் இது.
ஆகவே கொரானா காலத்தில் ஆட்டோ, டாக்ஸி ஒட்டுநர் கூடத் தன் பழைய உத்தியான ஆட்டோ/டாக்ஸி ஸ்டாண்டில் வாடிக்கையாளரை வரவேற்கும் காலத்தை விட்டு விட்டு தனக்கென வாடிக்கையாளரை உருவாக்கி ஆஸ்பதித்திரி, கல்லூரி, பணியிடம் ஆகியவற்றிற்குச் செல்லும் முறையினால் முன்பை விட அதிக பணம் சம்பாதிக்கும் வழிமுறையை எண்ணிப் பார்க்கலாம்.
முன்னேற உத்தியை மாற்றுங்கள்!
டிமாண்ட் – சப்ளை – நமது திறமை- சலியாத உழைப்பு – மனம் தளராத முயற்சி இதுவே இன்றைய கொரானா காலத்தை அதை வென்று முன்னேறுவதற்கான வழிமுறை!
கொரானாவையே – சமூக விலகல் செய்து விடலாம் இதனால்! எப்போதும் நம்மிடமிருந்து அது ஆறு அடி தூரம் விலகியே நிற்கும்!
இறுதியாக எல்லாக் காலத்துக்கும் பொருந்தும்படியான வள்ளுவரின் அறிவுரையை மறக்கவே கூடாது.
முயற்சி திருவினை ஆக்கும்; முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும் -திருக்குறள் 616
பொருள் : முயற்சி ஒருவனுக்குச் செல்வத்தைப் பெருக வைக்கும்; முயற்சி இல்லாமல் இருத்தல் வறுமையைச் சேர்த்து விடும்.
***
(இந்தக் கட்டுரையாளர் 4000க்கும் மேற்பட்ட கட்டுரைகளைத் தமிழிலும் 250க்கும் மேற்பட்ட கட்டுரைகளை ஆங்கிலத்திலும் வானொலி, பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையதளம் உள்ளிட்ட பல்வேறு ஊடகங்கள் வாயிலாக வழங்கியவர். வெற்றிக்கலை, திரைப்படப் பாடல்களோடு ஒரு பயணம் உள்ளிட்ட இவரது 61 புத்தகங்கள் மின்னணு புத்தகங்களாகவும் 20 புத்தகங்கள் அச்சிட்ட புத்தகங்களாகவும் வெளி வந்துள்ளன. பல்வேறு துறையினருக்கான பயிலரங்கம் மற்றும் பயிற்சி வகுப்புகளை நடத்தியவர். இவரது மின்னஞ்சல் முகவரி snagarajans@gmail.com))
.
tags–ஹோவர்ட் கெல்லி