
WRITTEN BY S NAGARAJAN
Post No. 8868
Date uploaded in London – – –29 OCTOBER 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
பாஸ்கரராயரின் ‘சௌபாக்ய பாஸ்கரம்’! – 2
ச.நாகராஜன் உரை தொடர்ச்சி
பாஸ்கரராயரிடம் லலிதா சஹஸ்ரநாமத்தில் 237வது நாமமாக வரும் ‘மஹா சதுஷ் ஷஷ்டி கோடி யோகினீ கண ஸேவிதா’ என்பதற்கு பொருளை விளக்குமாறு வேண்டினர்.
‘மஹா சதுஷ் ஷட்ஹ்டி கோடி யோகினீ கணங்களால் சேவிக்கப்படுபவள் என்று கூறப்படுவதால் அறுபத்தி நான்கு கோடி யோகினிகளின் உற்பத்தி லக்ஷணம், சரித்திரம் ஆகியவற்றைச் சொல்லும் படி அவர்கள் கேட்டனர்.
உடனே பாஸ்கரராயர், “நான் அவைகளைச் சொல்லிக் கொண்டு வருகிறேன். நீங்கள் எழுதிக் கொண்டு வாருங்கள்” என்று சொல்லி விட்டுக் கடகடவென சொல்ல ஆரம்பித்தார். அதை எழுத ஆரம்பித்தவர்கள் திகைத்துப் போனார்கள். வேகமாக பாஸ்கரராயர் சொல்லிக் கொண்டு வரவே அவரது வேகத்திற்கு அவர்களால் ஈடு கொடுக்க முடியவில்லை. சிறிது நேரத்திலேயே அவர்கள் அனைவரும் க்ளைத்துப் போயினர். திகைத்துப் பிரமித்துப் போன அவர்கள் அவரை வணங்கி தங்களை மன்னித்து அருள் புரிய வேண்டும் என வேண்டினர்.
இப்படி ஒன்றல்ல, இரண்டல்ல ஏராளமான சம்பவங்கள் மூலம் அம்பாளின் அனுக்ரஹம் எப்படி எல்லாம் வரக்கூடும் என்பதை அவர் நிரூபித்து அனைவரையும் அம்பாளின் அனுக்ரஹத்திற்கு பாத்திரமாகும்படி அருள் பாலித்து வந்தார்.

பாஸ்கரராயர் நாற்பதுக்கும் மேற்பட்ட அரிய நூல்களைப் படைத்துள்ளார். வேதாந்தத்திற்கு ஒரு சண்ட பாஸ்கரம், மீமாஸைக்கு ஒரு வாத கௌதூஹலம், வியாகரணத்திற்கு ஒரு ரஸிக ரஞ்ஜனி, நியாயத்திற்கு ஒரு நியாய கண்டனம், சந்தஸ் சாஸ்திரத்திற்கு ஒரு சந்தோ பாஸ்கரம், காவ்யத்திற்கு ஒரு ஸுபாஷிதம், வேதத்திற்கு ஒரு வைதீக கோசம், ஸ்மிருதிக்கு ஒரு ஸ்மிருதி தத்வம், ஸ்தோத்ரத்திற்கு ஒரு சிவ தண்டகம், மந்த்ர சாஸ்திரத்திற்கு ஒரு வரிவஸ்யா ரஹஸ்யம் என்று இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.
லலிதா சஹஸ்ரநாமத்திற்கு அவர் அருளியுள்ள பாஷ்யம் சௌபாக்ய பாஸ்கரம் என்ற நூலாகும். ஆயிரம் நாமங்களுக்கும் பாஸ்கரராயர் தரும் அற்புதமான விளக்கங்கள் மெய்சிலிர்க்க வைப்பவையாகும்,
அம்பாளின் அருளைப் பெற விழையும் யாரானாலும் அற்புதமான இந்த நூலைப் படிக்காமல் யாரும் இருக்கக் கூடாது. நூற்றுக் கணக்கான அபூர்வமான ரகசியங்களை இதிலிருந்து பெறலாம். இதை உணர்ந்து சஹஸ்ரநாமத்தைச் சொல்பவர்கள், இகலோகத்திற்கான செல்வம், ஆரோக்கியம், குடும்ப மேன்மை, மன நிம்மதி ஆகியவற்றையும் பரலோகத்திற்கான அம்பாளின் அருளையும் நிச்சயமாகப் பெறலாம்.
விஷ்ணு சஹஸ்ர நாமம் ஆயிரத்தையும் சொல்ல முடியாதவர்கள் என்ன செய்வது என்று கவலைப்பட்ட அம்பிகை ஈஸ்வரனை நோக்கி கேன லகு உபாயம் – ஏதாவது ஒரு எளிய வழி Short Cut இருக்கிறதா என்று கேட்க ஈஸ்வரன், ஸ்ரீ ராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே சஹஸ்ர நாம தத்துல்யம் ஸ்ரீ ராம நாம வரானனே – ராம நாமம் ஆயிரம் நாமங்களுக்கு சமம் என்று கூறி லகு உபாயத்தைச் சொல்லி அருளினார்.
அது போல அம்பிகையின் நாமம் ஆயிரத்தையும் சொல்ல முடியாதோர் கங்கா, பவானி, காயத்ரி, காளி லக்ஷ்மி, சரஸ்வதி, ராஜராஜேஸ்வரி ,பாலா, சியாமளா, லலிதா என்ற நாமங்களைச் சொன்னால் அது ஆயிரம் நாமத்தைச் சொன்னதற்கு சமமாகும். இது போன்ற அபூர்வ தகவல்களைத் தரும் நூல் ஒன்று உள்ளது. அதுதான் லலிதாசஹஸ்ரநாம பாஷ்யம்!

சஹஸ்ரநாம பாஷ்யமானது G.V. கணேச ஐயரால் தமிழிலே வழங்கப்பட்டிருக்கிறது. இந்த தமிழ் நூல் 1938ஆம் ஆண்டு வெளியிடப்பட்டுள்ளது. இது பாஸ்கரராயரின் பாஷ்யத்திற்கிணங்க இனிய தமிழ் நடையில் தரப்பட்டுள்ள ஒரு அரிய நூலாகும்.
இதில் பாஸ்கரராயர் வரலாறு பற்றியும் ஆயிரம் நாமங்களுக்கான அதிசய அபூர்வ அர்த்தங்களும் உள்ளன. சுமார் 978 பக்கங்கள் உள்ள இந்த நூலின் அருமையை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை; அவ்வளவு ரகஸியார்த்தங்களைத் தரும் நூல் இது.
பாஸ்கரராயர் 1729ஆம் ஆண்டு ஆஸ்வீஜ சுக்ல நவமி அன்று இந்த பாஷ்யத்தை ஆரம்பித்து 1733ஆம் ஆண்டு சிவராத்ரி புண்யதினத்தன்று இதைப் பூர்த்தி செய்துள்ளார்.
பாஸ்கரராயரின் சமாதி கும்பகோணம் – மயிலாடுதுறை மார்க்கத்தில் திருவாலங்காடு ஊருக்கு அருகே உள்ள பாஸ்கரராயபுரத்தில் அமைந்துள்ளது. இந்த அதிஷ்டானத்தில் உரிய முறைப்படியான வழிபாடு இன்றும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
அருமையான இந்த நூலை இணையதளத்திலிருந்து SCRIBD.COM உள்ளிட்ட பல தளங்களிலிருந்தும் டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
ஸர்வம் ஜயதி.
நன்றி, வணக்கம்.
tags– பாஸ்கரராயர்-2
***