
Post No. 8877
Date uploaded in London – – –1 NOVEMBER 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
அயோத்யா – சில உண்மைகள்! – 2
ச.நாகராஜன்
அக்பர் அந்த மேடையிலேயே ராமரது சிலையுடன் கூடிய ஒரு சிறிய கோவில் கட்ட அனுமதி தந்தார்.
இந்த சம்பவத்தைப் பற்றி அயின் -இ-அக்பரி (Ain-i-Akbari) தரும் தகவல்கள் இவை:-
ஹிந்துக்கள் ராம ஜென்ம பூமியை மீண்டும் பெற 20 முறைகள் முயற்சித்தனர். ராஜா பீர்பல், ராஜோ தோடர்மால் ஆகியோரின் வற்புறுத்தலின் பேரில் ஜலால்-உட்- டின் அக்பர் (Jalal – ud-din Akbar) பாப்ரி மஜ்ஜித்தின் எதிரில் ஒரு மேடையை அமைக்க அனுமதி தந்ததோடு அங்கு ஒரு சிறிய ராமர் கோவிலையும் அமைத்துக் கொள்ளலாம் என்றும் கூறினார். அத்துடன் அங்கு வழிபாடு செய்ய வரும் ஹிந்துக்களுக்கு ஒரு தீங்கும் இழைக்கக் கூடாது என்றும் உத்தரவிட்டார்.
இந்த ஆணையானது அக்பரின் மகனான நூருதீன் ஜஹாங்கீராலும் பேரன் ஷாபுடீன் ஷாஜஹானானாலும் பின்பற்றப்பட்டது; அங்கு தினசரி வழிபாடு தடையின்றி நடத்தப்பட்டு வந்தது.
ஷாஜஹானிடமிருந்து மகுடத்தைப் பறித்த அவுரங்கசீப் அயோத்தி பக்கம் தன் பார்வையைச் செலுத்தினான். தனது படைத் தளபதி ஜபாஸ் கானை (Jabaz Khan)
அங்கு அனுப்பினான். நடக்கப் போகும் தாக்குதலை உணர்ந்த ஹிந்துக்கள் ராமர் சிலையையும் கோவிலின் முக்கியமான பொருள்களையும் பத்திரமான இடத்திற்குக் கொண்டு சென்று பாதுகாத்தனர்.
அயோத்தியைச் சுற்றி இருக்கும் கிராமங்களுக்கெல்லாம் வரப் போகும் தாக்குதல் குறித்துச் செய்தி பரவியதால் அனைவரும் ஒன்று திரண்டு வருவதை எதிர்கொள்ளத் தயாராயினர்.
அயோத்தியாவில் உள்ள அஹல்யா காட்டில், பரசுராம ஆஸ்ரமத்தில் சமர்த்த ராமதாஸரின் புத்திரரான வைஷ்ணவ தாஸ் வசித்து வந்தார்.
அவருக்கு ஆதரவாக பத்தாயிரம் சாதுக்கள் ஒன்று திரண்டனர். ஜபாஸ் கானின் தாக்குதலைப் பற்றிக் கேள்விப் பட்ட அவர்கள் அனைவரும் ஏற்கனவே ஒருங்கு திரண்டிருந்த ஹிந்து சேனையுடன் இணைந்தனர்.

ஊர்வசி குண்டில் (Urvashikund) ஹிந்து சேனைக்கும் முகலாய சேனைக்கும் இடையே போர் மூண்டது. ஏழு நாட்கள் நடைபெற்ற இந்தப் போரில் முகலாயப் படை தோல்வியுற்று ஓடிப் போனது.
இதைத் தொடர்ந்து நான்கு வருடங்கள் அமைதி நிலவியது. ஆனால் பாதுகாப்பு இல்லாத ஒரு நிம்மதியற்ற நிலைமை தான் அது!
1664ஆம் ஆண்டு அவுரங்கசீப் மீண்டும அயோத்தியைத் தாக்கினான். பத்தாயிரம் ஹிந்துக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
அவர்களின் உடல்கள் கோவிலின் மேற்கே இருந்த ஒரு பெரிய கிணற்றில் போடப்பட்டன. அதைச் சுற்றி சுவர் எழுப்பப்பட்டு மூடப்பட்டது. அவுரங்கசீப்பின் படுகொலையைச் சொல்ல அந்தக் கிணறு காலத்தை வென்று அவுரங்கசீப்பின் அக்கிரமச் செயலை பறை சாற்றும் வண்ணம் அப்படியே நின்றது.
இன்று அந்தக் கிணறையும் கூட முஸ்லீம்கள் தங்களுடையது தான் எனச் சொந்தம் கொண்டாடுகின்றனர்.
இந்தச் சண்டைக்குப் பின்னர் தான் ராமர் நிறுவப்பட்ட மேடையும் கூட அழிக்கப்பட்டது.
இன்றும் கூட ராம நவமியன்று ஹிந்துக்கள் இந்த சிதிலமான மேடைக்கு பூக்களைச் சமர்ப்பித்து தங்கள் வழிபாட்டைத் தொடர்கின்றனர்.
அவுரங்கசீப்பிற்குப் பின்னர் லக்னௌ நவாப்களின் ஆளுகைக்குள் அயோத்தி வந்தது.
ஹிந்துக்கள் மீண்டும் ராம ஜென்ம பூமி தங்களுடையதே என்பதை நவாப் சஹாதத் அலியிடம் (Nawab Sahadat Ali) கூறினர். ஆனால் பலன் ஒன்றும் ஏற்படவில்லை.
*** தொடரும்

TAGS – அயோத்யா – 2, உண்மைகள்! – 2