மஹரிஷி அக்னிபர் – ஐந்து கந்தர்வ மங்கைகளைக் கவர்ந்தவர்! (Post.8905)

மஹரிஷி அக்னிபர் – ஐந்து கந்தர்வ மங்கைகளைக் கவர்ந்தவர்!

ச.நாகராஜன்

கந்தர்வ உலகில் சுக சங்கீதி, சுசீலன், ஸ்வரபேதி, சந்திரகாந்தன்,சுப்ரபன்  என்று ஐந்து கந்தர்வர்கள் இருந்தனர். அவர்களுக்கு முறையே ப்ரமோகினி, சுசீலை, சுஸ்வரை, சுதாரை, சந்திரிகை ஆகிய அழகிய பெண்கள் இருந்தனர்.

கந்தர்வ மங்கையர் என்பதால் அவர்களின் அழகு சுடர் விட்டுப் பிரகாசித்தது.

நிலவு போன்ற தேக காந்தியும், சந்திரனைப் போன்ற அழகிய முகமும், பார்ப்பவர்கள் மனதைக் கவரத்தக்கபடி அழகே ஒரு உருவம் எடுத்து வந்தது போன்ற அவர்களைக் கண்டால் யாருக்குத் தான் பிடிக்காது?

இந்த இயற்கை அழகோடு சர்வ ஆபரணங்களினால் அலங்காரம் செய்து கொண்டும், மிகுந்த சங்கீத ஞானத்தைக் கொண்டும் நானாவித லீலைகளைச் செய்து கொண்டும் அவர்கள் ஐவரும் குபேரனுடைய தோட்டத்தில் உல்லாசமாக இருந்து வந்தனர்.

ஒரு சமயம் வைகாசி மாதத்தில் பூலோகம் நோக்கி அவர்கள் ஐவரும் வந்தனர். நர்மதை நதி தீரத்தை அடைந்த அவர்கள் பார்வதி தேவியை பூஜிப்பதற்காக அங்கிருந்த நந்தவனத்திலிருந்து பலவித  மலர்களைப் பறித்துக் கொண்டு, ஸ்நானம் செய்தனர். லோகமாதாவை சந்தனம், புஷ்பம் ஆகியவற்றால் மிகுந்த பக்தியுடன் பூஜித்தனர். பின்னர் பாடல்களைப் பாடியும் நடனம் ஆடியும் மகிழ்ச்சியுடன் இருந்தனர்.

அப்போது அந்த நதி தீரத்திற்கு மாத்யான்ஹ சந்தி ஜெபம் செய்ய ஒரு பிரம்மசாரி வந்தார். அழகிய மேனி கொண்ட அவரது விசாலமான கண்கள், அகன்ற மார்பு, முழங்கால் வரை நீண்ட கைகளுடன், மான் தோல், தண்டம், இடுப்பில் தர்ப்பை ஆகியவற்றுடன் இருந்த அவரது யௌவன ஸ்வரூபத்தைக் கண்ட அந்த ஐந்து மங்கையரும் வேடனால் அடிக்கப்பட்ட மான்கள் போல மன்மத பாணத்தால் அடிக்கப்பட்டனர்.

ஐவரும் அவரைக் காம விகாரத்துடன் நோக்கினர்.

‘நமக்குத் தகுந்த ஒருவர் வந்து விட்டார்’ என்று தங்களுக்குள் பேசிக் கொண்ட அவர்கள், ‘இவர் யார்? கந்தர்வரா, கின்னரரா, சித்தரா அல்லது இஷ்டம் போல உருவை மாற்ற வல்லவரா, ரிஷி குமாரரா’ என்று யோசிக்க ஆரம்பித்தனர்.

‘பார்வதி தேவியை பூஜித்ததன் பலனாகவே இவர் இங்கு வந்திருக்கிறார்’ என்று எண்ணிய அவர்கள் இவர் மன்மதன் போலத் தோற்றமளித்தாலும் கூட ரதி தேவி இல்லையே, ஆகவே இவரை நாம் அணுகலாம் என்று நிச்சயித்தனர்.

இவர்கள் பேசுவது அனைத்தையும் அந்த பிரம்மசாரி கேட்டுக் கொண்டிருந்தார். அவர் வேதநிதி முனிவரின் குமாரர். அவர் பெயர் அக்னிபர்.

மிகுந்த புத்திசாலியான அந்த ரிஷிகுமாரர் தனக்குள் யோசிக்க ஆரம்பித்தார்.

‘விஸ்வாமித்திரர், பராசரர், கண்டு முனிவ்ர், தேவலர் உள்ளிட்ட பல பெரிய ரிஷிகள் கூட பெண் மயக்கத்தினால் தம் வசம் இழந்து தவத்தை இழந்தனர். ஆகவே என்ன செய்தால் இவர்களின் காமவலையிலிருந்து தப்பிக்கலாம்’ – இப்படி எண்ணமிட்ட அக்னிபர் அவர்கள் தம்மை அணுகுமுன் தாம் வீட்டிற்குச் செல்வதே சரி என்ற முடிவுக்கு வந்தார். தனது யோகபலத்தால் தன் உருவை மறைத்துக் கொண்டு வீடு போய் சேர்ந்தார்.

கந்தர்வ மங்கையர் ஐவரும் இந்த அற்புதத்தைக் கண்டு திகைத்தனர்.

“இவர் இந்திரஜாலம் அறிந்த மாயக்காரரோ’ என்று புலம்பினர். மறுநாள் எப்படியும் நதி தீரம் வந்து தானே ஆக வேண்டும் என்று எண்ணிய அவர்கள் ஐவரும் அந்த இரவை அங்கேயே கழித்தனர்.

மறுநாள் காலை சூரியோதயம் சமயம் ஸ்நானம் செய்ய வழக்கம் போல அக்னிபர் அங்கே வந்தார்.

“ஏ! காதலரே! எம்மை ஏமாற்றி விட்டு நேற்று சென்று விட்டீர். இன்று அப்படி முடியாது” என்று கூறியவாறே ஒடிச் சென்று அவரைத் தழுவிக் கொண்டனர்.

அக்னிபர், “நீங்கள் சொல்வது எனக்கு அநுகூலமாகவே இருக்கிறது. ஆனால் நான் இப்போது குருகுலவாசத்தில் வித்யாப்யாசம் செய்து வருகிறேன். ஆகவே விதிகளுக்கு மாறாக பெண்களுடன் உடலுறவு கொள்வது தகாது. இது ப்ரம்மசரிய விரதத்திற்கு பங்கமாகி விடும்” என்றார்.

கந்தர்வ மங்கையரோ அவரைப் பலவாறாக நிர்ப்பந்திக்க ஆரம்பித்தனர். தங்களை காந்தர்வ விவாஹம் செய்து கொள்ளலாம் என்று அவர்கள் கூறினர்.

அக்னிபர், “குருவின் அனுமதியின்றி என்னால் ஒன்றும் செய்ய முடியாது” என்று கூறினார்.

அதற்கு அவர்கள், ‘நீர் ஒரு ஒரு முட்டாள் என்பதில் சந்தேகமே இல்லை. ஏனெனில் ஒரு புத்திமானானவன் வலுவில் வரும் உத்தம அழகியை தள்ளவே மாட்டான். அதை தர்மசாஸ்திரமும் ஆமோதிக்கிறது. உத்தமமான பெண்ணாக இருந்தால் அவளை ஏற்றுக் கொள் என்று தர்மசாஸ்திரம் கூறுகிறது.

நாங்களோ தேவ லோகத்துப் பெண்கள். நீர் அரிய தவம் செய்தாலும் கூட எங்களைப் போன்ற தெய்வீக மங்கையர் உமக்குக் கிடைப்பது அரிது! இருந்தாலும் எம்மை நீர் விலக்கினால் பிரம்மா படைத்த உமது புத்தியைப் பற்றி  என்ன தான் சொல்வது?!” என்றனர்.

அக்னிபர், “ ஒ! மான் போன்ற விழிகளைக் கொண்ட மங்கையரே! தர்மத்தையே செல்வமாகக் கொண்டவர்கள் அதை எப்படிக் கைவிட முடியும்? தர்மம், அர்த்தம், காமம், மோக்ஷம் ஆகிய நான்கு புருஷார்த்தங்களையும் சாஸ்திரவிதிப்படி கடைப்பிடித்தால் தான் அது பலனைக் கொடுக்கும். ஆகவே இந்த நேரம் கெட்ட நேரத்தில் – அகாலத்தில் – ஒரு போதும் உங்களை பாணிகிரஹனம் செய்து கொள்ள மாட்டேன்” என்று உறுதிபடக் கூறினார்.

முனிகுமாரரின் திடமான பதிலைக் கேட்ட அவர்கள், அவரை விடவில்லை.

காமவெறி அதிகமானதால் அவரைக் கட்டிப் பிடித்து ஆலிங்கனம் செய்தனர். இன்னும் காம லீலைகளை ஆரம்பித்தனர்.

ஆனால் அக்னிபர் கொஞ்சமேனும் தன் உறுதியிலிருந்து தளரவில்லை. அவர்கள் மீது அவர் கோபம் கொண்டார்.

“நீங்கள் ஐந்து பேரும் பிசாசுகளாக மாறக் கடவீர்” என்று ஒரு சாபத்தைக் கொடுத்தார்.

இதனால் மிகவும் சோகமடைந்த அந்த ஐந்து கந்தர்வ மங்கையரும், “குற்றமற்ற எங்களுக்கு இப்படி ஒரு சாபம் கொடுக்கலாமா? உமக்கு அநுகூலம் செய்ய வந்தோம். எமக்குக் கெடுதி செய்து விட்டீர். நீர் தர்மநாசம் செய்பவர் என்பது நிச்சயமாகி விட்டது. ஆசையுள்ளவர்கள், பக்தர்கள், நண்பர்கள் ஆகியோர் விஷயத்தில் கோபம் கொண்டு தீமை இழைப்பவர்கள் இம்மையிலும் மறுமையிலும் நல்லதை அடைய மாட்டார்கள். எமக்கு இப்படி கொடிய சாபத்தைக் கொடுத்த நீரும் பிசாசாகக் கடவது” என்று பதில் சாபம் கொடுத்தனர்.

ஆக அக்னிபரும் அந்த ஐந்து கந்தர்வ மங்கையரும் பிசாசுகளாக மாறினர். அங்கும் இங்கும் அலைந்து  மிகவும் துன்பப்பட்டனர்.

சிறிது காலம் சென்றது. அப்போது லோமசர் என்ற மஹரிஷியை அவர்கள் கண்டனர். அவரைக் கண்ட அவர்கள் அவரை ஆகாரமாகப் புசிக்கலாம் என்று அவரை நெருங்கினர்.

ஆனால் அவரது தவ வலிமையினால் அவரது அருகில் கூட அவர்களால் போக முடியவில்லை.

அக்னிபர் லோமசரை பூர்வ ஜென்ம புண்ணியத்தால் வணங்கினார்.

“ஹே! முனிவரே! சாதுக்களின் சேர்க்கை மிகுந்த பாக்கியவான்களுக்கே கிடைக்கும். கங்கை முதலிய புண்ணிய தீர்த்தங்களில் ஸ்நானம் செய்வதை விட சாதுக்களின் சகவாசம் மேலானது என்பது உண்மை” என்று சொல்லி தனது பூர்வ விருத்தாந்தத்தை விவரமாக எடுத்துக் கூறி விமோசனம் வேண்டினார்.

லோமசர் அவர்கள் பால் மிகவும் பரிதாபப்பட்டார்.

அனைவரையும் நோக்கி, “நீங்கள் அனைவரும் என்னுடன் வாருங்கள். ரேவா நதியில் என்னுடன் ஸ்நானம் செய்யுங்கள். சாபம் நீங்கி சுகம் பெறுவீர்கள்” என்று கூறி அவர்களை ஆசீர்வதித்தார்.

அனைவரும் ரேவா நதியில் ஸ்நானம் செய்தவுடன் பிசாசு உருவம் நீங்கி தங்கள் அழகிய சுய உருவங்களை அடைந்தனர்.

முனி குமாரரான அக்னிபர் லோமசரின் உத்தரவின் பேரில் அந்த ஐந்து கந்தர்வ மங்கையரையும் மணந்து அவர்களுடன் சுகமாய் வாழலானார்.

இறுதியில் அனைவரும் சுவர்க்கத்தை அடைந்தனர்.

 மஹரிஷி அக்னிபரின் வரலாற்றை இப்படி பாத்ம புராணம் விரிவாகக் கூறுகிறது!

tags- மஹரிஷி, அக்னிபர்

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: