

WRITTEN BY BRHANNAYAKI SATHYANARAYANAN
Post No. 8908
Date uploaded in London – –9 NOVEMBER 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
9-11-2020 அன்று லண்டனிலிருந்து ஒளிபரப்பப்பட்ட ஞானமயம் நிகழ்ச்சியில் இடம் பெற்ற உரை!
VISIT FACEBOOK.COM/GNANAMAYAM FOR VOICE RECORDING
ஆலயம் அறிவோம்!
வழங்குவது பிரஹன்நாயகி சத்ய நாராயணன்.

ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம் பெறும் தலம் 12 ஜோதிர்லிங்க ஸ்தலங்களில் மிகப் பழமையான ஒன்றான
ஸ்ரீ சைலம் தலமாகும்.
இந்தத் திருத்தலம் ஆந்திர மாநிலத்தில் கர்நூல் மாவட்டத்தில் உள்ள நல்லமலை என்ற குன்றில் அமைந்த்துள்ள திருத்தலம் ஆகும். கிருஷ்ணா நதி தீரத்தில் அழகிய குன்றில் அமைந்துள்ள இது ஹைதராபாத்திலிருந்து சுமார் 230 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. தேவார மூவர் முதலிகளான திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மூவராலும் பாடப்பட்ட திருத்தலமாகும் இது. திருப்பருப்பதம் என்ற பெயரைக் கொண்டது இது.
இங்கு மல்லிகார்ஜுனர் ஆலயம் அமைந்துள்ளது. அத்துடன் இங்குள்ள பிரமராம்பிகை சந்நிதி 51 சக்தி பீடங்களில் ஒன்றாகும். அத்துடன் 18 மஹா சக்தி பீடங்களில் ஒன்றாகவும் இது இலங்குகிறது.
மஹாபாரதத்திலும் பல புராணங்களிலும் இது குறிப்பிடப்படுவதால் இது மிக மிகப் பழங்காலத்திலேயே தோன்றியது என்பதை அறிய முடிகிறது.
பஞ்ச பாண்டவர்கள் வனவாச காலத்தில் இரு முறை இங்கு வந்ததாக புராணம் மூலம் அறிகிறோம்.
நான்கு புறமும் நான்கு கோபுரங்களைக் கொண்ட கோவிலில் மேற்கு நோக்கிய கோபுரம் மல்லிகார்ஜுன கோபுரம் என்ற பெயரைக் கொண்டுள்ளது. கிழக்கு கோபுரம் கிருஷ்ணதேவராயரின் பெயரால் அழைக்கப்படுகிறது. வடக்கு கோபுரத்தை 1677இல் சத்ரபதி சிவாஜி கட்டினார்; அவர் பெயரால் இந்த கோபுரம் அழைக்கப்படுகிறது. அம்பிகையை வணங்கி அவரிடமிருந்து பெற்ற வாளால் எதிரிகளை அழித்து ஹிந்து சாம்ராஜ்யத்தை அவர் நிறுவினார். இவர் கட்டிய கோபுரமே வடக்கு கோபுரம்.
கிழக்கு வாயிலில் நுழைந்தவுடன் கொடிக்கம்பமும் மண்டபமும் உள்ளன. அதை அடுத்து நந்தி மண்டபம் உள்ளது. இந்தியக் கோவில்களில் மிகப் பெரிய நந்திகளில் ஒன்றான இந்த நந்தியின் கொம்புகள் வழியே மல்லிகார்ஜுனரைத் தரிசிப்பது பெரும் பேறாகக் கருதப்படுகிறது.
அன்னை பிரமராம்பாள் கிழக்குப் பார்த்து கோயில் கொண்டு அருள் பாலித்து வருகிறாள். பிரமராம்பா பீடம் என்று அழைக்கப்படும் இந்த சக்தி பீடத்திற்கு தொன்று தொட்டு ஆயிரமாயிரம் பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.
கோவிலின் வெளி பிரகாரத்தில் திரிபலா எனப்படும் மூன்று மரங்கள் உள்ளன. மேதி, ரவி, ஜீவி ஆகிய மூன்று மரங்களை இங்கு காணலாம். இந்த அதிசய மரத்தின் அடியில் அமர்ந்து தத்தாத்ரேயர் தவம் புரிந்தததால் இது தத்தாத்ரேய விருட்சம் என்றே அழைக்கப்படுகிறது.
இந்த தலத்தில் தான் ஆதி சங்கரர் சிவானந்த லஹரியை இயற்றி அருளினார் என்ப்தை வரலாற்றின் மூலம் அறிகிறோம். பால்தாரா, பஞ்சதாரா என்ற இரு நீரூற்றுகளின் அருகே அவர் தவம் புரிந்து வந்தார்.

பல்வேறு அழகிய சிற்பங்கள் நிறைந்துள்ள இந்தக் கோவிலில் பார்வதி திருமணம், அர்ஜுனன் தவம், சந்திரவதி கதை, மார்கண்டேயன் கதை, தட்ச யாகம், சிவ தாண்டவம், கஜாசுர சம்ஹாரம், சிபி சக்ரவர்த்தியின் கதை உள்ளிட்டவற்றைச் சித்தரிக்கும் சிற்பங்கள் பார்ப்போரை பிரமிக்க வைப்பவையாகும்.
இந்த தலத்தில் நந்திகேசர் அருள் பெற்றதைப் பற்றிய சுவையான வரலாறு ஒன்று உண்டு.
நீண்டகாலம் மகப்பேறில்லாத சிலாதர் என்ற மஹரிஷி ஈசனை வேண்டி நெடுங்காலம் கடும் தவம் இயற்றினார். சிவபிரான் அவர் முன் தோன்றி அவருக்கு இரு மகன்கள் பிறக்குமாறு ஆசீர்வதித்தார். இறைவன் அருளால் நந்திகேசனும் பர்வதன் என்ற மகனும் பிறந்தனர்.
ஒருமுறை சனகாதி முனிவர்கள் சிலாதரின் ஆசிரமத்திற்கு வந்தனர். நந்திகேசன் அவர்கள் காலில் விழுந்து வணங்கினார். நந்திகேசனை ஆசீர்வதிக்க ரிஷிகள் தங்கள் கரங்களை உயர்த்த முயன்று அப்படியே நிறுத்திக் கொண்டனர்.
இதனால் திகைத்த சிலாதர் காரணம் என்ன என்று அவர்களை வினவ, அவர்கள், ‘தங்கள் மகனின் ஆயுட்காலம் முடியவிருக்கிறது, அதனால் எங்களால் ஆசீர்வதிக்க முடியவில்லை’ என்று பதில் கூறினர்.
இதனால் வருந்திய சிலாதரை நோக்கி நந்திகேசர், “தந்தையே வருந்த வேண்டாம்; தவம் செய்து சிரஞ்சீவித்வம் அடைவேன்” என்று உறுதி கூறித் தவம் செய்யப் புறப்பட்டார். நந்திகேசரின் கடும் தவத்தால் மகிழ்ந்த சிவபிரான், “நந்திகேசன் தேவ கணங்களின் தலைவனாக ஆகட்டும்; அத்துடன் எனது வாகனமாகவும் ஆகக் கடவன்” என்று ஆசீர்வதித்தார்.
நந்திகேசன், சிவபெருமானைச் சுமக்கும் ஆற்றல் பெற்ற தலம் இதுவே.

எட்டு சிகரங்கள், ஒன்பது கோவில்கள், ஒன்பது நந்திகள் கொண்டுள்ள ஜோதிர்லங்க ஸ்தலம் இது ஒன்று தான்!
கரவு இலா மனத்தர் ஆகி, கை தொழுவார்கட்கு என்றும்,
இரவில் நின்று எரி அது ஆடி இன் அருள் செய்யும் எந்தை,
மருவலார் புரங்கள் மூன்றும் மாட்டிய வகையர் ஆகிப்
பரவுவார்க்கு, அருள்கள் செய்து, பருப்பதம் நோக்கினாரே
என்று அப்பர் பிரான் இங்கு எழுந்தருளியுள்ள சிவபிரானைப் பாடிப் போற்றுகிறார். சுந்தரரோ, ‘சிவனைப் பாடிப் பரவும் தமிழ்மாலைகள் சொல்ல வல்லார் உயர் வானகம் ஆண்டு அங்கு இருப்பார்’ எனக் கூறி சொர்க்கப் பேறு கிடைப்பதை உறுதி செய்கிறார்.
காலம் காலமாக பல லட்சம் பக்தர்கள் பயபக்தியுடன் வணங்கி வரும் மல்லிகார்ஜுனரும் தேவியும் அனைவருக்கும் சர்வ மங்களத்தை தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம்.

நன்றி. வணக்கம்.
tags – ஸ்ரீ சைலம், ஆலயம் அறிவோம்.

