உடல் ஒரு மரம்? அருணகிரிநாதரின் வர்ணனை (Post No.8928)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No. 8928

Date uploaded in London – – 14 NOVEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

உடல் ஒரு மரம்? அருணகிரிநாதரின் வர்ணனை! உடலே கோயில் – அப்பரின் சிந்தனை!!

S NAGARAJAN

1

அருணகிரி நாதர் அருளியுள்ள ஒரு அற்புதமான பாடல் ‘எழுபிறவி நீர் நிலத்தில்’ எனத் தொடங்கும் பாடல்.

இதில் அவர் உடலை ஒரு மாமரமாக வர்ணிக்கிறார்.

ஏழு பிறவிகள் என்னும் நீர் கொண்டது நிலம். இந்த நிலத்தில் நல்வினை மற்றும் தீவினை ஆகியன வேர்களாகும். அவற்றில் ஊன்றிக் கொண்டு துன்பம் என்னும் முளைகள் முளைத்து வளர்கின்றன. மாயை எனப்படும் பொய்த்தோற்ற உணர்ச்சிகள் கிளைகளாக செழிப்புற்று வளர்கின்றன. அவற்றில் காமம் என்னும் தளிர்கள் துளிர்கின்றன. அஞ்ஞானம் என்னும் இலைகள் மிகப் பெரிதாக வளர்கின்றன. கேடு என்னும் பூ மொட்டுகள் விட்டு அரும்புகின்றன. விளைவு. மரணமே பழமாகப் பழுத்து வருகிறது. கடைசியில் முறிந்து அழிகின்ற மாமரமாக உடல் இலங்குகிறது. அந்த மரத்தின் அருமையான நிழல் அதன் பண்பை இழந்து அழிகிறது.

ஆக இப்படிப்பட்ட நிழல் தரும் உடல் என்னும் குடை அழிந்து போகும் முன்னரேயே எனக்கு உபதேசத்தைத் தந்து அருள்வாயாக.

தவறான (வழுவு) நெறி பேசிய தக்ஷன் அமைத்த யாகசாலைக்குச் சென்று சந்திரன் சூரியன் இந்திரன் உள்ளிட்ட தேவர்களையும் திருமாலின் நாபியில் உதித்த பிரமன், சக்ரம் ஏந்திய திருமால் ஆகியோரது வலிமை மறைந்து ஒடுங்க அவர்களை எதிர்த்து அடக்கிய உக்ரமான சிவபிரானின் புதல்வனே, அழகிய கலாபமயில் மீது ஏறி எட்டு மலைகளையும் வென்று வலம் வந்த வேலனே!

வலிமை கொண்ட அசுரர் தம் சேனை அழிபட்டு முறியும்படியாக அவர்களை மோதி வெட்டி அழித்து தேவர்களை சிறையிலிருந்து மீட்ட பெருமாளே!

பாடல் இது தான்:-

எழுபிறவி நீர்நிலத்தி லிருவினைகள் வேர்பிடித்து

     இடர்முளைக ளேமுளைத்து …… வளர்மாயை

எனுமுலவை யேபணைத்து விரககுழை யேகுழைத்து

     இருளிலைக ளேதழைத்து …… மிகநீளும்

இழவுநனை யேபிடித்து மரணபழ மேபழுத்து

     இடியுமுடல் மாமரத்தி …… னருநீழல்

இசையில்விழ ஆதபத்தி யழியுமுன மேயெனக்கு

     இனியதொரு போதகத்தை …… யருள்வாயே

வழுவுநெறி பேசுதக்க னிசையுமக சாலையுற்ற

     மதியிரவி தேவர்வஜ்ர …… படையாளி

மலர்கமல யோனிசக்ர வளைமருவு பாணிவிக்ர

     மறையஎதிர் வீரவுக்ரர் …… புதல்வோனே

அழகியக லாபகற்றை விகடமயி லேறியெட்டு

     அசலமிசை வாகையிட்டு …… வரும்வேலா

அடலசுரர் சேனைகெட்டு முறியமிக மோதிவெட்டி

     அமரர்சிறை மீளவிட்ட …… பெருமாளே.

*

2

அருணகிரிநாதர் உடலை மரமாக வர்ணித்தார் எனில் அப்பர் பிரான் உடலை வேறு விதமாகச் சொல்கிறார்.

உடலை ஒரு வீடாகக் கொள்கிறார் அப்பர் பிரான். அந்த வீட்டில் உள்ளம் என்பது ஒரு அகல் விளக்கு – தகளி!

அந்த தகளியில் தீபம் ஏற்ற நெய் வேண்டுமே! அது தான் நமது இறை உணர்வு.

நெய் விளக்கிற்கு திரி நமது உயிரே தான். இப்படி உயிர் என்னும் திரியுடன்  உணர்வு என்னும் நெய் ஊற்றி உள்ளம் என்னும் அகல் விளக்கை ஏற்றினால் திருக்கடம்பூர் தாதையின் கழல் அடியைக் காணலாம்.

திருக்கடம்பூர் கடலூர் மாவட்டத்தில் உள்ள கரக்கோயில் ஆகும். கரக்கோயில் என்பது தேர் போன்ற வடிவை உடையதாக இருக்கும்.

பாடலைப் பார்ப்போம்:-

உடம்பு எனும் மனை அகத்து உள்ளமே தகளி ஆக

மடம் படும் உணர் நெய் அட்டி உயிர் எனும் திரி மயக்கி

இடம் படு ஞானத் தீயால் எரி கொள இருந்து நோக்கில்

கடம்பு அமர் காளை தாதை கழல் அடி காணலாமே!

அவரே உடலைக் கோயிலாகச் சித்தரிக்கும் பாடலும் ஒன்று உண்டு.

காயமே கோயில் ஆகக் கடி மனம் அடிமையாக

வாய்மையே தூய்மையாக மன மணி இலிங்கமாக

நேயமே நெய்யும் பாலா நிறைய நீர் அமைய  ஆட்டிப்

பூசனை ஈசனார்க்குப் போற்றவிக் காட்டினோமே – நான்காம் திருமுறை

உடம்பே கோயில்

நல்ல மனமே அடிமை.

வாய்மையே தூய்மை (சுத்தம்)

மனதினுள் மணி என ஜொலிக்கும் ஆன்மாவே இலிங்கம்

அன்பே நெய்யும் பாலும்,

இப்படி அன்பை வைத்து பக்தியுடன் பூஜை செய்து இறைவனைப் போற்றினோம்.

இப்படி உடலை இன்னும் பல்வேறு விதமாக உருவகப்படுத்தியுள்ளனர் அருளாளர்கள்.

அனைத்துமே அருமையானவை; அரிய உண்மைகளைப் புலப்படுத்துபவை!

tags-  உடல் ஒரு மரம்,  அருணகிரிநாத, வர்ணனை, 

***

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: