
Post No. 8931
Date uploaded in London – – –15 NOVEMBER 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
ஹெல்த்கேர் நவம்பர் 2020 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை!
ச.நாகராஜன்
12 கோடி நூல்கள்!

பாரத தேசத்தில் இயற்றப்பட்ட நூல்களில் 12 கோடி நூல்கள் உலகின் பல்வேறு இடங்களில் உள்ளன என்றும் இவற்றில் பெரும்பாலானவை சுவடிக் கட்டே திறக்கப்படாமல் உள்ள நிலை நிலவுகிறது என்றும் அறிஞர் பெருமக்கள் கூறுகின்றனர். டாக்டர் வி.ராகவன் பெரு முயற்சி செய்து உலகின் பல இடங்களுக்கும் சென்று சம்ஸ்கிருத நூல்களின் பட்டியல் ஒன்றைத் தயார் செய்தார்.
தமிழ் நூல்களை எடுத்துக் கொண்டோமெனில் உ.வே.சாமிநாதையர் அரு முயற்சி செய்து தன் ஆயுள்காலத்தில் பல நூல்களை ஆராய்ந்து வெளியிட்டார்.
சரஸ்வதி மஹாலில் உள்ள சுவடிகளை ஆராய்ந்து பதிப்பிக்கும் பணி அங்கு நடைபெற்று வருகிறது. என்றாலும் இப்பணிக்கு உரிய நிதி உதவி போதுமானதாக இல்லை என்பதை உறுதியாகச் சொல்லலாம்.
பதார்த்த குண சிந்தாமணி
இந்த நூல்களில் வைத்திய நூல்கள் ஏராளம். அவற்றில் ஒன்று பதார்த்த குண சிந்தாமணி. பிரமிக்க வைக்கும் ஆய்வுத் தகவல்களைத் தருவதால் இது அற்புத சிந்தாமணி என்ற பெயரையும் பெறுகிறது.
1508 பாடல்களைக் கொண்டுள்ள இந்த நூலில் விளக்கப்படாத பதார்த்தமே இல்லை என்று சொல்லலாம்.
தேரையர் இயற்றிய நூல்
இதை இயற்றியவர் தேரையர் என்னும் மாபெரும் சித்தர். மன்னன் ஒருவனின் காது வழியே புகுந்த தேரை ஒன்று அவன் தலையை அடைந்து அவனைப் பாதித்தது என்றும் அதை இவர் எடுத்ததால் தேரையர் என்ற பெயரைப் பெற்றார் என்றும் வரலாறு கூறுகிறது.
மருத்துவன் யார்? இதோ இலக்கணம்!
ஒரு மருத்துவனுக்கான இலக்கணம் தெளிவாக வரையறுக்கப்படுகிறது இப்படி:-
தெய்வ உபாசனை பலநூல் எல்லை காண்டல்
திரிகரணசுத்தி பன்னோய் தீர்த்தனாளு
நைவகன்ற தீரமதி நுட்பம் சான்றோர்
நட்பொழுக்க மேன்மை குணம் அன்புள்ளானாய்
மெய்வசுதை விகலையணங் குறை பதார்த்த
விதியுடற்காதாரமடலங்கி மாந்தல்
கைவருமெண் பேதம் எலாம் உணர்ந்துற்றானாய்க்
காணிலந்த மருத்துவன்கைக் கரணி யுண்ணே
பொருள் ; பல நூல்களை தீர ஆராய்ந்து நுணுகிக் கற்றல், மனம் வாக்கு, காயம் ஆகிய திரிகரணத்தால் பல நோய்களைத் தீர்த்தல்,, தீரம், புத்தி கூர்மை, சான்றோர் நட்பு, மேன்மை, நற்குணம், அன்பு ஆகிய நல்ல குணங்களை உடையோனாக உடல், நாடு, காலம், நோய், மருந்து, பொருள்களின் பண்பு, உடல் ஆதாரம், மடலம், உடல் பலம், பணிவு, எண் வகை பேதங்கள் இவற்றை உணர்ந்தவனே மருத்துவன் எனலாம்.

ஓஷதிகள் நான்கு
இந்த பூமியில் ஓஷதி என்பது நான்கு வகைப்படும். அவையாவன மரம், செடி, கொடி, புல் ஆகியன. இவற்றை விரிவாக எடுத்துரைக்கிறது இந்த அற்புத சிந்தாமணி.
நவரத்தினங்கள் தீர்க்கும் வியாதிகள்
நவரத்தினங்களை எடுத்துக் கொண்டால் மாணிக்கம் சுரம் சன்னி தோஷங்கள், திரிதோஷம் தாக நோய், வாதப் பிரமேகம், கண் நோய் ஆகியவற்றைப் போக்கி உடலுக்கு நல்ல் அழகைத் தரும்.
வைரங்களில் ஆறுவகை உண்டு. இவை கண் நோய்களைப் போக்கி உடலுக்கு அழகு தரும்.
வைடூரியம் சிலேஷ்ம வாதம், சிலேஷ்மம், புளியேப்பம், காது சூலை, குஷ்டம், பித்தம் ஆகியவற்றைப் போக்கும்.
கோமேதகம் வாத பித்தம், மலக்கட்டு, மந்தாக்கினி, சுரத்தால் ஏற்பட்ட கெட்ட குணம் ஆகியவற்றைப் போக்கும்; உடல் அழகைத் தரும்.
புஷ்பராகம் சுக்கில விருத்தி, நல்ல அறிவு ஆகியவற்றைத் தரும். மேகம் முதலான நோய்களையும் போக்கும்.
பவளம் சுரம், ஜன்னி, இருமல், ருசியின்மை, சுக்கில நஷ்டம், அதிக தாகம், நாவறட்சி ஆகியவற்றைப் போக்கும்.
முத்து அத்திசுரம், சோபை, ருசியின்மை, பல
மின்மை, கண் நோய், பித்து, விஷம், சீதளம், கபம், தாது நஷ்டம் ஆகியவற்றைப் போக்கும்.
மரகதம் விந்துவைத் தரும். பதினெட்டு வகை பூத கப காசங்கள், விரணம், பல் வகை விஷங்கள், மது மேகம் ஆகியவற்றை நீக்கும்.
நீலம் குதி கால் வலி, மேக நீர், பித்தம், பாண்டு, அயர்ச்சி ஆகியவற்றைப் போக்கும்; நல்லறிவைத் தரும் சுக்கிலப் பெருக்கத்தை உண்டாக்கும்.

நீருக்கு உள்ள நோய் தீர்க்கும் சக்தி
நீர் என்று எடுத்துக் கொண்டால் ஆற்று நீர், கிணற்று நீர், அருவி நீர், ஓடை நீர் என்று சொன்னது போய் கார்பரேஷன் குழாய் நீர், கேன் நீர் ஆகிய இரண்டு மட்டுமே இன்றைய வாழ்க்கையில் காணப்படுபவை என்று சொல்லும் நிலை உருவாகி விட்டது.
ஆனால் பதார்த்த குண சிந்தாமணியோ காவிரி நீர், வைகை நீர், தாமிரபரணி நீர், கங்கை நீர், யமுனை நீர் என்று வரிசையாகப் பட்டியலிட்டு ஒவ்வொரு நீர் குணத்தை விவரித்து அது போக்கும் வியாதிகளையும் பட்டியலிடுகிறது.
மரம் என்று எடுத்துக் கொண்டால் ஒவ்வொரு மரத்தையும் அலசி ஆராய்ந்து அந்த மரத்தின் மருத்துவ குணத்தை விரிவாக அழகாக விளக்குகிறது.
மாதர் தம் முலைப் பால் மகிமையை விளக்குவதோடு பற்பல வகை மாதரின் முலைப் பால் பண்பையும் விவரிக்கிறது.
பசுவின் மூத்திரம் தரும் நற்பயனில் ஆரம்பித்து ஒரு பெரிய பட்டியலையே காணும் போது வியப்படைகிறோம்.
சமையல் வகையில் உள்ள ஒவ்வொரு பதார்த்தத்தையும் எடுத்து அதன் மருத்துவப் பண்புகளை அக்கு வேறு ஆணி வேறாக அலசும் இது போல் ஒரு நூல் இன்னொன்று இல்லை என்று கூறும் அளவு நுட்பமான விஷயங்கள் பதார்த்த குண சிந்தாமணியில் உள்ளன.
65 தலைப்புகளில் அரிய விஷயங்கள்
பாயிரம், பஞ்ச பூதம், திணை, நீர், பால், மோர், நெய், மதுரம், பாகு, வெல்லம், மது, தேன், மரம், செடி, கொடி, புல், மரத்தின் சமூலம், செடியின் சமூலம் கொடியின் சமூலம், மரத்தின் கிழங்கு,செடியின் கிழங்கு, கொடியின் கிழங்கு, புல்லின் கிழங்கு, மரத்தின் வேர், மர இலை, கொடியின் இலை, கீரை வகை, மரத்தின் மலர், கொடியின் பூ, மரத்தின் பிஞ்சு, மரத்தின் காய், செடியின் காய், கொடியின் காய், மரத்தின் பழம், செடியின் பழம், மரத்தின் வித்து, செடியின் வித்து, கொடியின் வித்து, தானியம், புன்செய் தானியம்,
இறைச்சி, பறவை இறைச்சி, மீன் கறி, கடைச்சரக்கு, பாசாணம், உலோகம், நவரத்தினம், மருத்துவன், பத்தியம், தினக் கிரமாலங்காரம், எண்ணெய் முழுக்கு, துணி வகை, புசிப்பு, உண்கலம், சோறு, கஞ்சி, சித்திரான்னம், பலகாரம், பரிமளப்பூச்சு, தாம்பூலம், வாகனம், விசிறி, புணர்ச்சி, பதார்த்த ஜீரண கால அளவை, நோயணுகா விதி என இப்படி 65 தலைப்புகளில் பிரமிக்க வைக்கும் அரிய தகவல்களைத் தருகிறது இந்த நூல்.
சித்தர் அருளிய அருமையான ஆய்வு நூல்
ஒரு பிரம்மாண்டமான பல்கலைக் கழகம் பல கோடிகள் செலவழித்து பல நூறு பெயரைப் பணியில் அமர்த்தினாலும் இப்படிப்பட்ட நுணுக்கமான விஷயங்களைத் திரட்ட முடியுமா என்பது சந்தேகமே.
மருத்துவத்தில் ஆர்வமுள்ளவர்களோ, சாமான்யரோ, எவரானாலும் சரி இந்த நூல் அனைவருக்குமே ஒரு அரிய வரபிரசாதம். அல்லோபதி வைத்தியரோ, ஹோமியோபதி வைத்தியரோ, சித்த வைத்தியரோ யாராக இருந்தாலும் சரி, அவர்கள் அனைவருக்கும் பயன்படும் நூல் பெரும் சித்தரான தேரையர் அருளிய அற்புத சிந்தாமணி.
படிப்போம்! பதார்த்த குணம் அறிவோம்!! பயன் பெறுவோம்!!!

***
முக்கியக் குறிப்பு : இணைய தளத்தில் இந்த நூலை இலவசமாக டவுன் லோட் செய்து கொள்ளலாம்.
tags– பதார்த்த குண சிந்தாமணி, தேரையர்,
–subham–