
மதுரா நகரம்: ஆலயம் அறிவோம்-3
WRITTEN BY BRHANNAYAKI SATHYANARAYANAN
Post No. 8939
Date uploaded in London – –17 NOVEMBER 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம் பெறும் தலம் – மாயன், தூய பெருநீர் யமுனைத் துறைவன், ஆயர் குலத்தினில் தோன்றிய மணி விளக்கு, தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரன், வடமதுரை மைந்தனான, கண்ணபிரானின் ஜென்ம ஸ்தானமான, மதுரா ஆகும்.
தூயோமாய், தூ மலர் தூவித் தொழுது, வாயினால் பாடி, மனதினால் சிந்திக்க, போய பிழையும் புகு தருவான், நின்றனவும் தீயினில் தூசாகும், செப்பேலோ என்று, சூடிக் கொடுத்த சுடர்க் கொடி ஆண்டாளால், போற்றப்படும், கண்ண பிரானின் தலத்தை, மதுரா என உச்சரிக்கும் போதே, உள்ளம் சிலிர்க்கிறது.
108 வைணவ திவ்ய தேசங்களில், நூறாவது திருத்தலமாக அமையும் இது, டெல்லியிலிருந்து சுமார் 161 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.


ஒருத்தி மகனாய் பிறந்து, ஓர் இரவில் ஒருத்தி மகனாய் ஒளித்து வளர, தருக்கிலான் ஆகி, தான் தீங்கு நினைந்த, கருத்தைப் பிழைப்பித்துக், கஞ்சன் வயிற்றில், நெருப்பென்ன நின்ற நெடுமால், கண்ணனாக அவதரித்த இந்தத் திருத்தலம், உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ளது.
மூலவர் பாலகிருஷ்ணன், நின்ற திருக்கோலத்தில் காட்சி அளிக்கிறார். தாயார் சத்தியபாமா. தீர்த்தத்தின் பெயர் கோவர்த்தன தீர்த்தம்.
பெரியாழ்வார், ஆண்டாள், தொண்டரடிப்பொடி ஆழ்வார், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார் என ஐந்து ஆழ்வார்கள் 50 பாசுரங்கள் பாடிப் போற்றி வணங்கிய தலம் மதுரா.
மதுரா நகரம் தோன்றியது பற்றிய புராண வரலாறு ஒன்று உண்டு. ஒரு சமயம் இலவணாசுரன் என்னும் அரக்கன் கொடுமைகள் பல செய்து வரவே முனிவர்கள் இராமபிரானை அணுகினர். இராமர் தனது இளவலான சத்ருக்னரை அனுப்பி மது என்னும் நகரத்தின் அரசனாக இருந்த இலவணாசுரனை அழிக்கச் செய்தார். அசுரனை வதம் செய்த சத்ருக்னர் அங்கு யமுனா நதி தீரத்தில் அர்த்த சந்திர வடிவத்தில் மதுரா நகரை உருவாக்கினார். இந்த நகரத்தை சத்ருக்னரின் வமிசாவளியினர் ஆண்டு வந்தனர். பின்னர் யது வம்சத்தினர் இதை ஆளத் தொடங்கினர்.
அயோத்யா மதுரா மாயா காசி காஞ்சி அவந்திகா
புரி த்வாராவதி சைவ சப்தைதே மோக்ஷதாயிகா:
என்று குறிப்பிடப்படும் ஏழு மோக்ஷம் அருளும் தலங்களில் மதுராவும் ஒன்று. இங்கிருந்து 11 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள பிருந்தாவனில் தான் கிருஷ்ணரின் இளமைப் பருவம் கழிந்தது. 22 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள இன்னொரு புனித யாத்திரை தலம் கோவர்தன் ஆகும்.
ரிக் வேதம் குறிப்பிடும் ஐந்து வமிசங்களில் யது வம்சமும் ஒன்று. அதில் அவதரித்தவர் கிருஷ்ணர்.
கிருஷ்ணரின் ஜென்ம பூமியில் கிருஷ்ண ஜென்மபூமி ஆலயம், துவாரகாநாத் ஆலயம், கீதா மந்திர் உள்ளிட்ட பல ஆல்யங்கள் உள்ளன.
உலகில் உள்ள மிகப் புனிதமான இடங்களில் தலையாய இடமான இங்குள்ள கர்பக்ருஹத்தில் தான் சிறையில் கிருஷ்ணர் அவதரித்தார். காலப் போக்கில் இந்த ஜென்மஸ்தானம் ஒரு அழகிய ஆலயமாக உருவாகி விட்டது.
கம்ஸனுக்கும் கிருஷ்ணருக்கும் நடந்த இறுதிப் போர் நடந்த இடமும் இங்கு தான் உள்ளது.
யமுனை நதி தீரத்தில் அமைந்துள்ள விஷ்ராம் கட்டில் (Vishram Ghat) தான் கம்சனை வதம் செய்த பின்னர் கிருஷ்ணர் வந்து ஓய்வு எடுத்தார்.
ஆண்டு தோறும், ஜென்மாஷ்டமி எனப்படும் கிருஷ்ணரின் அவதாரத் திருநாள், இங்கு வெகு விமரிசையாக, கோலாகலமாகக் கொண்டாடப் படுகிறது.
ஏராளமான அசுரர்களையும் கொடுங்கோலர்களையும் கிருஷ்ணர் அழித்ததை, பாகவதம் நன்கு கூறும். அறம் பிறழ்ந்த கௌரவர்களை அழிக்கும் பொருட்டு, பாண்டவர்களுக்கு உற்ற துணையாக இருந்து, அவர்கள் வெற்றி பெற அருளியவர் கிருஷ்ணர்.
உலக மக்கள் உய்யும் பொருட்டு, பகவத் கீதையை போர்க்களத்தில் அர்ஜுனனுக்கு உபதேசித்து அருளினார் அவர்.
பாரதத்தில் இன்று நாம் அஸ்ஸாம் என அழைக்கும் அஸாம் மாநிலப் பகுதி, பழைய காலத்தில், காமாக்யா என அழைக்கப்பட்ட பகுதியாகும். காமாக்யாவில் இருந்த ஜோயோதிஷபுரத்தை ஆண்டு, தேவர்களை துன்புறுத்தி வந்தான் கொடிய அசுரனான நரகாசுரன். அவனையும் கிருஷ்ணரே வதம் செய்தார். அவர் வதம் செய்த நாளையே தீபாவளி தினமாக உலகம் கொண்டாடி வருகிறது.
பாரதத்தில் ஏராளமான கிருஷ்ணர் கோவில்கள் உள்ளன. ஆனால் அனைத்துக் கோவில்களுக்கும் தலைமை இடமாக கருதப்படும் மோக்ஷபுரியான, அறம் காக்கும் பூமியான மதுராவின் மஹிமையே தனி தான்.
காலம் காலமாக கோடானு கோடி பக்தர்கள் பயபக்தியுடன் வணங்கி வரும் ஸ்ரீ கிருஷ்ண பகவான் அனைவருக்கும் சர்வ மங்களத்தை தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம்.
நன்றி. வணக்கம்.

tags – மதுரா, நகரம், ஆலயம் ,