மஹரிஷி சண்டகௌசிகர் : ஜராசந்தனின் வரலாறு!̀ (Post. 8943)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No. 8943

Date uploaded in London – – 18 NOVEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

மஹரிஷி சண்டகௌசிகர் : ஜராசந்தனின் பிறப்பு வரலாறு!̀

ச.நாகராஜன்

மகத தேசத்தை பிருகத்ருதன் என்ற அரசன் ஆண்டு வந்தான்.

கீர்த்தியும் செல்வமும் பெற்றவனாக இருந்த அவன் காசி ராஜனுடைய இரு குமாரிகளை மணம் செய்தான். ராஜ்ய பரிபாலனத்தை நன்றாகச் செய்து வந்த அவன் தனக்கு வாரிசாக வர ஒரு புத்திரனுக்காக ஏங்கி இருந்தான். ஆனால் அவனுக்கு புத்திர பாக்கியம் கிடைக்கவில்லை. ஆகவே மிகுந்த சோகத்தில் ஆழ்ந்தான்.

உரியவர்களைக் கலந்தாலோசித்து புத்திரகாமேஷ்டி யாகம் உள்ளிட்ட யாகங்களைச் செய்தான். ஆனால் பலன் ஏற்படவில்லை. துயரம் அதிகமாயிற்று.

ஒரு சமயம் கௌதம ரிஷியின் வம்சத்தில் உதித்த கக்ஷிவத் என்ற ரிஷியின் புத்திரராகிய  மஹரிஷி சண்டகௌசிக ரிஷி தான் செய்து வந்த உக்கிரமான தவத்தைச் சற்று நிறுத்தி விட்டு உலகில் சஞ்சாரம் செய்து வந்தார். ஒரு மரத்தின் நிழலில் வந்து அவர் உட்கார்ந்தார்.

அரசன் இதைக் கேள்விப்பட்டுத் தன் இரு மனைவி சகிதம் அவரை வந்தடைந்து அவர் கால்களில் வீழ்ந்தான்.

அவருக்கு அநேக ஆடை அணிகளைக் கொடுத்து அவரை பூஜித்தான்.

இதனால் சந்தோஷமடைந்த மஹரிஷி, “ஓ! அரசனே! உன் பால் எனக்கு மிகுந்த சந்தோஷம் உண்டாகிறது. உனக்கு வேண்டும் வரங்களைக் கேள்” என்றார்.

அரசன் கண்களில் நீர் ததும்பிற்று. “மஹரிஷியே! என் ராஜ்யத்தைத் துறந்து காட்டுக்குச் செல்லக் கூட சித்தமாக இருக்கிறேன். எனக்கு புத்திரன் இல்லாததால் பாக்கியம் அற்றவனாக இருக்கிறேன். ஆகவே வரத்தினாலும் எனக்கு பிரயோஜனமில்லை; என் ராஜ்யத்தினாலும் எனக்கு பிரயோஜனம் இல்லை” என்றான்.

இதைக் கேட்ட ரிஷி தன் இந்திரியங்களை அடக்கி அந்த மாமரத்தின் அடியில் யோக தியானத்தில் புகுந்தார். அப்போது அவர் மடியில் இனிய மாங்கனி ஒன்று விழுந்தது. முனிவர் அதை எடுத்து மந்திரங்கள் சொல்லி அதை அரசன் கையில் கொடுத்தார்.

“அரசே! நீ ராஜ்யத்திற்குத் திரும்பிப் போகலாம். உனது மனோபீஷ்டம் நிறைவேறும். நீ காட்டுக்குச் செல்ல வேண்டியதில்லை” என்றார்.

இதனால் சந்தோஷம் அடைந்த மன்னன் நேராக தனது ராஜ்யத்திற்குச் சென்றான்.

அந்த மாம்பழத்தைத் தனது இரு ராணிமார்களுக்கும் கொடுத்தான்.

காலப்போக்கில் அவர்கள் கர்ப்பம் தரித்தனர். இரு ராணிகளும் ஒரு தேகத்தின் இரண்டு கண்டங்களைப் பெற்றனர். ஒரு கண், ஒரு கை, ஒரு கால், அரை வயிறு, அரை முகம், அரை பிருஷ்டம் என ஒரே மாதிரியான இரண்டு கண்டங்களைக் கண்டு அவர்கள் நடுநடுங்கினர். இருவரும் ஆலோசித்து அந்த கண்டங்களை இரு தாதிமார்களிடம் கொடுத்து அவற்றை நன்கு மூடச் செய்து நகர்புறத்தில் கொண்டு  நாற்சந்தியில் எறியச் செய்தனர்.

அந்த இரு துண்டங்களையும் ஜரை என்ற ராக்ஷஸி எடுத்து இரண்டையும் ஒன்று சேர்த்தாள்.

அது உயிர் பெற்ற குழந்தையாயிற்று.

அதை அவள் அரசனிடம் சென்று கொடுத்தாள். அரசன் ஜரையால் ஒன்று சேர்க்கப்பட்டு உயிர் பெற்ற குழந்தை ஆதலால் அந்தக் குழந்தைக்கு ஜராசந்தன் என்று பெயர் சூட்டினான்.

இந்த ஜராசந்தன் தான் காலப் போக்கில் மிக்க வலிமை பெற்ற மன்னனாக ஆனான். பல அரசர்களை ஜெயித்தான்.

கிருஷ்ண பகவானுடன் பல முறை யுத்தங்கள் செய்து இறுதியில் பாண்டவர்களுள் ஒருவனான பீமனால் யுத்தத்தில் கொல்லப்பட்டான்.

இந்த வரலாறை மஹாபாரதம் சபா பர்வத்தில் பதினேழாவது அத்தியாயத்தில் விரிவாகப் படிக்கலாம்.

tags– மஹரிஷி, சண்டகௌசிகர்,  ஜராசந்தன் 

***

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: