
WRITTEN BY S NAGARAJAN
Post No. 8950
Date uploaded in London – – –20 NOVEMBER 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
தேவார முழக்கம்!
நித்தம் நீலக்குடி அரனை நினை, சிவகதி பெற! அப்பரின் சொந்த அனுபவம்!!
ச.நாகராஜன்
தேவார மூவர் முதலிகளில் அப்பரின் பாடல்கள் சொற் சுவையும் பொருட்சுவையும் நிறைந்தவை; அத்துடன் அவரது சொந்த அனுபவம் அந்தப் பாடல்களில் சில சமயம் பேசும். சமணர்களுடன் இருந்து நொந்து போனவர் அவர். ஆகவே அவரது அனுபவக் கூற்று இன்னும் சற்று நம்மைக் கவரும்.
நீ சேர்த்து வைத்த செல்வமும், மனைவியும், மக்களும் நீ செத்த போது கூட வர மாட்டார்கள். பிரிவதே இயல்பாகும். நித்தம் நீலக்குடி அரனை நினை, சித்தம் ஆகின் சிவகதி பெறலாம் என்கிறார் அவர்.
பாடல் இது:
வைத்த மாடும் மனைவியும் மக்கள் நீர்
செத்த போது செறியார் பிரிவதே
நித்தம் நீலக்குடி அரனை நினை
சித்தம் ஆகில் சிவகதி சேர்திரே (ஐந்தாம் திருமுறை – 072 பாடல் எண் 1)
சோழ நாடு காவிரி தென்கரைத் தலம் திருநீலக்குடி. தென்னலக் குடி என்று இந்த நாளில் வழஙகப் பெறும் இந்தத் தலம் தஞ்சை மாவட்டத்தில் திருவிடைமருதூர் வட்டத்தில் அமைந்துள்ள திருத்தலமாகும். இறைவனின் பெயர் நீலக்குடியீசர் இறைவியின் பெயர் அழகம்மை. ஸ்தல விருட்சம் : பஞ்சவில்வம் குளம்: பிரமதீர்த்தம்.

ஆடுதுறைக்குத் தெற்கே 3 கிலோமீட்டர் தூரத்தில் இது உள்ளது.
இந்த தலத்தில் அப்பர் பிரான் தனது சொந்த அனுபவம் ஒன்றைக் கூறுகிறார்.
கல்லினோடு என்னைப் பூட்டி அமண்கையர்
ஒல்லை நீர் புக நூக்க என் வாக்கினால்
நெல்லு நீள் வயல் நீலக்குடி அரன்
நல்ல நாமம் நவிற்றி உய்ந்தேன் அன்றே (பாடல் எண் 7)
“சமணர்கள் கல்லினோடு என்னைச் சேர்த்துக் கட்டி, விரைந்து கடல் நீரில் புகுமாறு நூக்கி விட என் வாக்கினால் அரனுடைய நல்ல நாமத்தைச் சொன்னேன். உய்ந்தேன்” என்கிறார் அவர். நெல்பயிர் நிறைந்த நீள் வயல் சூழ் நீலக்குடி ஐயன் அல்லவா என்னை உய்வித்தவன் என்று அவர் தன் சொந்த அனுபவத்தைச் சுட்டிக் காட்டும் அருமையான பாடல் இது.
அவனை உள்ளங்கை நெல்லிக் கனி போல காணலாம் என்பதையும் அவர் சுட்டிக் காட்டுகிறார் இந்தப் பதிகத்தில்!
செய்ய மேனியன் தேனொடு பால் தயிர்
நெய் அது ஆடிய நீலக்குடி அரன்
மையலால் மறவா மனத்தார்க்கு எலாம்
கையில் ஆமலகக் கனி ஒக்குமே
சிவந்த திருமேனியை உடையவன் சிவபிரான். தேன், பால், தயிர் ஆகியன கொண்டு திருமுழுக்காடு ஆடும் அரன் ஆவான். அவன் மீது மையல் மிகக் கொண்டு மறவாமல் அவனை நினைக்கும் மனத்தார்க்கு உள்ளங்கை நெல்லிக் கனி போல அவன் புலப்பட்டு அருள் புரிவான்.
கையில் ஆமலகக் கனி போல – உள்ளங்கை நெல்லிக் கனி போல என்ற நியாயத்தை இங்கு சுட்டிக் காட்டுகிறார் அப்பர் பிரான்.
அழகாக இருப்பவர்கள், இளையவர்கள் என்னும் ஆசையால் ஒழுகி இருந்து உயிரை உடலை விட்டு விடுமுன் நீலக்குடி அரன் தாளை அடைந்து கை தொழுது உய்மின் என்பது அவரது அன்புக் கட்டளை :-
அழகியோம் இளையோம் எனும் ஆசையால்
ஒழுகி ஆவி உடல் விடும் முன்னமே
நிழல் அது ஆர் பொழில் நீலக்குடி அரன்
கழல் கொள் சேவடி கை தொழுது உய்ம்மினே (பாடல் 8)
பொதுவான பாடல்கள் சுவை பயக்கும் என்றாலும், சொந்த அனுபவத்தைக் கூறும் பாடல்களில் அவரது அனுபவம் இழையோடுவதால் அதில் உள்ள உண்மையை கூடக் கொஞ்சம் அனுபவித்து உணரலாம், இல்லையா!
அந்த வகையில் நீலக் குடி பதிகம் நெஞ்சை விட்டு நீங்காத பதிகமாக அமைகிறது!
பத்துப் பாடல்களும் அழகிய பாடல்கள்; படித்து உய்வோமாக!
***