
WRITTEN BY S NAGARAJAN
Post No. 8995
Date uploaded in London – – –4 DECEMBER 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
ஸ்வர்ணமயமான லங்கை என்னைக் கவரவில்லை, லக்ஷ்மணா!
ச.நாகராஜன்
நம்மைக் கவரும் சில சுபாஷித ஸ்லோகங்கள் இதோ:-
ந ராஜ்யம் ந ராஜாசீத் ந தண்டயோ ந ச தாண்டிக: |
தர்மேணைவ ப்ரஜாஸ்ஸர்வா ரக்ஷந்தி ரஸ பரஸ்பரம் ||
ஒரு அரசோ, ஒரு அரசனோ ஒரு குற்றமிழைத்தவனோ அல்லது ஒரு நீதிபதியோ குற்றமிழைத்த ஒருவனுக்கு தண்டனை தருவதில்லை. மக்கள் அனைவரும் தர்மத்தாலேயே ரக்ஷிக்கப்படுகின்றனர். (தர்மமே தண்டனையையும் பரிசையும் வழங்குகிறது என்று பொருள்)
*
சத்யம் ப்ரூயாத் ப்ரியம் ப்ரூயாத் ப்ரூயாந்நப்ரூயாத் சத்யமப்ரியம் |
ப்ரியம் ச நாந்ருதம் ப்ரூயாதேஷ: தர்ம: சனாதன: ||
சத்யத்தையே பேசு. மற்றவர்களுக்கு பிரியமானதையே பேசு. மற்றவர்களுக்குப் பிடிக்காத உண்மையையும் பேசாதே. அதே போல இனிமையாக இருந்தாலும் அஸத்யத்தைப் பேசாதே.
*

அபி ஸ்வர்ணமயி லங்கா ந மே ரோசதி லக்ஷ்மண |
ஜனனீ ஜன்ம பூமிஸ்ச ஸ்வர்காதபி கரியஸி ||
ராம, ராவண யுத்தம் முடிந்த பிறகு லக்ஷ்மணனை நோக்கி ராமர் கூறுவது இது:-
ஓ, லக்ஷ்மணா! இந்த ஸ்வர்ணமயமான லங்கை என்னைக் கவரவில்லை.
பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நல் தவ வானிலும் நனி சிறந்தன.
பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும்
நற்றவ வானிலும் நனி சிறந்தனவே என்ற பாரதியார் கவிதை இந்த ஸ்லோகத்தின் இரண்டாவது அடியின் தமிழ் மொழி பெயர்ப்பாகும்.
*
மரணாந்தானி வைராணி நிவ்ருத்தம் ந: ப்ரயோஜனம் |
கீயதாமஸ்ய சம்ஸ்காரோ மமாபேஷ்ய யதா தவ ||
ராவணன் வதம் செய்யப்பட்ட பின்னர் ராமர் விபீஷணரிடம் சொல்வது : “ நமது பணி முடிந்து விட்டது. ராவணனுடனான எனது பகை அவனது மரணத்துடன் முடிந்து விட்டது. இப்போது ராவணன் உன்னுடையவனைப் போலவே என்னுடையவனாகவும் ஆகிறான். ஆகவே அவனது சம்ஸ்காரத்தை (தகனத்தை) உரிய முறையில் செய்!
*
காவ்ய சாஸ்த்ர விநோதேன காலோ கச்சதி தீமதாம் |
வ்யஸனேன ச மூர்காணாம் நித்ரயா கலஹேந வா ||
புத்திசாலிகள் காவ்யம், சாஸ்திரம், தத்துவம் ஆகியவற்றில் காலத்தைக் கழிக்கின்றனர். மாறாக, முட்டாள்கள் தூக்கத்திலும் கலகம் செய்வதிலும் காலத்தைக் கழிக்கின்றனர்.
*
தைலாத் ரக்ஷேண ஜலாத் ரக்ஷேத் ஷிதில பந்தனாத் |
மூர்க ஹஸ்தே ந தாதவ்யம் ஏவம் வததி புஸ்தகம் ||
ஒரு புத்தகமானது அதை வைத்திருப்பவனிடம் இப்படி இறைஞ்சுகிறது : என்னை (புத்தகத்தை) கறை படுத்தும் எண்ணெயிலிருந்து காப்பாற்று! நீரிலிருந்து என்னை காப்பாற்று. சரியாகத் தைக்காமல் உதிரியாக இருந்து சிதிலமடையாமல் என்னைக் காப்பாற்று. இதை எல்லாம் செய்த பின்னர் என்னை ஒரு முட்டாளிடம் கொடுத்து விடாதே!
*


ச்ரோத்ரம் ச்ருதேனைவ ந குண்டலேன தானேன பாணிர்ன து கங்கணேன |
விபாதி காய: கருணாபராணாம் பரோபகாரைர்ந து சந்தனேன ||
ஒரு நல்லவனின் காதுகள் நல்ல அறநெறிகளைக் கேட்பதால் அழகு பெறுகிறது; காதில் அணியும் குண்டலங்களினால் அல்ல! கங்கணம் கையில் அணிவதை விட தானத்தால் கை சிறக்கிறது! அதே போல மற்றவர்களுக்கு சேவை செய்வதானது உடலில் சந்தனம் பூசுவதை விட சிறந்த அழகைத் தருகிறது!
*
உதாரஸ்ய த்ருணம் வித்தம் சூரஸ்ய மரணம் த்ருணம் |
விருத்தஸ்ய த்ருணம் பார்யா நிஸ்ப்ருஹஸ்ய த்ருணம் ஜகத் ||
உதார குணமுள்ள ஒருவனுக்கு செல்வம் ஒரு (த்ருணம்) புல் போலத் தான்!
வீரனுக்கு மரணம் என்பது புல்லாகும்!
வயதாகி புலன் ஆசையைத் துறந்தவனுக்கு அவன் மனைவியும் புல் போலத் தான்!
பற்றற்றவனுக்கோ உலகமே புல் போலத் தான்!
tags – ஸ்வர்ணமய, லங்கை, பெற்ற தாயும், பொன்னாடு,
*****