பாரதியார் பா நலம்! (Post No.9006)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No. 9006

Date uploaded in London – – 7 DECEMBER 2020       

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

லண்டனிலிருந்து தமிழ் முழக்கம் நிகழ்ச்சியில் 6-12-2020 அன்று ஒளிபரப்பப்பட்ட உரை!

VOICE RECORDING IS AVAILABLE ON  FACEBOOK.COM/GNANAMAYAM

பாரதியார் பா நலம்!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே, சந்தானம் நாகராஜன் வணக்கம்.

VOICE RECORDING IS AVAILABLE ON  FACEBOOK.COM/GNANAMAYAM

உலகப் பெருங்கவிஞனான பாரதியாரின் பாடல்களை பாரதி நூற்றாண்டிலே நினைப்பது, போற்றுவது நமது கடமை!

பாரதியாரைக் கற்று விட்டால் உலகக் கவிஞர்கள் அனைவரையும் ஒரு பார்வை பார்த்து விட்ட திருப்தி கிடைக்கும். அது மட்டுமின்றி அந்தக் கவிஞர்களையும் தாண்டிய புது கற்பனை ஒளியையும், சிறப்பையும், அவர்கள் சொல்லாத பல புது விஷயங்களையும் அதில் உள்ள நயங்களையும் நாம் காணலாம்.

ஒவ்வொரு பாடலும் ஒரு சுடர் விளக்கு. சில அமுதத் துளிகளை இங்கு பருகி மகிழ்வோம்.

முதலில் பாரதியாரின் ஒரிஜினல் கவித்திறனைப் பார்ப்போம்.

தேனை மறந்திருக்கும் வண்டும், ஒளிச்

சிறப்பை மறந்து விட்ட பூவும்

வானை மறந்திருக்கும் பயிரும் – இந்த

வையம் முழுதும் இல்லை தோழி!   ஆசை முகம் மறந்து போச்சே இதை ஆரிடம் சொல்வேனடி.

இதில் வந்திருக்கும் யாரும் சொல்லாத  சிறப்பான உவமைகள் அவரை கவிதை வானில் உச்சத்தில் ஏற்றி விடுகின்றன.

சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா என்று கொஞ்சி அழைக்கும் கவிஞர், உன் கண்ணில் நீர் வழிந்தால் – என்னெஞ்சில் உதிரம் கொட்டுதடி என் கண்ணில் பாவையன்றோ கண்ணம்மா, என்னுயிர் நின்னதன்றோ என்று சொல்லும் போது அதில் இருக்கும் உருக்கத்திற்கு உவமை உண்டா, என்ன?

காலைக் கதிரழகின் கற்பனைகள் பாட வந்த கவிஞன்,

தங்கம் உருக்கித் தழல் குறைத்து தேனாக்கி எங்கும் பரப்பியதோர் இங்கிதமோ என்கிறான். இது என்ன புது ரஸவாதம்! தங்கத்தை உருக்க வேண்டுமாம். பின்னர் அதன் வெப்பத்தை – சூட்டைத் தணிக்க வேண்டுமாம். அதைத் தேனாக்க வேண்டுமாம். பின்னர் எங்கும் பரப்ப வேண்டுமாம். அது காலைக் கதிரழகாம்! கற்பனையின் எல்லையையும் கடக்கிறான் கவிஞன். செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே என்றான் அவன். காதிலே தேன் வந்து பாயும் உவமை ஒரு புறம் இனிமையைத் தர ஆடி வரும் தேனே என்று பிள்ளைக் கனியமுதை அவன் அழைக்கும் பாங்கு உள்ளத்தைக் கொள்ளை கொள்கிறது!

ராமன் சீதை இலக்குவன் நடந்து செல்லும் காட்சியை வர்ணிக்க வந்த கம்பன் பாடுகிறான் இப்படி:

வெய்யோன் ஒளி தன்  மேனியின் விரி ஜோதியின் மறையப்

பொய்யோவெனும் இடையாளொடும் இளையானுடன் போனான்

மையோ மரகதமோ மறிகடலோ மழைமுகிலோ

ஐயோ இவன் வடிவென்பதோர் அழியா அழகுடையான்

ஐயோ! இவன் அழகை வர்ணிக்க முடியாது என்கிறான் கம்பன். ஐயோ என்னா பந்து வீச்சுடா என்று கிரிக்கெட் மைதானத்தில் பரம ரசிகன் விளையாட்டில் ஒன்றிக் கூறும் ஐயோவில் எத்துணை அழகு இருக்கிறது.

பாரதியோ ஐயோவை விட்டு விட்டு புதுச் சுவையை புதுச் சொல்லில் தருகிறான் குயில் பாட்டில்!

கண் எடுக்காது என்னைக் கணப்பொழுது நோக்கினாள்

சற்றே தலை குனிந்தாள். சாமீ! இவளழகை

எற்றே தமிழில் இசைத்திடுவேன்.

மங்கை அவளின் ஒரு கணப் பார்வை. சற்றே தலை குனிந்த சமயம். சாமீ! இவளழகை எப்படிக் கூறுவேன் என்று கவிஞன் கூறும் போது கம்பனின் ஐயோ இவன் வடிவென்பதோர் அழியா அழகுடையான் நம் முன் தோன்றுகிறது. ஐயோ, – சாமீ இதில் எது சிறப்பு மிக்க சொல் என்று யாரால் சொல்ல முடியும்?!

ஊழிக் கூத்தை பாரதி கண்டான், பாடினான்:

வெடிபடு மண்டத்திடிபல் தாளம் போட – வெறும்

வெளியில் இரத்தக் களியொடு பூதம் பாடப் – பாட்டின்

அடிபடு பொருள் உன் அடிபடும் ஒலியில் கூடக் களித்து

ஆடும் காளீ! சாமுண்டீ! கங்காளீ!

அன்னை! அன்னை! ஆடுங் கூத்தை நாடச் செய்தாய் என்னை!

எத்துணை அற்புதமான கூத்து! எத்துணை அற்புதமான வர்ணனை!

இப்படிப்பட்ட அரும் கவிஞனை எப்படிப் போற்றினாலும் தகும்!

இனி உலகக் கவிஞர்களின் வரிசையிலே சிறப்பான இடத்தைக் கொண்டவன் பாரதி என்பதற்கும் சில உதாரணங்களைச் சுட்டிக் காட்ட முடியும்!

ஷெல்லி தாசன் என்று தன் பெயரைச் சூட்டிக் கொண்ட கவிஞன் ஆங்கிலக் கவிஞன் ஷெல்லியிலே திளைத்தவன். To Sophia என்ற கவிதையில் ஷெல்லி

Thy Deep Eyes a Double Planet

என்று கூறுவதை சுட்டும் விழிச் சுடர் தான் கண்ணம்மா சூரிய சந்திரரோ என்ற பாரதியின் அழியாத வரியிலே காண முடிகிறது. நமது பாரம்பரியத்திற்கு ஏற்றபடி டபிள் ப்ளானட் சூரிய சந்திரனாகிறது!

குரு கோவிந்த சிங்கின் கர்ஜனை உரையிலே,

சவா லாக் சே ஏக் லடாவூம் சிடியன் தே மை பாஜ துடாவூம் தபை குரு கோவிந்த சிம்ஹ நாம கஹாவூ (सवा लाख से एक लड़ाऊं, चिड़ियन ते मैं बाज तुड़ाऊं, तबै गुरु गोबिंद सिंह नाम कहाऊं“)

என்று கூறுகிறார். சிடியா என்றால் சிட்டுக் குருவிகள் பாஜ என்றால் ராஜாளி சிட்டுக்குருவிகள் ராஜாளிகளாகும்!

சவா லாக் -ஒன்றே கால் லட்சம் பேருடன்- ஏக்- ஒரே ஒருவன் சண்டையிடுவான். அப்போது குரு கோவிந்த சிங்கின் பெயரை கேளுங்கள் என்றார்.

இதை, பாரதியார் மிக எளிதாக ‘ஈயை கருட நிலை ஏற்றுவாய்’ என்கிறார்.

இலங்கையிலே தங்க மயமான இலங்கையைக் கண்ட ராமர் லட்சுமணனிடம் இது எனக்கு பெரிதாகத் தெரியவில்லை; ருசிக்கவில்லை; பெற்ற தாயும் எனது தாய்நாடும் சுவர்க்கத்தை விடச் சிறந்ததாகும் என்கிறார்.

‘அபி ஸ்வர்ணமயி லங்கா ந ரோசதே லக்ஷ்மணா! ஜனனீ ஜன்ம பூமிஸ்ச ஸ்வர்காதபி கரியஸி’       என்கிறார் இராமர்.

இதன் தமிழ் வடிவத்தை ‘பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும்

நற்றவ வானிலும் நனி சிறந்தனவே’ என்று தருகிறான் நம் அருமைக் கவிஞன்.

வேத சூக்தங்களை அரவிந்தரிடமிருந்து கற்ற பாரதியார் அப்படியே அவற்றை தமிழ்க் கவிதைகளாகத் தந்துள்ளார்.

அக்னி ஸ்தோமம் என்ற கவிதையில் ரிஷிகள் எங்கள் வேள்விக் கூடமீதில் ஏறுதே தீ தீ தீ என்று வேள்வியைத் தொடங்குகின்றனர்.

இளையும் வந்தாள் கவிதை வந்தால் இரவி வந்தானே – இந்நேரம்

விளையும் எங்கள் தீயினாலே – மேன்மையுற்றோமே

என ரிஷிகள் ஆனந்தக் கூத்திடுகின்றனர்.

பிரெஞ்சு மொழியில் உள்ள தேசீய கீதத்தையும் கூட இரு விதமாக மொழி பெயர்த்துத் தந்திருக்கிறான் நம் கவிஞன்.

‘அன்னை நன்னாட்டின் மக்காள் ஏகுவம்

மன்னு புகழ் நாளிதுவே’ என ஆரம்பிக்கும் அந்த கீதம்!

ஏராளமான கவிஞர்கள் பாரதியை அண்ணாந்து பார்த்து வியக்கின்றனர்.

ஒரு பெரும் முயற்சியாக பாரதி போற்றி ஆயிரம் என்று ஆயிரம் பாடல்களைத் தொகுக்க ஆரம்பித்தேன். அந்த ஆயிரம் பாடல்களும் http://www.tamilandvedas.comஇல் பிரசுரிக்கப்பட்டன.

மரணத்தை வென்ற மகாகவியை கவியரசு கண்ணதாசன் பாடுகிறான் இப்படி;

சந்திரர் சூரியர் உள்ளவரையிலும்

   சாவினை வென்று விட்டான் – ஒரு

சாத்திரப் பாட்டினில் பாரததேசத்தின்

   தாய்மையை வார்த்து விட்டான்

இந்திர தேவரும் காலில் விழும்படி

  என்னென்ன பாடி விட்டான் – அவன்

இன்று நடப்பதை அன்று சொன்னான் புவி

   ஏற்றமுரைத்து விட்டான்

வங்கத்து நீரினை மையத்து நாட்டுக்கு

   வாரிக் கொணர் என்றான் – அந்த

வானம் அளந்து விஞ்ஞானம் படைத்திட

  வாரும் தமிழரென்றான்

சிங்க மராட்டியர் கற்பனைக்கீடொரு

  சேரத்துத் தந்தமென்றான் – இந்த

தேச பெருமைக்கு ஆரம்பம் செய்தவன்

   பாரதித் தேவன் என்பான்!

பாரதி எனும் பெயரைச் சொல்லு – கெட்ட

பயமெனும் பகைவனை வெல்லு

நேரினி உனக்கு நிகர் இல்லை – உடன்

நீங்கும் அடிமை மனத் தொல்லை என்கிறார் நாமக்கல் கவிஞர்.

பாரதிக்கு வாழ்நாள் முழுவதும் தாசனாக இருந்த பாரதிதாசன் பாரதியைப் பற்றி விரிவாகக் கூறுகிறார் இப்படி:

பைந்தமிழ் தேர்ப்பாகன் அவனொரு

செந்தமிழ்த் தேனீ, சிந்துக்குத் தந்தை

குவிக்கும் கவிதைக் குயில்! இந்த நாட்டினைக்

கவிழ்க்கும் பகையைக் கவிழ்க்கும் கவிமுரசு

நீடு துயில் நீக்கப் பாடிவந்த நிலா!

காடு கமழும் கற்பூரச் சொற்கோ

கற்பனை ஊற்றாம் கதையின் புதையல்

திறம் பாட வந்த மறவன் புதிய

அறம் பாட வந்த அறிஞன் நாட்டிற்

படரும் சாதிப் படைக்கு மருந்து

மண்டும் மதங்கள் அண்டா நெருப்பவ்ன்

அயலார் எதிர்ப்புக் கணையா விளக்கவன்

என்னென்று சொல்வேன் என்னென்று சொல்வேன்

என்கிறார்.

நான் தொகுத்த ஆயிரம் பாடல்களிலே ஒரு சிலவற்றைப் பார்த்தோம்.

பிரான்ஸென்னும் உயர்ந்த புகழ் நாட்டில் உயர் புலவோரும் பிறரும் ஆங்கே விராவு புகழ் ஆங்கிலத் தீம் கவியரசர் தாமும், சுவை புதிது நயம் புதிது, வளம் புதிது, சொற் புதிது, ஜோதி கொண்ட நவ கவிதை, எந்நாளும் அழியாத மஹா கவிதை என்று பாரதியார் கவிதையை வியந்து கூறியுள்ளனர். அதை இப்படி அவரே கூறி இருக்கிறார்.

இனி இதற்கு மேல் நாம் உரைக்க என்ன இருக்கிறது.

இந்தியர் தம் நெஞ்சினிலே தேசப்பற்றை ஊட்டினான்

வஞ்சக வெள்ளையரை நாட்டைவிட்டு ஓட்டினான்

தமிழர்க்குத் தமிழ் போற்றும் வழி காட்டினான்

புகழோங்கு பாரதத்தை நிலை நாட்டினான்

புதியதொரு பாதையைப் புவியினிலே காட்டினான்

புகழவோர் வார்த்தையிலை புகழுக்கே புகழ் ஊட்டினான்

புண்ணியன் சுப்பிரமணி பாரதியின் பெருமையினை

எண்ணியெண்ணி அவன்வழி நடப்போம் உயர்வோம்

கற்க கசடற பாரதி பாக்களை

நிற்க அதற்குத் தக

என்ற எனது இந்த அஞ்சலிச் சொற்களை பாரதியின் தாளில் சமர்ப்பித்து விடை பெறுகிறேன்.   நன்றி வணக்கம்!

 TAGS- பாரதியார்,  பா நலம், 

****

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: