
WRITTEN BY S NAGARAJAN
Post No. 9013
Date uploaded in London – – –9 DECEMBER 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
மஹரிஷி சாத்வத்: கிருபர், கிருபி தோற்றம் பற்றிய வரலாறு!
ச.நாகராஜன்
மஹா பாரதத்தின் முக்கிய கதாபாத்திரங்களுள் ஒருவர் கிருபர். அவரது சகோதரி கிருபி.
இவர்களது வரலாறு ஆச்சரியமூட்டும் ஒன்று.
அஸ்வத்தாமன், பலி, வியாஸர், ஹனுமான், விபீஷணர், கிருபர், பரசுராமர் ஆகிய ஏழு பேரும் சிரஞ்சீவிகள்.
கிருபரின் தோற்றம் எப்படி? பார்ப்போம்.

கோதமா என்ற மஹரிஷிக்கு சரத்வத் என்ற ஒரு குமாரர் இருந்தார். அவர் கையில் வில் பிடித்தவராக இருந்தார். வில்வித்தையில் ஆர்வம் உள்ள அவர் அதில் மிகுந்த தேர்ச்சியையும் பெற்றார். தன்னுடைய தவ மகிமையினால் சகல சாஸ்திரங்களையும் உணர்ந்தார். அஸ்திர சஸ்திர வித்தைகளையும் கற்றுத் தேர்ந்தார். இப்படிப்பட்ட முனிவரின் தவ வலிமையைக் கண்டு இந்திரன் மிகவும் பயந்தான்.
ஜாலபதி என்ற அப்ஸரஸை அழைத்து, “சரத்வத் ரிஷியினுடைய தவத்தைக் கலை; அதை அழிப்பாயாக” என்று உத்தரவிட்டான்.
அந்த அப்ஸரஸ் பூலோகம் வந்து சரத்வத் மஹரிஷியின் ஆசிரமத்திற்கு வந்தாள். வில் அம்புகளுடன் விளங்கும் அந்த தவ ரிஷியைத் தன் அங்க லாவண்யங்களால் மயக்க ஆரம்பித்தாள்.
ஒப்பில்லாத பேரழகியாக விளங்கிய அவள் காட்டில் ஏகாந்தமாய் ஒரே ஒரு ஆடையையும் உடுத்திக் கொண்டு அவர் முன்னால் சென்றாள். அவளைக் கண்ட சரத்வத் மோகவலையில் வீழ்ந்தார். அவரது கையில் இருந்த வில்லும் அம்பும் நழுவின. அவர் மனம் ஆசை வசப்பட்டது.
என்றாலும் கூட தவ மகிமையினாலும் மிகுந்த பொறுமையினாலும் ஆசையை அடக்கிக் கொண்டார்.
ஆனாலும் அவரது ரேதஸ் அவரை அறியாமல் வெளி வந்தது. தனது வில், அம்பு, மான் தோல் ஆகியவற்றை விட்டு விட்டு அந்த அப்ஸரஸிடமிருந்து அவர் விலகி வேகமாக ஓடினார்.
அவரது ரேதஸ் நாணல்களின் மத்தியில் விழுந்து இரு பாகங்களாகப் பிரிந்தது. அவை இரு குழந்தைகளாக ஆயின.
அஸ்தினாபுரத்தை ஆண்டு வந்த சந்தனு மஹாராஜன் அப்போது வேட்டையாடச் சென்றிருந்தான். அவனுடைய படை வீரன் ஒருவன் அந்த இரு குழந்தைகளைக் கண்டான். வில்,அம்பு, மான் தோல் ஆகியவை குழந்தைகளுக்கு அருகில் இருப்பதையும அவன் பார்த்தான். வில் வித்தையில் தேர்ந்த ஒரு பிராமணருடைய குழந்தைகளாக அவை இருக்க வேண்டும் என்று ஊகித்த அவன் குழந்தைகளையும் வில், அம்பு, மான் தோலையும் எடுத்துக் கொண்டான்.
நேரடியாக அரசனிடம் சென்று குழந்தைகளை, வில் அம்புடன் காண்பித்தான்.
குழந்தைகளைப் பார்த்த அரசன் இரக்கம் கொண்டு இவைகள் என் குழந்தைகளாகவே இருக்கட்டும் என்று கூறி அவற்றைத் தன் அரண்மனைக்கு எடுத்துச் சென்று வளர்க்க ஆரம்பித்தான். இரண்டு குழந்தைகளில் ஒன்று ஆண்; இன்னொன்று பெண்.
சாஸ்திரப்படி அவர்களுக்குச் செய்ய வேண்டிய ஜாதக நாம ஸம்ஸ்காரங்களைச் செய்த சந்தனு அக்குழந்தைகளிடத்துத் தான் காட்டிய கிருபையினால் ஆண் குழந்தைக்கு கிருபன் என்றும் பெண்குழந்தைக்கு கிருபி என்றும் பெயர் சூட்டினான்.
சரத்வத் ரிஷி ஞான திருஷ்டியினால் தனது இரு குழந்தைகளும் சந்தனு மஹாராஜாவின் அரண்மனையில் வளர்ந்து வருவதை அறிந்து கொண்டார்.
அரசனிடம் சென்ற அவர் தனது வம்சம் உள்ளிட்டவற்றை விவரித்து அந்த இரு குழந்தைகளும் தனது குழந்தைகளே என்று கூறினார்.
தனது குமாரனான கிருபனுக்கு தனுர் வேத சாஸ்திரங்கள் மற்றும் வேத, வேதாங்கங்கள் ஆகிய அனைத்தையும் கற்றுக் கொடுத்தார். கிருபர் அனைத்திலும் வல்லவரானார்.
கிருபரிடம் திருதராஷ்டிரனுடைய நூறு புத்திரர்களும் பாண்டவர்கள் ஐவரும், யாதவர்களும், விருஷ்ணிகளும் இன்னும் பல தேசங்களிலிருந்து வந்த ராஜ குமாரர்களும் வில் வித்தையைக் கற்றுக் கொண்டனர்.
கிருபி பரத்வாஜருடைய புத்திரராகிய துரோணாசாரியாருக்கு விவாகம் செய்து கொடுக்கப்பட்டாள். கிருபிக்கும் துரோணருக்கும் பிறந்த புத்திரனே அஸ்வத்தாமன். அஸ்வத்தாமனும் ஏழு சிரஞ்சீவிகளுள் ஒருவரானார்.
துரோணர் வில் வித்தையில் தேர்ந்து அவரும் ஆசாரியராகி பலருக்கும் வில் வித்தையைக் கற்றுக் கொடுத்தார்.
இந்த வரலாறு பாரதத்தில் உள்ளது.
சரத்வத் பற்றிய இன்னொரு வரலாறு பாகவதத்தில் காணப்படுகிறது. சத்யத்ருதி என்பவருடைய புதல்வர் சரத்வத் என்றும் அவர் ஊர்வசியைப் பார்த்ததினால் அவரது ரேதஸ் வெளிப்பட்டது என்றும் அதிலிருந்து பிறந்தவர்களே கிருபர், கிருபி என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
ஆனால் இப்படி மாறுபட்ட சரித்திரத்திற்கு ஒரு முக்கிய காரணம் உண்டு. இந்த சரித்திரம் இன்னொரு கல்பத்தைச் சேர்ந்தது என்பதாகும்.
கல்பம் மாறுபடும் போது சிறு சிறு வேறுபாடுகளும் ஏற்படுகின்றன என்பதை இதிலிருந்து அறிய முடிகிறது.
நாம் இப்போது இருக்கும் கல்பம் ஸ்வேதவராஹ கல்பமாகும்.
***

tags– சரத்வத் ரிஷி, கிருபர், கிருபி ,