
Post No. 9031
Date uploaded in London – –13 DECEMBER 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
அதர்வண வேதத்திலும் யஜுர் வேதத்திலும் உள்ள குங்கிலிய மர்மத்தை கட்டுரையின் முதல் பகுதியில் கண்டோம் , வேத காலத்திலேயே குக்குல், குல்குலு , குக்குலு என்று பல பெயர்களால் அழைக்கப்பட்ட குங்கிலியத்தை இந்தியா பாபிலோனியாவுக்கும் அங்கிருந்து எகிப்துக்கும் ஏற்றுமதி செய்தது.
XXX

குங்கிலியக் கலய நாயனார் செய்த அற்புதங்கள்
குங்கிலியத்தின் பெயர்கொண்ட ஒரு சிவபக்தர் 1400 ஆண்டுகளாக குங்கிலியத்தின் பெருமையைப் பரப்பி வருகிறார். அவருடைய பெயர் குங்கிலியக் கலய நாயனார். அவருடைய முழு வரலாறு பெரிய புராணத்தில் உள்ளது. அவர் வாழ்க்கையில் நடந்த இரண்டு அற்புதங்களைக் காண்போம்.
திருக்கடவூர் என்னும் தலம் அபிராமி அம்மனாலும் அமிர்தகடேஸ்வரராலும் புகழ்பெற்றது. அங்கு அந்தணர் குலத்தில் அவதரித்தார் கலய நாயனார்
“வாய்ந்த நீர் வளத்தால் ஓங்கி மன்னிய பொன்னி நாட்டின்
ஏய்ந்த சீர் மறையோர் வாழும் எயில்பதி நீர்க் கங்கை”
என்று புகழ் பாடுகிறார் சேக்கிழார் பெருமான். மார்கண்டேயனை க் காப்பாற்றுவதற்காக, சிவ பெருமான் யமனைக் காலால் உதைத்து ஒடுக்கிய தலம் என்பதையும் சொல்லத் தவறவில்லை.
அங்கு ‘அருமறை முந்நூல் மார்பின் அந்தணர் கலயர்’ என்பார் அவதரித்தார் . அவர்
‘காலனார் உயிர் செற்றார்க்கு — சிவனுக்கு — கமழ்ந்த குங்கிலியத் தூபம் சாலவே நிறைந்து விம்ம இடும்பணி தலை நின்றுள்ளார்.
இவ்வாறு சிவனுக்கு குங்க்லிய தூபப் பணியில் ஈடுபட்ட அவர் குடும்பத்தை வறுமை வாட்டியது.
எந்த அளவுக்கு வறுமை என்றால், இரண்டு நாட்களுக்கு அவர் குடும்பத்தினர் உண்ணவே ஒன்றுமில்லாமல் தவித்தனராம் — உடனே மனைவி தன்னுடைய தங்கத் தாலியைக் கொடுத்து நெல் வாங்கி வாருங்கள் என்று அனுப்பினார்
“யாதும் ஓன்றும் இல்லையாகி
இருபகல் உணவு மாறிப்
பேது உறு மைந்தரோடும் பெருகு
சுற்றத்தை நோக்கிக்
காதல் செய் மனைவியார் தம்
கணவனார்க் கலயனார் கைக்
கோது இல் மங்கள நூல் தாலி
கொடுத்து நெல் கொள்ளும்” என்றார்.
அப்போது அவர் செல்லும் வழியில்
ஒப்பு இல் குங்கிலியம் கொண்டு ஓர்
வணிகனும் எதிர் வந்துற்றான்
குங்கிலியத்தை சிவபெருமானுக்குத் தரும் என்றவுடனே
பொன் தரத் தாரும் என்று
புகன்றிட வணிகன் தானும்
என் தர இசைந்து என்னத்
தாலியைக் கலயர் ஈந்தார்
கோவிலுக்கு மகிழ்சசியுடன் சென்று வேண்டும் மட்டும் குங்கிலியப் புகைபோட்டு இறைவனை வணங்கினார் . மனைவி மக்களை மறந்து கோவிலிலேயே தூங்கியும் விட்டார் . அப்போது ஒரு அதிசயம் நிகழ்ந்தது.

குபேரன் செல்வம் போன்ற மிகப் பெரிய செல்வத்தை சிவ பெருமான் கலயர் வீட்டில் பொழிந்தார். இந்த அற்புதத்தை கலயர் கனவிலும் செப்பினார் . இது நமக்கு கண்ண பிரான்- குசேலர் கதையை நினைவுபடுத்தும். சுதாமா என்னும் குசேலர் கொணர்ந்த ஒரு பிடி அவலை கிருஷ்ண ன் சாப்பிட்ட அடுத்த நொடியில் அந்த ஏழை சுதாமாவின் குடிசை எப்படி அரண்மனை ஆயிற்றோ அப்படி கலயரின் குடிலும் மாளிகை ஆயிற்று ; மளிகைப் பொருட்களும் குவிந்தன .
இதோ சேக்கிழார் சொற்கள்
அன்பர் அங்கு இருப்ப நம்பர்
அருளினால் அளகை வேந்தன்
தன் பெரிய நிதியம் தூர்த்துத்
தரணிமேல் நெருங்க எங்கும்
பொன்பயில் குலையும் நெல்லும்
பொரு இல் பல் வளனும் பொங்க
மன் பெரும் செல்வம் ஆக்கி
வைத்தனன் மனையில் நீட .
அளகை வேந்தன் = குபேரன்
இது முதல் அற்புதம்.
xxx
இரண்டாவது அற்புதம் என்னவென்றால், திருப்பனந்தாள் என்னும் தலத்தில் சாய்ந்து போன இலிங்கத்தை தனது கழுத்தில் கட்டிய கயிற்றின் பலத்தால் நிமிர்த்திய செய்கையாகும். அவருக்கு முன்னதாக, சோழ மன்னன் பல யானைகளைக் கொண்டு லிங்கத்தை நிமிர்த்த முயற்சி செய்து தோல்வியுற்றான்.
யானைகளாலும் நிமிர்த்த முடியாத சிவலிங்கத்தை அன்பு எனும் பாசக்கயிற்றால் நிமிர்த்தினார் கலயர் என்று சேக்கிழார் புகழ்கிறார்.
மானவன் கயிறு பூண்டு
கழுத்தினால் வருந்தல் உற்றார்
கயிற்றை சிவலிங்கத்தில் கட்டி மற்றோர் புறத்தை தன கழுத்தில் மாலை போலாக கட்டிக்கொண்டு பலம் முழுதையும் செலுத்தினார் . அது வெறும் கயிறு அல்ல. அன்பெனும் கயிறு. சிவ பெருமான் ‘ அன்பெனும் வலையில் அகப்படும் மலை ‘ அல்லவா !
நண்ணிய ஒருமை அன்பின்
நார் உறு பாசத்தாலே
திண்ணிய தொண்டர் பூட்டி
இளைத்த பின் , திறம்பி நிற்க
ஒண்ணுமோ கலயனார் தம்
ஒருப்பாடு கண்டபோதே
அண்ணலே நேரே நின்றார்
அமரரும் விசும்பில் ஆர்த்தார் .
அன்பின் மிகுதியால் சிவன் நேரே நிற்க வானத்தில் இருந்து தேவர்கள் பூமாரி பொழிந்தனர்.
தேவர்களும் வியந்து போற்றிய இந்த இரு அற்புதம் மூலமாக நாயனாரின் பெருமை மட்டுமின்றி குங்கிலியத்தின் பெருமையும் இலக்கியத்தில் அழியா இடம்பெற்றது.

tags — குங்கிலிய, கலய நாயனார், அற்புதங்கள்
XXXX SUBHAM XXXX