திரைப்படங்களில் பாரதியார்! – 1 (Post 9033)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No. 9033

Date uploaded in London – – 14 DECEMBER 2020       

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

மஹாகவி பாரதியார் நினைவு நூற்றாண்டு விழாவினை ஒட்டி லண்டனிலிருந்து வாரம்தோறும் இந்திய நேரம் மாலை 6.30 மணிக்கு தமிழ் முழக்கம் நிகழ்ச்சியில் பல சிறப்பு ஒளிபரப்புகள் இடம் பெறுகின்றன. 13-2-2020 அன்று ஒளிபரப்பான உரை இது.

ஒளிபரப்பை facebook.com/gnanamayam & youtube ஆகிய தளங்களில் எப்போதும் காணலாம்.

திரைப்படங்களில் பாரதியார்! – 1

ச.நாகராஜன்

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே, சந்தானம் நாகராஜன் வணக்கம்.

பாரதியார் நினைவு நூற்றாண்டு விழாவிலே பாரதியாரை நினைத்துப் போற்றுவதே தமிழர் செய்த பெரும் பாக்கியமாகும்.

திரைப்படப் பாடல்களோடு ஒரு பயணம் என்ற் ஒரு நூலை எழுதி 2014ஆம் ஆண்டு நான் வெளியிட்டேன். இது நிலாச்சாரல் இணையதள் இதழில் 52 வாரங்கள் தொடர்ந்து வந்த ஒரு தொடர் ஆகும்.

அச்சுப் பதிப்பாக வந்துள்ள இந்த நூலுக்கு அணிந்துரை அளித்துள்ள பத்மஸ்ரீ நல்லி குப்புசாமி செட்டியார்  எல்லாத் துறை வாசகர்களுக்கும் ஒரு ஆர்வத்தைத் தூண்டுவதாக எழுதப்பட்டுள்ள நூல் இது என்று பாராட்டியுள்ளார். இதே நூல் மின்னணு வடிவில் www.nilacharal.com வெளியீடாக வந்துள்ளது.

இதில் மூன்று அத்தியாயங்கள் மகாகவி பாரதியாரின் பாடல்கள் திரைப்படங்களில் இடம் பெற்றுள்ளதை விவரிக்கின்றன. அந்த மூன்று அத்தியாயங்களின் அடியொட்டி இந்த உரையை இங்கு ஆற்றுகிறேன்.

தமிழில் திரைப்படங்கள் தோன்றி வெளிவர ஆரம்பித்து ஆண்டுகள் பல கடந்து விட்டன. திரைப்படங்களின் வளர்ச்சியோடு கூட பல்வேறு புதிய நல்ல விஷயங்கள் தமிழ் உலகிற்குக் கிடைத்தன.

அந்த நல்ல விஷயங்களுள் முக்கியமான ஒன்று பாரதியார் பாடல்கள்.

1947ஆம் ஆண்டு வெளியான பைத்தியக்காரன் திரைப்படத்தில் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அவர்கள் எழுதிய பாடல் ஒன்று இடம் பெற்றது. பாடியவர் பி.ஏ.பெரியநாயகி. சிறந்த பாடகர்.

பாடல் இது தான்:

பாட்டுக்கொடு புலவன் பாரதி அடா – அவன்

   பாட்டைப் ப்ண்ணோடொருவன் பாடினான் அடா

கேட்டுக் கிறுகிறுத்துப் போனேனே அடா – அந்தக்

   கிறுக்கில் உளறு மொழி பொறுப்பாய் அடா

சொல்லுக்குச் சொல்லழகும் ஏறுமே அடா கவி

 துள்ளும் மறியைப் போலே துள்ளும் அடா

கல்லும் கனிந்து கனியாகுமே அடா – பசுங்

கன்றும் பால் உண்டிடாது  கேட்குமே அடா

குயிலும் கிளியும் பாட்டில் கூவுமே அடா – மயி’

  குதித்துக் குதித்து நடம் ஆடுமே – அடா

வெயிலும் மழையுமதில் தோன்றுமே அடா – மலர்

 விரிந்து விரிந்து மணம் வீசுமே அடா

அலைமேலே அலை வந்து மோதுமே அடா – அவை

  அழகான முத்தையள்லிக் கொட்டுமே அடா

மலைமேலே மலை வளர்ந்தோங்குமே அடா

  வனங்கள் அடர்ந்தடர்ந்து சூழுமே அடா

இது ஒரு நீண்ட பாடல். இந்தப் பாடலின் சில சரணங்கள் மட்டும் பைத்தியக்காரன் படப் பாடலில் இடம் பெற்றது. இன்னும் சில சரணங்களை மேலே காணலாம்.

அமரகவி என்ற இந்தப் பாடல் எட்டயபுரம் பாரதி மண்டபத் திறப்பு விழாவின் போது கல்கி 12-10-1947 தேதியிட்ட இதழில் வெளி வந்த பாடல்.

பல அரும் பாடல்களை கலைமகள் இதழ் முன்பேயே வெளியிட ஆரம்பித்து விட்டது.

பாரதியாரின் பாடல்களைப் பத்தாயிரம் ரூபாய் கொடுத்து ஏ வி எம் மெய்யப்ப செட்டியார் வாங்கி இருந்தார். பின்னர், அப்போது தமிழகத்தின் முதல் அமைச்சராக இருந்த ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி பாரதியாரின் கவிதைகளை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

பாரதியாரின் பாடல்கள் பல்வேறு திரைப்படங்களில் இடம் பெற ஆரம்பித்தன.

நாம் இருவர் என்ற படம் 1947 ஜனவரி  மாதம் 14ஆம் தேதி தமிழகமெங்கும் திரையிடப்பட்டது.

அதில் சோலை மலர் ஒளியோ என்ற அரிய பாடல் இடம் பெற்றது.

சுதர்ஸனம் இசையமைப்பில் டி.ஆர்.மகாலிங்கம் தனது கணீர் குரலில் பாடிய அற்புதப் பாடல் இது.

சுட்டும் விழிச்சுடர் தான் என்ற பாரதியாரின் கவிதையிலிருந்து,

சோலை மலரொளியோ – உனது

சுந்தரப் புன்னகை தான்?

நீலக் கடலலையே

உனது நெஞ்சில் அலைகளடீ

என்ற வரிகளை டி.ஆர். மகாலிங்கம் அற்புதமாகப் பாடுகிறார்.

இதைத் தொடர்ந்து ‘ஆசை முகம் மறந்து போச்சே’ என்ற பாரதியாரின் கவிதையிலிருந்து,

‘கண்ணில் தெரியுதொரு தோற்றம் -அதில்

கண்ணன் அழகு முழுதில்லை

நண்ணு முகவடிவு காணில் அந்த

நல்ல மலர்ச்சிரிப்பைக் காணோம்

என்ற பெண் குரல் ஒலிக்கிறது.

அடுத்து ‘பாயும் ஒளி நீ எனக்கு’ என்ற கவிதையிலிருந்து,

‘வெண்ணிலவு நீ எனக்கு – மேவு கடல் நான் உனக்கு’

பண்ணு சுதி நீ எனக்கு – பாட்டினிமை நான் உனக்கு

எண்ணி எண்ணிப் பார்த்திடில் ஓர் எண்ணமில்லை நின் சுவைக்கே

கண்ணின் மணி போன்றவளே! கட்டியமுதே! கண்ணம்மா!

என்ற வரிகள் ஒலிக்கின்றன.

கவிதையின் சுவையை எண்ணி எண்ணிப் பார்த்திடில் அதன் சுவைக்கு ஒர்ர் ஒப்புவமையே இல்லை.

அதற்கு அற்புதமாக இசை அமைக்கப்பட அதை டி ஆர் மகாலிங்கம் பாடுவதை எத்தனை முறை கேட்டாலும் அலுப்புத் தட்டாது.

அடுத்து வந்தது வேதாள உலகம். அதில் இடம் பெற்ற பாரதியாரின் கவிதைகளை அடுத்த உரையில் காண்போம்.

வாழ்க பாரதி நாமம். வாழ்க தமிழ்! வாழிய பாரத மணித் திருநாடு!

நன்றி வணக்கம்.

***

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: