மஹரிஷி தனுஸாக்ஷர்! (Post No.9040)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No. 9040

Date uploaded in London – – 16 DECEMBER 2020       

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

மஹரிஷி தனுஸாக்ஷர்!

ச.நாகராஜன்

முன்னொரு காலத்தில் வாலதி என்ற முனிவர் ஒருவர் இருந்தார். மிகுந்த தவ வலிமை உடைய அவருக்கு ஒரு குழந்தை பிறந்தது. அது இறந்தும் போனது. இதனால் அவர் மிகுந்த துக்கம் அடைந்தார்.

ஆகவே இறப்பில்லாத சாஸ்வதமான புத்திரனை அடைய வேண்டுமென்று எண்ணம் கொண்ட அவர் உக்ரமான தவம் செய்தார். தேவர்கள் அந்த முனிவரிடம் கருணை மிகக் கொண்டனர். ஆனால் அவரது புத்திரனை தேவர்கள் போல சாஸ்வதமாய் இருக்கச் செய்ய மனமற்றவர்களாய் இருந்தனர்.

அவர்கள் அவரை நோக்கி, “ ஓ! முனிவரே, இறக்கக் கூடிய ஒருவனை எப்படியானாலும் இறப்பில்லாதவனாய் ஆக்குவதென்பது முடியாத காரியம்.

என்றாலும் கூட, உமது புத்திரனுடைய உயிரானது அவனது தேக அழிவைப் பொருத்ததாக இல்லாமல் வேறு வஸ்துவின் நாசத்தைச் சார்ந்ததாக இருக்கும்” என்று கூறினர்.

அதற்கு வாலதி முனிவர், “ஓ! தேவர்களே! இதோ இந்த மலைகள் ஆதி முதல் அழிவில்லாமல் அப்படியே இருக்கின்றன.அவைகளே என் புத்திரனின் உயிரிழப்பதற்குக் கருவி, காரணமாக இருக்கட்டும்” என்றார்.

“அப்படியே ஆகுக!” என தேவர்களும் அவருக்கு வரம் அளித்தார்கள்.

சில காலம் சென்ற பிறகு வாலதி முனிவருக்கு ஒரு மகன் பிறந்தான். அவனுக்கு மேதாவி என்று பெயர். அவன் இயற்கையிலேயே மிகுந்த கோபம் உடையவனாக இருந்தான். தனது பிறப்பு சம்பந்தமான விஷயங்களைக் கேட்ட அவன், இறப்பில்லாமல் இருப்போம் என எண்ணி, அகங்காரம் கொண்டு முனிவர்களை அவமதித்துக் கொண்டே இருந்தான். அவர்களுக்கு இடைஞ்சல்கள் செய்து உலகம் முழுவதும் திரிந்து கொண்டிருந்தான்.

      ஒரு நாள் மிகுந்த தவ சிரேஷ்டரான ‘தனுஸாக்ஷர்’ என்ற முனிவரை அவன் கண்டான். வழக்கம் போல மேதாவி அவரையும் துன்புறுத்தி இம்சை செய்தான். அவருக்கு அடங்காத கோபம் வ்ந்தது. அவனை நோக்கி அவர், “நீ சாம்பலாகக் கடவாய்” என்று சபித்தார். ஆனால் மேதாவி சாம்பலாகவில்லை.

உடனே தனுஸாக்ஷர் மேதாவியின் உயிர் போவதற்குக் காரணமாக அமையும் மலைகளை எருமைகளால் பிளந்தார். அம்மலைகள் பிளந்ததும் மேதாவி தன் உயிரை இழந்தான்.

மேதாவியின் தந்தை தன் மகனுக்கு நேர்ந்த கதியை நினைத்துத் துக்கம் தாளாமல் அவனைக் கட்டிக் கொண்டு அழுதார்.

அப்போது இதர முனிவர்கள் அவரை நோக்கி, “ஐயா! ஏன் இப்படி வீணாக அழுது புலம்புகிறீர்கள்? சாவுக்குட்பட்ட ஒருவன், விதியால் ஏற்படுவதை ஒரு போதும் எவ்விதத்தாலும் தடுக்க முடியாது” என்றனர்.

தனுஸாக்ஷர் எருமைகளைக் கொண்டு மலைகளைக் கூடப் பிளக்கும்படியான சக்தி உள்ளவராக இருந்தார்.

இந்த மாதிரி சிறிய தபஸ்விகள் வரங்களைப் பெற்று அதனால் கர்வம் கொண்டு சீக்கிரத்தில் நாசத்தை அடைகின்றனர்.

மஹாபாரதம் வன பர்வம் வாலதி ரிஷி பற்றிக் கூறுவதைக் காணலாம்.

***

tags — மஹரிஷி, தனுஸாக்ஷர்

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: