உமாபதி சிவம் – 1 சிவப் பிரசாதம், குருப்பிரசாதம்! (Post No.9054

WRITTEN BY S NAGARAJAN                     

Post No. 9054

Date uploaded in London – – 20 DECEMBER 2020       

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

உமாபதி சிவம் – 1 சிவப் பிரசாதம், குருப்பிரசாதம்!

ச.நாகராஜன்

திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வரும் சைவ சமயத்தின் அடிப்படை நாதமாக, சைவ குரவர்களாக விளங்கியவர்கள்.

இவர்கள் காலத்திற்குப் பின்னால் சைவ சித்தாந்தத்தை சந்தான குரவர்கள் எனப்படும் நால்வர் பரப்பினர். குரு-சிஷ்ய பரம்பிரையிலான இவர்களில் மெய்கண்டசிவம் முதலாவது குரவர் ஆவர். அவருக்குப் பின்னர் அருள்நந்தி சிவம், மறைஞான சம்பந்தர் சிவம், அவரது சிஷ்யர் உமாபதி சிவம் ஆகியோர் சைவ சமயத்தை உரிய முறையில் பரப்பினர்.

உமாபதி சிவம் தில்லை மூவாயிரவர் எனப்படும் மூவாயிரம் தீக்ஷிதர் குடும்பங்களுள் ஒன்றில் பிறந்தார். இந்த மூவாயிரம் குடும்பங்களே பாரம்பரியமாக நடராஜருக்கு உரிய கோவில் வழிபாடுகளை- பூஜைகளைச் செய்ய உரிமை கொண்டவர்கள்.

உமாபதி இளமையிலேயே தமிழ் மற்றும் சம்ஸ்கிருத நூல்களைக் கற்றுக் கரை தேர்ந்தார். வேத ஆகமங்களில் வல்லவரானார்.

பாரம்பரியத்திற்கு ஏற்ப சிவாசாரியர் ஆனார். சிதம்பரம் நடராஜருக்கு தீக்ஷிதர்கள் செய்யும் அனைத்தையும் செய்யும் உரிமையையும் பெற்றார்.

அவரது அபாரமான வல்லமை நாடெங்கும் பரவியது. இதைக் கேள்விப்பட்டு மகிழ்ந்த சோழ மஹாராஜன் அவரைச் சிறப்பிக்கும் வண்ணம் ஒரு முத்துப் பல்லக்கை அவருக்கு அளித்தான். பல்லக்கில் அவர் செல்லும் போது மேள தாள வாத்தியங்களும் முழங்கின. பல்லக்கின் முன்னே பகல் நேரமாக இருந்தாலும் கூட வழக்கத்திற்கு ஏற்ப தீவட்டி ஏந்திச் செல்லப்பட்டது.

கோடைகாலத்தில் ஒரு நாள். சிதம்பரம் கோவிலில் தான் செய்ய வேண்டிய பணிகளை முடித்து விட்டு உமாபதி சிவம் திரும்பி வந்து கொண்டிருந்தார். தெருவழியே அவர் சென்று கொண்டிருந்த போது அவரது பல்லக்கு மறைஞான சம்பந்தர் அமர்ந்திருந்த திண்ணையைக் கடந்து சென்றது.

மறைஞான சம்பந்தரே மூன்றாவது சந்தான குரவர். அவர் திண்ணையில் தனது சீடர்களுக்கு பாடம் நடத்திக் கொண்டிருந்தார்.

ஆடம்பரமான பல்லக்கில் உமாபதி சிவம் செல்வதைப் பார்த்த அவர், “ பார், பார், பகல் நேரத்தில் குருடன் ஒருவன் பலகைகளில் ஏறிச் செல்கின்றான்” என்றார்.

பகல் நேரக் குருடு என்பது வெளிச்சத்தில் உமாபதி சிவம் தீவட்டியை ஏற்றிச் சென்றதைக் குறித்தது. பலகை பல்லக்கைக் குறித்தது,

உமாபதி கற்றறிந்த பெரும் ஆன்மா என்பதால் அவர் இந்த விமரிசனத்தால் கோபப்படவில்லை. மாறாக இதை பெரும் உபதேசமாக ஏற்றுக் கொண்டார்.

பல்லக்கின் திரைகளை விலக்கி அவர் பார்த்தபோது மறைஞானசம்பந்தர் அவருக்குத் தோன்றவில்லை.

சிதம்பரம் நடராஜரே தோன்றினார். உடனே பல்லக்கை விட்டுக் கீழே இறங்கிய உமாபதி சிவம் மறைஞானசம்பந்தரின் காலடிகளில் வீழ்ந்தார், வணங்கினார். உமாபதி சிவம் கீழே பணிந்து கிடக்க மறைஞானசம்பந்தர் அந்த இடத்திலிருந்து ஓட்டமாக ஓடலானார்.

இதை உணர்ந்த உமாபதி சிவம் அவரைப் பின் தொடர்ந்து ஓடலானார். ஓடி ஓடி இருவரும் களைத்துப் போயினர். அப்போது செங்குந்தர் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் தனது திண்ணையில் களைத்துக்  கிடக்கும் மறைஞான சம்பந்தரைக் கண்டு திடுக்கிட்டார்.

அவரோ உணவுக்காக கை ஏந்தினார். செங்குந்தர் சமூகம் என்பது நெசவுத் தொழிலில் ஈடுபட்டவர்களின் சமூகம் என்பதால் அந்தக் குடும்பத்தில் அவருக்கு அப்போது எஞ்சி இருந்தது கூழ் மட்டும் தான். அதை அவர் தர மறைஞான சம்பந்தர் அதைக் கையில் ஏந்தி ஏற்றுக் கொண்டார். அதைக் குடிக்கலானார். வாயில் வைத்து அதைக் குடிக்கும் போது அவர் சிவ பிரசாதம் சிவபிரசாதம் என்று சொல்லிக் கொண்டே அருந்தினார்.

அப்போது அவர் முழங்கை வழியே சிறிது கூழ் சொட்டு சொட்டாகக் கீழே சிந்தலாயிற்று.

அதை ஏந்திக் கொண்ட உமாபதி சிவம் குரு பிரசாதம், குரு பிரசாதம் என்று சொல்லிக் கொண்டே அதை அருந்தலானார்.

நகர் எங்கும் இந்தச் செய்தி பரவியது. தீக்ஷிதர் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் இப்படி கூழைக் குடித்ததால் அவரை சமூக விலக்கம் செய்ய நினைத்த அனைவரும் அவரை தீக்ஷிதர் சமூகத்திலிருந்து விலக்கி விட்டனர். இதனால் சிதம்பரம் கோவிலுக்குள் செல்லும் உரிமையும் அவருக்கு மறுக்கப்பட்டது.

இதனால் எல்லாம் உமாபதி சிவம் கவலைப்படவில்லை.

சிதம்பரத்திற்கு கிழக்கே உள்ள கொற்றவன் குடி என்ற இடத்திற்குச் சென்று ஒரு மடத்தை அமைத்து அங்கே தங்கலானார்.

                     ***     அடுத்த பகுதி தொடரும்

tags- உமாபதி சிவம் ,சிவப் பிரசாதம், குருப்பிரசாதம்,

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: