
WRITTEN BY S NAGARAJAN
Post No. 9058
Date uploaded in London – – –21 DECEMBER 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
உமாபதி சிவம் – 2
ஏறாத கொடியை ஏற்றுவித்த கொடிப்பாட்டு!
ச.நாகராஜன்
உமாபதி சிவாசார்யரின் வாழ்க்கையில் ஏராளமான வியப்பூட்டும் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.
சிதம்பரம் கோவிலுக்குள் நுழையக் கூடாது என்று தடை விதிக்கப்பட்டதனால், அவர் தனது சிவ பூஜையை மானசீகமாகச் செய்ய ஆரம்பித்தார்.
ஒரு நாள் கோவிலில் பூஜை செய்யும் குருக்கள் பெட்டியைத் திறந்து பார்த்த போது அங்கு வைக்கப்பட்டிருந்த சிவலிங்கத்தைக் காணோம். அலறிப் போன அவர் ‘ஓ’ வென்று கத்தினார்.
அப்போது வானிலிருந்து அசரீரி ஒன்று எழுந்தது ‘எம்மை உமாபதி சிவத்திடம் காண்க’ என்று. கோவிலிலிருந்து அனைவரும் அவர் மடத்திற்குச் சென்று பார்க்க அங்கே சிவலிங்கம் இருந்தது. அவரிடம் அனைவரும் மன்னிப்புக் கேட்டனர்; அவர் ஆலயத்திற்குள் மீண்டும் வர அனுமதிக்கப்பட்டார்.
இதே வரலாறு இன்னொரு விதமாகவும் சொல்லப்படுகிறது. ஒரு நாள் உற்சவ நாளன்று கொடியேற்றுவது வழக்கமாதலால், அதை ஏற்ற முயன்றனர். ஆனால் கொடி கம்பத்தில் மேலே ஏறவே இல்லை. ‘உமாபதி சிவத்தை கொடி ஏற்றச் செய்க’ என்ற அசரீரி ஒலிக்கவே அனைவரும் அவரை அழைத்து கொடியை ஏற்றுமாறு வேண்டினர்.
உமாபதி சிவம் இறைவனின் ஆணையை சிரமேற்கொண்டு கொடிக்கம்பத்தின் முன் வந்து நின்றார்.

கீழ்க்கண்ட பாடலைப் பாடினார், கொடி தானே மேலே ஏறியது.
ஒளிக்கு மிருளுக்கு மொன்றே யிட மொன்று மேலிடிலொன்
றொளிக்கு மெனினு மிருளடரா துள்ளுயிர்க் குயிராய்த்
தெளிக்கு மறிவு திகழ்ந்துள தேனுந் திரிமலத்தே
குளிக்கு முயிரருள் கூடும்படி கொடி கட்டினனே.
இதன் பொருள் :-
ஒளி என்பது சிவஞானம் ஆகும், இருள் என்பது ஆணவ மலம் ஆகும். இவை இரண்டுக்கும் ஆன்ம வர்கம் ஒன்றே தங்கும் இடமாகும். இவற்றில் ஒன்று மேலிடில், அதாவது சிவஞானம் ஆணவமலம் இவற்றினுள் ஒன்று மேலிட்ட காலத்தில் மற்றொன்று மறைந்து விடும்.(ஒளிக்கும்). என்றாலும் கூட இருள் என்னும் ஆணவ மலமானது சிவஞானத்தை அடராது, எல்லா உயிருக்கும் உயிராய் அவைகளின் அறிவை விளக்குகின்றன சிவஞான அறிவு பூர்வ புண்ணியத்தால் சிறிது மட்டும் அந்த ஆன்மாவிடம் விளங்கினாலும் கூட திரிமலமாகிய ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்களிலே பந்தப்பட்டுத் தான் இருக்கும். ஆகவே திருவருள் கூடும்படி நான் கொடியைக் கட்டினேன்.
கம்பத்தின் மேல் கொடி ஏறியவுடன் அனைவரும் வியந்து உமாபதி சிவத்தைப் பாராட்டினர்; போற்றிப் புகழ்ந்து வணங்கினர்.
தொடர்ந்து அவர் இன்னும் மூன்று பாடல்களைப் பாடினார்.
இந்த நான்கு பாடல்களும் கொடிப்பாட்டு என்ற பெயரால் சிறப்புற இன்றளவும் அழைக்கப்படுகின்றன.
ஏனைய மூன்று பாடல்கள் வருமாறு:-
இரண்டாம் பாடல்:-
பொருளாம் பொருளேது போதேது கண்ணே
திருளாம் வெளியே திரவே – தருளாளா
நீபுரவா வையமெலா நீயறியக் கட்டினேன்
கோபுர வாசற் கொடி.
பொருள் :-
பொருள்களிலே உண்மையான உள்பொருள் ஏது? கிரணத்தை உவமையாக உடைய உயிர் ஏது? கண்ணை உவமையாக உடைய உயிர் ஏது? அஞ்ஞானமாகிய சகலாவத்தை எனப்படும் வெளி ஏது? கேவலாவத்தை எனப்படும் இரவு ஏது? இவை இல்லை என்று சொல்லும் அறிவில்லாவருக்கு நல்லறிவு தரும்படி அத்தனை பொருள்களும் உள்ளவையே என்று அருளும் சிவபிரானே, நான் கொடியை ஏற்றினேன்.

மூன்றாம் பாடல் :-
வாக்காலு மிக்க மனத்தாலு மெக்காலுந்
தாக்கா வுணர்வரிய தன்மையனை – நோக்கிப்
பிறித்தறிவு தம்மிற் பிரியாமை தானே
குறிக்குமரு ணல்கக் கொடி.
பொருள் : வாக்கினாலும் பொல்லாத மனத்தினாலும் எந்தக் காலத்திலும் எட்டப்படாததும், உணர்தற்கு அறிய முடியாததும் ஆகிய தன்மைகளை உடைய சிவத்தினது நிலையை பிரித்து ஆராய்ந்து பார்த்து, அது அறிவாகாரமான ஆன்மாக்களுடன் பிரியாமல் கலந்து ஒன்றாய் இருக்கும் உண்மையை உலகத்தார் தெரிந்து கொள்ளும்படி இந்தக் கொடியை ஏற்றினேன்.
நான்காம் பாடல் :-
அஞ்செழுத்து மெட்டெழுத்து மாறெழுத்து நாலெழுத்தும்
பிஞ்செழுத்து மேலைப் பெருவெழுத்து – நெஞ்சழுத்திப்
பேசு மெழுத்துடனே பேசா வெழுத்தினையுங்
கூசாமற் காட்டாக் கொடி.
பொருள் :-
அஞ்சு எழுத்து என்பது சி-வ-ய- ந- ம என்பதாகும்.
எட்டு எழுத்து என்பது ஓம்- ஹாம்- ஹௌம்-சி-வ-ய- ந- ம என்பதாகும்.
ஆறு எழுத்து என்பது ஓம்-சி-வ-ய- ந- ம என்பதாகும்.
நால் எழுத்து என்பது ஓம்-சி-வ-ய என்பதாகும்
பிஞ்சு எழுத்து என்பது ‘வ’ ஆகும்
மேலான பெரு எழுத்து என்பது ‘சி’ ஆகும்
இவற்றை நெஞ்சில் தியானித்து அதனால் ஏற்பட்ட முதிர்ச்சியால்
பேசும் எழுத்தான ‘வ’ என்பதானது தன்னை அறிவிப்பதோடு
பேசாத எழுத்தான ‘சி’ என்பதையும் மிக சுலபமாக பதிவிக்கும்படி இந்தக் கொடி ஏற்றப்பட்டது. அருமையான கொடிப் பாடல்களைத் தொடர்ந்து உமாபதி சிவம் அவர்களின் பெருமை நாடெங்கும் இன்னும் அதிகம் பரவ ஆரம்பித்தது.
அடுத்து அவர் நிகழ்த்திய அற்புதம் ஒரு மாபெரும் உண்மையை உலகம் அறியச் செய்தது.
அதை அடுத்துப் பார்ப்போம்!
– தொடரும்
TAGS- கொடிப்பாட்டு, உமாபதி சிவம் 2,
