
WRITTEN BY S NAGARAJAN
Post No. 9070
Date uploaded in London – – –24 DECEMBER 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
யமுனையிடம் சீதையின் பிரார்த்தனை!
ச.நாகராஜன்
வால்மீகி ராமாயணத்தில் அயோத்யா காண்டம் 54 மற்றும் 55வது ஸர்க்கம் மிக முக்கியமான கட்டத்தை விவரிக்கின்றன!
ராமர், சீதை, லக்ஷ்மணன் ஆகிய மூவரும் அழகிய வனாந்தர பிரதேசத்தில் நடந்து சென்று கொண்டிருந்தனர்.

அங்கே ப்ரயாகை க்ஷேத்திரத்திற்கு அருகில் அக்னி பகவானது புகை உயரக் கிளம்பி இருப்பதைப் பார்த்த ராமர் லக்ஷ்மணரிடம் அதைச் சுட்டிக் காட்டி, “இங்கு ஏதோ ஒரு முனிவர் சமீபத்தில் இருக்கிறார் என எண்ணுகிறேன்” என்றார்.
கங்கை யமுனை சங்கமத்துறைக்கு வந்து சேர்ந்து விட்டோம் என்று ராமர் சொல்லி அங்குள்ள பரத்வாஜ ரிஷியின் ஆசிரமத்திற்குச் சென்றார்.
அவர்களைக் கண்ட பரத்வாஜ மஹரிஷிக்கு மிகவும் சந்தோஷம் உண்டாயிற்று, அவர்களை வரவேற்று தக்கபடி உபசரித்து விருந்தளித்தார்.
ராமர், பரத்வாஜரை நோக்கி, “நகரவாசிகள் இங்கு வந்து எங்களைப் பார்த்துக் கொண்டே இருப்பார்கள். சீதா தேவி எங்கு பிறரால் தரிசிக்கப்படாதவளாக, தியானம் ஒன்றையே அனுஷ்டிக்கின்றவளாக நிம்மதியாக காலம் கழிக்கும் இடம் ஒன்றை தேவரீர் ஆலோசித்துச் சொல்வீர்களாக” என்றார்.
உடனே பரத்வாஜர், தரிசித்த மாத்திரத்தில் பாக்கியங்களைத் தரவல்லை சித்ரகூட சிகரத்தைச் சொல்லி அதன் மஹிமையையும் சொல்லி அங்கு வஸிக்கலாம் என தனது ஆலோசனையைக் கூறினார்.
ஒரு நாள் இரவை பரத்வாஜாஸ்ரமத்தில் கழித்த ராமர் மறு நாள் கிளம்ப ஆயத்தமானார்.
யமுனை நோக்கிச் சென்ற அவர்கள் நதிக்கரையை அடைந்தனர். காய்ந்து உலர்ந்த கட்டைகளாலும் மூங்கில்களாலும் அழகிய தெப்பத்தை ராமரும் லக்ஷ்மணரும் அமைத்தனர்.
அதில் பிரம்புக்கொடிகளாலும் நாவல் மரக்கிளகளாலும் ஆன அற்புதமான ஆசனம் ஒன்றைச் செய்து அமைத்தார் லக்ஷ்மணர் – சீதா தேவி அமர்வதற்காக!
சீதை தெப்பத்தில் ஏற, இருவரும் தெப்பத்தைச் செலுத்தலாயினர்.
தெப்பம் யமுனை நதியின் நடுவை அடைந்தது.

உடனே சீதா தேவி யமுனையை நோக்கி இப்படிப் பிரார்த்தித்தாள்:
“தேவி! திருவுளமுவந்து பிரார்த்தனைகளை அருளிச் செய்வாயாக! உன்னைக் கடந்து தாண்டுகின்றேன். எனது பர்த்தா பிரதிக்கினையை கை கூடப் பெறட்டும்.”
ஸ்வஸ்தி தேவி தராமி த்வாம் பாரயேன்மே ப்ரதிர்ஷிதம் |
“ஸ்ரீராமர் குறையின்றி இக்ஷ்வாகு மன்னர்களால் பரிபாலிக்கப்பட்ட நகருக்குத் திரும்பிய பின்னர் அநேக கோதானங்களாலும் அநேக தீர்த்தம் நிறைந்த பூர்ண கல்சங்களாலும் உன்னை பூஜிக்கிறேன்.”
யக்ஷயே த்வாம் கோ சஹஸ்ரேண சுராகடஷதேன ச |
ஸ்வஸ்தி ப்ரத்யாகதே ராமே புரிமிக்ஷ்வாகுபாலிதம் ||
யமுனை நதியைக் கடந்து கரையில் இறங்கிய மூவரும் யமுனை நதியை ஒட்டிய வனத்தின் வழியே சென்று பச்சிலைகளை உடைய ச்யாமம் என்னும் பெயரை உடைய ஆலமரத்தைக் கண்டனர்.
உடனே சீதா தேவி பின் வரும் வார்த்தைகளை அருளிச் செய்தாள்:
“புண்யம் அளிக்க வல்ல விருக்ஷமே! உன்னை நான் முடி தாழ்த்தி
நமஸ்கரிக்கிறேன். எனது கணவனார் பிரதிக்கினையை கை கூடப் பெறட்டும்”
நமஸ்தேஸ்து மஹா வ்ருக்ஷ பாரயேன்மே பதிர் வ்ரதம் |
கோஸலா தேவியாரையும், புகழ் பெற்ற சுமித்திரா தேவியாரையும் நேரில் நான் ஸேவிக்க வேண்டும்.”
கௌஸல்யாம் சைவ பஷ்யேயம் சுமித்ராம் ச யஷஸ்வினீம்|
இந்த கட்டம் அற்புதமான ஒரு வழிகாட்டுதலைக் குறிக்கிறது. பரத்வாஜ மஹரிஷி அவர்கள் செல்ல வேண்டிய இடத்தை வழி காட்டி அருள்கிறார்.

ஒரு பெரும் அவதாரம் உதிக்கும் போது இப்படி பல மஹரிஷிகளும் தேவர்களும் உரிய இடத்தில் உரிய சமயத்தில் வந்திருந்து அவர்களை உபசரித்து அடுத்து செய்ய வேண்டியதைச் சுட்டிக் காட்டி மகிழ்கின்றனர்.
சீதா தேவி, யமுனை நதியையும், ச்யாமம் என்று பெயர் பெற்ற ஆலமரத்தையும் நோக்கிச் செய்யும் பிரார்த்தனையும் அற்புதமான ஒன்று.
பதியின் பிரதிக்கினை நிறைவேற வேண்டும்!
மாமியார்மார் இருவரையும் நேரில் கண்ணாரக் காண வேண்டும்!
இப்படிப்பட்ட புனிதமான நதியும், புனிதமான வ்ருக்ஷமும் கை கூட வைத்து அருள் பாலிக்கின்றன!
பாரதப் பெண்மையின் சிகரமாக அமையும் சீதா பிராட்டியாரின் பிரார்த்தனை ஒரு குடும்பம் எப்படி அமைய வேண்டும் என்பதைத் தெளிவுற எடுத்துக் காட்டுகிறது.
அதனால் தான் சீதையை பெண்மையின் முடிவான லக்ஷியம் என நமது அறநூல்கள் ஆணித்தரமாக இயம்புகின்றன!
ஜெய் ஸ்ரீராம்!

tags – Ram, Sita images, யமுனை, சீதை, பிரார்த்தனை
***