
WRITTEN BY BRHANNAYAKI SATHYANARAYANAN
Post No. 9083
Date uploaded in London – –28 DECEMBER 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
லண்டனிலிருந்து வாரம் தோறும் ஞாயிற்றுக்கிழமை மாலை இந்திய நேரம் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகும் தமிழ் முழக்கம் நிகழ்ச்சியில் 27-12-2020 அன்று ஒளிபரப்பான உரை. இதை www.facebook.com/gnanamayam தளத்திலும் youtubeலும் எப்போதும் காணலாம்.

ஆலயம் அறிவோம்! வழங்குவது பிரஹன்நாயகி சத்யநாராயணன்.
நீலாஞ்சன ஸமாபாஸம் ரவிபுத்ரம் யமாக்ரஜம் |
ச்சாயா மார்த்தாண்ட ஸம்பூதம் தம் நமாமி சனைஸ்வரம் ||
மை போன்று கருத்தவன். சூரியனின் குமாரன். யமனின் தமயன். சூரியனுக்கும் சாயாதேவிக்கும் பிறந்தவன். மெதுவாகச் செல்பவன். அந்த சனீஸ்வரனை நமஸ்கரிக்கிறேன்.
ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம் பெறுவது சப்த விடங்க தலங்களுள் ஒன்றானதும், சனீஸ்வர வழிபாட்டுக்குச் சிறந்த தலமுமான திருநள்ளாறு ஆகும். சென்னையிலிருந்து 247 கிலோமீட்டர் தூரத்தில் இது உள்ளது. காரைக்காலுக்கு மேற்கே 3 மைல் தூரத்தில் உள்ள தலம் இது. அரிசிலாற்றங்கரையின் மேல் அமைந்துள்ள இந்த தலத்தின் ஈஸ்வரர் – தர்ப்பாரண்யேஸ்வரர். அம்பாள் – பூண்முலைநாயகி.
ரதி தன் மணாளன் காமனை அடைந்த தலம் இதுவே.
இங்கு தான் நளச் சக்கரவர்த்தி சனீசுவர பகவானின் தோஷம் நீங்கப் பெற்றார்.
சனீஸ்வரர், முசுகுந்தன், நளச்சக்கரவர்த்தி உள்ளிட்ட ஏராளமானோரால் பூஜிக்கப்பட்ட தலம் இது.
நிடத நாட்டு மன்னனான நளன் சனீச்வரனின் பார்வை பட்டதால் தன் நாட்டை இழந்தான். மனைவி தமயந்தியையும் தன் மக்களையும் பிரிந்தான். கானகத்தில் கார்க்கோடகன் என்ற பாம்பு தீண்ட தன் அழகிய உருவத்தையும் இழந்து அயோத்தி மன்னனிடம் தேரோட்டியாகப் பணி புரியும் நிலையை அடைந்தான்.
பிறகு சனீஸ்வரனின் அருளால் தன் நாட்டை மீண்டும் அடைந்தான். சுய உருவை அடைந்து மனைவி குழந்தைகளுடன் க்ஷேமமுற வாழ்ந்தான். என்றாலும் எப்போதும் சித்தபிரமை பிடித்தது போல அவன் இருக்கவே, நாரத முனிவர் அவனிடம் தீர்த்த யாத்திரை செல்லுமாறு கூறினார்.
அதன்படியே பல புண்ணிய தலங்கள் சென்று வழிபட்டு தர்ப்பாரணயம் என்னும் தலத்தை அடைந்து அங்கு எழுந்தருளியுள்ள தர்பாரண்யேஸ்வரர் என்ற ஈஸ்வரனை வணங்கியதும் சனி அவனை விட்டு முற்றிலுமாக நீங்கினார். அங்கே ஒரு தீர்த்தத்தை உருவாக்கி அதற்கு நள தீர்த்தம் என்று பெயரிட்டு இறைவனுக்கு வைகாசி மாதம் புனர்பூச நாளில் விழா நடத்தி முக்தி பெற்றான். இந்தத் தலமே இன்று திருநள்ளாறு என்று அழைக்கப்படுகின்றது.
இங்குள்ள நள தீர்த்தத்தில் நள்ளிரவு வரை பக்தர்கள் தீர்த்தமாடி சனி சம்பந்தமான அனைத்து தோஷங்களுக்கும் நிவர்த்தியைப் பெறுகின்றனர்.

ஈஸ்வரன் தனக்கு நிகரான பெருமையை இங்கு சனீஸ்வரனுக்கு அளித்துள்ளார். இங்கு சனிக்கிழமை சிறப்பு வழிபாட்டுத் தினமாகிறது. சனி பகவானுக்கு உகந்த எள்ளுப் பொட்டலத்தை சமர்ப்பித்து நல்லெண்ணெய விட்டு விளக்கேற்றி வைத்து சனி பகவானின் அருளை பக்தர்கள் தொன்று தொட்டு இங்கு பெற்று வருகின்றனர்.
சனிப் பெயர்ச்சி பெரிய திருவிழாவாக இத்தலத்தில் நடைபெறுகிறது. சனிப் பெயர்ச்சி தினத்தன்று ஆயிரக் கணக்கில் பக்தர்கள் இங்கு கூடுவது வழக்கம்.
திருஞானசம்பந்தர் மூன்று பதிகங்களையும் திருநாவுக்கரசர் இரு பதிகங்களையும் சுந்தரர் ஒரு பதிகத்தையும் இந்தத் தலத்தில் பாடி இறைவனை வழிபட்டுள்ளனர்.
‘நட்டுறு செறிவயல் நள்ளாறு’, ‘நண்ணிய குளிர் புனல் புகுதும் நள்ளாறு’ என்று சம்பந்தராலும் ‘செறிந்த சோலைகள் சூழ்ந்த நள்ளாறு’ என்று சுந்தரராலும் பாடிப் புகழப் பெற்றதால் இந்த தலத்தின் அற்புதமான இயற்கை வனப்பை நாம் அறிந்து கொள்ள முடிகிறது. இந்தத் தலத்தில் தான், சமணருடன் வாது புரிந்த திருஞானசம்பந்தர், தனது பதிகத்தைத் தீயில் இட, அது கருகாது பச்சைப் பதிகமாக இருந்தது. ஆக பச்சைப் பதிகம் பெற்ற சிறப்பைக் கொண்ட தலமும் இதுவே.
திருநள்ளாற்றுத் திருக்கோவில் நான்கு பக்கமும் தேரோடும் வீதிகள் கொண்டு விளங்குகிறது. இங்குள்ள இராஜ கோபுரம் ஐந்து நிலைகளை உடையது.
அறுபத்து மூன்று நாயன்மாருடன் தர்ப்பாரண்யர் இங்கு எழுந்தருளி இருப்பது ஒரு தனிச் சிறப்பாகும். அடுத்து தனி ஒரு மண்டபத்தில் நளனது திருவுருவமும் சிவலிங்கத் திருமேனியும் காட்சி அளிக்கின்றன.
சுவாமி சந்நிதி கிழக்கு நோக்கி விளங்க, அம்பிகை சந்நிதி தெற்கு நோக்கி அமைந்து விளங்குகின்றது.

சனீஸ்வர பகவான் உகந்து உறையும் தலம் இது என்பதால் சனி தோஷம் நீங்கவும், பாவம் போகவும், தீராப் பிணிகள் தீரவும், எடுத்த காரியம் எளிதில் நிறைவேறவும் சிவஞானம் பெறவும், வாக்கு வன்மை பெருகவும், பல சித்திகள் பெறவும் அனைவரும் நாட வேண்டிய தலம் திருநள்ளாறே என்பது சொல்லாமலேயே விளங்கும்.
ஏராளமான புராண வரலாறுகளைக் கொண்ட இந்தத் தலத்திற்கு திருத்தல புராணம் ஒன்று தனியே உண்டு. ஆதி புரி என்றும், தர்ப்பாரண்யம், நகவிடங்கபுரம், நளேஸ்வரம் என்றும் பல சிறப்புப் பெயர்களைக் கொண்ட திருநள்ளாறு அன்னதானம் செய்ய உகந்த தலமும் ஆகும்.
நள்ளாற்றுப் பெருமானை வணங்கி விட்டு வந்தவுடன் வடபால் எழுந்தருளியுள்ள சண்டேஸ்வரை வணங்கி வெளியே வந்தால் சுவாமி சந்நிதிக்கு வலது பக்கத்தில் இந்தத் தலத்தின் சிறப்புத் தெய்வமான சனீஸ்வரர் கட்டைக் கோபுரச் சுவரில் உள்ள சிறிய மண்டபத்தில் காட்சி தருகிறார். இந்த தலத்தின் அனுக்ரஹ மூர்த்தி சனி பகவான் என்பதால் இங்கு எப்போதும் வழிபாடுகளும் தில தீபங்கள் ஏற்றுவதும் நிகழ்ந்த வண்ணம் இருக்கும்.
காலம் காலமாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் பயபக்தியுடன் வணங்கி தோஷ நிவர்த்தி பெறும் சனீஸ்வர பகவான் அனைவருக்கும் சர்வ மங்களத்தை தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம்.
அப்பர் பிரானின் அருள் வாக்கு – “நா விரிய மறை நவின்ற நள்ளாற்றானை நான் அடியேன் நினைக்கப் பெற்று உய்ந்தவாறே” – நன்றி. வணக்கம்.

tags- திருநள்ளாறு ,ஆலயம் அறிவோம்
–subham–