
COMPILED BY LONDON SWAMINATHAN (NEWS EDITOR, GNANAMAYAM)
Post No. 9087-B
Date uploaded in London – –29 DECEMBER 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
டிசம்பர் 28- ம் தேதி — திங்கட் கிழமை ,2020
உலக இந்து சமய செய்தி மடல்
தொகுத்து வழங்குபவர் வைஷ்ணவி ஆனந்த்

இது ‘ஆகாச த்வனி’ யின் உலக இந்து சமய செய்தி மடல் நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்,
நமஸ்காரம் செய்திகள் வாசிப்பது VAISHNAVI ANAND
எங்கள் நிகழ்ச்சிகளை திங்கட்கிழமை தோறும் லண்டன் நேரம் பிற்பகல் 1 மணிக்கும், இந்திய நேரம் மாலை 6-30 மணிக்கும் நேரடியாகக் கேட்கலாம். உலக இந்து சமய செய்தித் தொகுப்புடன் நேயர்களின் கேள்விகளுக்கும் விடைகளும் அளிக்கப்படுகிறது.
எங்களை எந்நேரமும் தொடர்பு கொள்ள Facebook.com / Gnana mayam முகவரியில் அணுகவும்
XXXX
இஸ்லாமாபாத்தில் கிருஷ்ணன் கோவில்
பாகிஸ்தான் தலை நகர் இஸ்லாமாபாத்தில் கிருஷ்ணன் கோவில் கட்டவும், இந்துக்களுக்கு தனி மயானம் அமைக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது
பாகிஸ்தானில் இந்துக்கள் 90 லட்சம் பேர் வாழ்ந்து வரும் நிலையில் பெரும்பாலான இந்துக்கள் சிந்து மாகாணத்தில் வசித்து வருகின்றனர். தலைநகர் இஸ்லாமாபாத்தில் இந்து கோயில் கட்ட கடந்த 2017 ஆம் ஆண்டு நிலம் ஒதுக்கப்பட்டது. இதற்கு இஸ்லாமிய அறிஞர்கள் அமைப்பு எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்பட்ட நிலையில், அந்த பணிகள் நிறுத்தப்பட்டது. தற்போது தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள செக்டார் எச் 9-2-வில் முதற்கட்டமாக மயானத்தை சுற்றி சுற்றுச்சுவர் எழுப்ப அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இதனைத் தொடர்ந்து 20 ஆயிரம் சதுர அடியில் கோவில் மற்றும் சமூக நலக் கூடம் உள்ளவை அமைக்கவும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
இஸ்லாமாபாத் அல்லது நாட்டின் வேறு எந்தப் பகுதியிலும் இந்து கோவில் கட்டுவதற்கு அரசியலமைப்பில் எந்த கட்டுப்பாடுகளும் இல்லை என அரசிடம் இது தொடர்பான குழு தெரிவித்தது.
XXXX
திருமணத்திற்காக கட்டாயமாக மத மாற்றம் செய்தால் 10 ஆண்டுகள் வரை சிறை
திருமணம் அல்லது ஏமாற்றி, கட்டாயமாக மதம் மாற்றுவோருக்கு 10 ஆண்டுகள் வரை கடுங்காவல் சிறைத் தண்டனை விதிக்கும் மசோதாவுக்கு மத்திய பிரதேச அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
பிற மதத்தினரை கட்டாயபடுத்தி மத மாற்றம் செய்து திருமணம் செய்தால் 1 முதல் 5 ஆண்டுகள் வரையும், எஸ்சி அல்லது எஸ்டி பிரிவினரை கட்டாயபடுத்தி மதமாற்றம் செய்து திருமணம் செய்தால் 2 முதல் 10 ஆண்டு வரை சிறை தண்டனையும் விதிக்க வகை செய்யப்பட்டிருப்பதாக மத்திய பிரதேச உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா குறிப்பிட்டார்.
இந்த சட்டம் தொடர்பாக, மாநில உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா கூறியதாவது:
பிற மதத்தினரை கட்டாயபடுத்தி மத மாற்றம் செய்து திருமணம் செய்தால் குற்றவாளிகளுக்கு ரூ.1 லட்சம் அபராதமும், 10 ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்க முடியும். ஆனால் தாய் மதத்துக்கு திரும்புவோர் மீது இந்த சட்டம் பாயாது என்றும் விளக்கினார்.
உத்தரபிரதேசத்தை தொடர்ந்து, மத்திய பிரதேச அரசு இந்த சட்டத்தை கொண்டு வந்துள்ளது.
XXXX

பூரி ஜெகந்நாதர் ஆலயம் ; ஜன.,3 முதல் பக்தர்களுக்கு அனுமதி
கொரோனா தொற்றை தொடர்ந்து ஒடிசாவில் பூரி ஜெகந்நாதர் கோவில் 9 மாதங்களுக்கு பிறகு பக்தர்களுக்காக டிச.,23 திறக்கப்பட்டது. ஜன.,3 முதல் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவில் திறக்கப்பட்ட முதல் 3 நாட்கள் (டிச.,23, 24,25) ஆகிய நாட்களில் கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளுடன் கோவில் சேவை செய்வோர் மற்றும் அவர்களுடைய குடும்ப உறுப்பினர்கள் சுவாமி தரிசனத்திற்காக கோவிலுக்குள் நுழைய அனுமதிக்கப்பட்டா ர்கள் என்று பூரி கலெக்டர் பல்வந்த் சிங் கூறினார்.
புத்தாண்டையொட்டி ஜன.,1 மற்றும் 2, 2021 ஆகிய தேதிகளில் கோவில் மீண்டும் மூடப்படும். பின் ஜன., 3 , 2021 முதல் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர். கோவிலுக்கு வரும் பக்தர்கள் 48 மணி நேரத்திற்கு முன்னதாக செய்யப்பட்ட கொரோனா சோதனை சான்றிதழ் அறிக்கை கொண்டு வர வேண்டும். பூக்கள் போன்ற பூஜை பொருட்கள் அனுமதியில்லை.
உள்ளூர் மக்களின் கொரோனா நிலையை அரசு அறிந்திருப்பதால் அவர்களுக்கு சோதனை சான்றிதழ் அறிக்கை தேவையில்லை என அதிகாரிகள் கூறினர்.
XXXXX
சபரிமலையில் சரண கோஷம் முழங்க ஐயப்பனுக்கு மண்டல பூஜை நடந்தது
கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் டிசம்பர் 26ம் தேதி,2020 மண்டல பூஜை நடந்தது இதற்காக ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க அங்கி சன்னிதானம் கொண்டு செல்லப்பட்டது. அதனை கோவில் தந்திரி மற்றும் மேல் சாந்தி பெற்றுக்கொண்டனர்.
அவர்கள் 18-ம் படியேறி கருவறைக்கு சென்று ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவித்து சிறப்பு பூஜைகள் செய்தனர். இதையடுத்து இன்று அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன.
இன்றும் தங்க அங்கி அணிவித்து மகாதீபாராதனை நடந்தது. அப்போது சன்னிதானத்தில் திரண்டிருந்த பக்தர்கள் சரண கோஷம் எழுப்பினர்.
மண்டல பூஜை வழிபாடுகள் முடிவடைந்த பின்னர் இரவு 9 மணிக்கு நடை அடைக்கப்பட்டது
மீண்டும் மகர விளக்கு பூஜைக்காக வருகிற 30-ந் தேதி மாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. மகர விளக்கு தரிசனம் 2021 ஜனவரி 14-ந் தேதி நடக்கிறது.

XXX
தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு இடம் பெயர்ந்தார் சனிபகவான்
புதுவை மாநிலம் காரைக்கால் அருகே திருநள்ளாறில் உலக பிரசித்தி பெற்ற தர்பாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு சனி பகவான் தனி சன்னதி கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
இந்த கோவிலில் 2½ ஆண்டுகளுக்கு ஒருமுறை சனிப்பெயர்ச்சி விழா வெகு விமரிசையாக நடந்து வருகிறது.
கொரோனா தொற்று காரணமாக ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்களுக்கு மட்டுமே தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்படும் என்று மாவட்ட, கோவில் நிர்வாகம் அறிவித்து இருந்தது.
சனிப்பெயர்ச்சிவிழாவை காண்பதற்கு சுமார் 18 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே முன்பதிவு செய்திருந்தனர். வழக்கமாக திருநள்ளாறு சனிப்பெயர்ச்சியின் போது சுமார் 3 லட்சம் முதல் 5 லட்சம் பக்தர்கள் வரை வந்து சாமி தரிசனம் செய்வார்கள்.
நேற்று அதிகாலை(27-12-2020) 5.22 மணிக்கு சனிபகவான் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு பெயர்ச்சியானார். சனிப்பெயர்ச்சியையொட்டி சனிபகவான் தங்க காக வாகனத்தில் பிரகாரம் வலம் வந்து வசந்த மண்டபத்தில் எழுந்தருளினார். அதனை தொடர்ந்து சனிபகவானுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
விழாவில் 27-வது குருமகா தேசிக சன்னிதானம் மாசிலாமணி தேசிய ஞானசம்பந்த சுவாமிகள், புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி, மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
நளன் குளத்தில் நீராட அனுமதி இல்லாததால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
XXX
இது ஒரு புறமிருக்க,
சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலுக்கு திருப்பூர் மாவட்டம் அவினாசியிலிருந்து எள், ஏலக்காய், மற்றும் ருத்ராட்சம் ஆகியவற்றால் உருவாக்கப்பட்ட ஏலக்காய் மாலைகள் செய்யப்பட்டு அனுப்பிவைக்கப்ப ட்டது
.
இது குறித்து அவினாசியை சேர்ந்த மலர் நிலைய உரிமையாளர் கூறியதாவது:-
திருநள்ளாறு கோவிலுக்கு எங்கள் மலர் நிலையத்தின் சார்பில் கடந்த 4 நாட்களாக சனி பகவானுக்கு உகந்த எள், ஏலக்காய், மற்றும் ருத்ராட்சங்கள் ஆகியவற்றால் மாலை மற்றும் மாலையுடன் கூடிய கிரீடம் ஆகியவை நேர்த்தியான முறையில் தயாரிக்கப்பட் ட்டது
இந்த மாலைகள் அவினாசியில் உள்ள அவினாசிலிங்கேசுவரர் கோவிலில் உள்ள அர்ச்சகர்கள் மூலம் திருநள்ளாறில் உள்ள சனீஸ்வர பகவான கோவிலுக்கு அனுப்பிவைக்கப்ப ட்டது
XXXXX
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு
தமிழகம் முழுவதும் வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது.
பூலோக வைகுண்டம் எனப்படும் ஸ்ரீரங்கம்ரெங்கநாதர் கோவில் ஆண்டு முழுவதும் 322 திருவிழாக்கள் வெகு விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி திருவிழா கடந்த 14-ம் தேதி திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. ராப்பத்து உற்சவத்தின் முதல் நாள் வைகுண்ட ஏகாதசி திருநாள் ஆகும். 2020 டிசம்பர் 25ம் தேதி அதிகாலை 3.30 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து நம்பெருமாள் புறப்பட்டு அதிகாலை 4.45 மணிக்கு பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசலில் எழுந்தருளினார். இதையொட்டி நம்பெருமாள் ரத்தின அங்கி அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
156 ஏக்கர் பரப்பளவு, உலகிலேயே உயரமான ராஜகோபுரம் உள்பட 21 கோபுரங்கள், நெடிதுயர்ந்த மதில்சுவர்களை கொண்ட ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலை தென்னிந்தியாவின் கலாசார கருவூலம் என குறிப்பிட்டால் மிகையாகாது.
XXX
இது ஒரு புறமிருக்க,
திருப்பதிஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு அதிகாலை சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.
2021 ஜனவரி 3-ந்தேதி வரை 10 நாட்கள் சொர்க்கவாசல் திறக்கப்பட்டிருக்கும். தினமும் 40 ஆயிரம் பக்தர்கள் சொர்க்கவாசல் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.
சொர்க்கவாசல் திறப்பையொட்டி கோவில் முழுவதும் மலர் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. மின் அலங்காரத்திலும் கோபுரம் உள்பட கோவில் வளாகம் ஜொலிக்கிறது.
10 நாட்களுக்கு அதிகாலை 4 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை அன்னதானம் வழங்கப்பட உள்ளது. இலவச தரிசனத்தில் உள்ளூர் பக்தர்கள் மட்டும் தினமும் 10 ஆயிரம் பேர் அனுமதிக்கப்படுகின்றனர்.
XXXXX
செய்தி அறிக்கையை முடிப்பதற்கு முன்னதாக ஒரு முக்கிய அறிவிப்பு —
உலக மக்களின் நன்மைக்காக ஞானமயம் அமைப்பு, அதன் சகோதர அமைப்புகளுடன் இணைந்து, ஒரு அகண்ட ருத்ர பாராயணத்தை ஏற்பாடு செய்துள்ளது. 2021ல் ஜனவரி 2, 3-ம் தேதிகளில் இது நடைபெறும். நியூசிலாந்து நாட்டில் துவங்கும் இந்த பாராயணம் அந்தந்த கண்டத்திலுள்ள நேரப்படி நிகழ்த்தப்பட்டு அமெரிக்காவில் நிறைவடையும் . இது தொடர்பான விவரம் வேண்டுவோர் நமது ஞானமயம் பேஸ்புக் பக்கத்தில் காணலாம்.
XXXX
உங்கள் அனைவர்க்கும் ஞானமயம் சார்பில் இனிய புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவிப்பதில் பெரு மகிழ்சசி அடைகிறோம். வரும் புத்தாண்டில் எல்லோரும் இன்புற்றிருக்க இறைவன் அருள் புரிய வேண்டி வாழ்த்துகிறோம்.
மீண்டும் புத்தாண்டில் சந்திப்போம்
XXXX
இத்துடன் லண்டனிலிருந்து வரும் செய்திகள் நிறைவடைந்தன………………………….. செய்திகளை உங்களுக்கு வழங்கியவர் வைஷ்ணவி ஆனந்த்………………………… நன்றி, வணக்கம்
TAGS- உலக, இந்து சமய, செய்தி மடல்281220